காலம் கலிகாலம். அமெரிக்கா செல்வது அமிஞ்சிகரைக்கு செல்வதைவிட எளிதாகிவிட்ட காலம். கல்யாணத்தை கான்டிராக்டரிடம் விடுவது மாதிரி மொத்த குத்தகைக்கு எல்லா சாமான், செட், சூட், டை, சூட்கேசு வாங்கிக் கொடுத்து மெட்ரோ பார்க் சீஸன் டிக்கெட்டும் கொடுத்து அனுப்பும் இன்ஃபோசிஸ்கள் பெருகி களிக்கும் காலம்.
நான் சொல்லப் போகும் சம்பவம் சற்றே ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கு முந்தைய துவாபர யுகத்தில் நடந்த விஷயங்கள். ஹாலிவுட்டில் ஃப்ளாஷ்பேக்கிற்கு இடமில்லை. இது ஹாலிவுட் இல்லை என்பதால், கறுப்பு-வெள்ளை காலத்திற்கு மெதுவாக பின்னோக்கி செல்லலாம்.
எஞ்சினியரிங்கில் கூடப் படித்த நந்தினிக்கு இடம் கிடைத்த கல்லூரியிலேயே எனக்கும் சீட் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். அன்டார்டிகாவின் குளிருக்கு அசராதவர் கூட இருப்பார்கள்; நந்தினி சைக்கிள் ஓட்டும் அழகில் மயங்காதவர் இலர். ஷாம்பூ விளம்பரம் போல் கேசவர்த்தினி போடாத தலைவிரி கோலத்தைத் தவிர்த்துவிட்டால் நிச்சயம் மயங்கி விடுவீர்கள். என் கற்பனைக்கு கூந்தல் தடையாக இருந்தது இல்லை. முடியை எல்லாம் எவர் கவனிப்பார்கள்!?
‘காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி; அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி ‘. கண்ணதாசன் சொன்னதற்கேற்ப அந்த நாளும் வந்தது.
“ரேகாவிற்கு 37ஈ கொடுத்துட்டாங்க. நீ அங்கே உட்கார முடியுமா?”
‘பஞ்சுப் பொதிகளாம் மேகங்களை எடுத்து நெய்தலாடை தரவா’ என்று சங்கம் கலந்த மு. மேத்தா (அந்தக் காலத்தில் நா முத்துக்குமார் இல்லை) எனக்குள் எட்டிப் பார்த்த போது ரியலிஸத்திற்கு இட்டு வந்தாள் நந்தினி.
“சாரி சார்! இந்த இருக்கைக்கு சிக்கன்தான் சொல்லியிருக்காங்க.” ஏவிஎமெல், ஏவிஎம்எல் என்று ஒரே சீட்டை நான்கு தடவை லுஃப்தான்ஸாவைக் கூப்பிட்டு ஊர்ஜிதம் செய்ததற்கு ரேகாவிற்கு ஏவிஎம்எல் ப்ராப்திரஸ்து. எனக்கு சேவற்கொடியோனே நேரில் பிரத்யட்சமஸ்து. பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி; பசி வந்திட பறவையும் உள்ளே போகும் – இது விமான மொழி.
கார் எவ்வளவு வேகமாக ஓடினாலும் குடிக்கிற பெட்ரோலைக் குடிக்கத்தான் செய்யும். பிரியமானவளின் பெட்டி என்றாலும் கனக்கத்தான் செய்யும். பிரயத்தனப்படாமல் எடுக்க பிரயத்தனப்பட்டு, மிகுந்த பிரயாசையுடன் சூட்கேசுகள் தள்ளுவண்டியில் வைக்கப்பட்டது.
“கேர்ள்சுக்கு பார்த்திருந்த அபார்ட்மென்ட் காலியாகல. பிஎச்டி பண்ணுறேன்னுட்டு அங்கே இருக்கறவங்க, அப்படியே கன்டினியூ செய்யறாங்க. உங்க வீட்டுலதான் மூணு ரூம் இருக்கே. ஒரு ரூமை ரேகாவிற்கும் நந்தினிக்கும் அலாட் செஞ்சிருக்கோம். அடுத்த மாசம் வேற இடம் பார்த்துடலாம்.”
காதில் ஜிகிர்தண்டா பாய்ந்தது. புதிய பூமியில் பக்கத்து பக்கத்து அறை. காலையில் காபியுடன் எழுப்பி விடுவாள். ஞாயிறு க்ரிப்டிக் குறுக்கெழுத்து போட்டி போடுவோம். ஃபீனிக்சில் இறங்கிய முகூர்த்தம்; ஃபீனிக்ஸ் பறவையாக கற்பனை பறந்தது.
கம்ப்யூட்டரில் பவர்பாயின்ட் இருப்பதால் மட்டும் அருமையான மேடைப்பேச்சு அமைந்து விடாது. ஒரே வீட்டில் நந்தினியுடன் இருப்பதால் மட்டும் நேசம் மலர்ந்து விடாது என்று ஜெட்-லாக் வரவழைத்த விழிப்புமற்ற உறக்கமுமற்ற அசமஞ்ச நிலை உணர்த்தியது. சுயம்வரத்திற்கு தயாராகும் சிப்பாய்களின் மனநிலையில் சமையலறையில் நுழைந்தோம். அம்மாவிடம் கற்றுக்கொண்ட நாற்பது நாள் சமையலை சரி பார்க்கும் பலிபீடத்திற்கு காஸ் ஏற்ற தீப்பெட்டி தேடல் துவங்கியது.
‘அமெரிக்காவில் ஏதுடா கரண்ட் கட்? ஹோம்லைட் இங்கேயே இருக்கட்டும்!’ அசரீரியாக அம்மாவின் குரல்.
‘சென்னைக்கு சென்று எடுத்து வந்து விடலாம்?’ உள்ளூர ஹோம் சிக்னெஸ்.
நாங்கள் தம் அடிக்காத மார்ல்போரோ மாந்தர்கள். எவரிடமும் கையில் வத்திப்பெட்டி இல்லை. நந்தினிக்கும் புகை பிடிக்கும் பழக்கம் இருக்காது என்னும் அபார நம்பிக்கையும் இருந்ததால், அவளை எழுப்ப மனம் ஒப்பவில்லை. இந்தியாவில் எங்கு சுற்றுலா சென்றாலும் கேன்டில் லைட் உணவிற்காகவோ, அல்லது அந்த உணவை சமைப்பதற்காகவோ மெழுகுவர்த்தியும் சீட்டா ஃபைட்டும் தற்காலத்தின் ப்லூடூத்தும் செல்பேசியும் போல் இணைபிரியாமல் வந்து கொண்டிருக்கும்.
முண்டா பனியனும் லுங்கி சகிதமாக பக்கத்து வீட்டு சீனியர் மச்சான்கள் கதவைத் தட்டினோம்.
“கேஸைத் திறந்தாலே பத்திக்குமே!” அவர்களின் 340வது இ-மெயிலின் 16வது ஷரத்தில் இதைக் குறிப்பிட்டார்கள். கண்டம் விட்டு கண்டம் மாறினாலும் கைக்கடிகாரம், தானாக தன் நேரத்தை மாற்றிக் கொள்வதில்லை. எவராவது, ‘இதுதானம்மா… நீ காட்ட வேண்டிய டைம்’ என்று முள்ளை உள்ளூருக்கு ஏற்ப திருப்பி வைத்தால், சரியானபடி வேலை செய்யும். நாங்கள் கடிகாரமாக கிடைத்த தகவலை கிரகித்துக் கொண்டு, திரும்பினோம்.
“எங்கே போயிட்டீங்க… இந்தாங்க டீ!” நந்தினி நீட்டினாள்.
‘■ரொம்ப நேரமாக எங்களின் அலுவல் கட்டிடத்தின் மேல் ஹாலிவுட் படம் போல் ஹெலிகாப்டர் அப்படியே நின்று கவனிக்கிறது. வெளியே சென்றதால்தான் தெரிகிறது’
may be it is there just to scare desis who
go out often 🙂
//பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி; பசி வந்திட பறவையும் உள்ளே போகும் – இது விமான மொழி.//
அவசியமான பழமொழிதான். இப்போதெல்லாம் வெளி நாடு பயணம், அங்கிருக்கும் வாழ்க்கை பற்றி சொன்னாலே சலிப்பு தட்டத் தொடங்கியிருக்கிறது. எண்பதுகளில் வெளிநாட்டுடன் வாழ்ந்தவர்களின் கதை ராமாயணம் போல் இதிகாசம் – `இவை நடந்தவை`.
H1B,க்ரீன் கார்டுக்காக அல்லோலப்படும் கதைகள் மிக சுவாரஸ்யமானவை. அவை எங்குமே பதியப்படாத அக்கரைப் பக்கங்கள்.
தொடருங்கள்.
—இப்போதெல்லாம் வெளி நாடு பயணம், அங்கிருக்கும் வாழ்க்கை பற்றி சொன்னாலே சலிப்பு—
கொஞ்சம் சுவாரசியம் கூட்டி சொன்னால் எல்லாமே நல்லா இருக்கும் என்கிறீங்க 🙂
இல்லை, சுவாரசியமாகத் தான் சொல்லியிருக்கீங்க.ஆனாலும் வெளிநாட்டு வாழ்க்கை டெம்ப்ளேட் போல் மாறிவிட்டது- அதனால் சலிப்பு.
வெளிநாட்டு வாழ்க்கை, இந்தியாவில் உள்ளோருக்கு புதிதாய் இருந்த காலங்கள் மாறிவிட்டது.
அ.முத்துலிங்கம் ‘இப்ப அங்க என்ன மணி’ அனுபவம் போல் தொலைபேசியில் அங்க என்ன மணி என யாரும் கேட்பதாய்த் தெரியவில்லை 🙂