எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)
எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.
- எழுத்தாளர் முத்துலிங்கம்
- மகாலிங்கம்
- காலம் செல்வம்
இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).
காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..
அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).
பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.
- மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
- எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
- குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).
இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.
தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.
அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.
அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.
“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”
எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.
(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)
நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.
அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.
இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.
சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).
அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –
- இலக்கியம்,
- மரபு,
- இவடிவம்,
- காவியம்,
- புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
- அறிவியல் புனைவுகள்
போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.
எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.
கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.
அன்புடன்
வெங்கட்
தொராண்டொ