காக்டெயில் தந்த போதையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு கலந்த ஆர்வத்துடன் வாங்கி, உடனடியாக வாசிக்கவும் எடுத்த புத்தகம்.
ஒரு தப்படி கூட தவறவிடாத நெத்தியடி. படித்து முடித்தவுடன் ட்விட்டியது:
சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ (உயிர்மை வெளியீடு) வாசிக்கிறேன். சாருவின் பாணி என்று சொல்லப்பட்டாலும் சாருவை விட 1001 தடவை நல்லாருக்கு. – February 9th, 2009
அம்ருதா – விஜய் மகேந்திரன்:
வெறும் கதை சொல்லல் மட்டும் நாவல் அல்ல. தமிழ் நாவல்களில் பல புதுவகையான உத்திகள் கையாளப்பட்டன. அதில் நான் லீனியரும் ஒன்று. கை போன போக்கில், எழுதிச் செல்வது, முன் மாதிரியான முடிவுகள் எதுவும் வைத்துக்கொள்ளாமலே, ஊடே ஆசிரியரின் மனமொழி இவற்றில் வெளிப்படும்.
பெரும்பாலும் நான் லீனியர் முறையில் எழுதப்படும் கதைகள் தமிழில் கவனத்தைப் பெறுவதில்லை. காரணம் இந்த எழுத்து முறையை கையாள்பவருக்கு அதீத மொழிநுட்பமும், சரளமான மொழிநடையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் ஆசிரியர் இதைத்தான் சொல்ல வருகிறார் என்பதே புரியாமல் போய் விட வாய்ப்புகள் அதிகம்.
சுதேசமித்திரனின் “ஆஸ்பத்திரி” நான்-லீனியர் முறைப்படி எழுதப்பட்டுள்ௗ நாவல் என்றாலும் அந்த முறைமைக்குள் மட்டும் முற்றிலும் அடக்கிவிட முடியாத நாவல். இரு மகன்கள் மற்றும் அவர்களது அப்பாவின் மரணம் நிகழும் ஆஸ்பத்திரியையும் மையமாக கொண்டு, முன், பின்னாக சம்பவங்களைக் கோர்த்து “ஆஸ்பத்திரி” என்ற ஸ்தாபனத்தின் மீதான தனது விமர்சனங்கௗயும், ஆற்றாமைகளையும் முன் வைக்கிறார்.
“கொலை செய்வதற்கு எனப் பிரேத்யேகமான சில இடங்கள் உண்டு” என்ற வாசகத்துடன் இந்நாவல் ஆரம்பமாகிறது.
அப்பா உயிருக்காக போராடிக் கொண்டிருந்த போது, நாங்கள் வீட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா இரவு மேட்ச் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்ரீகாந்த் பேட் செய்து கொண்டிருந்தார் எனவும் நாவலின் ஆரம்பத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த ஒருவரி கதை நடைபெறுவது கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்பதைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறது.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ வசதிகள் இந்த அளவு எல்லா மருத்துவ மனைகளிலும் பரவலாக்கப்படவில்லை. முக்கியமாக, சென்னையில் இரு பெரும் மருத்துவமனைகள் அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது என்பதையும் நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். அந்த இரு மருத்துவமனைகளில் வசூலிக்கும் கட்டணங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் தரத்தை விட மிக அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல், சொத்துக்களை விற்று, அங்கு மருத்துவம் பார்த்தவர்களையும் நானே கண்டிருக்கிறேன். அங்கு ஒரு நாளைக்கு ஐ.சி.யூ.வில் இருக்க வசூலிக்கப்படும் கட்டணம், இன்று சென்னையில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருப்பவரின் ஒரு மாதச் சம்பளம் ஆகும்.
நடுத்தர வர்க்கத்தினரின் தரவை மட்டுமே பெரும்பாலும் நம்பி நடைபெறும் இம்மருத்துவமனைகளில் அவர்கள் மருந்துக்குக் கூட மதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். அதை பல்வேறு இடங்களில் நாவலில் சுவாரசியமாக பதிவு செய்துள்ளார் சுதேசமித்தரன். பணக்காரராக இருப்பின் வெளிநாடுகளிலும், ஏழையாக இருப்பின் அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவம் பார்த்துக் கொள்வது சகஜம். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. இதற்கு இந்நாவலில் தகுந்த காரணத்தையும் விளக்கியுள்ளார்.
சுதேசமித்திரனின் முந்தைய நாவலான “காக்டெய்லை” விட பல படிகள் உயர்ந்து நிற்கக் கூடியது ஆஸ்பத்திரி. மெல்லிய அங்கதமும், சுவாரஸ்யமான எழுத்தின் வேகத்தோடும் சேர்த்து சிறந்த கதை ஒன்றையும் சொல்லி விடுகிறார். நான்-லீனியரில் கதை சொல்வது கடினம், ஆனால் அதையும் இஇதில் செய்து காட்டியிருக்கிறார்.
உண்மைகள் உறவாடும் எழுத்துக்களில், நான்-லீனியரின் தனிக்குரலாக சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ நாவலை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
வௌயீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 144
விலை : ரூ.80/-
நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து:
நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேச மித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. அச்சமற்று நினைத்ததை எழுத்தில் கொணரும் நேர்மையும் அவருக்கு உண்டு. அவை யாவும் இந்த நாவலில் தருணம் தெர்ந்து வெளிப்பட்டுள்ளன.
இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது.
அவரது பாதிப்பு முன்னோடியின் சிறகுக் கதகதப்பில் முடங்கிக் கொள்வதல்ல. சுறுசுறுப்பாய் கொத்தித் திரிவது, சிறகடித்துப் பறக்க முயல்வது, சொந்தமாய் இரைதேட வல்லது.
பன்முகப்பட்ட உடல் சிக்கல்களுக்காக மருத்துவமனையும் வீடுமாக அலைக்கழியும் தகப்பனாரையும் மருத்துவமனையையும் அவரது இரண்டு மகன்களையும் முக்கியக் கதாபாத்திரங்களாகக் கொண்டது. மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அங்கதத்துடன் காட்டமாய் விமர்சனம் செய்வது. அதைப் பயன்படுத்தி சமூக விமர்சனம் செய்வது.
மருத்துவமனையில் அப்பாவை அனுமதித்ததே அவரைக் கொலை செய்வதற்கான முகாந்திரம்தானோ எனும் ஐயத்துடன் தொடங்கும் நாவல், அவரை மின் மயானத்தில் எரியூட்டி முடிந்த பின்பும் அந்தக் கேள்வியுடன்தான் முடிகிறது –
இந்த நாவலில் கொலை நடந்ததா இல்லையா என்று?
சுதேசமித்திரன் வலையுரை:
கவிஞர் விக்ரமாதித்யனுக்கு எனது அன்பு கலந்த நன்றியை இப்போதே வெளியிட்டு விடுகிறேன். எனது முதல் புத்தகமான அப்பா (கவிதைகள்) வெளிவந்தபோது விக்ரமாதித்யன் என்னிடம் தன் இசைவின்மையை மிகவும் மென்மையாக வெளியிட்டார்.
அயல் மொழிகளில் ஒரே வி்ஷயத்தை வேறு வேறு வடிவங்களில் எழுதிப் பார்க்கும் வழக்கம் உண்டு என்பதைக் குறிப்பிட்டு, நீங்கள் ஏன் இதை வேறு வடிவத்தில் எழுதிப் பார்க்கக்கூடாது என்று அவர் கேட்டார்.
‘அப்பா’வைப் பொறுத்தவரை அது அந்த வடிவத்தில் எழுதப்பட்டதுதான் புதிது என்பதை நான் நன்கறிவேன் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் (அப்பா எழுதிய காலத்திலிருந்து கணக்கிட்டால் 11 வருடங்கள்) கழித்து ஆஸ்பத்திரியை ஒரு சிறுகதையாக முதலில் எழுதினேன். சிறுகதை என்கிற அளவில் அது சிறப்பானதாகவே இருந்தபோதும் எழுதியவனின் மனத்துள் கொட்டிக் கிடக்கும் மிச்ச சொச்ச சரக்கை உத்தேசித்து அதை முழுமையாக எழுதி விடுவதுதான் சரியானது என்பதாக தோன்றிக்கொண்டேயிருந்தது. கிட்டத்தட்ட இருபதே நாட்களில் அதைச் செய்து முடித்துவிட்டேன். முடித்துவிட்டு ஒரு முறை வாசித்துப் பார்த்தபோது, விக்ரமாதித்யன் சொன்னதைத்தான் ஓரளவு முயன்று பார்த்திருக்கிறேனோ என்கிற வியப்பு என்னுள் எழுந்தது. அது உண்மையானால் அவருக்கு இன்னுமொரு முறை நன்றி.
என்னுரை
கதை சொல்லும் கலை என்றால்:
- இயல்பு, எதார்த்தம் என்று உதார் விடுவிடாமல் உண்மை நிலையை பிரதிபலிக்குமா?
- உவமை, ஒப்புமை, எடுத்துக்காட்டு எல்லாம் எப்பொழுது வெற்றிபெறும்?
- எங்ஙனம் கதாபாத்திரத்தை மனசுக்குள் உட்கார்த்தி நிரந்தர படுக்கையறை உருவாக்குவது?
- விவரணை எப்படி தேவையில்லாமல் போகிறது? விவரிப்புக்கும் தகவல்களுக்கும் எங்கே முக்கியத்துவம் கிடைக்கிறது?
- கதாசிரியர் கருத்து, வாசகரின் எண்ணவோட்டம், கதைசொல்லியின் இயக்கம், கதாமாந்தரின் நியாயம் எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று உரசாமல் உலாவுகிறது?
- அட… கற்பனை மனிதர் மேல் கழிவிரக்கம் தோன்றுவது ஏன்?
இதெல்லாம் சுதேசமித்திரனின் ஆசுபத்திரியில் சாத்தியமாவதால் நிறைந்த வாசக அனுபவம் கிடைக்கிறது.
நவீன விருட்சம்: புத்தக விமர்சனம்