தமிழ் ஆர்வலரும் நானும் – பாஸ்டனில் மு இளங்கோவன்


 A glance leaves an imprint on anything it’s dwelt on.
Joseph Brodsky 

[Russian poet(1940-1966) – “A Part of Speech” in Collected Poems in English]

துவக்கப் பாடமாக வீடியோ பார்த்துவிடலாம்

அமெரிக்க வந்த காரணம் என்ன? தமிழ் இணைய மாநாடு என்ன செய்தது?

சந்தித்த கதை

மீன் தொட்டிக்குள் நீந்துவது போல் வலை வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. எல்லா மீன்களும் இடமிருந்து வலமாக சுற்றியது. குழாம் அமைத்தது. தொகுதிப் பங்கீடு செய்தது. நானும் நடுவில் இருந்தேன். ஆங்காங்கே சுறா தென்படும். சிலரை கபளீகரம் செய்து கொண்டிருக்கும். நானும் குட்டி மீன்களைக் கவ்வி பசியாறினேன்.

அப்போதுதான் கூர்மாவதாரமாக முனைவர் மு இளங்கோவன் எதிர்கொண்டார்.

அனுபவத்தில் ஆமை என்றால், வயதில் பட்டாம்பூச்சியாக இருக்கிறார். நெடுநெடு உயரம். கருகரு முடி. துடிதுடி கண். பதட்டமில்லாத நடை. தெளிவான உச்சரிப்பு. பாவனையற்ற கனிவு. ஜாக்கிரதையானப் பேச்சு. வம்புகளற்ற உரையாடல்.

சலபதியை சந்தித்தபொழுதும் சரி; ஜெயமோகனோடு இருந்த சில நிமிடங்களிளும் சரி… ஞாநியும் ஆகட்டும்.

சளைக்காமல் கதைக்கக் கூடியவர்கள்.

அ. முத்துலிங்கம் போன்றோர் வேறு இனம்.

கேள்விக்கு சீரியமாக எதிர்வினையாற்றுவார்கள். விவாதங்களை இறுதிவரை கவனித்து முத்தாய்ப்பாக முழுமையாக்குவார்கள். சீரியமாக கவனிப்புடன், ட்விட்டரில் 140 எழுத்துக்குள் சிந்தனையை அடக்குவதற்கொப்ப, எண்ணி, எண்ணியதை சரியான வார்த்தையைக் கொண்டு கோர்த்து, முத்து சிந்தக் கூடியவர்கள்.

மு. இளங்கோவனாரும் அதே ரகம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள்

தமிழ் இணைய மாநாட்டுக்காக பிலடெல்பியா வந்தவர் பாஸ்டன் பக்கமும் எட்டிப் பார்த்தார். எட்டிப் பார்த்தது, ஹார்வர்ட், எம்.ஐ.டி போன்ற தலை பத்து கல்லூரிகளைப் பார்வையிட.

நான் பலமுறை இந்த இடங்களுக்கு சென்றிருந்தாலும், சென்றபோதெல்லாம் சுற்றுலாவாசியாகவே பராக்கு பார்த்திருக்கிறேன். வளாகத்தின் முக்கிய கட்டிடங்கள், வகுப்பறைகளின் அமைப்பு, மாணவர்களின் வாழ்க்கைமுறை, ஆசிரியர்களின் அலுவலகம், இருப்பிடங்களுக்கும் கல்விக்கூடத்திற்குமான தூரம் போன்றவற்றை கவனித்ததில்லை.

எனவே, ஒவ்வொரு இடத்திலும் மாணவர்களே நெறிப்படுத்திய சுற்றுலாக்களை தேர்ந்தெடுக்கு, அவர்களைப் பின் தொடரும் விதமாக, பார்க்கச் சென்றோம்.

அலுவலில் இருந்து வீட்டுக்கு சேணம் கட்டிவிட்ட குதிரையாக ஒரே பாதை. அதே திருப்பம். பழக்கமான பயணமாக இருப்பதை, கூகிள் வரைபடம் (மேப்) வந்தவுடன், சோதித்து பார்த்ததில் புத்தம்புது குறுக்குவழி கிடைப்பது போல், இந்த வழிகாட்டி சுற்றுலாக்கள் பல புதிய விஷயங்களை அடையாளம் காட்டி வழி திறந்தது.

எம்.ஐ.டி.யின் சுயம் சார்ந்த மதிப்பீடுகளும், மாணவ வயதின் பரிசோதனை கலந்த முயற்சிகளும் விளங்கின என்றால், யேல் பல்களையின் பணமும், பிரும்மாண்டமும், உள்ளே நுழைந்த புகழ் பெற்றவர்களின் பேரும் மிரட்டின.

நடுவாந்தரமாக ஹார்வார்டு. கொஞ்சம் அலட்சியம்; கொஞ்சம் திமிர்; கொஞ்சம் பந்தா எல்லாம் யேல் பல்கலையை நினைவூட்டினாலும், பாஸ்டன் நகரத்தின் அண்மை மாணவர்களைத் தரையையும் சுட்டிக் காண்பிப்பதாகத் தெரிகிறது.

  • முதல் வருடம் கழித்தபிறகு முதுநிலையோ, இளநிலையோ… பட்டம் வாங்க விரும்பும் படிப்பை தேர்வு செய்வது;
  • ஐந்தாவது வகுப்பிலேயே கல்லூரிக்கு முதற்படி எடுக்கும் பால்ய காலப் படிக்கட்டுகள்;
  • படிப்பைத் தவிர மக்கட்பண்பு, குணநலன், சகாக்களோடு பழகும்விதம், வெற்றி பெறுவதற்கான சாமுத்ரிகா லட்சணங்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பது;
  • யேல், ஹார்வார்ட் போன்ற புகழ்பெற்ற கல்வி நிலையங்கள் இன்றளவிலும் மதம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் செலுத்தி, இறை சார்ந்து இட்டுச் செல்வது;
போன்ற தகவல்களை அறிந்து கொண்டோம்.

தமிழும் தமிழ் சார்ந்த கணினியும்

இளங்கோவனுக்கு பல்வழி அடையாளம். தமிழ்ப் பேராசிரியர்; கணினியில் தமிழ்ப் பயன்பாடுகளை அடையாளம் கண்டு, புதியவர்களுக்கு எளிதாக்கி, கிராமப்புறங்களுக்கும் பரவலாக்குபவர்; நாட்டுப்புற பாடல் தொகுப்பவர்; சிலம்பு சொற்பொழிவாளர்.

ஆனால், நேர்ப்பேச்சில் நம்மிடம் இருந்து விஷயம் கற்பதில் ஆர்வம் காட்டுகிறார். தன் பெருமைகளை, தன் அறிவை, தன் சாதனைகளை மூச்சு விடாமல் பேசியே திணறடிப்பவர் மத்தியில் பிறரின் திறனை தூண்டிலிட்டு, திரியேற்றி, சம்பாஷணைகளை சுவாரசியமாக்குகிறார்.

ஒருங்குறி ஆகட்டும்; வாழ்க்கையின் அடுத்த அடிகள் ஆகட்டும்; தமிழைக் கணினி கொண்டு, பரவலாக்கி அன்றாட பயன்பாட்டுக்கு அனைவருக்கும் கொண்டு செல்வதில் ஆகட்டும் – தீர்மானமான கொள்கைகள் வைத்திருக்கிறார்.

நம் மீது அதை திணிப்பதில்லை; ஆனால், அதன் நலன்களை சுருக்கமாக விளக்குகிறார். அடுத்தகட்ட செயல்பாடுகளை சொல்கிறார். பயனுள்ள முடிவை நோக்கிய திட்டங்களை வைத்திருக்கிறார்.

இனி அவர்…

தமிழ்க் கல்வி முறை

தமிழை இணையம் மூலமாக கற்பிக்க அடுத்த நடவடிக்கை என்ன?

வலை வழியாக தமிழ்ப் பாடங்களை எப்படி கற்றுக் கொடுக்கலாம்?

பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு
பென்சில்வேனியா தமிழ் இணைய மாநாட்டுக் குழு
குமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்
குமுதம் இதழில் முனைவர் மு இளங்கோவன்
தமிழிணைய மாநாடு – பார்வையாளரில் ஒரு பகுதி
யேல் பல்கலை – பார்னி பேட், சுதீர்
ஃபெட்னா – சார்ல்ஸ்டன் – 2011 துவக்க விழா
கோடை மழை வித்யா, நாசர், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடலாசிரியர் நா முத்துக் குமார் – பெட்னா 2011
விழா மலர் வெளியீடு – பெட்னா 2011
பாஸ்டன் (நியு இங்கிலாந்து) வலைப்பதிவர், தமிழ் ட்விட்டர் சந்திப்பு
மேரிலாந்து, பால்டிமோர், வர்ஜீனியா, வாஷிங்டன் டிசி – மும்மாநில தமிழ்ச்சங்கம்
பிலடெல்பியா தமிழ் இணைய மாநாடு – தமிழ் யூனிகோட், ஒருங்குறி, எழுத்து சீர்திருத்தம் :: சித்தநாத பூபதி, வைரம், கல்யாணசுந்தரம், மதன் கார்க்கி

தொடர்புள்ள பதிவுகள்

முனைவர் மு.இளங்கோவன் :: குறிப்புகள்

கங்கைகொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள இடைக்கட்டு என்னும் சிற்றூரில் 20/06/1967 இல் உழவர்குடியில் பிறந்தவர்.

தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் உள்கோட்டை அரசினர் தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில்முடித்தவர் (1972-1982). மேல்நிலைக் கல்வியை மீன்சுருட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முடித்தவர் (1982-1984).

மூன்றாண்டுகள் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்து, புலவர் ந. சுந்தரேசனார் எனும் தமிழாசிரியரின் நெறிப்படுத்தலில் திருப்பனந்தாள் காசித் திருமடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைமுதல் வகுப்பில், முதல் மாணவராகத் தேறிப் பெற்றவர் (1987-1992).

பின்பு புதுவைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் க.ப. அறவாணன் தலைமையில் இயங்கிய தமிழியல்துறையில் ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்‘ எனும் தலைப்பில் ஆய்வு செய்து இளம் முனைவர் பட்டம் பெற்றவர்(1992-1993).

பின்பு திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிதியுதவியுடன் முனைவர்பட்ட ஆய்வினை (1993 – 1996) நிறைவு செய்தார். முனைவர் பட்டத்திற்கு இவர் ‘பாரதிதாசன் பரம்பரை‘ என்ற தலைப்பில் ஆய்வு செய்து தமிழ்க்கவிதை வரலாற்றில் பல கவிஞர்களின் வாழ்வியலையும் பணிகளையும் பதிவு செய்தார்.

செயங்கொண்டம் தமிழோசை நற்பணிமன்றம் நடத்திய ‘தாய்மொழிவழிக் கல்வி‘ எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரைப் போட்டியில் முதல்பரிசாகத் தங்கப்பதக்கம் பெற்றுப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பொற்கையினால் தங்கப்பதக்கம் சூட்டப்பெற்றவர்.

நெல்லைத் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய கட்டுரைப்போட்டியில் ‘மூதறிஞர் வ.சுப. மாணிக்கனாரின் தமிழ்ப்பணிகள்‘ எனும் தலைப்பிலும், ‘பாவலர் முடியரசனாரின் தமிழ்த்தொண்டு‘ எனும் தலைப்பிலும் இருமுறை ஆய்வுக்கட்டுரை எழுதி இரண்டு தங்கப்பதக்கங்கள் பெற்றுள்ளார்.

மாணவப் பருவத்தில்

  1. மாணவராற்றுப்படை (1990),
  2. பனசைக்குயில் கூவுகிறது (1991),
  3. அச்சக ஆற்றுப்படை (1993),
  4. மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்,
  5. விடுதலைப்போராட்ட வீரர் வெ. துரையனார் அடிகள்

முதலான நூல்களை வெளியிட்டார்.

இந்நிலையில் 1997-இல் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தமிழியல் ஆவணம்’ எனும் திட்டப்பணியில் ஆய்வு உதவியாளராகப் பணிபுரிந்தார்.

பின்பு 1998-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் தமிழிசைக் கலைக்களஞ்சியம் எனும் நூலெழுத அவரின் உதவியாளராக ஓராண்டு பணிபுரிந்து களஞ்சியத்தின் நான்காம் தொகுதி வெளிவர உதவினார்.

பின்பு மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் அறநிலைக்கு உரிமையான கலவை ஆதிபராசக்தி கலை அறிவியல் கல்லூரியில் 16.06.1999 முதல் 17.8.2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இந்திய அரசின் நடுவண்தேர்வாணையத்தால் (U.P.S.C) தேர்ந்தெடுக்கப்பெற்று 18.08.2005 முதல் புதுவையின் புகழ்பெற்ற கல்லூரியான பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

மு. இளங்கோவனின் நூல்களுள்

  1. மணல்மேட்டு மழலைகள்,
  2. இலக்கியம் அன்றும் இன்றும்,
  3. வாய்மொழிப்பாடல்கள்,
  4. பழையன புகுதலும்,
  5. அரங்கேறும் சிலம்புகள்,
  6. பாரதிதாசன் பரம்பரை,
  7. பொன்னி பாரதிதாசன் பரம்பரை,
  8. பொன்னி ஆசிரியவுரைகள் (ப.ஆ.),
  9.  நாட்டுப்புறவியல்,
  10. அயலகத் தமிழறிஞர்கள்,
  11. இணையம் கற்போம்

முதலியவை குறிப்பிடத்தக்கனவாம்.

கவிதைத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் தமிழகத்தில் வழங்கும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடவும், ஆய்வுசெய்யவும் திறன்பெற்றுள்ளார். மேலும் கேரள, ஈழத்து நாட்டுப்புறப்பாடல்கள் பற்றியும் ஆய்வு செய்துள்ளார். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் வழியாக இவர்தம் நாட்டுப்புறப்பாடல்கள் சிறப்பு இலக்கியப் பேருரைகளாக ஒலிபரப்பப்பட்டுள்ளன.

தமிழறிஞர்களின் வாழ்வியலை இணையத்தில் பதிவு செய்யும் முயற்சியில் நூற்றுக்கணக்கான அறிஞர்களின் வாழ்வியல் இவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்துக் கல்லூரி மாணவர்கள் தமிழ் இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி பெறத் தமிழகத்தின் பல கல்லூரிகளில் தமிழ் இணையப் பயிலரங்குகளை நடத்தி வருகிறார்.

இவர் உத்தமம் (INFITT) பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர்தம் இணையத் தமிழ்ப் பணியைப் பாராட்டித் தருமபுரித் தமிழ்ச்சங்கம் இணையத் தமிழறிஞர் என்னும் விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது (2008). தமிழ்ஸ்டுடியோ.காம் சிறந்த வலைபதிவருக்கான விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழி இளம் அறிஞர் விருதினை (2006- – 2007) இவருக்கு வழங்கியுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியர் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் குடும்பத்திற்குத் தமிழக அரசு பத்து இலட்சம் உருவா வழங்குவதற்கு இவரின் முயற்சி பயன்பட்டுள்ளது. மேலும் புலவரின் பிறந்த ஊரில் அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடியமையும் இவர் முயற்சியால் நடந்துள்ளது.

கணினிப் பயன்பாடு நோக்கித் தமிழ் எழுத்துச்சீர்திருத்தம் தேவை என்ற அறிஞர்களின் கருத்தை மறுத்து ஆழமாக வாதிட்டுத் தமிழ் எழுத்துச்சீர்திருத்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியதிலும் இவருக்குப் பங்கு உண்டு. கிரந்த எழுத்துகளைத் தமிழ் நெடுங்கணக்கில் இணைக்கும் ஒருங்குகுறி சேர்த்தியம் முயற்சியில் உலக அளவில் நடந்த உரையாடல்களில் கலந்துகொண்டு தமிழுக்கு ஆக்கமான கருத்துகளை முன்மொழிந்தவர்.

இணையம் கற்போம் என்னும் தலைப்பில் இவர் எழுதிய நூல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் தமிழ் பயிலும் மாணவர்களுக்குப் பாட நூலாக உள்ளது.

இவரின் பிறந்த ஊரில்

  • வயல்வெளிப் பதிப்பகமும்,
  • பாரதிதாசன் உயராய்வு மையமும்,
  • புலவர் ந. சுந்தரேசனார் ஆய்வு நூலகமும்

இவர் மேற்பார்வையில் இயங்குகின்றன.

தனித்தமிழ் ஆர்வம் நிறைந்த இவர்

  • பேராசிரியர் பொற்கோ,
  • பேராசிரியர் க.ப. அறவாணன்,
  • பேராசிரியர் தமிழண்ணல்,
  • பேராசிரியர் இரா. இளவரசு,
  • பேராசிரியர் பா. வளன்அரசு

ஆகியோரின் நம்பிக்கைக்குரியவர்.

இவரின் எதிர்காலத்திட்டம்

  • தமிழிசைத்துறையிலும்
  • சங்க இலக்கிய ஆய்வுகளிலும்
  • தமிழ் இணையத்துறையிலும்

ஆய்வுகளை வளர்த்தெடுப்பது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.