“அம்மாவிற்கு உடம்பு சரியில்லை.”
“எவ்வளவு வயாதாகிறது?”
வயோதிகத்தை சொல்வதற்கு வயது பயன்படும்.
விருது கிடைத்தால் ‘எத்தனை காக்கா பிடித்தீர்கள்?’ கேட்போம். ஐ-பாட் பழுதடைந்துவிட்டால், ‘எத்தனை ஆண்டுகள் பழையது?’ வினவுவோம். புத்தகத்தின் பக்க எண்ணிக்கை போல், ட்விட்டரின் ஃபாலோயர்ஸ் தொகை போல், சீக்காளிக்கு முடிந்துவிட்ட ஆண்டுத்தொகை, மன அமைதியைத் தருகிறது.
“இன்னாருக்கு மேலுக்கு முடியவில்லை” என்று சொல்லிப் பாருங்கள். மூத்திரக்குழியில் இருந்து விலகிவிட்ட சிறுநீரை அவசர அவசரமாக மீண்டும் குறி பார்த்து அடிக்கும் வேகத்துடன் அடுத்த கேள்வி வந்து விழும்.
“எம்புட்டு வயசு?”
கேள்வியை சாமர்த்தியமாக் திசை திருப்ப முயற்சிக்கலாம். பலனில்லை…
“எங்கப்பாவிற்கு எழுபத்திரண்டாகிறது. தினசரி காலங்கார்த்தாலே ஆறரை மணிக்கு நாகேஸ்வரா பார்க்கில் வாக்கிங். அதுவே மாமனாருக்கு அறுப்பதிஏழுதான். வாயு பிரிவதற்காக நாட்டு மருந்து போட்டுக் கொள்கிறார். ப்ரெஷருக்கு பத்து மணிக்கொண்ணு; சாயங்காலம் ஆறு மணிக்கொண்ணு முழுங்கறார். அதனாலதான் கேட்கிறேன். எவ்வளவு ஆகுது?”
விட மாட்டார். அதுவரைக்கும் எப்பொழுது பிறந்தநாள், எத்தனாவது பிராயத்தில் அமெரிக்க பிரயாணம் எதுவும் எழாது. டெமோ கொடுக்கும்போது சங்கடப்படுத்தும் சாஃப்ட்வேர் போல், நமது சங்கடத்தை சொன்னவுடன் மட்டுமே ஒப்பிடுவதற்காகவோ, ஆற்றுபடுத்துவதற்காகவோ விடாக்கண்ட வினாத் தொடரும்.
சம்பந்தப்பட்டவரின் அகவை, அறுபதைத் தாண்டிவிட்டால் லைஃப் எக்ஸ்பெக்டன்சி அளவுகோலைத் தொட்டு விட்ட திருப்தி கிடைத்து விடுகிறது.
உண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.
– ஜெயமோகன், வாழ்வினிலே ஒரு முறை
இயக்குநர் கே பாலச்சந்தருக்கு விழா மேடை ஏறுவதற்கு உதவி தேவையா? ‘விக்கியைத் தேடு; பிறந்த வருடம் கண்டுபிடி!’ ஆணையிடுகிறது மனது.
எனக்கு மட்டுமல்ல… தமிழருக்கே உரித்தானதுமல்ல… “Oh, well he lived a long life.” சொல்லி முத்தாய்ப்பு வைப்பதற்கான விருப்பம்.