மவுஸைக் க்ளிக் செய்வதில் கூட ஓரவஞ்சனை செய்வது பிடித்திருக்கிறது. இடது பக்கத்தை இரு முறை இரு முறையாக அடுக்குத் தொடர் தொடல்கள். ஆனால், எப்பொழுதாவது மட்டுமே வலப்பக்க விசை திருகப்படுகிறது. முக்கியமான மெனுக்கள் வலப்பக்கம் தொட்டால் மட்டுமே வந்து விழும். எனினும் இடப்பக்கம் தொட்டு தொட்டு தேய்ந்து போன உணர்வு.
எனக்கு ரஜினி இடப்பக்க மவுசு. கமல் வலப்பக்க எலி கிராக்கி.
ஏன் இப்படி ஆகிப் போனது? டாக்டர் ருத்ரனிடமோ ஆவி மாத்ரூபூதத்திடமோ மானசீகமாக வினவ வேண்டும். அதற்கு முன்னரே இன்று விடை கிடைத்தது.
நாம் சரியாக செல்லும் பொழுதெல்லாம் இரயில் தாமதமாக ஓடும். என்றாவது அரைக்கால் விநாடி பிசகினால், நேரந்தவறாமையாக ட்ரெயின் ஓடியே போய் விடும்.
இன்று முந்தைய மண்டகப்படி. நான் டிக்கெட் வாங்கி டாணென்று இருவுள் நிலையத்தில் காத்திருக்க, பணம் வாங்கியபின் கால்ஷீட் கொடுக்க மறுக்கும் நடிகராக ட்ரெயின் ஏதோ யோசனையில் லேட்.
திங்கள்கிழமை மங்கள்வார் எனப்படும். பாஸ்டன் கோடையை வரவேற்க ஜெயராஜ் ஓவியங்கள் சாலையில் உலா வரும் காலை ஒளிக்கதிர் நேரம். காலை ஒன்பதரை சந்திப்புக்கு ஓடும் அவசரம். ஒவ்வாமைத் தும்மல் ஒரு புறம். (வாசிக்க: My Allergy to Rising Sun & Two Leaves) கோடாங்கி முடிச்சுடன் முழங்கால் பாவாடை சரசரக்க கவனம் கலைப்பவர் இன்னொரு புறம்.
சிந்தனை வட்டத்தை நிறுத்தி தடுத்தாட்கொண்டார் குளிராடி குண்டர். கூடவே அல்லக்கை குண்டர்.
‘தயவு செய்து நில்லுங்கள். நீங்கள் எப்பொழுது செல்ல வேண்டும் என்று நாங்கள் சொல்வோம்!’
‘எதுக்கு? “நட ராசா” என்று பச்சை விளக்கு எரியுது… என்ன விட்டுடு! எனக்கு நேரமாச்சு!’
பதில் கொடுக்காத மரியாதை. பயில்வான் உடம்பு. பெரிய வெள்ளை பேனர். ட்ராலியில் கேமிரா. பாஸ்டன் தெருவில் ஒத்திகையாக ஓடிப் பிடித்து விளையாடுபவர்களை அது சக்கரம் மாட்டித் துரத்தியது.
‘ஏய்… பென் அஃப்லக் வந்திருக்கானாம்!’, ‘கெவின் காஸ்னர் தெரிகிறானா பாரேன்!’ ஷூட்டிங் பார்க்க வந்த கும்பலில் ஒருவனாய் நிறுத்தப் பட்டிருக்கிறேன்.
இப்பொழுது ஃப்ளாஷ்பேக்; கருப்பு வெள்ளைக்கு மாறிடலாம்.
‘தொம்’ என்று சத்தம். மீண்டும் மொட்டை மாடியில் பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டு, கோடியாத்துப் பசங்க ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள் என்று சூலம் இல்லாத துர்கையாக மாறிய அக்கா விடுவிடுவென்று மாடி ஏறுகிறார். அங்கே தடிதடியென்று தடியன்கள் குதித்தோடுகிறார்கள்.
‘யாரும்மா அங்கே! ஷாட் எடுக்கப் போறோம்மா… ஒதுங்கி நில்லு’
‘எங்க வீட்டு மாடி. நான் நிற்பேன்; படுப்பேன்; சூரியக்குளியல் போடுவேன். நீ யாரு ஒதுங்க சொல்ல? வாட்டர் டேங்க் மேல குதிச்சா, உடஞ்சி போனா உங்கப்பனா வந்து காசு கொடுப்பான்? யாரு இங்கே ப்ரொட்யூசர்? கூப்பிடு அவன… ஏற்கனவே விரிசல் விட்டதுக்கு நஷ்ட ஈடு தந்தாத்தான் மேல ஒரு எட்டு வெக்க முடியும்’
சுத்துப்பட்டி மாட வீதி முச்சும் பாத்துண்டிருக்கு. ‘விக்ரம்’ கமலுக்கு தர்மசங்கடம். லிஸியுடனோ அம்பிகாவுடனோ கொஞ்சவே நேரம் போதவில்லை. நேரில் வரவில்லை.
தெருக்காரர்களுக்கு ‘எங்க தெருவும் “வனிதாவணி… வன மோகினி” பாடல் பெற்ற தலம்’ என்று சொல்ல முடியாமல் போயிடுமோ என்னும் வருத்தம் கலந்த கோபம். ‘கமல் மட்டும் வந்து மன்னிப்பு கேட்டுட்டாருன்னா அவரோட கெத்து என்னாறது?’ என்று வம்புக் கூட்டம். ‘அவங்க வீட்டுக்கு வந்தா எங்க வீட்டுக்கும் வரவெச்சிடுவேன்’னு முறைவாசல் கும்பல்.
கமலும் கடைசி வரை வரவில்லை. ஆபீஸ் மேனேஜரும் உடைந்த சிமென்ட் பலகைக்கு எட்டணா கூட சுண்டவில்லை. ஆனால், அம்மா, அப்பா, அடியேன் இறைஞ்சலுக்கும், கொஞ்சலுக்கும், மிரட்டலுக்கும் அடிபணியாமல் மேலும் tan ஆகிக் கொண்டே அன்று படப்பிடிப்பை ரத்து செய்யவைத்த புகழ் அக்காவை சென்றடைந்தது.
அந்த வீரம் என்னுள் பாஸ்டனில் எட்டிப் பார்த்தது.
குண்டன் அசந்த நேரம் நடு வீதியில் சாவதானமாக நடக்க ஆரம்பித்தேன். என்னைப் பார்த்து பின் தொடரும் நிழலின் குரலாக ஸ்கர்ட்டுகளும், சூட்டுகளும் கடுக்கா கொடுத்து மிடுக்காக வந்தன. பாதி வழியில் உக்கிர பார்வையுடன்… குளிர் கண்ணாடி வழி உக்கிர பார்வை எப்படி தெரியும் என்கிறீர்களா? அது சரி, கையை உயர்த்தி நாலு பேர் வந்தார்கள்.
நிலைமையை உணர்ந்த போலீஸ், ‘அவங்களப் போக விடுங்க’ என்றதும் ‘அய்யய்யே… கட்’ என்று கல்லுக்குள் நிழலாய் எங்கோ ஒலி.
செய்தி: Kevin Costner: actor, director, crooner – The Names Blog – Boston.com: “Boston shooting ‘The Company Men’ with Ben Affleck, Tommy Lee Jones, Chris Cooper and Maria Bello.”
முந்தைய கமல் புராணம்:
2. ஆளவந்தான்
3. Dasavatharam – Minute details, questions, trivia, goofs, movie connections
உங்களின் இரயில் நேர தத்துவம் உலகப்பொது நியதி போலிருக்கிறது.
எனக்கம் அப்படித்தான்
பிளாஷ்பேக் மிகவும் பிடித்திருக்கிறது.
அருமை
சுபாஷ், நன்றி __/\__ 🙂