ஊக்கம் கொடுத்த பதிவு: பா ராகவன் – பேப்பர் » நடந்த கதை
சென்னை எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரையில் முன்பெல்லாம் மணல் இருக்கும். இப்பொழுது சிறிய மீன்களும், செதில்களும், இருக்கின்றன. மணல் வீட்டுக்கு பதிலாக leftover மீன் குழம்பு வைத்து சிறார் விளையாடுவார்.
காலையில் தெரிந்த முகத்தினரின் அணிவகுப்பு சொல்ப அதிகம். தாமதமான ஏழரைக்குக் கூட சாருஹாஸன், செய்தி வாசிப்பாளர், நெடுந்தொடர் தம்பதியினர் கூட்டம்.
கூட்டுத்தொழுகை, பிரார்த்தனை க்ளப், அரசியல் பேச்சுக்கு வரும் லாரிக் கூட்டம் போல் ஒரு சேர உடற்பயிற்சி பாவ்லா காட்டுவது தமிழருக்கு மனமகிழ்வு தருகிறது. முகமன் கூறிக்கொள்கிறார்கள். சேர்ந்து இளநீர் சாப்பிடுகிறார்கள். நேற்றைய செய்தியைத் தாங்கிய ‘தி ஹிந்து’வை உரையாடி மகிழ்கிறார்கள்.
ஃபேஸ்புக், ட்விட்டர், குறுஞ்செய்தி என்று குறுகி, தொடர்பை கைவிட்ட தலைமுறை அல்ல அவர்கள். கூட்டுப்புழு சமுதாயத்தில் நேரடி சந்திப்பை மதிப்பவர்கள்.
மதியம் மனமகிழ் மன்றத்தில் கேரம், மாலை கன்ட்ரி க்ளபில் ஐபிஎல்லுடன் ராயல் சேலஞ்சர் என்று வழக்கப்படுத்திக் கொண்ட உயர்வட்ட கூட்டம். காலையில் ஐஸ் ஹவுசில் இருந்து லைட் ஹவுஸ் வரை நடந்துவிட்டு பதநீர், இளநீர், வறுகடலை, தர்பூசணி, கிர்னிப்பழம் என்று அப்பிடைசர் அருந்தி, ராதாகிருஷ்ணன் சாலை சரவண பவனில் மசாலா தோசையும் பூரி மசாலாவும் அடித்து துவம்சிப்பவர்கள்.
பாரம்பரிய லுங்கி முதல் மாறனின் அதிகாரபூர்வ ஆடையான பருத்தி அரைக்கால் சட்டை வரை எல்லாவிதமும் பார்க்கக் கிடைக்கிறது. தொடையோடு இறுக்கமான ஷார்ட்ஸ், டெரிலின் ஷர்ட் + முழுக்கால் சட்டை என்று டை கட்டாத குறையோடு தங்கள் நாகரிக அனுபவத்தை பறை சாற்றுபவர் அன்றாட வரவு போல் அத்யந்தமாக சூரிய நமஸ்காரம் செய்கிறார். குர்தி & நீல ஜீன்ஸ் அணியும் ஒருத்தரே ஒருத்தரும் வந்திருந்தார்.
பெண்களுக்கு 33% சதம் வேண்டாம். 3% கூட தேறமாட்டார்கள். ஓடுபவர்கள் 1%. ஓடுபவர்களை விட குதிரை போலீஸ் அதிகம். பீச் ரோடில் இருந்தே பார்த்தசாரதி அழைக்கிறார். கூடிய சீக்கிரமே மேல்மருவத்தூர் சக்தி பீடம் பிரான்ச், சத்யசாய்பாபா சத்சங், காஞ்சி ஜெயேந்திரர் மட கிளை எல்லாம் அலங்கார வளைவுடன் அரோகரா போட வைக்கலாம்.
தம்பதியினருக்கு பாந்தமான இடம். பிரச்சினைகளை மனம்விட்டு பேச காலைப் புத்துணர்ச்சியுடன் தனிமையும் கிடைக்கும் இடம். கூட்டுக் குடும்பத்திலிருந்து தப்பிக்க தினசரி தேனிலவு தரும் தலம். நிறைய நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்திக் கொண்ட மாதிரிதான் தெரிகிறது.
அமெரிக்காவின் கடற்கரையை எதிர்நோக்கும் சாலைகளில் பல்வேறு பொருளை விற்கும் பேரங்காடி வணி வர்த்தக மையங்கள் நிறைத்திருக்கும். இல்லையென்றால் விநோதமான வடிவமைப்புடன் ஏதாவது பெருநிறுவனம் 99 வருட குத்தகை எடுத்து 98வது மாடியில் போர்ட் மீட்டிங் நடத்திக் கொண்டிருக்கும். அதுவும் லேது என்றால், மடோனாவும் மரியா கரேவும் குடித்தனம் செய்யாமல் காலியாகப் பூட்டி வைத்திருக்கும் மாட மாளிகை அமைந்திருக்கும். இங்கே அரசினர் கட்டிடங்கள், முக ஸ்டாலின் புகுந்து தடுத்தாட்கொண்ட இராணி மேரி கல்லூரி, மாணவர்களே பூட்டிக் கொள்ளும் பிரெசிடன்சி காலேஜ். தொட்டுக்க அரசினர் முன்மாதிரி (மாடல்) மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.
கோவிலுக்கு சென்றால் இதே நடை பயிலலாம். இன்னும் உக்கிரமாக, வேகமாக புண்ணியம் வரவழைக்கும் வீரியத்துடன் சுழலலாம். ஆனால், சுலோகமோ, நாமாவளியோ முணுமுணுக்க வேண்டும். நாலாவது வெளிப்பிரகார சுற்றுக்குப் பின் ‘என்ன வேண்டுதலோ?’ என்று மூணாம் வீட்டு பச்ச கேட் மாமி கண்ணால் விசாரிப்பாள். எட்டாவது சுற்று முடிந்தவுடன் ‘என்னடீயம்மா பிரச்சினை?’ என்று நேரடியாகவே பிக்கல் பிடுங்குவாள்.
பீச்சில் அதெல்லாம் கிடைக்கமாட்டாது.
சென்னையின் முக்கிய சாலைகளில் நடக்க இயலவில்லை. எப்பொழுதுமே பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தராத நகரம். நடராசா சர்வீஸில் செல்பவர்களை கீழே வீழ்த்துவது இருசக்கர வாகனவோட்டிகளின் முக்கிய கடமை. இப்பொழுது அது நாற்சக்கர காலம். ஹோண்டா சிடியும் டொயோட்டா இன்னோவாவும் ஸ்கோடாவும் முட்டி மோதி விளையாடும் 99.999% ஸிக்ஸ் ஸிக்மா சென்னையில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடம் மெரினா வாக்கிங்.
சூப்பர்! சூப்பர்!!
வெயிலான் 🙂 __/\__
பிங்குபாக்: சாரு நிவேதிதா சந்திப்பு | Snap Judgment