தோழமை வெளியீடு
9444302967
பக்கங்கள் 184
விலை : 120
வாசித்தோர் பார்வை:
லக்ஷ்மி
மலர்வனம்: “யெஸ். பாலபாரதியின்“:: ‘அவன்-அது= அவள்’ விமர்சனம்
கதை என்று எடுத்துக் கொண்டால் என் பார்வையில் இது பிரச்சாரக் கதைதான். அதாவது பாலபாரதியின் பாஷையில் சொல்வதானால் கதை சொல்ல வேண்டிய அரசியலை முடிவு செய்து விட்டு எழுதிய கதை. சொல்ல வேண்டிய விஷயத்தை முடிவு செய்த பின் பலரிடம் பேசி சேகரித்த தகவல்களை சம்பவமாக மாற்றி அவற்றைக் கோர்த்து பின்னப்பட்ட கதை. ஆனால் அதிகம் அறியப்பட்டிராத ஒரு தரப்பாரின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் ஆரம்பகாலப் படைப்புகள் இப்படித்தான் இருந்தாக முடியும் என்பதால் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றுவதில்லை.
:::
வட்டார வழக்கு, திருநங்கையருக்கென இருக்கும் பிரத்யேக மொழி, அங்கங்கு குறுக்கிடும் மும்பையின் பேச்சு மொழியான ஹிந்தி என பல வேறுபாடுகளிருப்பினும் கூட அதிக பின் குறிப்புகள் தேவைப் படாத அளவு மொழி நடையை எளிமையாகத் தந்திருப்பதாலேயே கதையின் மிகக் கனமான ஆதாரப் பிரச்சனையை மட்டும் கவனிக்க முடிகிறது.
:::
முதல் அத்தியாயத்தின் இறுதியில் கோமதி/கோபிக்கு நேரும் கொடுமை முதலாக கடைசி அத்தியாயத்தின் கடைசி வரி வரை அடுக்கடுக்காக திருநங்கைகளின் பல பிரச்சனைகளை வரிசைப் படுத்தியிருந்தாலும் ஒரேடியாக அழுகாச்சி காவியமாகவும் போய்விடவில்லை கதை.
:::
பல விஷயங்கள் விலாவாரியாக நுணுக்கமான தகவல்களைக் கூட விட்டுவிடாது சித்தரிக்கப் பட்டிருக்கிறது.
சேவியர்
கவிதைச் சாலை :: Xavier – யெஸ். பாலபாரதியின் “அவன் – அது = அவள்: எளிமையான தெளிவான நடையும், சொல்லும் விஷயங்களை வரிசைப்படுத்திய நேர்த்தியும் நூலின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. பல இடங்களில் நூலை மூடி வைத்துவிட்டு சற்று இடைவெளி கொடுத்து, கனத்த இதயத்தை எடையிழக்க வைத்து, வாசிப்பைத் தொடர வேண்டியிருந்தது என்பது கலப்படம் இல்லாத உண்மை.
:::
அட்டையில் திருநங்கை நெல்லை. முத்து மீனாட்சி யின் முகம், படம் எடுத்தவர் தஞ்சை பாரதி.
லக்கிலுக்
புத்தக அட்டை நன்றாக வந்திருப்பதாக பட்டது. இந்த நாவலுக்கு பொருத்தமான அட்டை.
:::
தமிழில் வாடாமல்லிக்கு அடுத்து அரவாணிகள் குறித்து வந்த பிக்ஷன் நாவல் இதுதான் என்று நினைக்கிறேன். எனவே தற்கால தமிழிலக்கிய சூழலில் இந்நாவல் மிக மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.
கோவி.கண்ணன்
காலம்: எஸ்.பாலபாரதியின் அவன்-அது: திருநங்கைகளுக்கும் நடக்கும் ரவுடிகள் மற்றும் போலிஸ் கொடுமைகளை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்.
:::
ராமேஷ்வரத்தில் நடந்தவைகளைச் சொல்லும் போது அங்கு பேசும் வட்டாரவழக்குகள் வசனங்களிலும், கூவாகம் பகுதியில் கதை செல்லும் போது அங்கு பேசுபவர்கள் பன்ருட்டி வட்டார வழக்குகளில் பேசுவது இயல்பாக இருக்கிறது.
:::
ஓரின புணர்ச்சியாளரான அன்பு ஏன் கோமதியை நிர்வாணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார் என்பது புரியவில்லை. ஓரின புணர்ச்சியாளார்களுக்கு ஆண்குறி தடையே அல்ல என்றே நினைக்கிறேன்.
அன்பு என்ற கதாபாத்திரம் முதலில் ஒரு முற்போக்கு எண்ணம் உள்ளவனாகவும், திருநங்கைகள் பற்றிய அக்கரை உள்ளவனாகவும் அறிமுகப்படுத்திவிட்டு பின்னர் அவனே ஒரு சராசரி மனிதனாக, ஒரு குடிகாரனாக சித்தரிக்கபட்டுருப்பதாக கூறியுள்ளீர்..
:::
ஒரு வேளை, இந்த சமூகத்தில் முற்போக்கு சிந்தணாவாதிகளின் லட்சணம் இது தான் என்று தோலுரித்துகாட்டவே பாலா அப்படி சொல்லி இருப்பாரோ?? இன்று முற்போக்கு சிந்தணாவாதி என்று சொல்லிக்கொள்ளும் வியாதிகள் ஊருக்கு உபதேசம் செய்யும் வீரர்கள் தானே..
விக்னேஷ்வரன்
வாழ்க்கைப் பயணம்
பிள்ளைக்கு பேய் பிடித்ததாய் தாய் கருதி பூசாரியை அழைத்து பேய் ஓட்டும் போதும் கதை விவரிப்புகள் இலகுவாக மனதில் பதிகிறது. போலி பூசாரியின் காட்சி விவரிப்புகள் நகைச்சுவையாகவே இருக்கிறது.
புதுகைத் தென்றல்:
நானே நானா?
மும்பையில் என் மாமா வீட்டில் இருந்த பொழுது எதிர் பிளாக்கில் பேரம் மடியாததால் குழந்தையையே தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். கேட்டதை விட பெரியத் தொகை கொடுத்துதான் குழந்தையை மீட்டுக்கொண்டு வந்தார்கள்.
போலிசும் ஒன்றும் செய்ய இயலாது.
திருநங்கையாக இருப்பாதால் ஆண்களிடம் பெரிதாக வம்பு செய்ய மாட்டார்கள். பெண்களிடம் நடந்து கொள்ளும் விதமே வேறு.
உங்கள் அனுபவம் போல தான் எனக்கும்.. தில்லியில் குழந்தை பிறந்தால் பணம் வாங்க வருவார்கள். முதல் முறை எனக்கு பெரிய ப்ரச்சனை இருக்கவில்லை ..சமாளித்துவிட்டேன்.. ஆனால் இரண்டாம் முறை ஆண்குழந்தை என்பதைக்காரணம் காட்டி .. தங்கத்தில் எதையாவது தந்தே ஆகவேண்டுமென்று உள்ளேயே வந்து உட்கார்ந்து கொண்டு மோசமாக நடந்து கொண்டார்கள்.. இத்தனைக்கும் நான் மிக மெதுவாக மதிப்பாகத்தான் பேசினேன். ஆப்பரேசன் ஆகி நிற்க இயலாமல் குளிர்க்காற்று (கதவைத்திறந்து வைத்திருந்ததால்) வேறு..இயலாமையில் எனக்கு வந்த அழுகையைக்கூட பொருட்படுத்தவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. 😦 கடைசியில் பேரம் 2500 க்கு முடிந்தது.
தொடர்புள்ள பதிவு:
Chennai Saimira :: அவன் – அது = அவள் | நான் சரவணன் வித்யா
என் வாசக அனுபவம்:
ரொம்ப சென்சிடிவான சப்ஜெக்ட். நான் அரவாணி குறித்து சொல்லவில்லை. மூலஸ்தானத்தில் கருங்கல் உள்ளே உறைந்து அருள்பாலிக்கும் லிங்கோத்பவரையும் அரங்கநாதரையும், ‘ஹரே ராம; ஹரே கிருஷ்ணா’வையும் சொல்கிறேன்.
பளிங்குக்கல், பாறாங்கல், என்று காடுகளிலும் மலைகளிலும் சாதாரணமாக இருப்பவை சிற்பியின் உளியில் செதுக்கினால் கடவுள் சிலையாக கைகூப்பித் தொழ மட்டுமே மனம் செல்லும். அவை எவ்வாறு உயிர் பெறுகின்றன, செய்பவரின் சிரத்தை போன்றவற்றை, வெண்கல சிலைகள் முதல் கற்சிலைகள் வரை அனைத்தின் செய்முறைகளின் பின்னணியில் கொஞ்சம் ஆற அமர பார்க்க இயலுமா?
திருநங்கை இவ்வாறு வேறு சக்தி பொருந்தியவர்.
எல்லா கற்களும் வீடு கட்டவும் துணி தோய்ப்பதற்கும் போய்க் கொண்டிருக்கும் வார்ப்புரு நிலையில் இருந்து மாறுபட்டு ஸ்தபதியாக தன்னைத் தானே பாவித்து பின்னமாக்கி முழுமை பெற்றுக் கொள்பவர். சுயம்பு லிங்கத்திற்கும், சிற்பத்திற்கும் தெய்வாம்சம் எவ்வாறு உண்டாகிறது? எங்கே அந்த மாற்றம், தூணில் இருந்து வெடித்துக் கிளம்பும் நரசிம்ம ஆக்ரோஷம் உண்டாகிறது?
புனைவில் மட்டுமே காட்டக்கூடிய இவ்வகையான சௌந்தர்ய சிருஷ்டியை ‘அவன்-அது=அவள்’ மூலமாக ஆணாகப் பிறந்து பெண்ணாக நிலைகொள்ளும் திருநங்கையின் நிஜத்தைக் கொண்டு வாசகனில் நிலைநிறுத்துகிறார் பாலபாரதி.
-oOo-
ராஜ் என்னுடைய நெருங்கிய நண்பர். தொண்ணூறில் மணமான அவருக்கு குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. மாதம் ஒரு தடவையாவது ஏதாவது விருந்து; சந்திப்பு; அரட்டை.
அடிக்கடி அளவளாவுவோம். நிறைய பேசுவோம். கோபிகாவை ஏன் எனக்கு பிடித்திருக்கிறது? உடற்பயிற்சிக்கு Wii மட்டும் விளையாடினால் போதுமா? அலுவலில் எவ்வளவு போனஸ் வரும்? எல்லாம் ஆலோசித்து அலசப்படும்.
ஆனால், இன்றுவரை செயற்கை கருத்தரிப்பு முயல்வீரா? வாடகைத் தாய் செய்து பார்க்கலாமே? தத்து எடுத்துவிடுங்களேன்! – ஒன்று கூட ஆரம்பித்ததில்லை. அவரும் இயல்பாக உரையாடலில் புகுத்தியதில்லை.
அரவாணி குறித்த இந்தப் புனைவில் பாலபாரதிக்கு இதே பிரச்சினை. ‘அவன் – அது = அவள்’ பொலிடிகலி கரெக்டாக எழுதப்பட்ட கதை.
-oOo-
நாவல் என்பது கற்பனைக்கும் அனுபவத்திற்கும் சம பாதி இடம் கொடுத்து உருவாக்குவது. படைப்பு என்னும் பகுதியில் ‘நிஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா?’ என்று வியக்கவைக்கும் நிகழ்வுகளை நம்புமாறு படைத்து; வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட சம்பவங்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை போதிய அளவில் ரீமிக்ஸ் செய்தால் சுவாரசியம் + இலக்கியம் தயார்.
இந்த நாவலில் தகவல் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால், உப்புசப்பற்ற பாணியில் அல்லாமல் உரையாடலாக வெளியாவதால் உறுத்தாமல் மனதில் பதிகிறது. கூவாகம், ஆணுறுப்பு நீக்குதல், மலஜலம் கழித்தல் போன்ற அனுதின காலைக்கடன் சங்கதி, செக்ஸ் ஆகிய எல்லாமே உண்டு. அவை எழுதுவதற்கு தனி லாவகம் தேவை. பல ஆக்கங்கள் எழுதிய அனுபவமிக்க எழுத்தாளரின் நடை இங்கேயும் கதையெங்கும் விரவி இருப்பது, ‘இதுதான் முதல் நாவலா!’ என்று அதிசயிக்க வைக்கிறது. (முன்னுரையிலோ, ஆசிரியர் உரையிலோ இது பாலபாரதியின் முதல் கதை என்று குறிப்பு எதுவுமில்லை).
லிவிங் ஸ்மைல் வித்யாவின் சுயசரிதையைப் படித்தவுடன் இதை உடனடியாக படிக்க எடுத்தேன். இருப்பினும், வாசிப்பு சுவைக்கு எந்தவிதக் குறையும் இல்லாத விறுவிறுப்பான நடை கிடைத்தது. வித்யாவின் விவரிப்பில் சில நடைமுறைகள், விஷயங்கள் தெரிய வந்தால், கிட்டத்தட்ட அதனில் இருந்து மாறுபட்ட தகவல்களும் செயல்பாடுகளும் பாலபாரதியின் கதையில் கிடைக்கிறது.
வித்யாவின் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்தப் புனைவுக்கும் ஒற்றுமை நிறைய உண்டு. பம்பாய் செல்வது, கடை கேட்பது (பிச்சை எடுப்பது), கல்லூரி படித்தவர்கள், ஆணாக வளர்ந்து திருநங்கை ஆனவர்கள் என்று நிறைய சொல்லலாம்.
இரண்டு புத்தகத்தையும் ஒருங்கே வாசித்தால், திருநங்கை குறித்த குத்துமதிப்பான பரிமாணம் கிடைக்கும்.
-oOo-
ஏன் குத்துமதிப்பு மட்டும்தான்?
ஏன் ஒருவர் திருநங்கை என்று உணரப்படுகிறார்? அறிவியல் பார்வை தந்திருக்கலாம். புனைவு என்பதற்குரிய உரிமம் எடுத்துக் கொண்டு, ஆண் மகவு மட்டுமே நிறைந்த குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்ததாலோ என்னும் சந்தேகம் தெளித்து, அத்தைகள் சீராட்டா, அடி உதையா என்று குழப்பி, இறுதியாக (ஆசிரியர் விருப்பப்பட்டால்) ‘இவை எதுவுமே இல்லையாக்கும்’ என்று சுயம் அறிதலை விரிவாக தந்திருக்க வேண்டும்.
கோமதியுடன் கூட வசிப்பவரில் பலர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, அதிகம் பள்ளிப்படிப்பு முடிக்காதவர்களாக சொல்லப்படுகிறார்கள். அவர்களில் எவரோ ஒருவரையோ, தனம் போன்ற மூத்த தலைமுறை உறுப்பினர்களையோ, விவரித்து, சம்பவங்களை இரத்தமும் சதையுமாக ஆசிரியர் கொணர்ந்திருக்கலாம். இதன் மூலம், மாறுபட்ட இரு சூழல் கிடைத்திருக்கும்.
-oOo-
திருநங்கையின் பல்வேறு சங்கடங்களையும் மனக்குமுறல்களையும் ‘அவன்-அது = அவள்’ முழுவதுமாக கொடுத்துவிடும் என்று எதிர்பார்க்க இயலாது. இவ்வாறு யோசிக்க வைப்பது பாலாபாரதிக்கு கிடைத்த மிகப்பெரிய உச்சம். ஆசிரியனுக்குக் கிடைத்த வெற்றி!
திருநங்கை, தற்பால் நாட்டம் கொண்டோர் படைப்புகளில் தமிழில் பாலபாரதியின் இந்தப் படைப்புதான் சமகால முதல் முயற்சியாக முன்னோடியாக இருக்கிறது. தலித் இலக்கியத்திற்கு ஒப்பான தீவிரமான களத்தில் இயங்கும் அதே சமயத்தில் — உப்புசப்பற்ற விவரணைகளை மட்டும் கொண்டு வாசகனை அயர்வுற வைக்காமல், விறுவிறுப்புடன் ரசனை குன்றாமலும் இருக்கிறது.
-oOo-
எனினும், சங்கர் (பக். 29) என்று அறிமுகமாகும் சகோதரன் சேகர் (பக். 71) ஆகிவிடுகிறான். சொல்லப் போனால், கோமதியின் குடும்பம் குறித்த அறிமுகமாக விளங்கும் அத்தியாயமே அவசரகதியில் விவரணப்படம் போல் சுறுக்கென முடிகிறது. இது கோமதியின் கதை என்றாலும், ‘ஏன் அவர் இவ்வாறு உணர்ந்து கொண்டார்’ என்பதற்கு உடலியல் கூறுகள் தவிர சமூகவியல் பிரச்சினைகளும் காரணமாக இருந்திருக்கலாம் என்னும் சங்கேதத்தை ஆசிரியர் இங்கு உருவாக்கி இருக்க வேண்டும்.
இதே போல் ஆறாம் வயதில் இருந்து கூடப் படிக்கும் சரவணணும் அதிரடியாக கல்லூரியில்தான் (பக். 74) அறிமுகம் ஆகிறார். பால்ய வயதில் இருந்தே கோபியை தெரிந்தவர் என்னும் அழுத்தம் தேவைக்குரிய வலிமையுடன் வெளியாகவில்லை.
தற்பால் நாட்டம் கொண்டவனாக சித்தரிக்கப்படும் அன்பு, ஆண்குறி கண்டவுடன் சுருங்குகிறான் (பக். 157) என்பது நம்ப இயலவில்லை. உறவின் போது பயன்படுத்தபடும் செக்ஸ் பொம்மைகள், கட்டிப்போடுதல், அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு முறைகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டிக் கூட அன்பை வில்லனாக மாற்றி இருக்கலாம். அல்லது, அவனின் மனக்கிடக்கைக்கு வேறு ஏதாவது இடைநிகழ்வையாவது புகுத்தி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கலாம். ஓரினப் புணர்ச்சியாளர்களுக்கு ஆணுறுப்பு மிகவும் மகிழ்வளிக்கக் கூடியதாக இருப்பதால்தான் தற்பால் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
சில இடத்தில் பொதுமையாக்கலில் விவரிப்பு துவங்குவதையும் தவிர்க்கலாம். (பக். 74)
பேராசிரியர்களை சமாளிப்பது இன்னும் கஷ்டம். ஒரு பேராசிரியர் இவனைக் கண்டாலே அசடு வழிவதும்… அன்பாக நடந்து கொள்கிறேன் என்று இவனை இடித்தபடி நிற்பது, தடவுவது போன்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தார்.
இதே போல் காவல்துறையினர் மோசமாக நடந்துகொள்ளும் இடத்திலும், அந்த இடத்தின் போலிசின் அசிங்கத்தை வீரியத்துடன் வெளிப்படுத்தி இருக்கலாம். நிர்வாணம் செய்து கொள்ளும்போது வாசகனுக்கு பயம் கலந்த மரியாதை கிடைக்கிறது. ஆனால், காவல்நிலையத்தில் அத்துமீறல் நிகழும்போது அசிங்கம் உண்டாக்கும் வேதனைக்கு பதில் சினிமா காட்சி போல் பற்றற்ற விவரிப்பாக முடிகிறது.
-oOo-
பால்குழப்பத்திற்கு உள்ளானோர் குறித்தும், தற்பால் விருப்பமுடையவர் குறித்தும், திருநங்கை குறித்தும் இதுவரை எத்தனையோ விதவிதமான திரைப்படம் பார்த்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும்போது இணையத்தில் மேய்வது போன்ற மகிழ்வு கிடைக்கும். தகவல் கிடைக்கும். பச்சாதாபம் வரும். பரிதாபம் தோன்றும். பதிவுக்கு மேட்டர் கூட கிடைக்கும். இதைவிட மோசம்: அவர்கள் உலகம் முழுமையாகப் புரிந்தது போன்ற அதிநம்பிக்கை உண்டாகும்.
இந்த நாவல் ஒரு வாசகனை அவர்களின் உண்மையான உலகுக்குள் அழைத்துச் செல்கிறது. ‘உனக்கு ஒன்றுமே தெரியாதே ஐயா!’ என்பதை உணர்த்தியது. திருநங்கையின் செய்கைக்கு பின்னுள்ள முஸ்தீபுகளை புலப்படுத்தியது. அரவாணிகளின் செயல்பாட்டுக்குப் பின்னேயுள்ள அர்த்தங்களை உறைக்க வைத்தது. அதற்காக பாலபாரதிக்கு நன்றி.
பாலபாரதிக்கு இது முதல் நாவல். அடுத்த முறை இது போன்ற சிறிய தடுக்கல்களை நீக்கி, புதிய களத்தில் தமிழிலக்கியத்தின் மைனாரிட்டிகளை தாழ்த்தப்பட்டவர்களை கண்டுகொள்ளப் படாத சமூகத்தை அறிமுகமும் ஆழ்பரிணாமமும் தருவார்.
நாவலைக் கொணர்ந்தளித்த வெட்டிப்பயலுக்கு சிறப்பு நன்றி.
இத்தனை விமர்சனங்கள் கிடைப்பது தான் ஒரு எழுத்தாளனுக்கு உண்மையான மகிழ்ச்சி….
என்னுடைய பதிவில் பாலபாரதியின் புத்தகம் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் பொழுது தேவை இருந்ததால் இந்தப் பதிவின் சுட்டியைப் பயன்படுத்துக் கொண்டேன்.
http://online-tamil-books.blogspot.com/2011/03/blog-post.html
நன்றி…
கிருஷ்ண பிரபு மூலம் இங்கே உள்ளே மீண்டும் ஒரு முறை வந்தேன். அடேங்கப்பா………… உங்களைப் போல உங்களுடன் வந்து பேசிய இராஜராஜன் திருநங்கை வாழ்க்கை குறித்து, அவர்களுடன் ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்.
பாலபாரதியை குறிப்பிட்டு அவருடன் சமீபத்தில் சந்தித்தவற்றை எழுதும் பொருட்டு எழுதிய வாசகங்கள் மேலே சொன்னது.