ஞாநி எனக்கு தற்செயலாகத்தான் அறிமுகமானார். ‘கண்டதை சொல்கிறேன்‘ என்னும் ஜெயகாந்தனின் பாடலில் மயங்கி அதன் இரு அர்த்தங்களுக்காகவும் என் தலைப்பாக வைத்து 2003ஆம் ஆண்டில் வலைப்பதிவுக்கு தலைப்பாக்கினேன். கொஞ்ச நாள் கழித்து பழைய ‘இந்தியா டுடே’க்களை தமிழகம் சென்றபோது புரட்டினால் அதே தலைப்பில் ‘ச்’ கூட்டி ஞாநியும் பத்தி எழுதியிருந்தார்; எழுதி வந்தார்.
அட… அபாரம்! சேம் ப்ளட்!! என்று கிள்ள வைத்தார்.
கொஞ்சம் படித்த பிறகு அவர் நம்மைப் போல் அல்ல, ‘நேர்மையான கொம்பன்’ என்று விளங்கியது. குருதிப்புனல் திரைப்படத்தில் கமல் சொல்வார்; இவர் எழுத்தில், செயலில், எண்ணத்தில் வாழ்ந்து காட்டுபவர். நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியை தூங்க விடாமல் குடைச்சல் கொடுப்பவர்.
கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் டாக்டர் மாத்ருபூதம் ஜூனியர் ஆகியிருந்தார். ‘அறிந்தும் அறியாமலும்’ தொடர் பலருக்கு ‘புதிரா; புனிதமா’ பார்ட் டூ. கைமைதுனம், சொப்பன ஸ்கலிதம் முதல் குட்டிப் பாப்பாவுக்கு மலம் அலம்பி விடுவதின் சூட்சுமம் வரை படம் போட்டு வெளிச்சமாக்கி புரிய வைத்தவர். மருத்துவர் மாத்ரு பூதம் போல் காமெடி லபக்குதாஸாகவோ, வில்லன் அப்பாவாகவோ மாறும் வாய்ப்புகளும் மணி ரத்னத்தின் ‘இராவணன்’ மூலம் நிறைவேறும் சாத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன.
இனி… அவருடைய குறிப்புகளில் இருந்து…
பத்திரிகை, நாடகம், வீடியோ ஆகிய துறைகளில் முப்பதாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் ஞாநியை பல தடைகளை மீறித் தொடர்ந்து இயக்குவது, மனித வாழ்வைத் தொழும் அனைத்தின் மீதும் உள்ள அக்கறையே.
வாழ்க்கை குறித்தும் நாடகம் குறித்தும் நடுத்தர வகுப்பில் நிலவும் போலி நம்பிக்கைகளை இனம் கண்டு களைய முற்படுவதே ஞாநியின் நாடகக் கொள்கையாகும்.
எப்போதும் யாருடனாவது உரையாடிக் கொண்டிருப்பதில் எனக்கு சிறு வயது முதலே விருப்பம் அதிகம். ஓயாமல் பேசிக் கொண்டிருப்பவனாகவே நான் என் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அறியப்படிருக்கிறேன். எனக்கு சிலை வைத்தால், ஒரு பெரிய வாயின் உருவமும், அதன் கீழே அறுந்து விழுந்து கிடக்கிற பல காதுகளையும் தான் சிலையாக வடிவமைக்க வேண்டும் என்பது நண்பன் வைத்தியின் பிரபலமான கிண்டல்.
தமிழ் படைப்பாளிகளில் மகாஸ்வேத தேவிகள் இன்று வரை இல்லை. வெகுஜன அளவில் 1965 & 1967 காலகட்டத்தில் நிகழ்ந்த மொழிப்போர் பற்றியே தமிழ்ப் படைப்பாளிகள் இதுவரை எழுதத் தூண்டப்படவில்லை என்கிற நிலையில் எண்பதுகளின் நக்சல்பாரிகள் மீதான ஒடுக்குமுறை போன்ற விளிம்பு நிலைப் போராட்டங்கள் பற்றி எழுதும் வாய்ப்பேது…
வன்முறையை துளியும் விரும்பாத எனக்கு, நக்சல்பாரிகளின் வழிமுறைகளுடனோ, அரசியல் பார்வைகள் பலவற்றுடனோ உடன்பாடு இல்லைதான். எத்தனைதான் சீரழிந்திருந்தாலும், தேர்தல் ஜனநாயகத்தின் மீது சராசரி குடிமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் எனக்கும் பங்குண்டு.
தீம்தரிகிட போன்ற சமூகத்துக்கு தேவையான கறாரான ஒரு இதழ் நின்று போவதற்குக் காரணம் நமது சமூகத்தில் அயோக்கியர்களும் முட்டாள்களும் இருப்பதாகும். அயோக்கியர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் அவர்கள் கையில் பண பலமும் அதிகார பலமும் இருக்கிறது. நல்லவர்கள் எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தாலும் அவர்களில் கணிசமானவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.
அரசியல் விமர்சனம் என்ற முத்திரை என் விருப்பத்தை மீறி என் மீது பலமாக விழுந்துவிட்ட காரணத்தால், நான் அக்கறை காட்டும் இதர பல விஷயங்கள் பற்றிய என் பார்வைகள் போதிய கவனம் பெறாமல் போயிருக்கின்றன:
- நாடகம்
- திரைப்படம்
- ஆண் – பெண் உறவுகள்
- பாலியல் கல்வி
- திருமண முறை
- இளைஞர்
- மகளிர் நலன்
- சூழல் பாதுகாப்பு
‘ஏன் உருப்படாத அரசியல்வாதிகள் பற்றி எழுதி உங்கள் நேரத்தையும் சக்தியையும் இதுவரை வீணாக்கிக் கொண்டிருந்தீர்கள்? இது போன்ற துறைகளில் இன்னும் அதிகம் எழுதியிருக்கலாமே’, என்று செல்லமாகக் கடிந்துகொண்ட வாசகர்கள் பலர்.
வாழ்க்கைத் திறன்கள் என்பதை நான் தனி நபர் முன்னேற்றம் சார்ந்ததாக மட்டும் பார்க்கவில்லை. அரசியல்வாதி, சினிமா படைப்பாளி, மருத்துவர், ஆடிட்டர், ஆசிரியர், எழுத்தாளர், அலுவலக ஊழியர் என்று சமூகத்தை பாதிக்கும் அனைத்துத் துறையிலும் ஆரோக்கியமான மாற்றங்கள் வருவதற்கு, நல்ல மதிப்பீடுகள் தழைப்பதற்கு நமக்குத் தேவைப்படும் பல்வேறு ஆயுதங்களில் வாழ்க்கைத் திறன்கள் முக்கியமானவை என்பது என் கருத்து.
நாடகத்தின் மீது அவருக்கு தீவிர காதலை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர்கள் எம்.ஈ. ஸ்ரீரங்கன், ஜி. வேணுகோபால், கே.வீ. ஸ்ரீனிவாசன், முத்துகிருஷ்ணன், கல்லூரி ஆசிரியர் கிருஷ்ணசாமி (எ) கலைமணி ஆகியோருக்கு தன் நாடக வெளியீடுகளை சமர்ப்பிக்கும், அவரின் கனவுகளில் ஒன்று வருடம் முழுவதும் நாடகப் பயிற்சியும் நிகழ்ச்சிகளும் நிகழும் நாடக அரங்கம் ஒன்றைக் கட்டுவதாகும்.
முந்தைய பதிவுகள்:
1. ஞாநி: பயோடேட்டா « Snap Judgment
2. Njaani visit to US: அமெரிக்காவில் ஞாநி « Snap Judgment
3. Gnani in Boston – 10 Pics « 10 Hot
4. Writer, Filmmaker & the Argumentative Tamilan Gnani in New York/NJ « 10 Hot
பிங்குபாக்: Top 10 Indians of 2018 – Gnani Sankaran | Snap Judgment