ஜூலி கணபதியும் நந்தலாலாவும் தோஷமில்லை. தோற்றுவாய் தெரிந்துவிடும். ஆனால், உலக சினிமா குறித்து எஸ் ராமகிருஷ்ணன் எழுதினால் கபர்தார். ‘துணையெழுத்து‘ விகடன் வாசகரும் வெளிறுவார்; ‘வெயிலைக் கொண்டு வாருங்கள்’ இலக்கிய ஆர்வலரும் பிளிறுவார்.
சோ ராமசாமி நாடகம் போட்டால் தோஷமில்லை. இலக்கியவிரும்பியும் மாற்றுப்பிரதி பிரகடனவாதியுமான பிரசன்னா ராமசுவாமி நாடகம் போட்டால்?
நேரடியாக நிகழ்ச்சியைப் பார்த்தால் மட்டுமே இந்த மாதிரி நாடகத்தை விமர்சிக்கலாம். கிடைப்பதோ கலைஞர் டிவி ஒளிபரப்பு மட்டுமே… அதை வைத்து மதிப்பீடு செய்யலாம்.
1. டிவி பார்வையாளர்: அழகிக்கு ஃபோகஸ் கொடுப்பது சரியே. ஆனால், அவ்வப்போது பிக்சர் இன் பிக்சர் மாதிரி மொத்த திரையும் காமிங்கப்ப்பா…
2. பரத நாட்டிய சுப்புடு: முன்னாடி பத்மா சுப்ரமணியம் பாட்டி வருவார்; இப்பொழுது அவர் இடத்தில் அனிதா ரத்னம். தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சான்ஸ் கொடுங்கப்பா…
3. கலைவிழா வித்தகர் கருணாநிதி: சையா…ச்சய்யா… பாடல் சரி. தொப்புள் தெரியற டான்ஸ் கோரிப்பாளையம் குழுவினரின் டான்ஸ் எங்கப்பா….
கேள்வி நேரம்
- தாலிபான் பாணி கொடூரச் செயலாலகக் கருதப்படும் கெளரவக் கொலைகள் (Honor Killings) என்பது இஸ்லாமிய நாடுகளில்தான் மிகுதியாக இருக்கிறது. முஸ்லீம்களை இந்த நாடகம் இழிவு செய்கிறதா?
- மூன்று பேர் நடுவில் வரும் ஒப்பாரியில் இடம்பிடிக்கிறார்கள். அவர்கள் மு.க. அழகிரி, ஸ்டாலின், கனிமொழியின் குறியீடா?
- ஒலிப்பேழையில் சினிமாப் பாடல், பேக்ட்ராப் பவர்பாயின்ட் ஸ்லைடுகள், ‘மானாட மயிலாட’ குத்தாட்டம், ப்ரொஜஷன் ஸ்க்ரீனில் ஃப்ளிக்கர் ஒளிப்படம் – இவை எல்லாம் இருந்தால் நவீன நாடகம் தயார்?
அதிகாரபூர்வ செய்திக் குறிப்பு
ThatsTamil
ஐந்தாவது சென்னை சங்கமம் கலை விழா பிரமாதமான இசை நாடகத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
சென்னை தீவுத் திடலில் நேற்று மாலை 5வது சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி தொடங்கியது. முதல்வர் கருணாநிதி இதைத் தொடங்கி வைத்தார்.
கலை விழாவின் தலை விழாவாக பிரசன்னா ராமசாமியின் வானம் வசப்படும் என்ற இசை நாடக நிகழ்ச்சி நடந்தது. கெளரவக் கொலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகமாக இது அமைந்தது. அனைவரையும் கவரும் வகையிலான இந்த நாடகத்தில் இடம் பெற்ற வலுவான சமுதாயச் செய்தி அனைவரையும் நெகிழ வைத்தது.
ஒரு எளிய கதையை எடுத்துக் கொண்டு அதை இசை வடிவில் பிரமாதமாக அமைத்திருந்தனர். ஒரு கிராமத்து இளைஞன், வேலை தேடி நகரத்திற்கு வருகிறான். வந்த இடத்தில் காதல் மலர்கிறது. காதலியுடன் தனது ஊருக்குத் திரும்பிச் செல்கிறான். இருவரும் வேறு வேறு சாதியினர்.
இதனால் இளைஞனின் ஊரில் பிரளயம் ஏற்படுகிறது. ஊர்ப் பஞ்சாயத்துக் கூட்டி இந்தக் காதலைப் பிரிக்க உத்தரவிடப்படுகிறது. ஊரில் கலவரம் வெடிக்கிறது. இரண்டாக பிரிந்த கிராமம், சண்டையில் ஈடுபடுகிறது. யார் பெரியவர் என்ற இந்த மோதலால் அந்த இளைஞன் மற்றும் பெண்ணின் காதல் ஸ்தம்பித்துப் போகிறது. இறுதியில் நடப்பது மனதை உருக்குகிறது.
இந்த நாடகத்தின் தொடக்கத்தில் இரண்டு திருநங்கைகளின் அழகான நடனம் அனைவரையும் வியக்க வைப்பதாக இருந்தது. அதேபோல மாற்றுத் திறனாளி ஒருவரின் ஏரோபிக் நடனமும் அனைவரையும் கவர்ந்தது.
200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இந்த இசை நாடகத்தில் கலந்து கொண்டு நடித்து, நடனமாடினர். இசையும், கதையைச் சொல்லிய விதமும், நடனமும் இணைந்து கண் கவர் விருந்தாகவும், மனதுக்கு நல்ல செய்தியைத் தருவதாகவும் நாடகம் அமைந்திருந்நதது.
கிராமிய நடனங்கள், பாரதியாரின் பாடல்கள், தமிழ் சினிமாப் பாடல்கள் என வெரைட்டியான இசை வடிவங்களை இழையோட வைத்திருந்த விதம் அருமை. அதிலும் 3 பெண்கள் இணைந்து பாடிய அந்த ஒப்பாரிப் பாடல், கண்களை நனைக்கத் தவறவில்லை.
முத்து மாரியம்மன் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடனக் கலைஞர் அனிதா ரத்னம் பங்கேற்றார். வெறுமனே வேடிக்கை பார்த்து விட்டு போய் விடும் வகையிலான நாடகமாக இல்லாமல், சமூகத்திற்குத் தேவையான அருமையான செய்தியை சொன்ன இந்த நாடகத்தைப் பாராட்டதவர்களே கிடையாது.
பிரளயன் பேட்டியில் பிரசன்னா ராமஸ்வாமி
சமகால தமிழ் நாடகம் தொடர்பா ஒரு ஏழு நிமிடத்திற்கு ஒரு சின்ன டாக்குமெண்ட்டரி செய்யவேண்டியிருந்தது. அப்படி செய்யும்போது பிரசன்னா ராமசாமியை ஒரு பேட்டி எடுத்தேன். அதில் அவர் ரொம்ப சரியாகச் சொன்னார். தென்னிந்திய நாடகங்களோடு சமகால தமிழ் நாடகங்களை ஒப்பிடும்போது ஒன்றைக் கவனிக்கவேண்டும்.
மலையாள-கர்நாடகா நாடக உலகில் பெரிய சாதனைப் படைப்புகள் பல வந்திருக்கு. காவலம் நாராயண பணிக்கர், சங்கரப்பிள்ளை, அப்புறம் பி.வி.கரந்த், கிரிஷ்கர்னாட், பிரசன்னா என்று பெரிய ஆளுமைகள் உண்டு. அடுத்த தலைமுறையினர் நாடகம் தயாரிக்கிறபோது இந்த பெரிய ஆளுமைகளின் பாதிப்பு அந்த பாணி முற்றிலும் மாறாமல் அப்படியே இருக்கும்.
ஆனா தமிழ் நாடகம் அப்படி இல்ல. பன்முகத் தன்மையோடு இருக்கு.
எங்கள் சென்னைக்கலைக்குழுவுக்கு ஒரு பாணி. கூத்துப்பட்டறைக்கு வேறு பாணி. பரிக்ஷா ஞாநிக்கு இன்னொன்று. அப்புறம் மங்கையோட மௌனக்குரல், மேஜிக் லேண்டர்ன், மு.ராமசாமி, ராஜீ, ஆறுமுகம், கே.ஏ.குணசேகரன், வேலுசரவணன், முருகபூபதி இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. எல்லோருக்கும் முன்னோடியான ராமானுஜம் சாருக்கு தனித்த பாணி. இந்த பன்முகத் தன்மைதான் தமிழ் நாடகத்தோட சிறப்பு.
இது கேரளாவிலும் இல்ல. கர்னாடகாவிலும் இல்ல. இது உண்மைதான். ஆனா இந்த ஆற்றல்களையெல்லாம் கொண்டு தமிழ் நாடகத்தின் உண்மையான சவால்களை நாம் சந்திக்க தவறுகிறோம்.
கெளரவக் கொலைகளைத் தொடர்ந்து தற்கொலைகளும் தமிழகத்தில் அதிகரிப்பு
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கையில் ஒருகிராமத்தில் பெண்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2008 முதல் ஜூன் 2010 வரை மட்டும் இங்கு 39 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டி இடம்பெற்றுள்ள தேனி மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் 82 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 90 பேரும், தூத்துக்குடியில் 136 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
இவற்றில் பெரும்பாலானோர் குடும்பப் பிரச்சினைகள், ஜாதி விட்டு காதலித்ததால் ஏற்பட்ட காதல் பிரச்சினைகள் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள்.மேலும் ஜாதிக்காக தற்கொலை செய்தவர்களும் கணிசமாக உள்ளனராம். அதாவது கெளரவ கொலைகளைப் போல கெளரவ தற்கொலைகளாக இவை வர்ணிக்கப்படுகின்றன.
எவிடென்ஸ் என்ற மதுரையைச்சேர்ந்த என்ஜிஓ அமைப்பு ஆர்டிஐ மூலம் இந்தத் தகவல்களைப் பெற்று வெளியிட்டுள்ளது.