ரிச்சர்டை எனக்கு பத்து வருஷமாகத் தெரியும். அமெரிக்காகாரன். என்னுடன் ஆறு வருடம் கூட வேலை பார்த்தவன். செய்ய சொன்னதை மட்டும் செய்து முடிக்காமல், சொல்லாததையும் சூட்சுமமாக செய்து தருபவன். சாமர்த்தியம் இருக்கிறது என்னும் தன்னம்பிக்கை நிறைந்தவன்.
கடந்த ஒன்பது மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான்.
என்னுடைய உலகம் எனப்படுவது தமிழ்ப் பதிவுகள், பதிவு அரசியல் என்று முடங்கியதாக கருதப்பட்டால், அவனுடையதில் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ, லீனக்ஸ், வீட்டிலேயே பியர் தயாரிப்பது என்று பிறிதொரு திரிசங்கு சொர்க்கம். ஃபேஸ்புக், லிங்ட் இன், ப்ளாக்ஸோ எதிலும் எப்போதும் காணக் கிடைக்க மாட்டான். ஏதோ நினைப்பு வர, எப்படியோ தொடர்பு கொண்டால், வேலை போன விஷயத்தை சொன்னான்.
வாயுள்ள புள்ள பொழச்சுக்கும் என்பது தமிழ் பழமொழியாக இருந்தாலும், அந்தக் காலத்திலேயே டவுன்லோட் எழுத்தாளர் எவராவது அதை அமெரிக்காவில் இருந்து இடம் பெயர்த்திருக்க வேண்டும் என்பது என்னுடைய சம்சயம்.
ரிச்சர்ட் அக்மார்க் கீக். இந்த மாதிரி ISTJ பசங்களுக்கு வேலை போனால் ரொம்ப துர்லபம் என்று சொல்லி இருக்கிறார்கள்
வாசிக்க: Why Layoffs Hit IT Professionals So Hard | CIO – Blogs and Discussion: “Sure, IT jobs are difficult to find. But making matters worse, many IT professionals lack the personality traits that make career change easier, even exciting, for others.”
Introverted Sensing Thinking and Judging – அகமுக ஆய்வு உணர்வு சிந்தனைத் தீர்ப்பாளர் – ஆளுக்கு காற்றில் வாய்ப்பந்தல் போட வராது. எத்தனாந் தேதிக்குள் எவை வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட வேண்டும். டைடானிக் கப்பல் நிறைய தகவல் கொடுத்தாலும், வகுந்தெடுத்து, முத்துக் குளிப்பார்கள். அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுப்பார்கள்.
இளைய தளபதி விஜய் சொல்வது போல் இதயத்தில் யோசிக்கும் க்ரூப் அல்ல. மூளையை உபயோகித்து முடிவை எடுப்பவர். ‘ஏதோ… பட்சி சொல்லுது!’ என்றால், எந்தப் பட்சி, எவ்வாறு தோற்றம் இருந்தது என்று கனவைக் குதறி, நினைவுலகத்திற்கு மீட்பவர்.
ரிஸ்க் எடுப்பதை ரஸ்க் உண்பது போல் செய்யும் INTPs (Introverted Intuitive Thinking Perceiving – அகமுக ஆய்வு இயலுணர்வு சிந்தனை உணர்வாளர்) & ENFPs (Extroverted Intuitive Feeling Perceiving) தரப்பினரின் தாரக மந்திரம் ‘மாற்றம் மட்டுமே நிரந்தரம்’. நொடிக்கொரு புது சாஃப்ட்வேர் பிறக்கும் ISTJ மக்களுக்கோ மாற்றமே அலர்ஜி.
ரிச்சர்ட் அனேகமாக ISTJ ஆகத்தான் இருப்பார். ஐ.டி துறையில் வேலை பார்ப்பவரில் மிகப் பெரும்பான்மையானோர் ISTJ என்கிறது ஆய்வு.
இந்தியர்கள் Introverted; சாதாரணமாக தனக்குள்ளேயே யோசித்துக் கொள்பவர்கள். ஏதாவது பார்ட்டி நடந்தால் கூட ஒதுக்குப்புறமாக தனியாகப் போய் தெரிந்தவர்களோடு அரட்டை அடிப்பதை விரும்புவர்கள். Judgingம் கூட வந்து சேர்ந்து கொள்ளும். சட்டு சட்டென்று ஆளை எடை போடுவதில் இருந்து, தக்காளியை பொறுக்குவது வரை தீர்ப்பு எழுதித் தருபவர். ‘அவரவருக்கு அதது’ என்று Perceiving ஆக விட்டுத் தள்ளாத சமூக அமைப்பு. ‘நீங்க நல்லவரா கெட்டவரா?’ என்று கதையின் முடிவில் ஈசாப் நீதி சொன்னால்தான் சமாதானம் ஆகும் குமுகம்.
ஆனால், கணினித் துறையில் நிறைய இந்தியர்கள் நுழைந்ததற்கு காரணம் வேளாவேளைக்கு வேலை என்பதனால்தானேயொழிய இந்த ISTJ காரணம் அல்ல. எனவே, தெற்காசியர்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஸ்னான ப்ராப்தி வாய்த்ததற்கு ISTJஐ மட்டும் கை காட்டக் கூடாது.
ரிச்சர்டின் பாஸ் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன். அவருக்கும் வேலை போய் விட்டது தெரியவந்தது. நாலு ஈமெயில், ஏழு போன் வாயிஸ் மெயில் தாண்டியவுடன் என்னுடைய பழைய பாஸ் குரல், லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவாக கேட்க கிடைத்தது.
‘டிரக் ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். உன்னோட முதலாளியா இருந்தப்ப கிடச்சத விட அதிகமா கொடுக்கிறாங்க. அலாஸ்கா முழுக்க சுத்தியாச்சு. இந்த அனுபவத்த வச்சு பெஸ்ட்செல்லர் எழுடிண்டு இருக்கேன்.’
எவனாவது முட்டை வீசினால், அதை கேட்ச் பிடித்து ஆம்லெட் போட்டுக்க என்பார்கள். அது போல், வீசப்பட்ட தக்காளியை சேர்த்து, ரசம் ஆக்கி குடித்துக் கொண்டிருக்கிறார். மாற்றத்தை சப்புக் கொட்டி சாப்பிடுகிறார்.
இந்த வேலைதான் செய்வேன். இதுதான் எனக்குப் பிடித்தமானது. வெள்ளை சொக்கா உத்தியோகம் கிடைத்தால் மட்டுமே உழைப்பேன் என்று இராமல், கிடைத்ததை வைத்து கொண்டாடுகிறார்.
ரிச்சர்ட் மாதிரி வேலை இழந்த பல நண்பர்கள் சொந்த நிறுவனம் தொடங்குவதைத்தான் முதலில் விரும்புகிறார்கள். நிறைய பயணம். புதிய சந்திப்பு. நிலையில்லா இருப்பிடம். தினம் ஒரு க்லையன்ட் என்று வழக்கப்படுத்துவது ISTJ மக்களுக்கு சிரமமானது. நல்ல நாளிலேயே இந்தியனுக்கு இடர்நிறைந்த பாதையை தேர்ந்தெடுப்பது பயங்கொடுப்பது. ஆனால், வியாபாரத்தில் சோதனை செய்துதானே ஆக வேண்டும்?
குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிப் பழக்கப்பட்ட நெஞ்சத்திற்கு Comfort zoneஐ விட்டு வெளியே வர வேண்டும். ஆனானப்பட்ட, மணிரத்னமும் ஷங்கரும் சூப்பர் ஸ்டாரும் கூட ஃபார்முலாவை விட்டு இம்மி நகருவதில்லை. நம்ம பாடு எப்படியோ!
விளக்கம் அருமைங்க. உங்க சொந்த அனுபவம் எழுதும்போது மட்டும் ஒரு சிறப்பு நடை வந்துருது. எப்படியே புதுசா ரெண்டு வாக்கியத்தை சொல்லிக்குடுத்துட்டீங்க..
இளா, __/\__ நன்றி!
எங்கள் அலுவலகத்தில் சக ஊழியர் (அமெரிக்கர்), வீட்டில் கோழி(கள்) வளர்த்து, சத்தான, சுத்தமான, ஆர்கானிக் (organic) முட்டை விற்கிறார். தினமும் ஒரு கையில் லேப்டாப், மற்றொரு கையில் பெரிய முட்டை டப்பா.
அவர் ஐ.டி ஆள் இல்லை..
கணேஷ், __/\__ நன்றி 🙂
Girl scout cookies விற்க வருவது நினைவுக்கு வருது. முட்டையின் தொடர்ச்சியாக கேக் செஞ்சு விக்கலாம். Value addition?
“Who moved my Cheese?” – இதே personality traits ஐ வித்தியாசமாக சொல்லியிருப்பாங்க. In few words – People who expect change and prepare for it succeed!
அகத்தியர் கோப்புகளில் இருந்து:
இலந்தை ராமசாமி:
ஆதி சங்கரர் சொல்லவில்லையா
“தாமரை இலைமேல் தண்ணீர்த் திவலை
சஞ்சலம் வாழ்க்கை என்றும் கவலை
சேமக் குறைவு நோய்நொடி கலகம்
சிந்தை மயக்கம் இதுதான் உலகம்”
அந்த சிந்தை மயக்கம்தான் மனிதனை அப்படி எண்ண வைக்கிறது.
அப்படிப் பார்த்தால் சிந்திப்பதே கூட ஒரு முட்டுக்கட்டையோ என்று தோன்றுகிறது. ஐந்தறிவு படைத்தவை ஆறறிவு படைத்தவனை சிலசமயங்களில் விஞ்சி விடுகின்றன.
வறுமையால் வாடிய ஒரு பெண்ணுக்காகப்
“பாதக வெப்பம் போக்கிப் பணமழை பெய்து காக்க”
என்று பாடிய பகவத்பாதர்
“மூடனே விடுவாய் பணம் கொளும் தாகம்
மூலம் மனத்தில் உணர்தல் விவேகம்
பாடுபட்டுழைத்துக் கிடைப்பதை உண்டு
பாங்குடன் வாழ்கநீ நிம்மதி கொண்டு”
என்கிறார். பணத்தாகம் தான் தீது என்கிறார்.
மேலும் இன்னோர் இடத்தில்
“சிந்தித்துப் பார், செல்வம் தீது
சிறிதாகிலும் அது பயன் தாராது
சொந்த மகனைக் கண்டும் அஞ்சும்
சொத்தின் நிலையது பயந்தான் மிஞ்சும்”
என் சொக்கன்:
என்னுடைய பாலாடைக்கட்டியை நகர்த்தியவர் எவர் ? – 28 11 2001
மேற்கண்ட தலைப்பில் (Who Moved My Cheese ?), டாக்டர். ஸ்பென்சர் ஜான்சன் எழுதிய சிறிய புத்தகம் ஒன்று படித்தேன். சின்னஞ்சிறு வேடிக்கைக் கதை ஒன்று !
அதை வைத்துக்கொண்டு வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒரு தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார் இந்த மனோதத்துவ மருத்துவர்.
பல மாதங்களாக Best Sellers விற்பனைப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்துவரும் புகழ்பெற்ற இந்த புத்தகம்.
ஒரு ஊரில் ஒரு maze – சிக்கலறை என்று அழைக்கலாமா ? – இருக்கிறது, அதன் அருகில் வசிக்கும் நான்கு ஜீவன்கள் – இரண்டு எலிகளும், இரண்டு சின்னஞ்சிறு மனிதர்களும். அவர்களுடைய உணவு பாலாடைக்கட்டி, அது அந்த சிக்கலறைக்குள் ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது.
நான்குபேரும் தனித்தனியாக ரொம்பநாட்கள் பாடுபட்டுத்தேடி, ஒருநாள் அந்த பாலாடைக்கட்டி அறையைக் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அதனுள் ஏராளமான
பாலாடைக்கட்டி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக அங்கேயே தினந்தோறும் வந்து உண்டு மகிழ்கிறார்கள், நண்பர்களிடமெல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.
இப்படியே சிலநாட்கள் கழிகிறது, கொஞ்சம்கொஞ்சமாய் அந்த பாலாடைக்கட்டி தமக்கே சொந்தம் என்கிற எண்ணமும், கர்வமும் அவர்களுக்கு வந்துவிடுகிறது, அதைக் கஷ்டப்பட்டுத் தேடிப்பிடித்ததெல்லாம் மறந்துபோகிறது, தினமும் அங்கேயே வந்து தின்று கொழுக்கிறார்கள்.
ஒருநாள் நால்வரும் அங்கே வந்துபார்க்கும்போது, பாலாடைக்கட்டியைக் காணவில்லை. காலியாக இருக்கிறது அறை ! எலிகள் இரண்டும் இதற்குத் தயாராய் இருந்ததுபோல, மோப்பம் பிடித்துக்கொண்டு புதிய பாலாடைக்கட்டியைத் தேடி ஓட ஆரம்பித்துவிடுகின்றன.
மனிதர்கள் இருவருக்கும்தான் இதை ஏற்க முடியவில்லை, ‘என்னுடைய பாலாடைக்கட்டியை நகர்த்தியவர் எவர் ?’ என்று அலறுகிறான் ஒருவன், ‘ஏன் இதைச் செய்தார்கள், இதில்
கொஞ்சமும் நியாயமில்லை, அது நம்முடைய பாலாடைக்கட்டி, அதைக் கொள்ளையடிப்பதற்கு அவர்கள் யார் ?’ என்கிறான் இன்னொருவன்.
காணாமல்போன பாலாடைக்கட்டி வந்துவிடும் என்று நம்புகிறார்கள் இருவரும். தினம் தினம் அதே இடத்திற்கு
வந்து தேடிப்பார்த்துவிட்டு சோகத்தோடு திரும்புகிறார்கள். யாராவது சுவற்றின் பின்புறம் அவற்றை மறைத்து வைத்திருப்பார்களோ என்கிற சந்தேகத்தில் ஒருநாள்
சுவர்முழுக்க ஓட்டைபோட்டும் பார்க்கிறார்கள், ஒன்றும் உபயோகமில்லை.
யாரோ இப்படி அநியாயம் செய்துவிட்டார்களே என்கிற ஆதங்கத்தில் தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அது போய்விட்டது என்கிற உண்மையை ஏற்க மனமில்லாமல் திணறுகிறார்கள்.
உண்மையில் பாலாடைக்கட்டி எங்கேயும் காணாமல்போய்விடவில்லை, ஒவ்வொருநாளும்
கொஞ்சம்கொஞ்சமாய் இவர்கள்தான் தின்று தீர்த்திருக்கிறார்கள், அது நமக்கு உரிமை என்கிற எண்ணம் வந்துவிட்டதால், அது குறைவதைக்கூட யாரும் கவனிக்கவில்லை. திடீரென்று ஒருநாள் இல்லாமல்போனதும் அலறத்துவங்கிவிட்டார்கள்.
இவர்கள் இப்படியிருக்க, புதிய பாலாடைக்கட்டியைத் தேடிப்போன எலிகள் இரண்டும் சிரமப்படுகின்றன, இருண்ட சிக்கலறையில் திசைதெரியாமல்போய் சுவர்களில் முட்டிக்கொள்கின்றன, ஆனால் சீக்கிரமே அவைகளுக்கு புதிய பொக்கிஷம் கிடைத்துவிடுகிறது – முன்னைவிட பலமடங்கு பெரியதாய் ஒரு பாலாடைக்கட்டி கிடைக்கிறது, அவைகள்
சந்தோஷமாய் உண்டு களிக்கின்றன.
சிக்கலறைக்கு வெளியே நம் நண்பர்கள் இருவரும் இன்னும் அந்த (பழைய) அறைக்கு வந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள். தினம்தினம் பாலாடைக்கட்டி இல்லாததைக்கண்டு அவர்களுடைய சோகம்தான் அதிகமாகிறது, எதுவும் சாப்பிடாததால் உடலில் சக்தியும் குறைந்துபோகிறது.
இருவரில் ஒருவனுக்கு திடீரென்று ஒரு கற்பனை – புதிய பாலாடைக்கட்டியைக் கண்டுபிடித்து, சுவைத்து மகிழ்வதுபோல கனவு காண்கிறான். அந்த கனவை நனவாக்க விரும்பி, ‘நாம் ஏன் வேறு இடங்களில் சென்று தேடிப்பார்க்கக்கூடாது ?’ என்று தன் நண்பனிடம் கேட்கிறான்.
நண்பன் ஒரேயடியாய், ‘தேடி என்ன புண்ணியம் ? வேறெங்கும் பாலாடைக்கட்டி கிடைக்காவிட்டால் என்ன செய்வாய் ?’ என்றுசொல்லி அவனுடைய ஊக்கத்தைப் புதைத்துவிடுகிறான். இருவரும் மீண்டும் வெற்றுப்புலம்பல்களுக்குத் திரும்புகிறார்கள்.
சில நாள் கழித்து, முதலாமவனுக்கு இன்னொரு சிந்தனை, ஏன் இந்த பயம், இப்படி பயப்படாமல் இருந்திருந்தால், நான் என்ன செய்வேன் ? – என்று சிந்திக்கிறான், அவனுக்கு ஒரு உண்மை புரிகிறது. பாலாடைக்கட்டி கிடைக்காவிட்டால் என்ன
செய்வது என்று குழம்பிக்கொண்டிருப்பதைவிடவும், எதுவும் இல்லாமல் இங்கே பட்டினி கிடப்பதைவிடவும் அதைத் தேடிப்போவது எவ்வளவோ மேல், இல்லையா ? தன் நண்பனி
டம் மீண்டும் இதைக் கேட்கிறான், அவன் தொடர்ந்து மறுக்கவும், முதலாமவன் மட்டும் புதிய பாலாடைக்கட்டியைத்தேடி கிளம்பிவிடுகிறான்.
முன்போல அவனுடைய உடலில் சக்தி இல்லை, ஆகவே மெதுவாகதான் நடக்க முடிகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறுசிறு பாலாடைக்கட்டிகள் கிடைக்கின்றன,
ஆனால் அவை போதுமானதாக இல்லை, மெல்லமெல்ல அவனுடைய பயணம் தொடர்கிறது.
ஒரு அறையின் வாசலில் அவனுக்கு நிறைய பாலாடைத்துணுக்குகள் கிடைக்கின்றன, அவனுக்கு சந்தோஷம் தாள முடியவில்லை, இந்த அறைக்குள் நிச்சயம்
பாலாடைக்கட்டி இருக்கவேண்டும் என்று நம்பி, அந்தத் துணுக்குகளை அவசரஅவசரமாய் உண்கிறான், சிலவற்றை தன் நண்பனுக்காக சேமித்து வைத்துக்கொள்கிறான், குதூகலித்தபடி அந்த அறைக்குள் நுழைந்தால் – அதிர்ச்சி, உள்ளே பாலாடைக்கட்டி இல்லை,
யாரோ அவனுக்கு முன்பே காலி செய்துவிட்டு துணுக்குகளை மட்டும் விட்டுப்போயிருக்கிறார்கள்.
அவனுக்கு சோகம் தாளமுடியாததாய் இருக்கிறது, அந்த பழைய அறையில் புலம்பிக்கொண்டிருந்த நேரத்தில் தேட ஆரம்பித்திருந்தால், சீக்கிரமே இங்கே வந்திருந்தால், தவறவிட்ட பாலாடைக்கட்டி அவனுக்குக் கிடைத்திருக்கும்.
அருமையா இருக்குங்க.
அஜினமோட்டோ, __/\__ நன்றி 🙂
Very nice. Well written!
விஜய்சங்கர், __/\__ நன்றிகள் பல!
பிங்குபாக்: வாலிபம் – வளப்பம் – வணிகம் « Snap Judgment
Kalakal boss 🙂
வெட்டி, நன்றி!