ஆறு வயதிற்கு
பிச்சிக் கொடி உயரம்தான்
பதினாறு வயதில்
செம்பருத்தி மட்டுமே
பள்ளிக்குள் ஆடின
இருபத்தாறு வயதில்
உன் தோட்டம் எதிரில்தான்
ஆனால் –
வேலிப்படல் தாண்ட
யாருக்குத் துணிவுண்டு?
பந்தக்கால் போட்ட பின்பு
தினந்தோறும்
கதம்பமும் கனகாம்பரமும்
திரும்பிப் பார்ப்பதற்குள் –
முப்பதும்… நாற்பதும்
அறுபதுமாய் வருடங்கள்
வாசமின்றி உதிர்ந்தன
இன்று –
ஊரெங்கும் திருவிழா.
எங்கிருந்தோ வருகிறாய்
கையில் பூச்சரத்துடன்
கறுப்புத் தேருக்கே
வண்ணப் பூச்சூட்டல்கள்.
என்
வெள்ளிப் பூந்தலையில்
மல்லிகைக்கு ஏது நிறம்?
நன்றி: தினமணி தீபாவளி மலர் 2004