ஆடிஸி: Odyssey: ஓர் அறிமுகம்


ஆடிசியை ஏன் கிளாசிக் என்கிறோம்? சிறிய அறிமுகம் + பார்வை + விமர்சனம்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். படம் பார்க்கிற மாதிரி ஆடிசி அமைந்திருக்கிறது. ’சிவாஜி’யில் ரோபோ ரஜினி செய்கிற சாகசம் பிடித்திருக்கிறதா? உங்களுக்கு ஓடிசி பிடிக்கும்.

இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை. சொந்த வீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பவனை, விநோதமான மிருகங்களும் வித்தியாசமான (மாற்றுத் திறனாளி?) மனிதர்களும் தடுத்து, படுத்துகிறார்கள்.

புருஷனாக சண்டைக்குப் போயாகி விட்டது. கணவனாகத் திரும்ப விரும்புகிறான். மகனுக்கு தந்தையாக வாழ, இல்லம் சேரப் போகிறான்.

வலைப்பதிவில் கூட நினைவலைகள் புகழ் பெற்றது. ஆட்டோகிராப் படத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடல் போல் பழையதை அசை போடுவதன் சுகத்தை ஆடிசி சொல்கிறது.

மகாபாரதம் போல் மீண்டும் மீண்டும் வாசிக்கலாம். தூக்கம் வராத இரவுகளில் குழந்தைகளுக்கு வாசிக்கலாம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் போல் நடுநடுவில் இருந்து வாசிக்கலாம்.

’ஆடிசி’ சொல் ஆங்கிலத்தில் அன்றாட வாழ்வில் பயன்படும் வார்த்தை.

“ஆமெரிக்காவிற்கு எப்படி வந்தீங்க?”

“அது ஒரு ஆடிஸி!”

“வலைப்பதிவில் தமிழ் உண்டா?”

“இப்படிக் கேட்டுட்டீங்களே… தமிழ்ப்பதிவுகள் மிகப் பெரிய ஆடிசி மேற்கொண்டுள்ளது.”

இங்கே இராமாயணமு மகாபாரதமும். கிரேக்கத்தில் ஹோமருக்கு இலியாட் & ஆடிஸி. இரு கதைகளும் பின்னிப் பிணைந்தவை. டுரோஜன் போரை இலியாட் சொல்கிறது. சண்டை முடிந்தவுடன் ஓடிஸி தொடங்குகிறது.

இலங்கைக்கு செல்லும் அனுமான் போல் வழியெங்கும் பிரச்சினைகள்:

  • கடுமையான புயல் காற்று
  • சிதறிக் கிடக்கும் பாறைகள் கை கோர்த்து படகை அழிக்க நினைப்பது
  • சுழிப் போட்டு பாதையை சுழல வைக்கும் கடல்
  • மனிதர்களைப் பன்றியாக மாற்றும் அழகி
  • பாடலில் மயங்க வைக்கும் பாடகி
  • தாமரையை உண்ணும் (பாரதீய ஜனதா?) போதைப் பிரியர்கள்

ஹீரோ இப்படி இடாகா (சொந்த) ஊர் வர கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க, இடாகா-வில் மனைவியையும் அவனுடைய நிலத்தையும் அபகரிக்க அண்டை வீட்டார் விழைகிறார்கள். “உன் கணவன் செத்துப் போய்ட்டான். என்னக் கட்டிக்க” என்னும் மிராசுதாரர்களிடமிருந்து, தன் அம்மாவை, மகன் காப்பாற்றி வருவது இன்னொரு இழை.

மனைவி பெனலொப்பி இருபதாண்டுகளாக கணவனைப் பிரிந்து தனிமையில் இருக்கிறாள். போருக்கு பத்தாண்டுகள். ஊர் திரும்ப இன்னொரு பத்தாண்டுகள். ஓடீஸஸ் உயிரோடு இருக்கின்றானா என்பது கூட அறியாத பயம் கலந்த சோகம் கொண்டவள் பெனொலப்பீ.

இருபதாண்டுகள் கழித்து வரும் ஆடவனை, எப்படி தன்னுடைய கணவன் என்று பெனலொப்பி கண்டுபிடிக்கிறாள்? குடும்பப் பாடல் கிடையாது. மரபணு சோதனை இல்லை. ‘தாலி கட்டியவனைத் தெரியாதா?’ என்னும் லாஜிக் சறுக்கல் லேது. எப்படி? நீங்களேப் படிச்சுத் தெரிஞ்சுக்குங்க.

ஓடீசஸ்

ஒடீஸசிடம் எந்த அற்புத சக்தியும் கிடையாது. பத்து பேர குத்த மாட்டான். ஒரே சமயத்தில் இருபது பேரோடு சிலம்பம் ஆட மாட்டான். பறக்க மாட்டான். குண்டுகளைக் கையால் தடுக்க மாட்டான். ஆனால், புத்திசாலி. மகா புத்திசாலி. சூட்சும புத்தி கொண்டவன். தன் அறிவைக் குறித்து பெருமிதம் கொண்டவன். கடுமையான விசுவாசம் கொண்டவன். நாட்டிற்கும் வீட்டிற்கும் நாய் போன்ற நன்றி உடையவன். இவன் என் ஹீரோ.

டேவிடும் கொலியாத்தும் கதைக்கு முன்னோடியாக சைக்ளோப்ஸ். கொஞ்சம் ராமனின் வாலி. நிறைய கும்பகர்ணன். அப்படியே துணைக்கு சிந்துபாத்தின் பூத பிசாசுகளையும் சேர்த்தால், நமக்கு பாலிஃபீமஸ் கிடைக்கிறார். இன்றைய பிரகாஷ்ராஜ் வில்லன்களின் கொள்ளுத் தாத்தா.

சைக்ளாப்சுக்கு நாகரிகம் தெரியவில்லை. பழங்குடி எனலாம். இவனின் தந்தை பாஸீடான். பாஸிடானுக்கு கோபம் வருகிறது. தன் மகனை, சைக்ளாப்சைக் கொலை செய்த ஓடீசஸ் மேல் கோபம் வருகிறது. பாஸீடான் கடல்களின் அரசன். வாயு பகவான். வருண தெய்வம். புயல் சின்னம் ஏற்றுகிறான்.

அம்மா செண்டிமெண்ட்டும் ஓடிசியில் உண்டு. “உன் விதியை அறியும் ஆசை, என் அன்பின் உத்வேகம் – இவைதான் இறந்திருக்கின்றன்” என்கிறாள். பாதாள லோகம், கனவு உலகம் எல்லாம் வருகிறது.

ஹோமர்

இவ்வளவு கிளைக் கதைகள், இத்தனை கதாபாத்திரங்கள் – அத்தனையும் ஒருவரா எழுதியிருக்கிறார்? வேத வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியது போல், கம்பரின், வால்மீகியின், துளசிதாசரின் இராமாயணம் போல் ஹோமரின் இலியாடும் ஒடிசியும் ஒற்றை ஆள் எழுதியது அல்ல. காலங்காலமாக வாய்மொழியாக வந்த பாடல்களின் தொகுப்பு. நாட்டிற்கேற்ப, பாஷைக்கேற்ப, பண்பாட்டிற்கேற்ப மாற்றங்கண்ட தொகுப்பு.

ராப்சோட்ஸ் எனப்படும் (ராப்சடி.காம் இங்கிருந்துதான் வந்தது 🙂 ஏதன்ஸ் நாடகக் கலைஞர்களால் கூத்தாக்கம் செய்யப்பட்ட கதை. போருக்குச் சென்ற அலெக்சாந்தர் கையோடு எடுத்து வந்திருக்கிறார். பைபிளுக்கு அடுத்தபடியாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் ஒடிசியை நாடி இருக்கிறார். லாரென்ஸ் ஆஃப் அரேபியா மேற்கோள் காட்டுகிறார்.

இலக்கியம்

ஒடிசியின் காட்சிகள் ஓவியத்தில் இடம்பிடித்திருக்கிறது. டாண்டே போன்றவர்களிடம் கதாபாத்திரமாக உலா வருகிறது. டென்னிசனின் கவிதையில் தோன்றுகிறது. ஜாகுலின் கென்னடி ஒனாசிஸ் தகனத்தில் அஞ்சலிப் பாடலாக ஒலிக்கிறது. பெனலப்பியை மையமாக வைத்து மார்கரெட் ஆட்வுட் நாவல் எழுதுகிறார். ஜேம்ஸ் ஜாய்சும் ‘யூலிசிஸ்’ (ஓடீசஸுக்கு இத்தாலியப் பேர்) கொடுக்கிறார். டெரக் வால்காட்டின் ஓமராஸ் கவிதை; ஃபிரான்ஸ் காஃப்கா… ஸ்டீவன் ஸ்பீல்பெகின் ஈ.டி… பட்டியல் நீளம்.

போரில் இருந்து வீடு திரும்புபவர்களுக்கு மனித மாண்புகள் இருக்குமா? உயிரைக் கொன்று குவித்த இராணுவ வீரர், சமூகத்தின் ஒழுங்கற்ற கட்டமைப்பில் இயங்க இயலுமா? எதிரி எங்கே இருப்பார் என்றறியாத வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் யுத்தகளத்தில் பணியாற்றியவரால், சகஜநிலைக்கு மீள முடியுமா? யாரை நம்புவது? இயல்பாக உறக்கம் கூட வராத கொலைக்களம் போல் இல்லமும் ஆகிப் போவதை ஓடிஸஸ் மூலமாக உணரலாம்.

‘யார் இவர்’ என்று அறிந்து கொள்வதன் ஆர்வம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தப் புத்தகத்தை காவியம் என்று அழைக்கும் தகுதியும் அதிகரிக்கிறது. ஆடிசி மனிதத்தை சொல்கிறது. ஆடிசி யார் என்று இன்னும் இன்றும் தேடுகிறோம்.

4 responses to “ஆடிஸி: Odyssey: ஓர் அறிமுகம்

  1. அருமையான அறிமுகம். மிக்க நன்றி.

  2. பிரமாதமான அறிமுகம். ஆர்வமூட்டும் நடை. இதுவரை இந்நூலின் பெயர் மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் இதன் உள்ளடக்கக் குறிப்பு அறிய கிடைத்திருக்கிறது. நன்றி. இதனை படித்து முடிக்க நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே?! இதன் மொழிபெயர்ப்பு தமிழில் வந்துள்ளதா என பார்க்க வேண்டும்.

    ராஜா,
    நாமக்கல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.