நன்றி: ஆப்பிள் தேசம் – 9: நாடகத்துக்குக் கூட்டம் அதிகம்! – ஞாநி
பாஸ்டனுக்கு என்னை அழைத்த பாலா கணினித் துறையில் உயர்பதவியில் இருப்பவர். தீவிரமான வாசகர். சென்னை மந்தைவெளிக்காரர். சாந்தோமிலும் பிலானியிலும் படித்தவர். அப்பா சமையற்கலைஞர். அம்மா பக்திக்கட்டுரைகளும் கதைகளும் எழுதுபவர். பாலா தனக்கென்று மூன்று நான்கு வலைப்பூக்கள் வைத்திருப்பது தவிர, அம்மாவின் படைப்புகளை வெளியிடவும் வலைப்பூ வைத்திருக்கிறார்.
பாஸ்டனில் நான் என்ன பார்க்க விரும்புகிறேன் என்று அவர் போனில் கேட்டிருந்தபோது சொன்ன பல விஷயங்களில் ஒன்று நாடகம். எனவே என்னை விமான நிலையத்தில் வரவேற்று அங்கிருந்து நேராக ஒரு நாடக அரங்கிற்கு அழைத்துப் போய்விட்டார்.
அமெரிக்காவில் பள்ளியிலும் கல்லூரியிலும் பல்கலைக்கழகங்களிலும் நாடகம், இசை நாடகம் முதலிய நிகழ் கலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. பாஸ்டனில் நான் பார்த்த நாடகம், வால்தாம் பப்ளிக் ஸ்கூல்ஸ் எனப்படும் பள்ளிக்கூட அமைப்பும் ரீகிள் மியூசிக் தியேட்டர் எனும் குழுவும் இணைந்து நடத்தியவை. வால்தாம் பள்ளியின் மாணவர்களும் ஆசிரியர்களுமாக 41 வருடங்களுக்கு முன்னால் உருவாக்கிய குழுதான் ரீகிள். இப்போது அதில் முழு நேரத் தொழில்முறை நடிகர்களுடன் பள்ளி மாணவர்களும் இணைந்து நாடகங்களைத் தயாரிக்கிறார்கள்.
நான் பார்த்த, சிண்ட்ரெல்லா கதையை அடிப்படையாகக் கொண்ட இண்ட்டு தி உட்ஸ் (காட்டுக்குள்ளே) ஓர் இசை நாடகம். நடித்தவர்களில் யார் முழு நேர நடிகர், யார் மாணவர் என்று பிரித்துச் சொல்லமுடியாத ஒரே தரத்தில் உயர்ந்த நடிப்பு. அபாரமான இசை. காட்சி மாற்றங்களும் ஒளி, ஒலி அமைப்புகளும், நம்ம ஊர் ஆர்.எஸ்.மனோகரைப் போல அங்கே ஊருக்கு நாலு பேராவது இருக்கிறார்கள் என்று தோன்றவைத்தன.
நாடக டிக்கட்டுகள் 57 டாலர்கள் முதல் மாணவர்களுக்கு 25 டாலர்கள் என்று வெவ்வேறு விகிதங்களில் இருந்தன. நாடகத்தில் பங்கேற்கும் எல்லாருக்கும்சம்பளம் தரப்படுகிறது. இதை புரவலர்களிடமிருந்து நன்கொடையாகக் கேட்கிறார்கள். பின்மேடைக் கலைஞர்களுக்கு 24 டாலர். பிரதான நடிகருக்கு 500 டாலர். பிரபலமான நடிகரென்றால் 1000 டாலர். இயக்குநருக்கு 5000 டாலர். துணை நடிகர்களுக்கு 100 டாலர். ஒவ்வொரு பாத்திரத்துக்கும் மாற்று நடிகரை தயாராக வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஊதியம் 50 டாலர்.
காட்டுக்குள்ளே நாடகம் தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடத்தப்பட்டது. அடுத்த எட்டு நாள் இன்னொரு நாடகம். பிறகு அதே போல இன்னொன்று என்று கோடைக்காலத்தில் தொடர்ந்து நாடகங்கள் நடத்தப்படுகின்றன. நான் சென்ற அன்று அரங்கு நிறைந்து வழிந்தது. எந்திரனுக்கு வருகிற கூட்டம் மாதிரி அங்கே நாடகம் பார்க்க வருகிறார்கள். அந்த அளவுக்கு சினிமாவுக்குக் கூட வருவதில்லை.
அமெரிக்காவில் என் சுற்றுலாவின்போது வேறு நகரங்களிலும் சில நாடகங்களைப் பார்த்தேன். அவற்றைப் பற்றி அந்தந்த நகரங்களுக்குச் செல்லும்போது விரிவாகப் பார்ப்போம்.
நாடகம் பார்த்துவிட்டு பாலா வீட்டுக்கு வெஸ்ட்ஃபோர்டுக்கு சென்று அவருடன் தங்கினேன். இரவு நேரம் பின்பக்கம் தோட்டத்தைப் போய் பார்க்க வேண்டாம். கரடி வந்தாலும் வரும் என்றார். காட்டுக்குள்ளே வீடுகளைக் கட்டியமாதிரி இருந்தது.
பாலா வீடு அருள் வீட்டுக்கு நேர்மாறு. அருள் வீட்டில் பொருட்கள் எல்லாமே கச்சிதமாக ஏறத்தாழ ஒழுங்காக சீராக வைக்கப்பட்ட சூழல் இருந்தது. பாலா வீட்டின் உட்புறம் ஒரு மந்தவெளி ஃபீலிங்கைக் கொடுத்தது. எந்த அறையிலும் எதுவும் இருக்கலாம் என்ற போக்கில் வாழ்வது நமக்கு சகஜமானது. இப்போது கூட என் கட்டில் மீது புத்தகங்கள், நோட்டுகள், சார்ஜர், மருந்துப் பெட்டி, வாட்டர் பாட்டில், டவல், ஜட்டி எல்லாம் இருக்க, அதன்மீது என் லேப்டாப் மினி கணினியை வைத்துக் கொண்டு கட்டிலை மேசையாக்கி நான் தரையில் உட்கார்ந்து எழுதுகிறேன். பாலாவின் வீடு இதே போல இருந்தது.
அவர் மனைவியும் குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தார்கள். அதனால் இப்படி இல்லை எப்போதுமே இப்படித்தான் என்றார் பாலா. அவருடைய நூலகம் என்னை பிரமிக்க வைத்தது. தமிழில் கடந்த பல பத்தாண்டுகளில் வந்திருக்கக்கூடிய எந்த முக்கியமான புத்தகமானாலும் அங்கே இருந்தது. எல்லாமே தீவிரமான வாசிப்புக்குரியவை. அதற்கு நிகரான ஓர் ஆங்கில நூலகம்.
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் வீட்டுக்குள் நம்ம ஊர் மாதிரியே சூழலை ஏற்படுத்திக் கொண்டு இரு உலகங்களிலும் சஞ்சரிக்கும் கலையை நம்மவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள்.
பிங்குபாக்: Top 10 Indians of 2018 – Gnani Sankaran | Snap Judgment