ஆர். வெங்கடேஷ் சமீபத்தில் எழுதிய கதைகள் கிடைத்தது. வாய்ப்பைத் தவறவிடாமல் விமர்சனம்.
இலகுவான வாசிப்புக்கு ஏற்றவை. வாசகனுக்கு சிரமம் தராத நடை. தற்கால இடங்களும் நகரத்தின் விரிவாக்கங்களும் பின்னணியாக உள்ளது. பதைபதைக்கும் விறுவிறுப்பு கிடைக்காது. சுவாரசியத்திற்கும் பஞ்சமில்லை.
~oOo~
‘நான் விசுவலாகத்தான் இதை விளக்க முடியும்’ என்று மார்க்கரும் போர்டுமாக அலைபவரா நீங்க?
அப்படியானால் சுந்தர் நம்மவன். அசகாயமாக செய்து முடிப்பதை பேச்சில் சூரத்தனம் இல்லாமல் கருமமே தொடர்ச்சியாக காலங்காலமாக நடத்த விதிக்கப்பட்டவன்.
அமெரிக்காவின் திருப்பதியாம் நயாகரா நீர்வீழ்ச்சிப் பயணத்தை நினைவூட்டுகிறார். விச்ராந்தியாக உடற்பயிற்சிக்குப் பின்னுள்ள களைப்புற்று உட்காரும்போது தெய்வம் பிரசன்னமாகி அருள்பாலிக்கிறார்.
~oOo~
‘இதயமே! இதயமே! உன் மௌனம் என்னைக் கொல்லுதே!’ என்று முகாரி தலை ராகம் பாடும் இளசு.
இப்பொழுதைய தலைமுறை ‘அதிரடி’ என்பது அதீதமான கற்பனை. இன்று தாடி வளர்க்காமல், தம்/தண்ணி அடித்து பூச்சி மருந்து அருந்தாமல் மருகும் கல்லூரி மாணவனின் களம்.
தெரிந்த முடிவை நோக்கிய பயணம்: கதையிலும் கதைநாயகனிலும்.
~oOo~
அது யாரு சிம்ரனா? மீனா? மாதுரி தீக்சிட்?
முன்னாள் நடிகை நாடகம் பார்க்கும் கதை. அழுத்தம் குறைவு. சம்பவங்களினால் கோர்க்காமல் விவரிப்பில் வளர்வதால் மனதில் எதுவும் வெண்பஞ்சு snowஆக உரசாமல் பனிக்கட்டியாக இடறுகிறது.
மூன்று கதைகளில் இது கொஞ்சம் ஏமாற்றம் தரும் ஆக்கம்.
~oOo~
வெங்கடேஷ் சிறுகதைத் தொகுப்பு வெளியாகி உள்ளதா? அடுத்த கலெக்சன் ரெடி என்று பட்சி சொல்லுகிறது.
என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்கள, எழுத முயல்பவர்கள் கற்றுக் கொள்ள இந்தக் கதைகளை மனனப் பகுதியாக ஈராறு முறை படிப்பது நலம்.
எவ்வாறு காட்டாறாக துவங்குவது, ஆரம்பித்த வேகத்தை சீராக்குவது, பின்னோக்கி ஃப்ளாஷ்பேக் சொல்லிவிட்டு, அடுத்த காட்சிக்கு கதாசிரியர் சென்றுவிட்டதை எங்ஙனம் உணர்த்துவது, சொற் சிக்கனம், வடிவ நேர்த்தி, என்று சிறுகதையின் சூத்திரங்களைத் தெளிய உதவலாம். இதெல்லாம் சித்திக்காவிட்டாலும் நல்ல கதை படித்த திருப்தி கிட்டும் என்பதற்கு நான் கியாரண்டி.