ஸ்வீட் ஷா(ரூ)க்! – சுஜாதா (கற்றதும் பெற்றதும்: ஆனந்த விகடன்)
1லிருந்து 100 வரை எத்தனை முறை 9 வரும்?
எஸ்ஆர்கே-யின் கேபிசி-யில் அமிதாபுடன் ஒப்பிடுவதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார் ஷாரூக்கான். ‘பவுஜ்’ என்ற தொலைக்காட்சித் தொடரில் முதலில் தலையைக் காட்டி, சினிமாவுக்குப்போய் வென்று முழுவட்டமாக மறுபடி தொலைக்காட்சிக்கு ஒரு சூப்பர் ஸ்டாராக வந்திருக்கிறார். அடிக்கடி கட்டிக்கொள்கிறார்; கண்ணடிக்கிறார்; உம்மா கொடுக்கிறார்; ஜோக் அடிக்கிறார்.
அது சிலருக்கு உவப்பதில்லை. குறிப்பாக, சென்ற வாரம் ஒரு பள்ளி ஆசிரியை ஆள் காட்டி விரல் காட்டி அதட்டியே சொல்லிவிட்டார், ‘என்னைக் கட்டிக் கொண்டால் அடிப்பேன்’ என்று. ஆனால், ஷாரூக் அசரவில்லை. ஆசிரியையின் அம்மாவைக் போய்க் கட்டிக்கொண்டு, செக்கை அவரிடம் கொடுத்தார்.
ஷாரூக் செய்த சில காரியங்கள் இன்ப அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கும். ஒண்ணேகால் லட்சம் வரை ஜெயித்து விட்டு, ஒரு தப்பான பதிலால் இருபதாயிரத்துக்குச் சரிந்து விட்டவருக்கு ஆறுதலாகத் தன் கைக் கடிகாரத்தைக் கழற்றிக் கொடுத்தார்.
‘‘உனக்குக் கல்யாணமானாலும் பரவாயில்லை; உன்னைக் கல்யாணம் செய்துகொள்ள விரும்பு கிறேன்’’ என்று சொன்ன இளம் பெண்ணிடம், ‘‘என் மனைவியிடம் கேட்டேன். யாராவது என் கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டால் சரி என்றாள்’’ என்றார்.
வெல்டன் ஷாரூக்!
(‘கோன் பனேகா குரோர்பதியில் கேட்ட கேள்விக்கு விடை 20)