Happy Valentines Day!
அன்பர் தினத்திற்காக என்ன வாங்கிக் கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டே விலுக் விலுக்கென்று நடந்தபோதுதான் அது நடந்தது. நடந்தால்தான் பரவாயில்லையே! கால் வழுக்கி கீழே உடல் விழ, வலது கை அதிரடியாகத் தாங்கி தோள் கொடுத்தது.
சமாளித்து பயணத்தைத் தொடர்ந்தேன்.
நண்பரிடமும் இந்த வீர சாகச விழுந்தெழுந்த கதையை சொன்னேன். எங்களுக்கு அறிமுகமான இன்னொரு நண்பருக்கு நிகழ்ந்ததை விவரிக்க ஆரம்பித்தார்.
மனைவி ஊருக்கு புதுசில்லை. என்றாலும் ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவா? பனியில் தவறி விழுந்திருக்கிறார். சுற்றும் முற்றும் எவரும் பார்க்கவில்லையே என்று உறுதி செய்துவிட்டு அசால்ட்டாக அப்படியே விட்டும் விட்டார்.
இரண்டு வாரம் கழித்து தலைவலி, மண்டையிடி. மருத்துவரிடம் போனால் எம்.ஆர்.ஐ, ஸ்கேன் செய்து தலையில் கட்டி இருப்பது தெரியவந்துள்ளது. பனியில் விழுந்ததனால்தான் என்று டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.
பனியில் பார்த்து நடந்து கொள்ளவும்.
~oOo~
முன்னே பின்னே புஷ் அப் செய்து மூன்று வருடமாவது ஆகிப் போயிருக்கும். ‘காக்கி சட்டை’ கமலாக ஒற்றைக் கை புஷ் அப் எடுத்த தோள் பட்டை வலித்துக் கொண்டிருந்தது.
காந்தாரி பரம்பரையில் வந்த மனைவி சும்மா விடுவாரா?
பார்வையற்ற திருதராட்டிரனுக்காக கண்ணைக் கட்டிக் கொண்டாள் காந்தாரி. கை வலியால் பாதிக்கப்பட்ட கணவனுக்காகவோ, என்னவோ!?
கார் கதவை சாத்தும்போது கையை வைத்து சாத்திக் கொண்டு விட்டாள். விரல் நகம் பெயர்ந்து உதிர, உதிரமும் கொட்டுகிறது. எனக்கு கால்கட்டு போட்டார்கள். அவளுக்கு இப்போது விரல்கட்டு.
பட்ட காலே படும்; லே ஆஃப் ஆன குடியே டவுன்சைஸ் ஆகும் என்று பெரியோர்கள் அன்றே பழமொழிந்து இருக்கிறார்கள்.
~oOo~
இந்த சம்பவத்தையும் மதிய உணவில் சம்பாஷித்தோம். இன்னொரு நண்பர் தன் அம்மாவிற்கு செருமனி நிகழ்த்திய கொடூரத்தை நினைவு கூர்ந்தார்.
லுஃப்தான்ஸா சென்னையில் இருந்து ஃப்ரான்க்ஃபர்ட் கொண்டுவிட்டிருக்கிறது. ஏழு எஸ்கலேட்டர், ஆறு செக்யூரிடி செக் முடித்துவிட்டாள் அவரின் அன்னை.
கடைசியாக லிஃப்ட்.
எலிவேட்டரில் பாய்வதற்காக தன் மெல்லிய கையை நடுவில் வீசிப் பார்க்க, லிஃப்ட் கதவு மூடிக் கொண்டு, விரல்களை பதம் பார்த்து விட்டது.
குருதி கொட்ட கொட்ட, முதலுதவி கேட்டிருக்கிறார். ‘விமான நிலைய ஊழியருக்கு அடிபட்டால்தான் ஃபர்ஸ்ட் – எயிட்; உங்களுக்கு நோ எயிட்’ என்று ஜெர்மானிய ஊழியர்கள் நிராகரித்துவிட்டார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக ‘Defibrillator இருக்கிறது! வேண்டுமா?’ என்றும் கரிசனையோடு விசாரிக்கிறார்கள்.
கூடவே, இரண்டு பெரிய ஃபாரம்களை நீட்டி, கையெழுத்தும் கோரி இருக்கிறார்கள். கையொப்பம் இட்டால்தான், பாஸ்டனுக்குப் பறக்கும் விமானத்தில் ஏற முடியும். அதாகப்பட்டது, ‘உங்களுக்கு விமானத்தில் அடிபடவில்லை; அதற்கு முன்பே பாதிக்கப்பட்டு விட்டீர்கள்! எங்களுக்கும் உங்கள் உடல் சேதத்துக்கும் எந்தப் பொறுப்பும் கிடையாது!’
கைகுட்டை எடுத்து ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்து வலது கை இழந்த ஏழு மணி நேரப் பயணத்திற்கு பின் பாஸ்டன் வந்தவுடன் நேரே எமர்ஜென்சி சென்றிருக்கிறார்கள்.
‘உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்றுதானே வள்ளுவப் பெருந்தகை சொல்லி விட்டுப் போயிருக்கிறார். சேவை நிறுவனங்களுக்கும், விமான நிலையத்திற்கும், தொலைதூர பயணிகளுக்கும் விரல் நெகிழ்ந்தாலும் பொருந்தும் என்று சொல்லவில்லையே!
எனவே, லிஃப்ட்டுக்குள் நுழையும் அவசரத்தில் கையை நீட்டாதீர்கள். அதுவும் லுப்தான்சாவில் பயணித்து ப்ரான்க்பர்ட்டில் நீட்டவே நீட்ட வேண்டாம்.
~oOo~
மீண்டும் சொந்தக் கதைக்கே வந்து விடுவோம்.
வருத்தந் தரும்மெய்யுங் கையில் தழையும்வன் மாவினவும் கருத்தந் தரிக்கும் நடக்கவின் றைய கழல்நினையத் திருத்தந் தருளும் திகழ்கச்சி ஏகம்பர் சீர்க்கயிலைத் துருத்தந் திருப்பதன் றிப்புனம் காக்கும் தொழிலெமக்கே.
எமக்குத் தொழில் ட்விட்டர் அடிப்பது, ப்ளாகில் பின்னூட்டம் இடுவது, விவாதத்தில் வம்பு தேடுவது என்று தேமேன்னு இருந்தவனை பாத்திரம் தேய்ப்பது, சமைப்பது என்று பொறுப்பு கூட்டினார்கள்.
ஆடலுடன் பாடல் போல் படத்துடன் பப்படம் பொரிப்பது எப்படி என்று எழுதியவரை கிண்டல் செய்ததன் கர்மபலனோ? டிஷ்வாஷர் போட்டால் உலகம் வெம்மையாகிறது என்று ஒப்பாரி கட்டுரை எழுதியதற்கான பழிக்குப் பழியோ? Frozen vegetables வாங்குபவரை ஃப்ரெஷ்ஷாக வாங்கி, கட் செய்தால்தான் சத்து என்று மிரட்டியதற்கான கை மேல் பலனோ? மினிமம் – ஒக்க கூட்டு, தோ கறி, மூன்று கோர்ஸ் இருந்தால் மட்டுமே பசியாறுவேன் என்று முனிசிரேஷ்ட வாழ்க்கையின் சாபமோ?
இரண்டு நாள் சமைத்தால் போதும். ஐந்தாண்டு வலைப்பதிந்த அனுபவமும் பத்தாண்டு இலக்கியம் வாசித்ததின் ஆய பயனும் ஒருங்கே சித்திக்கும்.
~oOo~
கல்யாணத்திற்கு முன் என்னுடைய சமையல் சம்பிரதாயமானவை. ஃப்ரென்ச் ஃப்ரைஸ் கொண்டு கறி செய்வோம். ஆனியன் ரிங்ஸ் சாம்பாரும் கிடைக்கும்.
கைக்குக் கிடைத்த பதார்த்தத்தைக் கொண்டு வழக்கமான சிஷ்ருஷைகளை அரங்கேற்றி சமையல் நடக்கும். எல்லாவற்றுக்கும் தாளித்துக் கொட்ட வேண்டும். சாம்பாரோ, ரசமோ, கூட்டோ — எதுவாகினும் கவலை வேண்டாம். எல்லாவற்றிலும் பெருங்காயம் முதல் சிக்கன் மசாலா வரை சகலமும் மிதக்கும்.
எது செய்தாலும் ஒரே ஸ்டான்டர்ட்; அதே டேஸ்ட். யார் நளபாகப் பொறுப்பெடுத்துக் கொண்டாலும் மாறி விடாத சுவை; சிம்பிள் சூத்திரம். எல்லாவற்றையும் போடு; நாலு கலக்கு கலக்கு. நிறைய காரம் போடு. இதுதான் ட்ரேட் சீக்ரெட்.
வந்த புதிதில் மனைவிக்கு இதை செய்து போட்டு மிரளவைத்ததுதான். இன்றளவிலும் ‘அவன் வெண்பொங்கல் எக்ஸ்பர்ட் ஆக்கும்!’ என்று செல்லமாய் வஞ்சப் புகழ்ந்து ஒதுக்கி வைத்திருக்க செய்தது.
‘இப்படித்தான் இருக்க வேணும் சமையலு’ என்று மைக்ரோ மேனேஜ் செய்து, அடுப்பங்கரையிலே மேற்பார்வையிட்டு, ஒவ்வொன்றையும் எப்படி பொறுமையாக பாதி சூட்டில் வைத்து வேக வைக்கவேண்டும் என்று பாலபாடம் எடுத்ததில் மனைவிக்கு சமையலே மறந்திருக்க வேண்டும்.
இப்பொழுதெல்லாம் மைரோவேவ் டின்னர் மாதிரி வருமா? இன்று பீட்சா சாப்பிடலாமா என்று மார்க்கெடிங் செய்து பார்க்கிறேன். சமையலை விட சந்தைப்படுத்தல் சுளுவானது.
~oOo~
சமைத்தேன் என்பதற்கான சாட்சியாக கீழே கொண்டைக்கடலை சாம்பார் கிடைக்கிறது. கூடிய விரைவில் ரெஸிபியுடன் சந்திக்கிறேன்.
\\காந்தாரி பரம்பரையில் வந்த மனைவி சும்மா விடுவாரா\\
நீங்க இப்படியெல்லாம் எழுதறது தெரிஞ்சா வேற அவதாரமெடுத்துடுவாங்க 🙂
\\குருதி கொட்ட கொட்ட, முதலுதவி கேட்டிருக்கிறார். ‘விமான நிலைய ஊழியருக்கு அடிபட்டால்தான் ஃபர்ஸ்ட் – எயிட்; உங்களுக்கு நோ எயிட்’ என்று ஜெர்மானிய ஊழியர்கள் நிராகரித்துவிட்டார்கள். \\
அவ்வளவு மோசமானதா ஃப்ராங்ஃபுர்ட் விமான நிலையம். நம்மூர் எவ்வளவோ பரவாயில்லையே. என் மனைவியின் உறவுக்கார அக்கா ஒருவருக்கு மும்பை விமான நிலையத்தில் அடிபட்டதுக்கு விமான நிலைய மருத்துவர் முதலுதவியெல்லாம் கொடுத்து, வேறு உறவினர்கள் வரும் வரை பார்த்துக் கொண்டார்களாம்.
\\சாம்பாரோ, ரசமோ, கூட்டோ — எதுவாகினும் கவலை வேண்டாம். எல்லாவற்றிலும் பெருங்காயம் முதல் சிக்கன் மசாலா வரை சகலமும் மிதக்கும்.\\
கல்யாணமான புதிதில் என் மனைவிக்கு ஒரு நாள் வத்தக்குழம்பு வைத்துக் கொடுத்தேன்.இன்றளவும் எனக்கு சமையலறையில் நோ எண்ட்ரி. இருந்தாலும் பேச்சுலர் சமையல் மாதிரி வருமா. நான் சமைக்கறதும், வாய்க்கு ருசியா இருக்கும், உங்களுக்கு அகோர பசியும், சாப்பாடு சூட்கவும் இருந்தால் 🙂
பாலா
ரேச்சல் ரே மாதிரி 30 நிமிட டின்னர் குறிப்புகள் அனுப்பவா?
பிராங்பர்ட் அத்தனை மோசமில்லை. கவலைப்படாமல் அங்கே வரும் ஊனமுற்றவர்/ முதியோரை ஏற்றி சொல்லும் வண்டியில் ஏறி முதலுதவி அறைக்கு சென்றால் நல்ல கவனிப்பு உண்டு. முதல்லுதவி அலுவலகம் கட்டாயம். அங்கே மருத்துவரும் உண்டு. நடந்தே போக முடியாத தூரம் , வலியுடன் நடக்க இன்னமுமே கஷ்டம்.
The First Aid station can be found in the Departures Hall of Terminal 1 between areas B and C (tel: + 49(0)69 690 66767).
விஜய்,
—நீங்க இப்படியெல்லாம் எழுதறது தெரிஞ்சா வேற அவதாரமெடுத்துடுவாங்க—
அவங்ளுக்கு நான் எழுதிக் கொடுத்த டயலாக்: ‘கண்ணாடிய கழட்டிட்டா காந்தாரி புருஷன் நீ’ 😉
—நம்மூர் எவ்வளவோ பரவாயில்லையே. —
இந்தியாவில் இந்த கவனிப்பு (அட்லீஸ்ட் விமான நிலையங்களில்) ஜோர். பதறிப் போயிடுவாங்க!
—இருந்தாலும் பேச்சுலர் சமையல் மாதிரி வருமா. —
அதானே! இப்பொழுதும் எப்பொழுதாவது செய்து காட்டுவது உண்டு.
‘என்னது இது ரணகளம்! இப்படி குளறுபடியாக எல்லாத்தையும் மாற்றிப் போடலாமா? கிச்சனே மாறிப் போச்சு. வச்சது வச்ச இடத்தில் இல்ல’ என்னும் தாக்குதலும் தொடர்ந்து வரும். 🙂
பத்மா,
—30 நிமிட டின்னர் குறிப்புகள் அனுப்பவா?—
அதெல்லாம் அனுபவஸ்தர்களுக்கு சரிப்படும் 😛 என்னை மாதிரி ஒரு தடவ செஞ்சதையே மறுபடியும் திரும்ப செய்பவர்களுக்கு சரிப்படா (முதமுறை செஞ்சது அடிப்பிடிச்சுக் கருகியதால் தூரப் போட்டிருப்போம் 🙂
—பிராங்பர்ட் அத்தனை மோசமில்லை. கவலைப்படாமல் அங்கே வரும் ஊனமுற்றவர்/ முதியோரை ஏற்றி சொல்லும் வண்டியில் ஏறி முதலுதவி அறைக்கு சென்றால்—
அவருடைய கேடி வாயிலருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. உடனடியாக செக் – இன் செய்யும் இடத்தில் உள்ள லுப்தான்சா ஆளிடம் விசாரித்தால், ‘அடியுடன் விமானத்தில் ஏறவேண்டுமானால், release formல் கையெழுத்து தேவை. எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது.
நீங்கள் முதலுதவி செய்து திரும்பும் வரை உங்களுக்காக விமானம் காத்திருக்காது.’ என்று கட் அன்ட் ரைட்டாக சொல்லி இருக்கிறார்கள்.
விமானத்தைத் தவறவிட்டால், அடுத்த பயணம் எவ்வாறு அமையும் என்னும் குழப்பம். இரவு தங்க நேரலாம். கையும் சரியில்லை. மொழி தெரியாத ஊர். வயதான பெண். கையில் அதிக பணம்/கடனட்டை போன்ற சமாச்சாரம் சரியாக இருந்திருக்காது.
காத்திருக்கும் இடத்திலேயே அவசர சிகிச்சை அளிக்கும் விமான நிலைய உதவியை லுப்தான்ஸா செய்திருக்கலாம்.
ஏனோ அலட்சியம்! செய்யவில்லை.
அவரால் தன்னந்தனியே இரயில் பிடித்து அடுத்த டெர்மினல் போய், தேடிக் கண்டுபிடிக்கும் பொறுமையும், அரை மணி நேரத்தில் கிளம்பும் தொடர் பயணத்தைத் தவறவிட்டு சிகிச்சை செய்து கொள்ளும் மனநிலையும் இல்லை.
லுஃப்தான்ஸா நினைத்திருந்தால் ஃப்ரான்க்ஃபர்ட் விமான நிலையத்தை தொடர்பு கொண்டு செயலாற்றி சிக்கலின்றி ஆக்கி இருக்கலாம்.