நன்றி: உயிர்மை :: இதழ் 54 – பிப்ரவரி 2008
நடந்து முடிந்த 31 ஆவது சென்னை புத்தகக் காட்சி, மாறுபட்ட மங்கலான சித்திரங்களை பதிப்பாளர்கள், வாசகர்களிடையே உருவாக்கி இருக்கிறது. சென்னை புத்தகக் காட்சி கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எழுத்தியக்கம், பதிப்புத் தொழில் சார்ந்த மாற்றங்களை அளவிடும் ஒரு பெரும் நிகழ்வாக நடந்தேறி வருவதால் அதன் குணாதிசயங்கள் பற்றிய கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்படுகின்றன. சென்னை புத்தகக் காட்சியின் வளர்ச்சி ஏறாளமான பதிப்பகங்கள் தோன்றுவதற்கு உந்துதலாக இருப்பது மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய மையங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.
:::
புத்தகங்களின் மீதான ஆர்வம் ஒரு பண்பாட்டின் விழிப்புணர்ச்சியோடு தொடர்புடையது. இந்த விழிப்புணர்ச்சியே புத்தகங்கள் வாங்குவதை ஒரு அத்யாவசிய தேவையாக மாற்றக்கூடியது. ஒரு சமூகத்தில் அத்தகைய விழிப்புணர்ச்சி பெருகாத வரை புத்தக சந்தையை ஒரு எல்லைக்கு மேல் விரிக்க முடியாது.
:::
கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்ததகக் காட்சி கண்ட வளர்ச்சி பல புதிய முதலீட்டாளர்களையும் பெரிய நிறுவனங்களையும் பதிப்புத் துறை நோக்கி ஈர்த்திருக்கிறது. பதிப்புத் தொழில் வளர்ச்சி அடைவதற்கும் விரிவடைவதற்கும் புதிய முதலீட்டாளர்கள் வருவது மிகவும் அவசியம். தமிழ் எழுத்தாளனின் பிரசுரம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்கனவே பெருமளவு தீர்ந்துவிட்டதுடன் புதிய துறை சார்ந்த நூல்கள் தொடர்ந்து வெளிவருவதற்கான சூழலும் உருவாகி இருக்கிறது.
அதே சமயம் எந்த ஒரு மாற்றமும் தமிழில் நிகழும்போது அதன் எதிர்மறை அம்சங்களே மேலோங்குவது தமிழின் துரதிஷ்டங்களில் ஒன்று.
பதிப்பகத் துறைக்குள் நுழைந்திருக்கும் பெரிய நிறுவனங்கள் சந்தையைக் கைப்பற்றிக் கொள்ளும் ஆவேசத்தில் துறை சார்ந்த நூல்களை வாங்கும் வாசகனின் ஆர்வத்தை சுரண்ட முற்படுகின்றன. மேலோட்டமான தகவல்களுடனும் உவப்பற்ற மொழி நடையுடனும் அவசர அவசரமாக எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் இந்த நூல்கள் வாசகர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதை பரவலாகப் பார்க்க முடிந்தது.
ஒரு நூலை எழுதுவதற்கான குறைந்தபட்ச உழைப்போ மொழி ஆளுமையோ இன்றி எழுதப்படும் இத்தகைய நூல்களை பதிப்பிப்பவர்கள் தமிழில் செயல்படும் வெகுசன இதழியல் கலாச்சாரத்தை பதிப்புத் துறைக்குள்ளும் கொண்டுவந்து வெற்றியடையலாம் என நம்புகின்றனர்.
பத்திரிகை வாசகனும் புத்தக வாசகனும் குணாம்ச ரீதியில் வேறுபட்டவர்கள் என்பதை இந்த புதிய முதலீட்டாளர்கள் அறியாததற்கு காரணம் தமிழின் கலை, கலாச்சாரம், அறிவுத்துறைக்கும் இவர்களுக்கும் இடையிலான இடைவெளியே.
தமிழ் பதிப்புத்துறையை முழுக்க ஒரு சந்தையாக மட்டுமே அணுகுகிறவர்கள் இதற்குள் நீண்ட காலமாக செய்யப்பட்டு வரும் அறிவியக்கத்தையும் பண்பாட்டு இயக்கத்தையும் கடுமையாக அவமதிக்கிறார்கள்.
புத்தக கண்காட்சி ஒரு வர்த்தக மையம் மட்டுமல்ல. அது ஒரு பண்பாட்டு நிகழ்வு. அதில் ஏற்படக்கூடிய தளர்ச்சியினை போக்கி அதை வளர்த்தெடுப்பது காட்சி ஊடகங்களால் அழிக்கப்படும் ஒரு சமூகத்தின் பண்பாடியக்கத்தினை பாதுகாக்கும் ஒரு செயல்பாடு.
குறிப்பு: காலச்சுவடு பிப்ரவரி 2007 இதழிலும் இதே போன்ற ஒத்த கருத்துடைய தலையங்கம் வெளியாகியுள்ளது.
ஆனாலும் ம.பு க்கு குசும்புதான்! இப்ப அவர் வெளியிட்ட 10 நோபிலஸ்ட் புத்தகங்களும் Factory products இல்லையா?
புகைப்பட கொலாஜ் குசும்பை பார்த்துட்டீங்களா 🙂
Thalaiyangam | Kalachuvadu | வளர்ச்சி தரும் பொறுப்புகள்: கடந்த சில ஆண்டுகளாகப் பல ஆக்கபூர்வமான மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் கண்டுவரும் பதிப்புச் சூழலை இத்தகைய அறிவிப்புகள் மேலும் ஊக்கமூட்டி வலுப்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. இவற்றைப் பாராட்டி வரவேற்கும் அதே சமயத்தில் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. தமிழ் பதிப்புலகம் மேலும் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்யும் தகுதியைப் பெற்றிருக்கிறதா என்னும் கேள்வியை முதலில் எழுப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. பதிப்புத் துறை வளர்ச்சியை வருமான விரிவாக்கத்திற்கான வாய்ப்பாக மட்டுமே பார்க்கும் பதிப்பகங்களும் படைப்பாளிகளும் மலிந்த ஒரு சூழலில் இது போன்ற ஆதரவுகள் எத்தகைய மாற்றத்தை எழுப்பும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. விற்கக்கூடிய நூல்கள், சந்தை மதிப்புப் பெற்ற படைப்பாளிகள் ஆகியோருக்கான தேடல் அச்சமூட்டும் வகையில் பெருகிவருவதைப் புத்தகக் காட்சியில் – ஆரோக்கியமான பல அம்சங்களுக்கு நடுவில் – பார்க்க முடிந்தது. வணிகச் சரக்குகளுடன் தீவிர நூல்களையும் வெளியிட்டுவரும் சில பதிப்பகங்கள், படைப்புக்குப் பின் உள்ள உழைப்பு, பதிப்பிப்பதற்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டிய ஆழ்ந்த கவனம் ஆகியவற்றில் நம்பிக்கை உள்ள படைப்பாளிகளையும் காயடிக்கக்கூடிய விதத்தில் செயல்பட்டுவருகின்றன. நோகாமல் நோன்பு கும்பிடும் போக்கு பரவலாகி வருகிறது. சந்தை லாபம் சார்ந்த வேட்கை கூடி வருவதன் விளைவு இது. தீவிரமான ஆய்வு, ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவற்றின் விளைவாய் உருவான நூல்கள் அருகிவருவது இந்த வேட்கையின் விளைவாகவே தோன்றுகிறது.
உயிர்மை சாருவின் பிராபல்யத்தை வைத்து காசு பண்ண ஒரே நேரத்தில் 10 புத்தகங்களை வெளியிடுகிறது.வெளியீட்டு விழாவிற்கு மதன்,அமீர் என்று பிரபலங்களை அழைக்கிறார்கள்.சாருவின்
80 பக்க நூலுக்கு 40 ரூபாய்.
அதில் உள்ளதெல்லாம்
ஏற்கனவே அவரது தளத்தில்
வெளியானவை. அவ்வாறே ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்
நூல்களையும் வெளியிடுகிறார்கள்.
புத்தகங்களின் விலைகளும் மலைக்க
வைக்கின்றன. இன்னொருபுறம் தமிழச்சியின் நேர்முகங்களையும் வெளியிடுகிறார்கள். கனிமொழி,
திருச்சி சிவா எம்.பி. கலந்து கொள்கிறார்கள்.அதில் ஒப்புக்கு சப்பாணிகளாக
தமிழ்ச்செல்வன்,எஸ்.ராமகிருஷ்ணன்
கலந்து கொள்கிறார்கள்.ஐந்து பேரில்
மூவர் திமுகவினர். நாங்கள் என்ன எழுதினாலும், இறுதியில் புத்தக வியாபாரம்தான் செய்கிறோம், அதற்காக என்னென்ன
தேவையோ அதையெல்லாம் செய்கிறோம் என்பதை நேர்மையாக இப்போதாவது மனுஷ்யபுத்திரன் ஒப்புக்கொள்வாரா?
இவர்களை விட விநியோகஸ்தர்கள்
கேட்டுக் கொண்டதால் கவர்ச்சி நடனப்
பாடல் காட்சி, இரண்டு சண்டைக் காட்சிகளை சேர்த்தோம், நாங்கள்
செய்வது வியாபாரம், கலைச்சேவை
இல்லை என்று சொல்லிவிடும்
கோலிவுட்காரார்கள் நேர்மையானவர்கள்.
—-நாங்கள் செய்வது வியாபாரம், கலைச்சேவை இல்லை என்று சொல்லிவிடும் கோலிவுட்காரார்கள்—–
அது! 🙂