‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்’ சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன.
போட்டி குறித்த பதிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன: Snap Judgement: Uraiyadal: Jyovram Sundar & Paithiyakkaaran Short Story Contests: Tamil Bloggers Fiction Competition Results
இனி வென்றதிலும் கலந்து கொண்டதிலும் நான் படித்த சில கதைகளும் கருத்துகளும்:
- யோசிப்பவர்: பிரசன்னம்: கதை பிடித்திருக்கிறது; தலை பத்தில் இடம்பெற வேண்டும் என்று சொல்லுமளவு பிடித்திருக்கிறது. அறிவியல் இருந்தது. மாயாஜாலம் இருந்தாலும் நம்பக்கூடிய, அசர வைக்கும் முடிவு.
- அம்மாவுக்குப் புரியாது – RV « கூட்டாஞ்சோறு: ஆர்.வி. நிறைய வாசிப்பவர். அவ்வளவு பரந்த வாசிப்பு, நல்ல சிறுகதையைத் தரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதற்கு இந்தக் கதை ஒர் உதாரணம். (உரிமைதுறப்பு: நானும் நிறைய இலக்கியம் படிப்பவன்; சிறுகதை எழுத வரவில்லை 😦 முடிவை மட்டும் நம்பும் புனைவு. தட்டையான விவரிப்பு. சுவாரசியமான வாசிப்பு என்பதாலும் இதை விட மோசமான கதைகள் கூட தலை 20ல் இடம் பிடித்திருப்ப்பதாலும், 250க்குள் பெஸ்ட் ஆக இருந்திருக்கும்!?
- கவிதா | Kavitha: அப்பா வருவாரா?: வலையில் எழுதுபவர்களில் பெண் பதிவர்கள் வெகு குறைவு. எனவே, இட ஒதுக்கீடு என்னும் எண்ணத்தில் இந்தக் கதை தெர்ந்தெடுக்கப்படலாம். பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தவிர இந்த ஆக்கத்தில் கரு கிடையாது; முடிச்சு கிடையாது; ரொம்ப மேலோட்டமான விவரிப்பு. கிழக்கு பதிப்பகம் புத்தகம் போட்டு, இணைய அறிமுகம் இல்லாதவர் இந்த மாதிரி கதைகள்தான் இணையத்தில் வலம் வருகிறது என்று எண்ண நினைத்தால், அது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். ‘நான் ஆதவன்’ மறுமொழி அவசியம் வாசிக்க வேண்டும்.
- சேரல்: கருப்பு வெள்ளை: நீர் வழிப்படூஉம் புணை: எழுத்து என்றால் அப்படியே உள்ளே இழுக்கணும். இந்தக் கதை கொக்கி போட்டு கதையினுள் மூழ்க வைக்கிறது. தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க ஆக்கம். தெரிந்த பின்னணியைக் கூட வித்தியாசமான சித்தரிப்புகளும் விலாவாரியான விவரணைகளும் கொண்டு படம்பிடிக்கிறார். மேற்கோள் காட்ட தூண்டும் நடை:
- நந்தவேரன் :: அவளாக இருந்திருக்கலாம் « Associated Directors of Tamil Movies: சும்மா துள்ளிக் கொண்டு போகிறது. நெஞ்சை லபக்கும் ஒயில் ஓட்டம். இராஜேஷ் குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் கலந்தாலோசித்து எழுதிய கதையின் முடிவை சுஜாதா கொடுத்தால் எப்படி இருக்கும். தலை பத்து நம்ம சாய்ஸ்.
- பட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள் இல்லாத ஊரின் கதை …: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘??’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விரிவாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சின்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே.
நல்ல கதை என்பது பாஸ்டன் நகரத்து Deciduous மரம் போன்ற தன்மையுடையது. படிக்கும் போது பூப் பூக்கும் வசந்த காலம். முடிவு நெருங்க நெருங்க வண்ணம் மாறி மாறிக் காட்சியளிக்கும் இலையுதிர் காலம். பனிக்காலமாக கதை முடிந்த பிறகும், அந்த மரமாகிய புனைவு மனதில் நிற்க வேண்டும். வேறெங்கோ பச்சை பாசியைப் பார்க்கும் போதோ, சூரியோதய ஆரஞ்சை கவனித்தாலோ, அந்த மரம் உதிக்கும். கதையும் அது மாதிரி நிறம் பலகாட்டி நிலைத்து நிற்க வேண்டும்.
வேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.
பார்ப்பதற்கு பளபளவென்றிருக்கும் பழுதாகிப்போன பார்க்கர் பேனாவை விட, படபடவென் எழுதும் பால்பாயின்ட் பேனாவே மேல். திறமை இருக்கிறது. ஆசை இருக்கிறது. அவசரமும் நிறையவே இருக்கிறது. உழைக்கத் தெம்பில்லை. உங்களுக்கு இராமநாதன் கிருஷ்ணன் தெரிந்திருக்கும். அமிர்தராஜ் சகோதரர்கள் கூட அறிந்திருப்பீர்கள். திறமை என்பது கஷ்டப்படுவதாலும், வாய்ப்பு கிடைப்பதாலும் மட்டும் எட்டப்படுவதில்லை.
- ஸ்ரீதர் நாராயணன் :: ஒருபக்கம்: காதோரமாய்: எனக்கு நரசிம்ம ராவைத் தெரியும் என்று பீற்றிக் கொள்வது மாதிரி, நான் orupakkam அறிவேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட வைக்குமாறு கதைகள் எழுதுபவர். ‘என்னமா எழுதறாரு?!’ என்னும் மலைப்பிலேயே ஒட்டக்கூத்தராய், என் கதைகளை ட்ராஃப்டிலேயே வைத்திருக்க வைப்பவர். இது தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க கரு + விவரிப்பு + முடிவு.
- வெட்டிப் பயல்: வாழையடி வாழை: சென்ற ஆசிரியரின் இடுகை போலவே எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பா இதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் தரும் அழுத்தம், புதுமையான தற்காலச் சூழல் போன்றவற்றில் மேலும் சிறப்பானதால், அதுதான் தலை பத்தில் இடம்பிடிக்கும் என்று கணித்திருந்தேன். ஜெயகாந்தன் காலத்து சித்திரத்தை, இந்த இணையக் காலத்தில் எவரும் இவ்வளவு நேர்த்தியாய் தரவில்லை என்றாலும், ஃப்ரெஷ்னெஸ் லேது.
- இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில் ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
- நுனிப்புல்: அவள் பத்தினி ஆனாள்- ராமச்சந்திரன் உஷா: நான் ரா.கா.கி., தமிழோவியம் எழுத ஆரம்பித்தபோது இவரும் திண்ணை, கல்கி என்று சூறாவளியாக நுழைந்ததால், ‘என்னோடு எழுத வந்தவர்’ என்று சொல்லிக் கொள்ளப் பிரியப்படுபவர். ஆனால், நான் இன்னும் ஆங்காங்கே எழுதிக்கொண்டிருக்க, இவரோ அமெரிக்காவின் ஆக்ரோஷத்தோடு புதிய எல்லைகளைத் தொட்டு, பன்னாட்டு இதயங்களைத் தொட்டு, பல எல்லைக்கோடுகளைத் தாண்டி எங்கும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையவர் என்பதற்கான ஒரு பதம், இந்த ஆக்கம். தலை மூன்று இடம்பிடிக்க வேண்டும்.
- மைய விலக்கு « இன்று – Today :: சத்யராஜ்குமார்: பரிந்துரை முன்பே எழுதியாச்சு
- அகநாழிகை: தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் – அகநாழிகை வாசுதேவன் : நான் கூட எதையாவது கிறுக்கியிருந்தால், பேரை வைத்து மிரட்டியே தலை இருபதிற்குள் இடம்பிடித்திருக்கலாம் என்னும் நப்பாசையைத் தூண்டிய புனைவு. அச்சுப் புத்தகத்தில் இடம்பெறும் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டோம் என்னும் வருத்தம் மட்டுமே இந்தப் புனைவைப் படித்தவுடன் மேலோங்கியது.
- இவள் என்பது பெயர்ச்சொல்: வழியனுப்பிய ரயில் – உமாசக்தி: வாசித்து ரொம்ப நாளாகி விட்டது. தேர்வாகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஓரளவு நல்ல கதை. ஆனாலும், முழுமை உணர்வு கிட்டவில்லை. ரொம்ப அவசரப்படுத்தும் அவஸ்தை. இன்னும் கொஞ்சமாவது காரண காரியங்களின் அஸ்திவாரம் இல்லாததால் ஆட்டம் கண்ட கதை.
- தமிழன் – காதல் கறுப்பி...: மலைகளில் காணாமல்போன தேவதைகள்…: இது மெஜிக்கல் ரியலிஸம் என்பதை விட உள்மன கிடக்கையை எழுத்தில் கொணரும் முயற்சி. வித்தியாசமான பெயர்கள், அதிகம் அறிந்திராத தலம் போன்றவற்றிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். மற்றபடிக்கு ‘பாய்ஸ்’ படத்தில் ஃபேண்டசி கதைகளை அவிழ்த்துவிடும் குண்டுப் பையனிடம் ஜொள்ளொழுக கேட்பதையொத்த அனுபவம்.
- நீரோடையில் தக்கை…: வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் – புபட்டியன்: பதின்ம வயதினரின் பருவக் கோளாறையும் ஃபேன்டசியையும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முன்னோட்டத்தையும் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதை.
- நந்தாவிளக்கு: நான் அல்லது நான் – நந்தா குமாரன்: அசத்தலான ஆரம்பம். அடைப்புக்குறி ஆரம்பத்தில் கடுப்பேற்றினாலும், போகப் போக சுவாரசியத்தைக் கூட்டியது. ஆனால், தமிழ்ப்படத்தில் இரு வேடம் தரிப்பது போல் இரண்டு ‘நான்’களுக்கும் போதிய கதாபாத்திர வடிவமைப்பு இல்லாமை அலுக்க வைக்கிறது. முடிவில் கொஞ்சம் தட்டி கொட்டி மேலும் உருப்படியாக கொணர்ந்திருக்கலாம். என்னுடைய தலை இருபதில் நிச்சயம் இடம் உண்டு.
- வெண்ணிலா பக்கங்கள்: நீரும் நெருப்பும்: பிடித்திருந்தது. ஏற்கனவே இது போன்று பல ஆக்கங்கள் வாசித்திருந்தாலும், போட்டிக்கு வந்ததில் இது போல் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுவது வெகு பொருத்தம். தலை பத்து.
- GURU: காத்திருத்தல் – சரவணன்.P: எளிமையான வடிவம்; உள்ளடக்கம். அதைக் கொணர்ந்த விதம் சிறப்பு. நடுவர்கள் தீர்ப்பளித்திருக்காவிட்டால் தவறவிட்டிருப்பேன். தலை பத்து.
- கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் – நிலா ரசிகன் :: சிறுகதைகள் & பாடல்கள: நிறைய கதை இருப்பதால் நிறைந்த உணர்வைக் கொணர முடியாது. வாய் முழுக்க தண்ணீரை வைத்துக் கொண்டு பேச முடியுமா? ‘அச்சமில்லை… அச்சமில்லை’ ஆரம்பித்து பார்த்த ஆதிகால ஆதிச்சநல்லூர் கருவின் அத்தியாய சுருக்கங்கள்.
- எண்ணச் சிதறல்கள்: அம்மாவின் மோதிரம் – எம் ரிஷான் ஷெரீப் : பிடித்திருந்தது. வித்தியாசமான பொறுமையான நடை. தலை பத்து.
ட்விட்டரில் சொன்னது: Tht piece lacked freshness, was more adjective oriented, pretentious & preachy.
நல்ல வேளை, இதை விட மோசமான கதை ஒன்று இருந்தது அதை அனுப்பவில்லை. அது வென்றிருந்தால் என்ன சொல்லி இருப்பீர்களோ? 🙂
அதிஷா எழுதிய யாக்கை, ராதா எழுதிய பயணம் இரண்டும் நான் படித்த சில கதைகளில் என்னுடையதை விட பெட்டர் என்று நினைக்கிறேன். படித்து பாருங்கள்!
அப்புறம் டாப் 3 கதைகளின் 4 கதைகள்! டாப் 10 வரவே இல்லையே?
யாக்கை, en-sindhanaigal: பயணம் குறித்துக் கொண்டேன்.
பரிந்துரைக்கு நன்றிகள் பல.
—டாப் 3 கதைகளின் 4 கதைகள்—
😆
—டாப் 10 வரவே இல்லையே?—
தேர்வானதில் இன்னும் ஐந்து படிக்க வேண்டும்.
15. 4. அம்மாவின் மோதிரம் – எம் ரிஷான் ஷெரீப் ( http://rishanshareef.blogspot.com/2009/06/blog-post_19.html )
16. 12. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் – நிலா ரசிகன் ( http://nilaraseegansirukathaigal.blogspot.com/2009/06/blog-post.html )
17. 13. காத்திருத்தல் – சரவணன்.P. ( http://tamilwritersaravanan.blogspot.com/2009/06/blog-post.html )
18. 14. நீரும் நெருப்பும் – வெண்ணிலா ( http://vennilapakkangal.blogspot.com/2009/06/blog-post_3928.html )
19. 15. நான் அல்லது நான் – நந்தா குமாரன் ( http://nundhaa.blogspot.com/2009/05/blog-post_25.html )
20. 17. வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் – புபட்டியன் ( http://ppattian.blogspot.com/2009/06/blog-post_17.html )
அப்புறம் இன்னொரு விஷயம் – obvious என்று போன முறை எழுதாமல் விட்டுவிட்டேன், தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். இணையத்தில் அறிமுகமானவர், தெரிந்தவர், தெரியாதவர் இதை படித்து மனம் வருத்தப்பட போகிறார் என்று தயவு தாட்சண்யம் பார்க்காமல் உங்கள் கருத்தை எழுதுவது மிக நல்ல விஷயம். இனி மேலும் அப்படியே தொடருங்கள்!
உங்க ’குத்துக்கல்’ குறுநாவலை எப்ப புத்தகமா போடப்போறீங்கன்னு நாங்க காத்துகிட்டிருக்கோம், நீங்க கதைகளை ட்ராஃப்டில வச்சிருக்கீங்களா?
சீக்கிரம் எல்லாத்தையும் போடுங்க தல 🙂
விமர்சனத்துக்கும் அன்பான வார்த்தைகளுக்கும் மிக்க நன்றி. 🙂
ஸ்ரீதர், __/\__ நன்றி!
உமாசக்தியின் கதை எனக்கு பிடித்திருந்தது.
முரளி,
நன்றி __/\__
மீண்டும் வாசித்தேன். அலைக்கழிக்கிறது.
எல்லா கதைகளும் நன்றாக இருந்தன எனச் சொல்லாமல் இது நேர்மையான விமர்சனம்.மொக்கையான பல கதைகளிலிருந்து(என் கதையும் தான்) இருபதைத் தேர்ந்தெடுப்பது இமாலயப் பணிதான்.
இருந்தாலும் என் தனிப்பட்ட கருத்து – நுனிப்புல்,இவள் என்பது பெயர்ச்சொல்: வழியனுப்பிய ரயில் ,ஸ்ரீதர் நாராயணன் கதை -போன்றோரின் கதைகள் போல காலச்சுவடு/கணையாழி இதழ்களில் வந்துள்ளன என்பதால் என்னை ஈர்க்கவில்லை. ஆனால், நல்ல நடையுள்ள கதைகள்.
சிறுகதையில் இன்னும் தொடக்கம், கரு முடிவை நோக்கிய பயணம் என்ற பழைய மார்க்கத்திலே இருப்பது கொஞ்சம் வருத்தம்தரக்கூடியதே.இறுதி திருப்பம் கொண்ட கதைகளே சிறுகதை என்பதை நம்ப மறுக்கின்றேன்
சிறுகதை அழிந்து கொண்டிருக்கிறது – கட்டுரை/பத்தி/வரலாற்று கட்டுரைகளே நிலைத்துநிற்கும்னு சொல்வதைக் கேட்கும்போது ஏற்றுக்கொள்ள ரொம்ப தயக்கமாக இருக்கிறது.
கிரி, __/\__
—இருபதைத் தேர்ந்தெடுப்பது இமாலயப் பணி—
சர்வ நிச்சயமாய். அதுவும், நந்தவேரன் போன்ற அறிமுகமில்லாதவர்கள் கூட 20ல் இடம் பிடித்திருப்பது, நடுவர்களின் உண்மையான உழைப்பையும், முழுமையான வாசிப்பையும் சுட்டுகிறது.
—இதழ்களில் வந்துள்ளன என்பதால் என்னை ஈர்க்கவில்லை. —
ஹ்ம்ம்ம் 🙄
—இறுதி திருப்பம் கொண்ட கதைகளே சிறுகதை என்பதை நம்ப மறுக்கின்றேன்—
ஒத்துக் கொள்கிறேன்.
—சிறுகதை அழிந்து கொண்டிருக்கிறது – கட்டுரை/பத்தி/வரலாற்று கட்டுரைகளே நிலைத்துநிற்கும்—
இவ்வாறு பரவலாக விதைக்கப்படுவதற்கு சில காரணங்கள்:
* பதிவர்களுக்கு சிறுகதை எழுத வரவில்லை. எனவே, மற்றவர்களின் கதையைப் படித்து, மறுமொழியவும் விருப்பமில்லை. ஆங்கிலம் போன்ற பெரிய அளவில் புழங்கும் வலைமொழியிலும் இதே நிலை; என்றாலும், அங்கே எண்ணிக்கை தேறுகிறது. இங்கே, மொத்த நபர்களின் கூட்டுத்தொகை செம குறைச்சல்.
* துவக்கத்திலேயே சாரு நிவேதிதா வாசிக்கிறார்கள்; எஸ் ராமகிருஷ்ணனிடம் சொக்கிப் போகிறார்கள். தவறில்லை. எனினும், அதுவே லட்சியமாகக் கொண்டு, சாதாரண தோசை கூட சுட முடியாமல், மாவிலேயே கிண்டி விடுகிறது.
* தகவல் துறையில் பணிபுரிபவர்களும், கல்வியில் ‘இது இப்படித்தான்’ என்று கற்றறிந்தவர்களும் மட்டுமே கொண்ட முப்பது கூட நிரம்பாத இளைஞர் — இணையத்தில் புழங்குவதால், புனைவு மீது, பற்றிலாத, விஷயஞானத்தின் மீது மட்டும் பற்றுள்ள நிலை.
பெரும்பான்மையான கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன் 🙂
என்னோட தேர்வில் மனையியல் #1 தான் 🙂
பாலாஜி, __/\__ நன்றி!
அன்பு பாபாஜி…
தலை மூன்றுக்குள் ஒன்றாக ‘மனையியல்’ வைத்ததற்கு மிக்க நன்றிகள்.
அன்பு வெட்டிஜி…
உங்களுக்கு பெஷல் நன்றிகள். 🙂
வசந்தகுமார், நன்றி __/\__
கிரிதரன்!
//சிறுகதையில் இன்னும் தொடக்கம், கரு முடிவை நோக்கிய பயணம் என்ற பழைய மார்க்கத்திலே இருப்பது கொஞ்சம் வருத்தம்தரக்கூடியதே.இறுதி திருப்பம் கொண்ட கதைகளே சிறுகதை என்பதை நம்ப மறுக்கின்றேன்//
🙂 ஒரு தனிப் பதிவாக போட வேண்டிய விஷயத்தை பின்னூட்டமாக இட்டு விட்டீர்கள். விரிவாக பதிலளிக்க தோன்றியது. இதே கருத்தை நானும் நிறைய நண்பர்களிடம் கூறியிருக்கிறேன். ஓரிரு சமயங்களில் ‘அரைகுறையாக’ செய்யவும் முயன்றிருக்கிறேன். நீங்கள் கூட ஒரு பதிவில் பின்னூட்டமிட்டு மரியாதை (honor) செய்திருந்தீர்கள் 🙂
ஆனால் இம்மாதிரியான வடிவம் ஒரு சிறுகதையை நிறுத்தி வைக்கிறது. மாற்று வடிவமோ, வடிவமில்லாத நிலையிலோ செய்யும் பரீட்சார்த்த முறைகளில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. புட்டிங் செய்வது சாப்பிடத்தானே. கண்ணாடி பெட்டியில் வைக்க அல்லவே? 🙂
மட்டுமல்லாது கண்ணுக்கு புலப்படாத சங்கிலிகளின் பிணையிலிருந்துதான் எழுத வேண்டியிருக்கிறது. அதாவது ஷோபா சக்தியின் ‘ம்ம்ம்’ல் வரும் மகளின் கர்ப்பத்திற்கு காரணமான தந்தை போன்ற பாத்திரங்களை அமைக்க அசாத்தியமான சுதந்திரமான, உறுதியான மனநிலை வேண்டியிருக்கிறது. Ofcourse, true incidents are stranger than fictions 🙂 எல்லைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டேதான் இருக்கிறேன்.
சுவாரசியமான எழுத்து சிறுகதை வடிவத்திலோ, கட்டுரை வடிவத்திலோ, பத்தி எழுத்து வடிவத்திலோ இருந்து கொண்டுதானிருக்கின்றன.
சுவாரசியமான எழுத்து என்பது போகப் போக பல அலங்காரங்கள் சேர்ந்து கிளாசிக்காகி விடுகிறது. ஓ ஹென்றியின் சிறுகதைகளுக்கும், ஷேக்ஸ்பியருக்கும் நடக்கும் பரினாம வளர்ச்சிப் போல. பத்தி /கட்டுரை / பதிவு எழுத்துகளுக்கு அவ்வகையான விரிவான களம் அமைவதில்லை என்றே நினைக்கின்றேன்.
முதலில், பதில் சொன்னதற்கு நன்றி.
//நீங்கள் கூட ஒரு பதிவில் பின்னூட்டமிட்டு மரியாதை (honor) செய்திருந்தீர்கள் //
😉 ரொம்ப ஓவரா இருக்கு இதெல்லாம்.
//புட்டிங் செய்வது சாப்பிடத்தானே//
ஒத்துக்கொள்கிறேன். சும்மா பஜனை பண்ண இல்லைதான். ஆனாலும் –
இந்த விஷயத்தில் ஜெமோவின் கருத்தே எனக்கும். இலக்கியம், கதைசொல்லியின் பணி இத்துடன் முடிவடைவதாகவோ, முடிவிற்காக படிப்பது என்ற காரணத்திற்காகவோ மட்டுமல்ல – பாலாஜி பெரிசாக எழுதினால் துரத்திவிடுவார் என்பதால் – தனிப் பதிவாகப் போடப் பார்க்கிறேன்.
சாப்பிடுபவனுக்கு இருநிலைகளே இருக்கமுடியும் – பிடித்தது,பிடிக்கவில்லை.
கதைகளுக்கோ – சொல்முறையில் (இதற்காக பின்நவீனத்துவம் என்றெல்லாம் ஜல்லியில்லாமல்), tone, ரிவர்ஸ் பயணம், முடிவிலிருந்து ஆரம்பித்து வேறொன்றுக்கு செல்வது போன்ற வடிவங்களை A.L.Kennedy (Night Geometry & the Garscadden Trains), Mavis Gallant(When we were young) , அ.முத்துலிங்கம் (மஹாராஜா..) போல பல இருக்கலாம். நாம் கருவை விரும்பாவிட்டாலும், மொழி, நடை என ஈர்க்கப்படலாம். முடிவை மட்டும் நோக்கி ஓடிம் வாசகர்களை Haruki Murakami இதுவரை படிக்க வைத்திருக்கமாட்டார்கள். அவ்வளவு டெம்பெளேட் முடிவுயுள்ள புனைவு எழுதுபவர்.
ருசிப்பவனை ’உனக்குச் சமைக்கத்தெரியுமா?’ எனக் கேட்கும் மனோபாவம் விஷமெனத் தெரியும்..அதனால் இவைதான் சரியென்றும் சொல்லமுடியாது..
//சுவாரசியமான எழுத்து சிறுகதை வடிவத்திலோ, கட்டுரை வடிவத்திலோ, பத்தி எழுத்து வடிவத்திலோ இருந்து கொண்டுதானிருக்கின்றன//
உண்மை தான்.
//சுவாரசியமான எழுத்து என்பது போகப் போக பல அலங்காரங்கள் சேர்ந்து கிளாசிக்காகி விடுகிறது//
இன்னொரு பத்திக்கான விஷயம். விடு ஜூட்.
—Ofcourse, true incidents are stranger than fictions —
மகாராஜாவின் ரயில் வண்டியில் முத்துலிங்கம் முன்னுரையில் இருந்து…
ஒரு வாசகருக்கு எழுத்தாளர் கீத் மில்லர் சொன்னது.
ஒரு முறை அவர் தன்னுடைய சிவப்பு வோக்ஸ்வாகன் காரை எடுத்துக்கொண்டு மிருகக்காட்சி சாலைக்குப் போனார். அங்கே வழக்கம் போல பலமணி நேரங்கள் யானைகளின் விளையாட்டை ரசிப்பதில் செலவழித்தார். திரும்பும்போது பார்த்தால் ஒரு யானை அவருடைய காரில் தவறுதலாக உட்கார்ந்துவிட்டது. காரின் முன்பக்கம் நெளிந்து போய் கிடந்தது. மானேஜர் ஓடிவந்து மன்னிப்பு கேட்டார். ‘இந்த யானை இப்படித்தான். சிவப்புக் காரைக் கண்டால் மேலே குந்திவிடும். நாங்கள் இன்சூரன்ஸ் செய்திருக்கிறோம். செலவு எவ்வளவு என்று அறிவியுங்கள், செக் அனுப்பிவைப்போம்.’
நல்ல காலமாக என்ஜின் காரின் பின்னால் இருந்தது. அவரும் சரி யென்று திரும்பும்போது நெடு சாலையில் ஒரு பெரும் விபத்தைக் கண்டார். அதைத் தாண்டிய சிறிது நேரத்தில் பொலீஸ் கார் ஒன்று அவரைத் துரத்திப் பிடித்தது. என்னவென்று விசாரித்தால் பொலீஸ்காரர்
“இன்னொரு காரை இடித்ததுமல்லாமல் தப்பித்து வேறு ஓடுகிறீரா?” என்றார்.
“நான் எங்கே விபத்தில் மாட்டினேன்?”
“மாட்டவில்லையா? அப்ப இது என்ன?” என்று நெளிந்துபோன காரைச் சுட்டிக்காட்டினார்.
“அதுவா? அதுவா? அது யானை உட்கார்ந்து நெளிந்துவிட்டது.”
“அப்படியா?” என்று சிரித்துவிட்டு பொலீஸ்காரர், “வாரும் பொலீஸ் ஸ்டேசனுக்கு” என்றாராம்.
கீத் மில்லர் சொல்கிறார், ‘உண்மையான கதைகளை எழுதவேண்டாம், யாரும் நம்ப மாட்டார்கள். உண்மைத் தன்மையான கதைகளை எழுதுங்கள்.”
Another proof that Baba is a literary critic in the (b)making
// என் கதைகளை ட்ராஃப்டிலேயே வைத்திருக்க வைப்பவர் //
ட்ராஃப்டிலா? `…அவர்கள் இருவரும் வானேறி வைகுண்டம் போனார்கள்` என்று முடித்தாவது வெளியிடுங்கள்.
இப்படித்தான் பல உருப்படிகளை முடித்து ஜோலியைப் பார்க்க போயிருக்கிறேன்.
//பதின்ம வயதினரின் பருவக் கோளாறையும் ஃபேன்டசியையும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முன்னோட்டத்தையும் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதை.
//
இந்த இரண்டு வரிகள்தானா? மேலும் எதிர்பார்த்தேன் உங்களிடமிருந்து..
பெண் உணர்வுகளுக்கு மதிப்பளித்தலாகவும், முற்பிறப்பிலேயே பார்த்தறிந்த பரிச்சயமாகவும், அழகிய ஒரு ரயில் பயணமாகவும் உதித்த கதை உங்களுக்கு சூடு போட்டதாக தெரிவது துரதிருஷ்டமே.. ஆனாலும் உங்கள் விமர்சனத்துக்கு தலை வணங்குகிறேன்..
BTW, ஆயிரத்தில் ஒருவன் என்ன கதை? நான் அதைப் பற்றி இன்னும் கேள்விப்படவில்லை..
புபட்டியன்,
நீங்க இங்கே வந்து படிப்பீங்கன்னு நிஜமா எதிர்பார்க்கல 🙂
போட்டியில் முன்னணியில் வந்தவர்களின் கதையை ஒரு தடவை மட்டுமே படித்து, உடனடியாகத் தோன்றுவதை பதிந்து வைப்பது, என் நோக்கம்.
ஏன் அவ்வாறு யோசனை சென்றது என்று பார்த்தால்…
1. —பதின்ம வயதினரின் பருவக் கோளாறை—
ஆறு மாதத்திற்கொருமுறை தில்லிக்கும் அதன் பின் மாதமொருமுறையாவது பெங்களூருக்கும் சென்று வந்தபோது, எதிரில் அமர்ந்திருக்கும் ரயில் சிநேகங்களைக் கண்டு கிளர்ந்ததினால், அந்த அனுபவத்தை இங்கேப் பொருத்தினேன்.
ஒரேயொரு எட்டு மணி நேரமே, வீடு வரை இட்டுச் செல்லும் என்பதை நம்புவதற்கு உருப்படியான சம்பவம் வேண்டும். அவ்வாறு எதுவும் அவர்களிடையே நிகழவில்லை.
If I were Valli, I would be shit scared of the encroachment of my private space. Probably, I would consider him as exploitative. To think otherwise, there are no substantiating incidents or characterization.
கடைசி வரிதான் இந்தக் கதையை அதல பாதாளத்திற்கு இட்டுச் செல்கிறது.
2. —முற்பிறப்பிலேயே பார்த்தறிந்த பரிச்சயமாகவும்,—
பழங்கால சம்பவம் இந்தக் கதைக்கு மிகமிகப் பெரிய +
ஆனால், அதற்கும் நிகழ்வுக்கும் முடிச்சு கிடைக்கவில்லை. அவர்கள் சேர்ந்தார்களா? இறந்தார்களா? பிச்சை எடுத்தார்களா? என்பதெல்லாம் முக்கியமா… என்பதை விட ரயில் பயணிகளுக்கும் அந்தக் காதலர்களுக்கும் இடையே உள்ள தொடர்பு அவிழவைத்திருக்க வேண்டும். 1000 வார்த்தைக்குள் கஷ்டமாக இருந்திருக்கலாம். ஆனால், அந்தத் தொடர்ச்சி வாசகருக்குள் ஊன்றியிருக்க வேண்டும்.
3. ஃபேன்டசி
முதல் கற்பனை: பத்து மணிக்கு ரயிலடிக்கு, தனியாக வரும் தாய் பயப்படுவாள் என்பது.
இரண்டாவது அபிலாஷை: முன்பின் தெரியாத பூட்டிய வீட்டிற்கு அவள் மடங்குவாள் என்பது.
மூன்றாவது கனவு: அபலைப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பது.
4. —முழு விடுதலை உணர்வு தெரிந்தது எனக்கு—
‘நான் வாழ வைப்பேன்’ போன்ற அகங்கார ஆண் ஆசிரியர் எட்டிப்பார்ப்பதை அடுத்த முறை தவிர்த்துவிடவும். கடைசி வரி இல்லாவிட்டால், it could be open to reader’s imagination.
இவ்வளவு விரிவான விமர்சனம் முன் வைப்பீர்கள் என நான் எதிர்பாக்கவில்லை. சாட்டையடி போல் குறைகளை உணர்த்தியுள்ளீர்கள். கட்டாயமாக இனிமேலும் நான் எழுதும்போது உங்கள் இந்த கருத்துக்களை எண்ணத்தில் வைப்பேன். முக்கியமாக…
//‘நான் வாழ வைப்பேன்’ போன்ற அகங்கார ஆண் ஆசிரியர் எட்டிப்பார்ப்பதை அடுத்த முறை தவிர்த்துவிடவும். கடைசி வரி இல்லாவிட்டால், it could be open to reader’s imagination.
//
மிக மிக நன்றி பாபா. உங்கள் பொன்னான நேரத்தை என் கதைக்காக ஒதுக்கியதற்காக.
‘I overslept & missed my train stop. Is it the curse of my yesterday’s co-traveler? OTOH, I discovered a canoeing place. Need to keep alarm¿ 5 hours ago
Skirt is the cutest dress on a right lady. It breathes freshness. Color determines the character while cuts & length adds flavor to summer. ‘
You dreamt about a beautiful girl wearing the right skirt with right cuts and you were so engrossed in the dream that you missed the train :). If you see a cute girl in the train sitting next/opposite to you wearing skirt
ask her the small favor of waking u up in
the right station and right time :).
வணக்கம் சார். எனக்கு கொடுத்த லிங்க் மூலமாக இங்கு வந்தேன்.முதன் முறையாக பின்னூட்டம் போடுகிறேன்.
//இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.//
இந்தக் கதையில் சுஜாதா நடை நெடி தாள முடியவில்லை.அவர் சொந்த நடையிலேயே எழுதலாமே!இது லேசுப்பட்ட காரியம் அல்ல??????????
கடைசியில் ஒரு hardcore
பாசாங்குத்தனம்.அவருடைய பயணத்தின் பிம்பங்கள் ஒட்டவில்லை.
இடலி விற்பவரின் உரையாடலோடு கதையை ஆரம்பித்து எதிலாவது முடித்திருக்கலாம்.
பிடித்த வரிகள்:
//புது வெப்பம், புது ஸ்பரிசம் உணர்ந்த டெய்ஸி அவரை உற்றுப் பார்த்தாள். //
அடுத்து “வெட்டிப் பயல்: வாழையடி வாழை”.இவர் என் வலைக்கு வந்து என்னுடைய விமர்சனம் கேட்டார்.
அது:
_____________________________
”உங்கள் narration இயல்பா யதார்த்தமா இருக்கு.வேலைக்காரி சம்பந்தப்பட்டகளத்தின் மூட் எல்லாம் நல்லா இருக்கு.சில வரிகள் பிடித்தது.
1//ஏதாவது உடம்பிற்கு முடியவில்லை என்றால் கலர் கலராக மாத்திரை தருவார்கள். வீட்டு வேலை பாதிப்பது அவர்களுக்கு பிடிக்காது//
2//ஓடாத டீவியைக்கூட பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருந்தது//
குறைகள்:
இந்த வேலைக்காரி – எஜமானி(
கொடூரமாக காட்டி வேலைக்காரியின் சிம்பதியை டிராமத்தனமாக அதிகரிப்பது) கதைகள் நிறைய படித்தாகி விட்டது.
செயற்கையான முடிவு.
//நான் அழுததைப் பார்த்துட்டு என் தங்கச்சி ரெண்டு பேரும் வீட்டு வேலைக்கு போறேனு சொல்லிட்டாங்கக்கா. //
ஏன் இந்த தங்கச்சிகள் திடீர் பெரிய மனுஷியாகும் டிராமத்தனமான திருப்பம்?
யதார்த்தமாக இல்லை.
பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்!
________________________
இதெல்லாம் ”வாரமலர்”கதைகளில் அடிக்கடி வரும்.
இவரிடம் கதை விவரிப்பு ப்ளஸ்.
இதை விட “சின்ன மனசு” எவனோ ஒருவன் லாஜிக்கலாகச் சொல்லப்பட்டகதை. இந்த மாதிரி கடைசி
டிராமா திருப்பம் கிடையாது.
நனறி .
உங்களுக்கு கொடூரமாகவும், டிராமாத்தனமாகவும் தெரிவது, எனக்கு ரொம்ப சாதாரணமா தெரியுது. என்ன செய்ய? 🙂
எஜமானி உங்களுக்கு கொடூரமா தெரியலாம். எனக்கு அப்படி எல்லாம் தெரியலை. நான் பார்த்து இப்படி காபி, சாப்பாடு எல்லாம் கொடுத்து சின்ன சின்ன வேலைகளை வாங்குபவர்கள் மிக மிக குறைவு. பெரிய பணக்காரர்கள் வீட்டில கூட இதைப் பார்த்திருக்கிறேன்.
மேலும்
////நான் அழுததைப் பார்த்துட்டு என் தங்கச்சி ரெண்டு பேரும் வீட்டு வேலைக்கு போறேனு சொல்லிட்டாங்கக்கா. //
ஏன் இந்த தங்கச்சிகள் திடீர் பெரிய மனுஷியாகும் டிராமத்தனமான திருப்பம்?
//
தலைப்பு “வாழையடி வாழை”. ஏற்கனவே இந்த பெண் வேலைக்கு வந்தது இப்படி ஏதோ ஒரு காரணத்தினால் இருக்கலாம் என்பது வாசகர்களின் யூகத்திற்கு விட்டது. இதில் திடீர் பெரிய மனுஷியாகும் தனம் எதுவும் எனக்கு தெரிந்து இல்லை 🙂
பாபா , கே.ரவிசங்கர் –
நீங்கள் நினைப்பது போல் கதை அமையவில்லை அல்ல அமைந்து இருக்கிறது என்பது தான் இங்கு எனக்கு கேட்கிறது.
கதை எப்படிஇருக்க வேண்டும் என்ற அரிச்சவடி எல்லாம் தேவையா என்றும் கேட்க வைக்கிறது.
டிராமாட்டைஸ் செய்தால் தவறா என்ன ? அல்ல Ellipsis உபயோகித்தால் படிப்பவர்கள் கண் மூடிக்கொள்வார்களா?
சமீபத்தில் Man Booker பரிசு வென்ற Alice Munro வின் முந்தைய கால கதைத் தொகுப்பு சுவாரசியமே இல்லை என்று அடித்து கூறுகிறார் Nytimes விமர்சகர் ஒருவர் ஆனால் அவருக்கு இப்பொழுது பரிசு.
எனவே கதைகள் கதைகளாக இருக்கட்டுமே ! படிப்பவர்கள் முடிவு செய்யட்டும் ரசனைகளை.
முரளி,
—நீங்கள் நினைப்பது போல் கதை அமையவில்லை அல்ல அமைந்து இருக்கிறது என்பது தான் இங்கு எனக்கு கேட்கிறது. —
அப்படிப்பட்ட புரிதல் வந்திருந்தால் அது என் தவறு.
—டிராமாட்டைஸ் செய்தால் தவறா என்ன ? —
தினத்தந்தியே செய்தியை கவர்ச்சியாக்குகிறது. ஜூனியர் விகடனும் பின்னி பரபரப்பாக்குகிறது. நாமும் ஏன் செய்யக்கூடாது!
—அல்ல Ellipsis உபயோகித்தால் படிப்பவர்கள் கண் மூடிக்கொள்வார்களா?—
நான் சொல்ல வருவது என்னவென்றால்… அதாவது …
—படிப்பவர்கள் முடிவு செய்யட்டும் ரசனைகளை.—
உண்மை. நான் நூறு சதம் ஒத்துக் கொள்கிறேன். படிப்பவர்கள் தங்கள் ரசனைப்படி கதை பிடித்திருக்கிறதா/பிடிக்கவில்லையா/தேவலாமா என்று சொல்லும் பதிவுகளில் இதுவும் ஒன்று. கொஞ்சம் தொட்டுக்க, *ஏன்* என்பதையும் பகிரும் முயற்சி.
இது போல் கலந்து கொண்ட & வாசித்த ஒவ்வொருவரும் — எல்லாக் கதைகளையும் ருசித்தால், ஜனநாயகம் தழைத்தோங்கும்.
அன்புள்ளவர்களே…
//கடைசியில் ஒரு hardcore
//பாசாங்குத்தனம்.
இது என்ன hardcore பாசாங்குத்தனம் என்று இரண்டு நாட்களாக ‘ப்ரோட்டீன் குழப்பத்தை’ உருட்டிக் கொண்டிருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. யாராவது கொஞ்சூண்டு விளக்கமாகச் சொன்னால் தேவலாம்.
நன்றிகள்.
//இது என்ன hardcore பாசாங்குத்தனம் என்று இரண்டு நாட்களாக ‘ப்ரோட்டீன் குழப்பத்தை’ உருட்டிக் கொண்டிருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. யாராவது கொஞ்சூண்டு விளக்கமாகச் சொன்னால் தேவலாம்.
//
படிக்கும்போது எனக்கு அது பாசாங்காகத் தெரியவில்லை.. கதையின் ஓட்டத்தில்.. It looked so natural.. ஆனால், அப்படி மனைவியை ஓடும் ரயிலில் பிறர் முன்னிலையில் முத்தம் கொடுப்பது என்பது நமக்கு அந்நியமானது என்றும் தோன்றுகிறது…” நான் அப்படி செய்வேனா”.. என்று ரவி அவரை அங்கு பொருத்திப் பார்த்ததில் விளைந்த கேள்வி போலும்..
எனக்கு உங்கள் கதையில் உறுத்திய ஒன்றே ஒன்று.. “குழந்தை எறும்பு கடித்து அழுவது..”.. அது கொஞ்சம் பழைய ஐடியாவாகவும், Stereotype ஆகவும் தோன்றியது..
வெட்டிப்பயல்:
கதையின் எல்லா இடத்திலும் இருக்கும் இயல்பு சொல்லி வைத்தாற் போல் தங்கச்சி,அதுவும் ”இரண்டு” தங்கச்சிகளும் சொல்வது ,இயல்பு போய் செயற்கை ஆகி விடுகிறது.
This is to just stir the emotions of readers
என்னோடு அனுபவத்தில் இது மாதிரி கதைகள் நிறையப் படித்தாகிவிட்டது.
bmurali80:
நீங்கள் எப்படி வேண்டுமானலும் ரசியுங்கள்.எனக்கு ஒன்றும் ஆடசேபணை இல்லை.
நான் வாசிப்பு/எழுத்து அனுபவத்தில் பல கட்டங்களைத் தாண்டி வந்தாகி விட்டது.
//டிராமாட்டைஸ் செய்தால் தவறா என்ன ? //
அந்த கால சினிமாவில் வீட்டில் யாராவது இறந்தால், வாழை மரம் சாயும்,கன்னுக்குட்டி இறக்கும், 50 வருட கடிகாரம் நின்று விடும், மாட்டு வண்டி குடை சாயும்.
இதெல்லாம் இப்போது இருக்கிறதா?
தயவு செய்து கிழ் உள்ள வலையில் இருக்கும் கதையை படியுங்கள்.சுவராசியமாக எழுதப்பட்டக் கதை:( எழுதிவர் நாடோடி இலக்கியன்.)
போட்டிக்காக எழுதப்பட்ட கதை அல்ல.
ஸ்நாப் ஜட்ஜூம் படிக்குமாறு விழைகிறேன்.
“மறக்க முடியுமா?”
//http://naadody.blogspot.com/2008/01/blog-post_486.html//
வசந்தகுமார்:-
//இது என்ன hardcore பாசாங்குத்தனம் என்று இரண்டு நாட்களாக ‘ப்ரோட்டீன் குழப்பத்தை’ உருட்டிக் கொண்டிருந்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.//
செயற்கைத்தனம் என்று சொல்லலாம்.
காட்சியை அழகுப் படுத்துவதாக நினைத்துக்கொண்டு ,இல்லாத ஒன்றை (சும்மானச்சும் “அலட்டுவது’)திணிப்பது என்று கூட சொல்லலாம்.
தாங்களையும் மேல் சொன்ன கதையை ப்டிக்குமாறு விழைகிறேன்.
நன்றி
//கதையின் எல்லா இடத்திலும் இருக்கும் இயல்பு சொல்லி வைத்தாற் போல் தங்கச்சி,அதுவும் ”இரண்டு” தங்கச்சிகளும் சொல்வது ,இயல்பு போய் செயற்கை ஆகி விடுகிறது//
mmm
//நான் வாசிப்பு/எழுத்து அனுபவத்தில் பல கட்டங்களைத் தாண்டி வந்தாகி விட்டது. //
:-)))
என்னோட இந்த முயற்சியை படிச்சி இது சிறுகதையான்னு சொல்லுங்க நண்பரே
கு.ஜ.மு.க: ஈனப்பொழப்பு.
பிங்குபாக்: Manushyaputhiran & Uyirmmai’s Uyirosai 1st Anniversary « Snap Judgment
பிங்குபாக்: சிறுகதைகள்: ஆகஸ்ட் « Snap Judgment
இத்தனை வருஷம் கழித்து இப்பொழுது தான் என் கதைக்கான உங்கள் விமர்சனம் படிக்கிறேன் … நன்றி