மதியம் பதினொன்றே முக்கால்.
‘இன்று எங்கே சாப்பிடலாம்?’
‘மினர்வா போகலாமா?’
‘சரி’
நானும் அவளும் என்னுடைய காரில் பயணிக்க ஆரம்பித்தோம்.
‘ஏதாவது இந்தியப் பாட்டு போடேன்’
கொஞ்சம் தர்மசங்கடம். ஐ-பாடில் ‘ஆடுங்கடா என்ன சுத்தி’, ‘கெடா காறி’; தூக்கத்தை விரட்டும் பாடல்கள் எனக்கு உவப்பானவை. அதிர்ஷ்டவசமாக சிடி-யில் ரங்கீலா இருந்தார்.
‘அனிமல் கிங்டம் மாதிரி ம்யூசிக் ஆக இருக்கே? காட்டுவாசி தீமா?’
இல்லை என்று மறுத்தேன். அமெரிக்காவில் இந்திய ப்ரெட்டும், சிக்கன் டிக்கா மசாலாவும் பிடித்த தக்கினியூண்டு இடத்தை, ஆஸ்கார் ரெஹ்மான் கூட பிடிக்க முடியாது. சாரு, ஷாஜி சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது.
வழக்கம் போல் பஃபே தேர்ந்தெடுத்தேன்.
அமெரிக்காவில் மதுவருந்தும் பப்களில் மாபெரும் தொலைக்காட்சி திரை இருக்கும். நாலு டிவியும் நாற்புறம் நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் ஏதாவது விளையாட்டு காண்பிப்பார்கள். அவர்களுக்குப் போட்டியாக இந்திய உணவகங்களில் பெரிய திரை வைக்கிறார்கள்.
இந்திப் பாடல், தெலுங்கு ஆட்டம், தமிழ் குத்து என்று ஒருங்கிணைப்புடன் தேசிய உணர்வு பொங்க விடுகிறார்கள்.
‘யூ ட்யூபில் உங்க சண்டைக் காட்சி பார்த்தேன். பஞ்சதந்திரக் கதை மாதிரி மேஜிக்கலா இருந்தது. மலைக்கு நடுவில் கயிற்றுப் பாலம். நட்ட நடுவில் ஒருத்தன் ஆக்ட்ரெஸோட விரலப் பிடிச்சுண்டு இருக்கான். இன்னொருத்தன் அவனோட காலைத் தழுவித் தொங்கிண்டு இருக்கான். தீடீர்னு தன்னோட லெக் பீஸை கட் பண்ணிக்கிறான். பாலத்தை அறுத்து பறந்து போய் ஹீரோயினை அந்தப் பக்கம் விடறான். ரொம்ப காமெடியா இருந்துச்சு.’
‘இராவணன்?’
‘தெரியல… ரெண்டு மூணு பார்த்தேன்! எல்லாமே ஒரே மாதிரி இருந்தது. வெரி கன்ஃப்யூஸிங்.’
மணி ரத்தினத்தின் வழுக்கலுக்கு சுகாசினியே காரணம் என்பதை சுருக்கமாக விளக்கினேன்.
‘இதென்ன சாங்? இஸ் இட் தி எக்ஸ்ப்ளாயிடெடிவ் சீக்வென்ஸ்?’
“என் பேரு மீனாகுமாரி” போய்க் கொண்டிருந்தது. ‘அதென்ன exploitative song?’
‘நீதானே சொல்லிக் கொண்டிருந்தாய். ரொமான்ஸ், சோகம், வீரம், ருத்ரம் போன்ற நவரசங்களும் ஒவ்வொரு படத்தில் எட்டு பாடலாக அமையும் என்று… அது போல் இது போல் டான்சிங்?’
‘இது குடும்பப் படம். இது சூப்பர் மேன் பற்றியது. இந்தியாவில் “தெய்வம் மனுஷ ரூபம்” என்னும் தொன்மத்தை பின்பற்று முருகரை அடியொற்றி “கந்தசாமி” என்று யூ செர்டிஃபிகேட்… அதான் G for General Audiences அத்தாட்சி முத்திரையுடன் வெளியான படம்.’
இந்த முறை அவள் ம்ம்ம்ம்.
‘இதென்ன ரோட்டில் யாருமே இல்லை. வழிப் போக்கர்கள் கூட டீக்கா இருக்காங்களே!’
‘கஜினி; அவனுக்கு அஞ்சு நிமிஷம்தான் உலகம் நினைவில் இருக்கும். அதன் பிறகு மறந்து போகும். மெமண்டோ பார்த்திருப்பியே? அதன் முன் தோன்றிய தமிழன். நீ குந்தர் கிராஸ் மாதிரி. ரொம்பக் கேள்வி கேட்கிறே. உனக்கு ஒரு சமூகமே நொந்து நூடில்ஸாய் இருக்குனு புரிய வாய்ப்பேயில்ல. கலைகள் எங்க நாட்டில் இருக்கக் கூடாதா? உனக்கு இது சதைக் காட்சிசாலை. எங்களுக்கு நிர்வாணா!’
தெம்பாய் இன்னொரு நாப்கின் எடுத்து துடைத்தெறிந்தோம்.