அர்ப்பணிப்பு
நல்ல படத்தை துணையெழுத்து மட்டும் படித்துவிட்டு காட்சியமைப்பையும் நடிகர்களின் உடல்மொழியையும் பின்னணி இசைக்கோப்பையும் தவறவிடுவோம். அந்தளவிற்கு துணையெழுத்துகளில் இலக்கியம் உண்டு. தமிழ்ப்படங்களின் தரமான வசனத்திற்கும், அதை எட்ட வைக்கும் தூரத்தில் வைத்திருக்கும் சப் டைட்டில்காரர்களுக்கும் நன்றி.
என்னுரை
Caption for the hearing impaired என்பதற்கும் Sub-titles என்னும் பிரிவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. முன்னதில் வீட்டுக் கதவு திறந்தாலும், மங்கல் இசை ஒலித்தாலும், கார்கள் மோதிக் கொண்டாலும் கூட ஒலிக்குறிப்பு போடுவார்கள். பின்னது, எங்கெல்லாம் மொழி இடிக்கிறதோ, அங்கு மட்டும் மாற்றி, துணையெழுத்தாக இடுகிறார்கள்.
ஆக்சன் படத்திற்கு வசனம் எழுதுவது தனிக்கலை. அப்படி நறுக்குத் தெறித்தது போல் எழுதப்பட்ட வரிகளுக்கு மொழிபெயர்ப்பது இன்னொரு கஷ்டமான கலை. அதில் குழுஊக்குறி, உள்ளூர் பாஷை எல்லாவற்றையும் அயல்மொழிக்கு ஏற்ற பதமாக மாற்றுவது கிட்டத்தட்ட இயலாத காரியம்.
உரிமை துறப்பு:
இதை நான் பார்த்ததே திருட்டி டிவிடி. எனவே, இப்படி எல்லாம் குற்றங்கண்டுபிடிக்க அருகதை இல்லை என்பது உண்மை. எனினும், உலக அரங்கில், ஆஸ்கார் விருதுக்குழுவிற்கும் அர்த்தம் போய்ச்சேர வேண்டும் என்பதைத் தவிர எந்த விதமான கெட்ட எண்ணமும் இல்லை.
அப்படியாக கோ படத்தில் கிடைத்த சில
1. பேனர்கள், அறிவிப்பு பலகை, பதாகை, தோரண எழுத்து எல்லாவற்றையும் மொழிபெயர்ப்பது அவசியம். அப்படி பார்த்தால், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் அறிமுகத்தில் வரும்
- ‘அதிகார ஆட்சிக்கு முடிவுரை எழுத வரும் தலைவனே!’,
- ‘அறிவுக் குற்றாலமே’ போன்ற சுவரொட்டிகள் ஆங்கிலமாக்கம் பெறவில்லை.
2. அதே போல் ‘தினக்குரல்’ நாளிதழில் வரும் ‘புகைப்பட புதையல்’ போன்ற தலைப்புச் செய்திகளும் பிறமொழிக் காரருக்கு புரியாது. ‘சிறகுகள்’ துண்டுச்சீட்டு போன்றவையும் அடக்கம்.
3. பிரகாஷ்ராஜ்: கார்-ல போய்கிட்டே பேசலாம்
ஆங்கிலம்: ‘Follow me in the car’
4. டூயட் பாடல்களுக்கு வேண்டாம். ஆனால், அந்த சிறகுகள் தீம் சாங் மட்டுமாவது ஆங்கிலமாக்கம் செய்திருக்க வேண்டும்.
5. Naxels, IAT போன்ற பலுக்கப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.
கோ போன்ற நல்ல படங்களுக்கு, அடர்த்தியான வசனங்களும் கொள்கைக் கோட்பாடுகளை விளக்கும் காட்சிகளும் அமைந்த வசனங்களுக்கு மொழிமாற்றுவது சாதாரணம் காரியம் அல்ல. செய்தவருக்கு வாழ்த்துகள்.