ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்


ஆனந்த விகடனில் வெளியாகிய மருதனின் அமெரிக்கப் பள்ளிகள் காலி வாசிக்க கிடைத்தது.


முதலில் மருதன் பாணியில் rhetoric மட்டும்.

காட்ஃபாதர் நாயகன் ஆனது போல் சிலர், பல ஆங்கிலப் படத்தில் இருந்து சிற்சில இடங்களைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றியமைத்து திரையாக்குவார். எஸ் ஜே சூர்யா போல் சிலர் அப்படியே தமிழுக்கு இடப்பெயர்வு செய்வார். இன்னும் சிலர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை போல் அதே பாட்டை, அப்படியே வேறு பாட்டாக்குவார்.

மருதன் ஹாரிஸ் ஜெயராஜ் ரகம்.

 • எந்த மாணவர் எதற்காக நீக்கப்பட்டார் என்னும் முன்கதை இருக்காது.
 • ஆர்னே அல்ல; ஆர்நி என்னும் சின்ன விசயம் கற்றுக் கொள்ளும் உழைப்பு கூட இருக்காது.
 • ‘ஒபாமாவின் தீவிர ரசிகர்களேகூட இந்த விஷயத்தில் சங்கடத்துடன் நெளிந்துகொண்டிருக்கிறார்கள்’  என்பார். எவர், எங்கே, எப்போது, என்ன சொன்னார் என்பதெல்லாம் மூடுமந்திரம்.
 • ஆனால், அமெரிக்காவில் கறுப்பர்களை விட வெள்ளையர்களின் மக்கள்தொகை அதிகம் போன்ற தகவற்பிழை நிரப்பியிருப்பார்.

இந்த மாதிரிதான் எல்.டி.டி.ஈ., லியனார்டோ டா வின்ச்சி என்று புத்தகம் எழுதி குவிக்கிறாரா என்னும் அச்சமும் எழுகிறது.


இப்பொழுது மருதனின் விகடன் கட்டுரையில் இல்லாதவை இங்கு இடம் பெறும் இடம். ஆதாரம், அலசல், பின்னணி, விஷயம்.

அமெரிக்கக் கல்வித் திட்டத்தை அதனுடன் சரிசமமான OECD, மேற்கத்திய சூழலுடன் ஒப்பிட வேண்டும். அதை மருதன் செய்யவில்லை.

கடந்த எட்டாண்டில் பள்ளி மாணவர் தேர்ச்சி, பெரிய வகுப்புகளில் எண்ணிக்கை, மேற்படிப்பு நிலவரம், குடும்பச் சூழல் என்று மதிப்பிடலாம். மற்ற வளர்ந்த நாடுகளில் இந்த குறியீட்டெண் என்ன, எவ்வாறு வளர்கிறது, ஜார்ஜ் புஷ்ஷின் No Child Left Behind என்ன செய்ய நினைத்தது என்றும் ஆராயலாம்.

அதெல்லாம் மருதன் கட்டுரையில் கிடைக்கவில்லை.

obama-interest-nat-webeducationபராக் ஒபாமாவின் திட்டம் என்ன, ஏன் அவர் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார், எவ்வாறு ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுகிறார், படிப்பு கொள்கை எங்ஙனம் செயலாக்கம் பெறும் என்றெல்லாம் சுட்டலாம்.

மருதனின் பத்தியில் விஷயம் இல்லை.

அமெரிக்க கல்வியின் இன்றைய நிலை :

வினாத்தாளா, Street smart சாதுர்யமா?

அமெரிக்கா கேள்விஞானத்திற்கு பெருமதிப்பு தருகிறது. விஷயஞானத்திற்கு அல்ல.

அதாவது, இந்தியாவில் (x+y)² என்ன என்பது மிக முக்கியம். இங்கே அது ‘ஏன் முக்கியம்’ என்று தெரிந்து வைத்தால் போதுமானது.

எப்படி விடை வருகிறது, (x+y)² ≡ 2(x+y) என்றெல்லாம் வித்தியாசமாக யோசித்து கேள்வி கேட்க வேண்டும். அதுதான் முக்கியம்.

இந்த மாதிரி வினாக்காரரின் விடைத்தாளை எவ்வாறு திருத்துவது?

குதித்தது ‘தேர்வு முறை‘. அமெரிக்காவில் பலருக்கு ‘தேர்வு எழுது, அதில் 40 வாங்கினால் பி க்ரேடு’ என்பது அலர்ஜி தந்தது. வினா – விடை வேண்டாம்; ‘இவ நல்லா படிக்கிறா!’ என்று சொல்லி அடுத்த வகுப்பிற்கு தூக்கிப் போடலாம் என்னும் சமூகம்.

இதை மாற்ற முயற்சி நடந்து வருகிறது.

ஆசிரியர் ஊக்கத்தொகை

ஒழுங்காக வேலை செய்பவருக்கு ஊக்கத் தொகையா? அல்லது வேலைக்கு எட்டு மணிக்கு ஆஜராகிவிட்டு ஐந்து மணி வரை இருக்கை தேய்ப்பவருக்கும் ஊக்கத் தொகையா?

தொழிற்சங்கவாதியிடம் கேட்டால் ‘வேலைக்கு வராவிட்டால் கூட போனஸ் வேண்டும் என்று போராடு தோழா’ என்பார்.

திறமையாக பாடங்கற்பிப்பவருக்கு சம்பளம் அதிகம் தர வேண்டும். சூட்டிகையான மாணவரையும் தூங்கவைக்குமாறு தாலாட்டும் ஆசிரியருக்கு சம்பளம் குறைக்க வேண்டும்.

கையில் காசு; வாயில் படிப்பு.

கல்வி: யார் பொறுப்பு?

‘உணவகத்த்கின் உரிமை மாறியுள்ளது’ என்னும் பலகையை பார்த்திருப்போம். பழைய சொந்தக்காரர் ஒழுங்காக நடத்தாவிட்டால் புதியதாக இன்னொருவர் பொறுப்பேற்று அதை நல்லபடியாக்குவது சகஜம்.

கல்விக்கூடத்திலும் அதை நடைமுறை ஆக்கலாம்.

மோசமான பள்ளி என்று பெயர் எவ்வாறு கிடைக்கிறது? மாணவரின் குடும்பச்சூழல் காரணமாக பள்ளிக்கு ஒழுங்காக வர இயலவில்லை; தரமாக சொல்லித் தராத வாத்தியார்; உபகரணம் உடைந்த சோதனைச்சாவடி; பராமரிப்பு இல்லாத பள்ளிக்கூடம்.

இப்படி எதுவாக இருந்தாலும், ‘தண்டம்’ என்று பெயரெடுத்ததை மூடிவிட்டு, அதற்கு பதில் இன்னொரு பள்ளி புத்தம்புதிதாக புதிய ரத்தம் கொண்டு துவங்குவது; அதுவரை, அங்கு வாசித்தவர்களை, தாற்காலிகமாக இன்னொரு சிறப்பான பள்ளியில் கோர்த்து, அந்த அலைவரிசையில் பயணிக்க வைப்பது.

புதிய பள்ளி கட்டுமானம்:

இந்தப் புதிய பள்ளிக்கான பணத்திற்கு என்ன செய்வது?

‘இவ்வளவுதான் பணம். இதைக் கொண்டு பள்ளி துவங்க முடியுமா?’ என்றால் அரசிடம் இருந்து இயலாமை. ஆனால், தனியார் நிறுவனமோ — துடிப்புடன், கொடுத்த பணத்தை வைத்து, வேண்டிய தரத்தில், சேர்க்கவேண்டிய எண்ணிக்கையையும் நிரப்பி பள்ளி துவங்க ரெடி!

பெற்றோரும், ‘என் குழந்தைக்கு செலவிடும் பணத்தை என்னிடமே கொடுத்துவிடு! அந்தப் பணத்தை கொண்டு நானே நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.’ என்கிறார்.

இந்த நிலையில் கையாலாகாத அரசாங்கமே பள்ளியை நிர்வகிக்க வேண்டுமா? அல்லது அதே நிதியில் அதே அளவு மாணவர்களை இன்னும் சிறப்பாக தயார் செய்யும் தனியாரிடம் தர வேண்டுமா?

ஒவ்வொரு கு(ட்)டி மக்களுக்கும் செலவழிக்கும் கல்வித்தொகையை அவரிடமே தந்து நன்றாக படித்து முன்னேரிக் கொள்ளுமாறு விட்டுவிட வேண்டுமா? அல்லது தானே வரிந்து கட்டி சீர்திருத்த வேண்டுமா?

எல்லோரும் ஆசிரியர் ஆகலாம்:

ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் காலத்தில், வாத்தியாராக பட்டம் பெற ஏழு கடல் கடந்து, செவ்வாய்க்கு சென்று கல் எடுத்து வந்தால்தான் ஆச்சு என்பது சரிப்படுமா?

அறிவியல் போதிக்க அறிவியலில் முதுகலை படித்திருந்தால் மட்டும் போதுமே? வீட்டில் இரண்டு குழந்தையை மேய்ப்பது போல் இருபது குழந்தை நிரம்பிய வகுப்பைத் தந்து பார்ப்போம். போகப் போக பழகிக் கொள்வார் என்பது ஒரு வாதம்.

இப்படி சேர்க்கப்பட்டு, தலைமை ஆசிரியர் வரை உயர்ந்து நிற்பவர் ஏராளம். குறிப்பாக புதிய தலைமுறை சப்ஜெக்ட்களான கணினி, நுண்ணுயிரியல் போன்றவற்றில் சக்கைபோடு போடுகிறது.

இவ்வாறு புது இரத்தம் வருவதை, ஆசிரியர் யூனியன் விரும்பவில்லை. பல்லாண்டு கால வழக்குமுறை மாற்றப்படுவதை பயத்துடன் நிராகரித்து, பொது அறிவு வினாத்தாள் முதல் உளவியல் பயிற்சி வரை பல்வேறு தடைக்கல்லை வைத்து புதிய ஆசிரியர் சேர்ப்புக்கு முட்டுக்கட்டை இட்டிருக்கிறது.

இன்னும் இது போல் நிறைய உபதலைப்பில் விலாவாரியாக ஆயலாம். மருதனின் விகடன் அலசலை மட்டும் படித்து கிணற்றுத்தவளையாக இல்லாமல் இருக்க; நுனிப்புல் மேய நமக்கு இது போதும்.

ஆர்நியைக் குறித்து

 • ஆர்நியின் குழந்தைகள் அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிக்கு அனுப்பும் செல்வம் இருந்தாலும், ஒய்யாரமாக சென்றுவரவில்லை.
 • 2001ல் டங்கன் பதவியேற்ற பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளதாக ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
 • எல்லாத்தரப்பு மாணவரிடத்திலும், ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாதவரிடத்தும், உடல் ஊனமுற்றோரிடத்திலும் எல்லாப் பாடத்திலும் அளவிடக்கூடிய வளர்ச்சிக் காணக்கிடைக்கிறது.
 • நியு யார்க், லாஸ் ஏஞ்சலீசுக்கு அடுத்த படியாக மூன்றாவது மிகப் பெரிய, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்களை கொண்ட சிகாகோ கல்விக்கூட பொறுப்பை நிர்வகித்த அனுபவம் கொண்டவர்.

மேலும் தகவல்: Snap Judgement: US Education System; Secretary of State


கடைசியாக மருதன் கட்டுரைக்கு பதில்.

தன்னை எதற்காக பள்ளியில் இருந்து நீக்கினார்கள் என்று அந்த மாணவருக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.

கதையுடன் கட்டுரையை ஆரம்பிப்பது நல்ல உத்தி. நானும் இப்படித்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், நான் ஆதாரம் தருவேன். அவர் இணையத்தில் இடும் கட்டுரையிலும் சாய்ஸில் விட்டு விடுவார்.

கெமரான் பள்ளி பாலகர் பள்ளி. ஆனால், பச்சிளம் பாலகரும் ஏகே-47 சுடக் கற்றுக் கொண்டுதான் ஆன்னா, ஆவன்னா கற்றுக் கொள்வதற்கு வருவார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கே மழலைச் செல்வங்களின் வாசிப்பு சக்தி உயர்ந்திருக்கிறது. கணித மேதையாகாத குறை.

இந்தப் பள்ளி சிகாகோவில் உள்ளது.

என்னை நம்பவேண்டாம். 2001ல் இருந்து பள்ளிச்சிறுவர்கள் பரீட்சை முடிவில் வாங்கிய மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.

ஒழுங்கீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு பலர் சிறைச்சாலைகளில் (குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வீட்டிற்கே சென்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரில் ஆரம்பித்து விளையும் பயிரை முளையிலேயே வளைத்துப் போடுவதற்கு ஒபாமா தரும் பத்து பில்லியன் வரை தொட்டு செல்லவேண்டியதை,ரெண்டுகண்ணன் வரான்; குழந்தையப் பிடிச்சுண்டு போயிடுவான்’ என்னும் ரீதியில் சிம்ப்ளிஃபை செய்திருக்கிறார் மருதன்.

ஜார்ஜ் புஷ்ஷின் மற்றுமொரு சொதப்பல் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டது அமெரிக்கா

ஜார்ஜ் புஷ்ஷின் நோ சைல்ட் லெஃப்ட் பிஹன்ட், பதின்ம வகுப்புகளில் மாணவரைத் தக்கவைப்பதிலும், விருப்பப் பாடத்தை தேர்வு செய்வதிலும், கல்லூரிக்கு அழைத்துச் செல்வதிலும் பெருத்த வெற்றி என்பதை அவரின் எதிரியே ஒத்துக் கொள்கிறார்.

இளவயது நண்பர் எனும் ஒரே காரணத்துக்காக ஒரு முக்கியப் பதவியை அவரிடம் கொடுப்பது நியாயமா? பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவு அல்லவா இது?

சினிமாவின் அடுக்கு மொழி வசனம் கெட்டது போங்கோ 🙂

பள்ளிக்கூடங்களில் ராணுவக் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும்.

ஒரு கையில் நூறு பேருக்குத் தேவையான அபின் (விற்பனைக்குத்தான்; ஒரு பிஸினஸ்மேன் உருவாகிறார்); இன்னொரு கையில் சேவல்தோகையாக (காக்-டெயில்) வோட்கா கலந்த தண்ணீர் (இது விற்பனைக்காக அல்ல; சுய பயன்பாட்டிற்கு); பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் உலா வரும் உள்ளூர் கஸப்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் மருதன் ஆலோசனை தரவேண்டுகிறேன்.

பச்சை, மஞ்சள், சிகப்பு என்று கிராஃப் போட்டு. குறிப்பிட்ட வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களது மூன்று மாத பெர்ஃபார்மன்ஸ் என்ன, எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு அனைத்தையும் கலரில் குறிக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பள்ளியின் தரத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்

இதில் என்ன தவறோ? ரிப்போர் கார்டில் போலி கையெழுத்து போட்டால்தானே பிரச்சினை!

ரிப்போர் கார்டே ஆகாதா? பள்ளியில் தூங்கினாலும், பள்ளிக்கே வராமல் இருந்தாலும், அடுத்த அடுத்த வகுப்பிற்கு பிரமோசன் உண்டா? மருதன் இன்னும் குழந்தையா; அதான் இவ்வளவு ஆசை!

பொதுப் பள்ளிகள் மீது ஏன் அரசாங்கத்துக்கும், குறிப்பாக கல்வி அமைச்சகத்துக்கும் இத்தனை காழ்ப்புணர்ச்சி? ஏன் இத்தனை வெறுப்பு? காரணம், பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர்.

என்னது! அமெரிக்காவில் வெள்ளை இனம் மைனாரிட்டியா! சொல்லவே இல்லியே!!

26 responses to “ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்

 1. இந்தியர்களுக்கு புரிய வேண்டாம் என நினைத்து எழுதிய பதிவு போலிருக்கிறது 🙂

  பி.கு: தபால் முகவரியை கொடுத்தால் பிழை, செயல்பாட்டில் உள்ள மின்மடல் முகவரியைத் தர கேட்கிறது :))

 2. மணியன், 🙂
  மருதனின் விகடன் கட்டுரையின் போதாமையையும் மொழி ஜாலக்கையும் சுட்டுவது இப்பதிவின் முக்கிய குறிக்கோள்.

  அமெரிக்காவில் கல்வித்தரம் எவ்வாறு இருந்தது, ஆர்னி டங்கனின் செயல்பாடு என்ன போன்றவற்றை விவரித்து எழுதலாம்.

  கல்வித்துறையில் இருப்பவர் எவராவது எழுதினால் பொருத்தமாக இருக்கும். நுகர்வோன் என்னுமளவில் என் அனுபவம் நின்று விடுகிறது.

 3. அந்த பதிவுல நான் காரசாரமா (அப்ப எதுவும் பின்னூட்டம் இல்லை) பின்னூட்டங்கள் இட்டிருந்தேன். முதல் பின். வெளியிடப்படவில்லை, விரைவில உங்க பின்னூட்டங்கள் வெளியிடப்பட்டது இமெயிலில் வந்தது. அதைத் தொடர்ந்து என் இரண்டாவதும் இட்டேன். இன்னமும் இவை வெளியிடப்படவில்லை

  1. “நான் அமெரிக்காவில், அரசாங்கப் பொதுப்பள்ளியில் படிக்கும் குழந்தையின் தாய் மட்டுமல்ல, பொதுப் பள்ளியில் தன்னார்வத் தொண்டும் செய்பவள்; என்னைப் போன்ற பல தாய்களை அறிந்தவள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீட்டுக்குப் போயிட்டாங்களா? யார்னால? //கலவரமடைந்த பல மாணவர்கள் படிப்பு முடிவதற்கு முன்பே பள்ளிகளில் இருந்தும், கல்லூரிகளில் இருந்தும் நின்றுவிடுகிறார்கள்.// அச்சச்சோ!! உங்கள் கட்டுரையை விகடன்ல படிக்கலை; ஆனால், மற்ற விகடன் “கட்டு”ரைகள் படிக்கும் போது ஏன் இப்படியெல்லாம் எழுதறாங்கன்னு நினைத்ததுண்டு.

  பயங்கரமா இருக்கே படிக்கறதுக்கே. இதுக்கெல்லாம் தரவுகள் இருக்கா? பொதுவா பதிவர்கள் ஒரே ஆதார‌ செய்தியை ரெண்டு சுட்டிகளிலிருந்தாவது தரவுன்னு காட்டறதுண்டு. லேபிள் (எ.கா. புனைவு) மாத்துங்க, இல்லாட்டி தரவுகள் கொடுங்க.”

  2. “பாஸ்டன் பாலா சார் கொடுக்கும் உள்குத்து புரியலையா? இல்லை, நான் ரொம்ப வெளிப்படையா சொல்லிட்டேனா? ஏன் என் பின்னூட்டம் வெளியிடப்படவில்லை? (அதை சரியாக இட்டிருப்பதால் தான், எனக்கு இமெயிலில் நீங்கள் வெளியிட்ட பின்னூட்டங்கள் – followup – வந்தன).”

  அப்புறம் கடுப்பில பதிவே எழுதிடலாம்னு நினைச்சேன். நீங்க எழுதிட்டீங்க, விரிவாக!! நன்றி.

  //அமெரிக்காவில் கல்வித்தரம்…ஆர்னி டங்கனின் செயல்பாடு// கரெக்டு, எக்கச்சக்கமா இணையத்தில இருக்கு. அதையெல்லாம் தொகுத்துக் கொடுத்தாக் கூட பரவாயில்லை!

 4. அவர் பதிவில் என் மறுமொழி வெளியிட்டதே ஆச்சரியம்தான்.

  சென்ற முறை ஃபிடல் காஸ்ட்ரோ குறித்து சொன்ன காமென்ட் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

  எல்லாம் தமிழ் ஊடக கலாச்சாரம் என்று விட்டுவிட வேண்டியதுதான் 😦

 5. அமெரிக்காவில் இயங்கும் இரு துருவத்திற்கும் இடைப்பட்ட சக்தியாக ஆர்நி டங்கன் இருக்கிறார்.

  ஒரு புறம் புஷ் + வலது சாரி + கேபிடலிசம்.

  இன்னொரு துருவம்: ஆசிரியர் சங்கம் + கடந்த பல்லாண்டாக துருப்பிடித்த கல்விமுறை

  மாற்றம் வேண்டும். எப்படிக் கொண்டு வருவது?

  அதே ஆசிரியரைக் கொண்டு, அதே உருப்படாத பள்ளிக்கூடத்தில், அதே பழைய பஞ்சாங்கத்தைக் கொன்டு செயல்பட்டால் கொன்டு வர இயலுமா?

  அசகாய கடவுள் நம்பிக்கையோ, அதிசயம் நிகழும் என்னும் கண்மூடித்தனமோ இருந்தால் மட்டுமே சமீப காலமாக சீரழித்து வரும் யுத்தியை மீண்டும் மீண்டும் அப்படியே பயன்படுத்துவோம்.

  டங்கன் இதை தூசு தட்டுகிறார். அதற்காக மொத்தமாக தனியார் மயம் என்று மிரட்டவில்லை.

  வெறுமனே கேரட் மட்டும் தருவதற்கு பதில், கொஞ்சம் (ஸ்டிக்) அடி உதையும் கிடைக்கும் என்று உபாத்தியாயர்களை பயமுறுத்தி வைக்கிறார்.

  அதற்குள் தன்னல தொழிற்சங்க பிரதிநிதி ‘தன் வேலை பறிபோயிடுமே’ என்னும் பயத்தில் அலற ஆரம்பிக்கிறார்கள்.

  அதற்கு பதில் ஆசிரியத் தொழிலை உருப்படியாக கவனித்தாலே போதுமானது.

  ஊக்கத் தொகையும் கிடைக்கும். மாணவ சமுதாயமும் உருப்படும்.

  ஆனால், இது சமூகப் பிரச்சினையும் கூட. வெறும் கல்விமுறையை மாற்றினால் போதாது.

  இதெல்லாம் சுட்டாமல், கோடிட்டு கூட காட்டாமல் கட்டுரை எழுதுவது வருந்த வைக்கிறது.

 6. செய்திகளை சேகரிப்பது ஒரு வகை என்றால், வெறுமே ‘தரவிறக்கி’ சொந்த சரக்கு (நேரிலேயே பார்த்தது போல) சேர்த்து எழுதுவது இந்த வகை. காதில் விழுந்த சினிமா/அரசியல் துணுக்குகளை நேரிலேயே பார்த்தது போல எழுதுவது தமிழ் மக்களுக்கு பிடிக்கிறது என்பதனால் (ஜூவி, ரிப்போர்டர்) இப்பொழுது புத்தகங்களாக குவிக்கிறார்கள். எந்த வித ஆய்வும் இல்லாமல் வெறும் இணையத்தை மட்டும் நம்பி வாரி இறைக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.

  கொஞ்ச நாட்கள் முன்னர் டெட்ராயிடில் 10000 டாலருக்கு வீடு கிடைக்கிறது என்று ஜூவியில் போட்டிருந்தார்கள். எந்தவித ஆய்வுமில்லாமல் ‘யாரோ’ சொன்னார்கள் என்ற ரேஞ்சில்தான் இந்த கட்டுரைகள் பெரும்பாலும் இருக்கும்.

  இணையத்தின் பிரவாகத்தில் இம்மாதிரி புத்தகங்கள் எல்லாம் சரித்திர சான்றாகிவிடும் வாய்ப்புகள் இல்லை என்று ஒரு ஆறுதல்தான். 🙂

 7. இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், தமிழில் படிக்க வேண்டிய 100 புத்தகங்கள் பட்டியல் ஒன்று சமீபத்தில் பிரபல எழுத்தாளர் வெளியிட்டிருந்தார். திஜா, லசரா, எஸ்பொ போன்றவர்களின் புத்தகங்களோடு இம்மாதிரியான வாழைப்பழத்தோல் புத்தகங்கள் பத்து இருந்தன அதில். கொடுமை சாமி 😦

 8. பாலா
  அமெரிக்க பள்ளிகள் பற்றிய மருதனின் கட்டுரைக்கு, பள்ளி நிதி ஒதுக்கீட்டில் முடிவெடுப்பவள் என்ற நிலையிலும் பள்ளிகளின் பாடதிட்டங்களில் வடிவெடுப்பதில் பங்கேற்பவள் என்ற முறையிலும், பள்ளி மாணவர்கலுக்கு உடல் நல, மன நல பாடங்களை எடுப்பவர்களை மேர்பார்வையிடுபவள் என்ற முறையிலும், பள்ளிக்காக செலுத்தப்படும் வரி (school district tax) எப்படி செயல்படுகிறது என்பதுபற்றியும் கூடிய சீக்கிரம் பின்னூட்டுகிறேன். நேற்றும் இண்றும் மாநில பட்ஜெட் கூட்டங்களில் துண்டுவிழுவதை தடுக்க விடாமல் கூடி பேசிக்கொணே இருப்பதால் நேரமில்லை.

 9. அமெரிக்க பள்ளிகளில் இரண்டே இனம் என்றால், பல பள்ளிகளில் ஸ்பானிஷ் இரண்டாம் மொழியாக ஏன் இருக்கிறது? எடிசனில் ஹிந்தியும் சீனமொழியும் கூட படிக்க முடிவதும், தீபாவளிக்கு விடுமுறை என்பது எதற்காக?

 10. //பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர்.//

  காமெடிக்கு அளவே இல்லையா?

  வெள்ளைக்கார பொம்பிளை என்றாலே ஜட்டி பிராவுடன்தான் 24 மணிநேரமும் இருப்பார்கள் என்ற விடலைப்பருவ எண்ணங்கள்தான் இதில் தெரிகிறது.

 11. கெக்கேபிக்குணி,

  —-பதிவே எழுதிடலாம்னு நினைச்சேன்.—

  அவசியம் எழுதுங்க!

  தன்னார்வலர் என்ற முறையில் சில விஷயங்கள் தெரிந்திருக்கும். என்னுடைய இந்த இடுகை போல் இல்லாமல் கோர்வையாகவும் அமையும் 🙂

 12. ஸ்ரீதர்,

  பாரா குறிப்பிட்ட பட்டியல் குறித்து அங்கே எழுதியது: 99. சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும் – முகில்

  #99 – டூ மச். படித்துப் பார்த்தேன். வண்ணத்திரை தொகுப்பு மாதிரி இருந்தது. சுவாரசியம் நிறைய; படித்து முடித்தால் எதுவுமே மனதில் நிற்காது. ‘வில்லு’ விஜய் போல் எஃபக்ட்.

  ——-

  இதற்கு அவர் சென்ற முறை போட்ட பைபிள், குரான் உள்ளடக்கிய பட்டியல் மச் பெட்டர்.

  ——

  ——துணுக்குகளை நேரிலேயே பார்த்தது போல எழுதுவது தமிழ் மக்களுக்கு பிடிக்கிறது என்பதனால் (ஜூவி, ரிப்போர்டர்) இப்பொழுது புத்தகங்களாக குவிக்கிறார்கள். எந்த வித ஆய்வும் இல்லாமல் வெறும் இணையத்தை மட்டும் நம்பி வாரி இறைக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.——

  இது தொடர்பாக உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் எழுதியதைப் படித்தது உண்டா? சென்ற ஆண்டில் புத்தகக் கண்காட்சி முடிந்தவுடன் பத்திரிகை தலையங்கமாக இடம் பெற்றிருந்தது.

  இணையத்தில் இருக்கலாம். தேடிப் பார்க்கிறேன். கிடைக்காவிடின் தட்டச்சு செய்து இடுகிறேன்.

 13. பத்மா,

  —-பள்ளிக்காக செலுத்தப்படும் வரி (school district tax) எப்படி செயல்படுகிறது —-

  விரிவான பதிவாக இல்லாவிட்டாலும் அவசியம் எழுதித் தரவும். அமெரிக்க அதிபர் பதிவில் சேமிக்கலாம்!

  ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன்.

 14. கல்வெட்டு,

  தென் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், சென்னையை மட்டும் பெரும்பாலும் சுற்றிய என்னை மற்ற இடங்களும் தமிழகம்தான் என்று நினைவுறுத்துவார்கள்.

  அந்த மாதிரி மத்தியில் உள்ள அமெரிக்கா (சாரா பேலின் பாஷையில் உண்மையான அமெரிக்கா)வை மருதனுக்கு நினைவுறுத்த வேண்டும்.

 15. இப்ப தான் வாசித்தேன். ஒரே டகால்டி வேலையா இருக்கே, இவங்க பண்றது ???? 😦

  எ.கொ.இ.ச

 16. அன்புடன் பாலா __/\__

 17. மொத்த விவகாரமும் குழப்பமாக இருந்தாலும் என் கண்ணுக்குப் படுவது டவுன்லோடு இலக்கியத்தின் ஓர் அம்சம்தான். இப்படி வரிசையாக நிறைய கட்டுரைகள் எழுதினால் கடைசியில் 1000 பக்கத்துக்கு ‘ஓ அமெரிக்கா!’ ஒரு தொகுப்பு போட்டுவிடலாம்.

 18. மருதன்களுக்கு அந்த வாரக்
  கட்டுரைக்கான சரக்கு 5%, இருந்தால் போதும்.அதனால்தான் ஒரு செய்தி,இரண்டு செய்திகளை அரைகுரையாக படித்துவிட்டு
  அலசி,உடனடியாக எழுதிவிடுகிறார்கள்.
  இந்த ‘டவுன்லோடு’ எழுத்துக்களெல்லாம் புத்தகமாக
  வேறு வெளியாகின்றன.அதற்கெல்லாம்
  ஒரு ‘எடிட்டர்’ வேறு. கொடுமையோ கொடுமை :(.

 19. பிங்குபாக்: அமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த் « US President 08

 20. சாத்தான்,
  நல்ல ஐடியா 😛
  செயலாக்குகிறேன் 😀

 21. ஐ எம் நாட் காட்,
  🙂
  உண்மை!

 22. naan natathum unnatham naveena ilakkia ithazil kalvi kurithu ezhutha mudiuma?

  • I will try.

   உன்னதத்தின் முந்தைய இதழ்கள் சிலதை வாசித்த இன்பத்தை இங்கே பகிர்ந்துள்ளேன். உன்னதம் « Snap Judgment

   அழைப்பிற்கு நன்றிகள் பல. ஆனால், உன்னதம் பத்திரிகையின் தரத்திற்கு ஏற்றவாறு எழுத நேரம் அமைய வேண்டும்.

 23. பாஸ்டன் பாலா, இந்த மருதன் இப்படிதான். சென்னையில் அமர்ந்து கொண்டு வெளிநாடுகளை பற்றி பீலா விடுவார். ஜூனியர் விகடனில் வருங்கால ஆசிரியர் பதவிக்கு மிக தகுதியானவர் 🙂

  இதேபோல் சன் டிவி அரட்டை அரங்கத்தில் ஒருவர் அமெரிக்காவில் 90% பொருளாதரம் படுத்துவிட்டது என கத்த மக்கள் ஆராவாரம் செய்தனர்.

  இன்னொரு கும்பல் இவர்கள் வாழ்வது இங்கே. குழந்தைகளுக்கு வாய்பாடு சொல்லிதருவதில்லை அதனால் அமெரிக்க பள்ளிகள் மோசம் என்று இந்தியாவிலிருந்து சிபிஎஸ்இ புத்தகங்களை வரவழைத்து குழந்தைகளை கட்டாயபடுத்தி படிக்கவைக்கிறார்கள் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.