“Our incomes are like our shoes; if too small, they gall and pinch us; but if too large, they cause us to stumble and to trip.”
– Philosopher John Locke
கடந்த பத்தாண்டுகள் எப்படி இருந்தது?
இன்டர்வ்யூக்களில் கேள்வி கேட்கத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டால் ‘Where do you see yourself 5 years from now?’னு பட்டவர்த்தனமாய்க் கேட்பார். ரொம்பவே லட்சியவாதியாக பொய் சொல்லாமல், அதே சமயம் உண்மை விளம்பியாக ‘உங்க சீட்டுதான் மேடம்’ என்று உளறாமல் அரை விண்டோவில் ட்விட்டர் பக்கம் திறந்து படிக்கும் சர்க்கஸ் சாகசமாய் பதில் சொல்லவேண்டும்.
சொல்லியிருப்பீர்கள். அப்பொழுது சொல்ல நினைத்த இடத்தை இப்பொழுது நீங்கள் பிடித்தாகி விட்டதா?
சுயநலம்
எனக்காக யோசித்தேன்.
2000த்தில் எங்கே மட்டிக் கொண்டிருந்தேனோ, 10லும் அதே கதவிடுக்கில் சிக்கிய நிலை. ‘வேலயில்லாதவன்தான்; வேல தெரிஞ்சவன்தான்’ என்பதாக ரஜினி பாடிய அளவு மோசமில்லை. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ‘எட்டாண்டுகளுக்குப் பிறகு இரண்டாண்டுகள் சரியும் பொருளாதாரம்’ தலைப்பை தேர்ந்தெடுத்து விளக்கும் சூட்சுமம் அறிந்திருந்தும், பட்டமும் பெறாமல், தெரிந்த சூத்திரத்தை வருமுன் காப்போனாக விலக்கவும் அறியாத நிலை.
க்ளின்டன் ஆட்சியின் கடைசி ஆண்டில் துவங்கிய சரிவு, ஆல் கோருக்கு ஆப்படித்து, ஆப்கானிஸ்தானில் ஆப்படித் துவங்கியபின் நிமிர்ந்தது. புஷ் இறுதியாண்டில் அடுத்த கட்ட பொருளாதார பொலபொல; ஒபாமாவும் இரானிலோ யேமனிலோ போர் தொடுக்காமல் நிற்காது போலிருக்கிறது.
இக்கரைக்கு அக்கரை பச்சை
இதற்கு இந்தியா நேர்மார். ஆட்சி கைமாறினாலும் நடுத்தர மக்களின் வளர்ச்சியில் தொய்வில்லை. குட்டி கார், பெரிய டிவி, அடுக்கு மாடியில் ஒரு வீடு, ஆளுக்கொரு செல்போன். சாய்நாத் போல் வறியோர் – வட்டிகொண்டோர் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை புள்ளிவிவரமாக்கா விட்டால், அபார பாய்ச்சல். மேல்தட்டு இமாலயத்தைத் தொட்டுப் பார்க்கிறது. மிடில் கிளாஸ் ஆனைமுடியைத் தாண்டிவிட்டது.
கல்லூரி முடிந்தவுடன் தொடரும் பருவமும் இலக்கும் எளிமையானவை. கை நிறைய சம்பளம் கொடுக்கும் வேலை; வேளாவேளைக்கு வடித்துக் கொட்ட மனைவி; அவளின் என்டெர்டெயின்மென்டுக்கு குழந்தை; பெற்றோரை விட்டு போதிய தூரம்; கோல்ஃப் ஆடி தண்ணியடிக்கவோ, தண்ணியடித்து பௌலிங் போடவோ நான்கு நண்பர்கள்.
எளிமையான கனவு கண்டால், கனிவாக சித்திக்கும் பத்தாண்டுக் காலம். அதற்கு அடுத்த பத்தாண்டுகள்?
நாற்பது வயதில் நாய்க்குணம்
Peer pressureஐ வெளிக்காட்டாத ஆசாமியானால், ஐபிஓ பார்த்த கல்லூரித் தோழனையோ, சிக்யூஓ ஆகிவிட்ட நண்பனின் மனைவியையோ, இந்தியா திரும்பி ஆஃப்ஷோரிங்கை நிரூபித்த நபரையோ உதாரண புருஷராக நினைக்காமல், 9 டு 5 சாகரத்தில் சங்கமமே விருப்பமாக சொல்லிவிடுவார்.
கொஞ்சம் ஹைப்பர் பேர்வழியானால், தலை 5 (இப்ப மீந்திருப்பது நான்கா/மூன்றா) கான்ட்ராக்ட் வேலையில் மூழ்கி பார்ட்னராகும் பாதை பக்கம் பேபி ஸ்டெப்ஸ் வைத்திருப்பார்.
Contractors as Prostitutes vs Marriage as Full Time Employment
நிரந்தர வேலைக்காரரை மனைவி எனவும், குந்துரத்தரை வரைவின் மகளிர் எனவும் ஒப்புநோக்கலாம்.
மனைவிக்கு விவாகரத்து தர ஜீவனாம்சம் அழவேண்டும். முழு நேர உழைப்பாளியை நீக்கினால் severance pay தரவேண்டும். சிஎன்என் தலைப்புச் செய்தி போல் நிமிடந்தோறும் மாறும் தொழில்நுட்பங்களை குந்துரத்தர் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். கீப் எனப்படுபவள் அதே போல் தன் தோற்றத்தை சிக்கென்று வைத்திருக்க வேண்டும்.
இன்ஷூரன்ஸ், பென்சன் மாதந்தோறும் பற்றுக் கணக்கு போல், மனைவியோடு இலவச இணைப்பாக மாமனார், மாமியார் தொகையறா செலவுகள் எக்கச்சக்கம். ரேட்டு நிறைய என்றாலும், குந்துரத்தரோடு ஒரு மணி நேரத்திற்கு ‘இத்தினி ரேட்டு’ என்று பேசிவிட்டால், முடிந்தது காரியம்.
மத்தியமரில் இத்தனை வகையா?
தாலி கட்டிய பத்தாண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கைப் பாதை எவ்விதம் அமைக்க விருப்பம்?
1. காலாகாலத்திற்கும் சம்பளம்; கவர்ன்மென்ட்டு உத்தியோகம் போல் வால் ஸ்ட்ரீட் இருக்கை.
2. கான்ட்ராக்டர் -> கன்சல்டன்ட் -> பார்ட்னர் -> சொந்த நிறுவனம்
3. புத்தம்புது ஐடியா + ஏமாந்த முதலீட்டாளர் = மாறிக் கொண்டேயிருக்கும் நிறுவன ஸ்தாபனர்
அமெரிக்கரை மேற்கண்ட மூன்று வட்டத்துள் சுருக்கினால், இந்தியரை எவ்விதம் அடக்கலாம்?
வளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கும் தலைமுறையை இப்படி பாகுபடுத்துவது இயலாது. கடந்த இருபதாண்டுகளாக பொருளாதாரத்தில் தேக்க நிலையைக் கண்டிராத சமூகம்.
பொறியிழந்த விழியினாய் போ போ போ
அமெரிக்காவைப் போல் போரை நம்பி பிழைக்காத நிதிநிலை. ரஷியாவைப் போல் அரசாங்க செலவை மட்டுமே நம்பியிராத நிலை. எமிரேட்ஸைப் போல் எண்ணெயைத் தலைக்கோசரம் வைத்து உறங்காத வளம்.
இத்தகைய நாட்டின் இளைய தலைமுறையையும், கொஞ்சம் தலை நரைத்த தலைமுறையும் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளுமா? அப்படி மாபெரும் வீழ்ச்சி வந்தால் எப்படி சமாளிக்கும்?
சத்யம் தந்த சாம்பிள் போல் தற்கொலையும், அமெரிக்க இந்தியர் சிலர் மேற்கொண்ட மரணங்களும் அன்றாட பெட்டிச் செய்திகளாகி விடும்.
Call center ஆப்பிரிக்காவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடம்பெயர்ந்தால் transferable skill ஆக எதைக் கொண்ட ஜெனரேஷன் இந்தியாவில் இருக்கிறது?
லட்சக்கணக்கில் இளநிலைப் பொறியாளரை உருவாக்கிவிடும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், பட்டதாரிகளை தொழில் முனைவோராகவும், சுயசிந்தனையாளர்களாகவும், வாக்குஜால வித்தர்களாகவும் மாற்றுவது எக்காலம்?
நகரத்தில் எல்லோரும் பேராசைக்காரர்; கிராமத்தோர் நிறைமனதுக்காரர்; போன்ற வார்ப்புரு தேய்ந்தாலும், பொன் செய்யும் மருந்து மனத்திற்கும் எதிர்நீச்சல் வெறிக்கும் பேலன்ஸ் கிடைப்பது எங்ஙனம்?
அடுத்த தசாப்தத்திலும் பொங்கும் மங்களம் எங்கும் தங்க, காங்கிரஸ் + பாஜக அரசியல்வாதிகளிடம் திட்டம் இருக்க எல்லாம் வல்ல இறைவரை வேண்டுகிறேன்.
cool. 🙂
(1) கேள்வி கேட்கத் தெரியாதவர் தான் “‘Where do you see yourself 5 years from now?-னு கேட்பாங்களா?
2) ‘உங்க சீட்டுதான் மேடம்’ அப்படின்னா, கேள்வி கேட்கத் தெரியாதவங்கள்லாம் பெண்டிர் தாமா?
என்று உங்கள் பித்தளைக்கு வெளிச்சம் போட வந்தால்….
பெரிய தீஸிஸ் எழுதிட்டீங்க தல. இது உ.த.வுக்கு போட்டியா? இல்ல,நானும் ஆராய்ச்சியாளர்னு உ.கு.வா?
மொத்தத்திலே, ‘எங்கியோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ போயிட்டீங்க’.
(I only ask “Where do you see yourself in 2 years”, Heh!)
//transferable skill ஆக எதைக் கொண்ட ஜெனரேஷன் இந்தியாவில் இருக்கிறது// This is a generation of people growing up to be smart in hustling… தவறான பொருளில் இல்லை, பொதுவாகவே hustling குணம் இருந்தால் வியாபாரத்தில் ஜெயிக்கலாம் அல்லவா?