நன்றி: சந்தோஷ் குரு :: கசாகூளம்
எழுத்து விமர்சகர்:
- என்னைத் தள்ளுபடி செய்துதான் சிலருக்கு மகிழ்ச்சி கிடைக்கிறதென்றால் அதை நான் கொடுப்பானேனென்று. பல சமயங்களில் இவர்களுடன் சேர்ந்து நானும் சிரிக்கிறேன்.
- என் சிருஷ்டி அவருடைய பார்வைக்கு வந்ததும், அவரால் படிக்கப்பட்டதும் விமரிசிக்கப்பட்டதுமே என் அதிர்ஷ்டந்தானே? பாக்கியந்தானே?
- முத்திரைக்காக ஏதோ ஃபார்முலா இருப்பது போலவும், அந்த ஃபார்முலாவை நான் சாமர்த்தியமாகக் கையாண்டிருப்பது போலவும் ஒரு அர்த்தம் அவர் பேச்சில் தொனித்தது.
- ஒரு கதையின் சதையும் உயிரும் போன்ற தொனிகளையும் நிறங்களையும் பாவங்களையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்தெடுத்து, உள்ளேயிருக்கும் எலும்புக் கூட்டின் ஜாயிண்ட்டுகளை எண்ணுமளவுக்கு – சங்கேதங்களும் குறியீடுகளும் இல்லாத இடங்களிலெல்லாம் இவை இருப்பதாக நினைத்து மிரளும் அளவுக்கு – இலக்கிய ஞானம் அபரிமிதமாகச் செழித்து வளர்ந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயந்தான். ஆனால், இத்தகைய ஞானஸ்தானம் பெறாத சராசரி மக்களுக்காகத்தான் நான் கதைகள் எழுதுகிறேன்.
வாசகர்: அபிமானி
- பல நாட்களாக என் எழுத்துக்களைப் படித்து வந்து, பிறகு திடீரென்று ஒருநாள் என்னை நேரில் கண்டதும் உணர்ச்சிவசப்பட்டவர்களாய் என் கையைப் பிடித்துக் குலுக்கி, சந்தோஷ மிகுதியால் என்ன சொல்வதென்று தெரியாமல் திணறி, விலையுயர்ந்த முத்துக்கள் என் வாயிலிருந்து உதிரப் போகின்றனவென்ற எதிர்பார்ப்பிலும் நம்பிக்கையிலும் என் முகத்தைப் பக்தி பரவசத்துடன் பார்த்து, என்னைத் தவிப்பிலும் சங்கடத்திலும் ஆழ்த்தியவர்கள் இருக்கிறார்கள்.
- எந்தச் சம்பாஷணையையும்போல இந்தச் சம்பாஷணைக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. நீங்கள்தான் அந்த மறுபக்கம்; உங்கள் எதிரொலிகளே இச்சம்பாஷணைக்கு முழுமை தரவேண்டும். எத்தனைக்கெத்தனை இந்த எதிரொலிகள் முதிர்ச்சியும் நுட்பமும் மிக்கனவாயிருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை நம்மிருவருக்குமே மகிழ்ச்சியும் பயனும் தரக்கூடியதாக இந்த முழுமையின் தேடல் அமையும்.
சகா: அறிந்தவர்களும் தெரிந்தவர்களும்
- ‘ஓ! சிலர் எவ்வளவு வயதானாலும் முதிர்ச்சி பெறுவதில்லை!’ என்று அவன் என்னைப் பற்றி நினைத்திருக்க வேண்டும். நானும் அவனைப் பற்றி அதையேதான் நினைத்தேன் என்பது அவனுக்குத் தெரியுமோ என்னவோ?
அங்கீகாரம்: வெகுசன ரசனை: பிரபல ஊடகமும் சிறுபத்திரிகையும்
- பெரிய பத்திரிகைகளுக்கு எழுதுவதால் ஒரு டிஸிப்லின் வருகிறது. ஒரு பொறுப்புணர்ச்சி வருகிறது. ஒரு கட்டத்தில் இந்த டிஸிப்ளின் எழுத்தாளனுக்கு அவசியமென்று நான் நினைக்கிறேன். வரையரையற்ற சுதந்திரம், அளவுக்கு மீறிய செல்லத்தைப் போலத்தான் ஒரு எழுத்தாளனைக் கெடுத்து விடுகிறது.
புனைவு எழுத்தாளர்: கதைசொல்லி
- என்னிடம் கதையெழுத எளிய ஃபார்முலாக்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு கதையையும் மிகவும் யோசித்து, மிகவும் கஷ்டப்பட்டுத்தான் எழுதுகிறேன்.
- ஒருவிதத்தில் என் எழுத்துக்கள் யாவுமே நுட்பமான, நேர்மையான சம்பாஷணை முயற்சிகளென்றுதான் சொல்லவேண்டும். சாதாரண face to face சம்பாஷணையின் கெடுபிடி, பெளதிக நிர்ப்பந்தங்கள், பரஸ்பர தாட்சண்யங்கள், வேஷங்கள், நமக்கே புரியாத சில குரோத அலைகள் ஆகியவற்றினூடே என் எண்ணங்களைக் கோர்வைப் படுத்த முடியாத ஒரு தாபம் தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத்துக்கு விரட்டுகிறது.
- இலக்கியப் பரிணாமம், புதிய மோஸ்தர் என்ற பிரக்ஞை மட்டுமே ஓர் எழுத்தாளனிடம் தூக்கலாக அமைவது எழுத்தாளனுடைய ‘தான்’ அல்லது அகங்காரத்தின் பிரதிபலிப்பே அல்லவா?
- எனக்கு லேபிள்கள் முக்கியமில்லை. மனிதர்கள்தான் முக்கியம். அவர்களுக்குள்ளே ஆதாரமாக, அடிப்படையாக இருக்கும் சில உணர்வுகளையும் ஞாபகங்களையும் வருடுவதிலும் மீட்டுவதிலும்தான் எனக்கு அக்கறை.
சமூக சித்திரம்: நடுத்தர வர்க்கம்
- பிறர் மீதும், அவர்கள் சார்பாகத் தன்மீதும், பெரிதுபடுத்தப்பட்ட பிம்பங்களை ஏற்றி, இந்தப் பிம்பங்களே சிறைகளாக மாறுகிற அவஸ்தைக்கு, என் பாத்திரங்கள் போலவே நானும் விதி விலக்கல்ல என்று இதன் மூலம் உணர்ந்து நான் சிரித்துக் கொள்கிறேன்.
- ஒருவிதத்தில் கீறல்களும், அவற்றின் விளைவுகளுமே வாழ்க்கை என்றுகூடச் சொல்லலாம்.
- ‘நடக்கிறபடி நடக்கட்டும், நமக்கேன் வம்பு?’ என்கிற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவுஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமாக, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் கொண்டு, சில ‘தியரி’ களை உச்சாடனம் செய்துகொண்டு, ‘உஞ்ச விருத்தி’ செய்கிற ஒரு பிராமண பிம்பத்தின் கைதிகள்
ஏன் எழுதுகிறேன்? எப்பொழுது வரை ஆக்கங்கள் தோன்றும்?
- ஏதோ ஒரு கட்டத்தில் நான் திசை திரும்பும்போது, இரண்டு பேர் முகத்தைச் சுளிக்கிறார்கள் என்பதற்காக நான் திசையை மாற்றிக் கொள்ளத் தயாராயில்லை. குறிப்பிட்ட ஒரு குழுவினருக்கும் மட்டத்தினருக்கும் இணக்கமான ஒரு வேஷத்தை அணிந்துகொண்டு, அவர்களுடைய தர்பாரில் ஆஸ்தான எழுத்தாளனாகக் கொலுவிருப்பதில் எனக்குச் சிரத்தையில்லை. எழுத்து எனக்கு ஒரு அழகிய மீட்சி. அதை ஒரு பந்தமாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை.
எழுத்தினால் ஆய பயன்? கதை என்ன கிழிக்கப் போகிறது? ஏன் படிக்கிறீர்கள்?
- நாமிருவருமே பங்குதாரர்களாக உள்ள இந்த அமைப்பைப் பற்றி நான் உங்கள்முன் சமர்ப்பிக்கும் ஒரு நுண்ணிய கருத்துச் சித்திரமாகவே இந்த நாவலை நீங்கள் – அதிக பட்சமாக – கொள்ளவேண்டும்.
காகித மலர்கள்
- இந்தச் சித்திரத்தில் வாழ்வின் இயல்பு பற்றிய ஒரு தவிப்பும் சோகமும் இருக்கிறது; கூடவே வாழ்வின் சாத்தியக்கூறுகள் பற்றிய ஓர் ஆர்வமும் பரபரப்பும் இருக்கிறது. ஒப்பாரி அல்லது வெறும் அங்கதச் சிரிப்பைக் கடந்த நிலையில் – வாழ்வின் பிரும்மாண்டத்தையும் ‘வெல்ல முடியாத தன்மை’ யையும் உணர்ந்த ஒரு பணிவுடனும் தன்னடக்கத்துடனும் – இது எழுதப்பட்டிருக்கிறது.
ஆதவனாகிய நான்
- இலக்கியக் கூட்டங்கள், குழுக்கள், சர்ச்சைகள் இவையெல்லாம் எனக்குச் சலிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன. ஒரு சிறையிலிருந்து மீளும் முயற்சியில் இன்னொரு சிறையில் போய்ச் சிக்கிக் கொண்ட உணர்வு ஏற்படுகிறது. இலக்கியச் சிறையில் சமர்த்தாக ஒடுங்கிக் கொண்டு, சூப்பிரண்டுகளிடமும் வார்டர்களிடமும் நல்ல பெயர் வாங்கிக் கொள்ளும் பொறுமையும் சாதுரியமும் சிலருக்கு இருக்கிறது.
- எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக் கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப் போல் அல்ல.
– திசைகள் இதழ், தீபம் கட்டுரைகள், படைப்பாளிகள் உலகம்