காலை ஆறு மணி. எழுந்திருக்க வேண்டும். குளித்து, காபி போட்டு, பாஸ்டன் க்ளோப் புரட்டலாம்.
அலறிய கடிகாரத்தை பத்து நிமிடம் சயனித்திருக்க அனுமதி கோரி விட்டு, புரண்டமாதிரி கனவுகளைத் தொடரும் அதிகாலை. பத்து நிமிடம் கழிந்த பிறகும் அலாரம் அடிக்கவில்லை.
தூக்கக் கலக்கத்தில் அணைத்திருப்பேனோ? எழுந்து பார்த்தால் கடிகாரத்தில் பளிச்சிடும் எல்.இ.டிக்கள் கருப்பாக இருந்தது. நேற்றைய Patron பலமாக அருந்திய கலக்கம் என்று கண்ணை நம்பாமல், பாத்ரூம் நடக்கும் பாதம், விளக்கை அனிச்சையாக தட்டுகிறது.
எரியவில்லை.
மீண்டும் அணைத்து, போட்டு, அணைத்து மரோ சரித்ரா பார்க்கிறேன். விளக்கு எரியமாட்டேன் என்கிறது.
ஊழல் செய்து மாட்டிக் கொண்ட இல்லினாய்ஸ் கவர்னர் போல் மாஸசூஸட்சிலும் ஏதாவது மந்திரி மாட்டிக் கொண்டு, ஆற்காட்டார் அமைச்சர் ஆகி விட்டாரா?
பாஸ்டனிலும் கரண்ட் கட்.
நம்பமுடியவில்லை. எனினும், பத்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கிறது. பத்து நிமிடத்தில் வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் அரையிருட்டில் குறி பார்த்து மூச்சா போய், பிரஷ்ஷில் பேஸ்டை திணித்து, வென்னீரை ஆதுரமாய் சிக்கனமாய் உபயோகித்து, மனைவியை எழுப்பி, விஷயம் சொல்கிறேன்.
‘மின்சாரம் திரும்ப வந்த பிறகு எழுப்பு!’ என்று நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு, இழுத்துப் போர்த்திக் கொண்டுவிட்டாள்.
நம்பிக்கையை ஊட்டி ஊட்டி, எங்களை சோம்பேறியாக்கி, அமெரிக்காவையே அலட்சியப்பட வைத்திருக்கிறார்கள். எல்லா நம்பிக்கையும் இன்றைய நாளில் தவிடு பொடி ஆகியுள்ளது.
நான்காவது நாளாக இன்றும் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுபவர்களின் நிலை புலம்பி மாளாது.
காபி போடும் எந்திரம் மின்சாரத்திலானது. பாலை சுட வைக்கலாம் என்றால் அடுப்பும் மின்சாரம். காபிதான் இல்லை, வெளியே இருக்கும் அஞ்சு டிகிரி ஃபாரென்ஹெய்ட்டில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் சூட்டை ஏற்றும் உபகரணம்; கார் வைத்திருக்கும் கேரேஜ்; பால் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் ஃப்ரிட்ஜ்; சமையல் செய்துபோடும் அடுப்பு; கிணற்றில் இருந்து தண்ணீர் கொடுக்கும் குழாய்…
எல்லாம் மின்சாரம் என்னும் மிடாஸ்.
மிடாஸ் தொட்டது எல்லாம் தங்கம். மகளைத் தொட்டான். அவளும் உலோகமாகி உயிர் விட்டாள். பேராசைக் குழப்பம்.
அமெரிக்காவில் தொட்டதிற்கு எல்லாம் கரண்ட். குளிர்ப்பிரதேசத்தில் இருந்து தப்பித்து அடைக்காக்கும் வீடு கதகதப்பாக இருக்க கரண்ட். கேஸ் அடுப்பிற்கு பதில் கரண்ட் அடுப்பு. காரை garageக்குள் வைத்து இயக்கும் கதவு கரண்ட். எப்படி வெளியே போவோம்?
துப்புகளையும் ஆலோசனைகளையும் தர இருக்கவே இருக்கிறதே இணையமும் கூகிளும்? அதற்கும் மின்சாரம் தேவைப்படும் கணினி.
தொலைபேசியில் கூகிள் வரவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். மின்சாரம் இல்லாவிட்டால்தான் நினைவுக்கு வருகிறார்.
‘செல்பேசி பேட்டரி உயிரை விடுவேன்; என்னை சார்ஜ் செய்’ என மின்சாரத்தை வேண்டி நின்றது.
ஒரு மணி நேரம் சென்றது. அண்டை வீட்டுக்காரர்கள். நண்பர்கள், முன்னாள் உறவினர்கள், என்றோ கூட வசித்த அபார்ட்மென்ட் சகாக்கள்; உற்றவர்களின் நினைப்பும் கவனிப்பும் அற்ற குளத்துப் பறவையாக தோன்றினார்கள். செல்பேசியில் அழைத்தார்கள். வீட்டிற்கும் அழைத்தார்கள்.
‘மனிதம் சாகவில்லை’ என்று கவிதை வந்தது. ட்விட்டரில் தட்டினால் பேட்டரி செத்துவிடும். வாய்தா வாங்கிக் கொண்டேன்.
இரண்டாவது மணி நேரம் சென்றாகி விட்டது. ‘ஜெனரேட்டர் வாங்கலாமா?’
மூன்றாவது மணி நேரம். காரில் இருக்கும் பவர் உற்சாகப்படுத்தியது. ‘கேம்பிங் சென்றதிலையா? அப்படி நினைப்போம்.’ குடும்பத்துடன் இன்ப சுற்றுலா பயணம் ஆரம்பம்.
எங்கு பார்த்தாலும் மக்களின் மரண…மன்னிக்க… மின்ரத்து பயம்.
பெட்ரோல் நிலையத்தில் பெரிய காத்திருப்புப் பட்டியல்.
சுற்றுப்பட்டி பதினெட்டு கிராமங்களிலும் ஒரு ஜெனரேட்டர் விடாமல் எல்லாமும் எல்லாவிடத்திலும் தீர்ந்து போய் இருந்தது.
வெளியே சாலையெங்கிலும் மரங்கள். ஸ்டெப் – அப் ட்ரான்ஸ்ஃபார்மரா இது? அல்லது ஸ்டெப் டவுனா? கெபேசிட்டர்? ரெஸிஸ்ட்டர்?? பாகம் பாகமாக பாதையெங்கும் மின் கம்பிகள்.
மகள் கேள்வி கேட்டாள். ‘இந்த வைர் எல்லாம் ஏன் பூமிக்குள் புதைந்து வைத்திருக்கக் கூடாது?’
கவர்னர் தெவால் பேட்ரிக் ‘அவசர நிலை‘ அறிவித்து இருந்தார். இந்த மாதிரி எமர்ஜென்சி கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
மரங்கள் அனைத்தும் பனியைத் தாங்கி பார்த்திருக்கிறேன்.
கொஞ்சம் பூசினாற்போல் இருக்கும் குண்டான பெண்ணும், த்ரிஷா போல் மாடர்ன் ட்ரெஸில் கொத்தவரங்காய் வத்தலாக இருக்கும் பெண்ணும் சேலை கட்டினால் அழகாய் இருப்பது போல் புத்தம்புதிய வெண்பஞ்சுப் பொதிகள் விழுந்த மரங்கள் அழகியாய் இருக்கும். இலையுதிர்த்த வகைகளும் சரி; இலையுதிராத கிறிஸ்துமஸ் மரங்களும் சரி — பெண்ணுக்கு புடைவை என பாந்தமாக மகிழ்வுடன் அனைவருக்கும் ரம்மியமாய் காட்சி தரும்.
இன்றோ சரவணா ஸ்டோர்ஸ் ஸ்னேஹாவாக ‘ஜொலிக்குதே! ஜொலி, ஜொலிக்குதே!!’ என்று ஒரு இன்ச் நீளத்திற்கு ஐஸ் குத்தீட்டிகள் தாங்கி, ராஜேஷ் குமார் கதை வில்லனாக சிரித்தது. கண்ணெதிரே மின் கம்பிகளை அறுத்தெறிந்தது. பி எஸ் வீரப்பா சிரிப்பாக தரையில் விழும் போது வெள்ளிக்கீற்றுகளை சிந்தியது.
ரத்தம் ஒரே நிறமல்ல. வெள்ளி நிறத்திலும் இருக்கும்.
கத்திகள் உலோகத்தினால் அல்ல. பனியாலும் ஆகி இருக்கும்.
காற்று, நீர், பூமி, வான், நெருப்பு என்று பஞ்ச பூதங்கள் பேரழிவு மட்டும் அல்ல. மரங்களும் பேரழிவு உண்டாக்கும்.
தீவிரவாதிகள் மட்டுமல்ல. இயற்கைக்கும் இரக்கமில்லத வேர் ஒழிப்புகள் சாத்தியம்.
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்.
‘வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ்’ மாதிரி மொக்கை மசாலாப்படங்களில் கண்டவற்றை அமெரிக்கர்கள் கண்முன்னே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.
மெழுகுவர்த்தி விளக்கு, டார்ச் லைட்கள்… என்னென்ன கிடைத்ததோ அள்ளிக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு வீடு தள்ளி இடி, மழை, புயலினால் மரம் விழுந்து வீட்டின் கூரை இடிந்தது. காயசண்டிகை போல் வீடு. ஆவென்று வாய்திறந்து பனியெல்லாவற்றையும் விழுங்கும் ஆர்வத்துடன் வாய் பிளந்து காண்பித்தது. தன்னிடத்தில் இருப்பவர்களைக் காட்டிக் கொடுத்து, குளிரை நிரப்பியது.
ரத்தபீஜனாய் பாஸ்டனெங்கும் காயசண்டிகை வீடுகள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று வளர்த்தவர்கள் நெஞ்சில் பாய்ந்து பிளந்து திறமூலமாக்கி இருந்தது.
பத்து வீடு தள்ளி இருந்தவர், நெருப்பு கொளுத்துவதற்காக fireplaceல் மரங்களை எரிக்க, தெரியாத்தனமாக ஆர்வக்கோளாறில் கொஞ்சம் அதிகம் சூடாக்க, வீடே திப்பிடித்து சாம்பலானது. உறைவிடத்தில் இருந்த ஒவ்வொரு சாமானும் பஸ்மம். என்னுடைய புத்தக சேமிப்பு மாதிரி எத்தனை விஷயங்கள் எரிந்திருக்கும்! குழந்தைகளின் மனமுவந்த பொம்மைகள்!! ஒரேயொரு தடவை மட்டுமேக் கட்டப்பட்ட மனைவியின் கூறைப்புடைவை!!!
என்னென்னவோ… காலையில் முழுசாய் பார்த்த அகம்; மாலையில் கன்னங்கரேலென்று பாக்கி சொச்சம்.
அடுத்த நாள் நியுயார்க் டைம்ஸை முந்தின நாள் செய்தி படிப்பதற்காக வாங்கினேன்.
‘பான்சி திட்ட’த்தினால் பல் கோடீஸ்வரர்கள் சில லட்சங்களை இழந்ததை முகப்பு செய்தியாக்கி இருந்தார்கள். இத்தனைக்கும் இது பாஸ்டனில் இருக்கும் உள்ளூர்வாசிகளுக்காக சிறப்பாக வெளியான லோக்கல் ‘நியு யார்க் டைம்ஸ்’ பதிப்பு.
எந்த அமெரிக்கனும் சாகவில்லை. எனவே செய்தியில்லையாம். எட்டாம் பத்தி மூலை கூட கண்டுகொள்ளப்படவில்லை.
எனக்கு விஷயம் இந்தியாவில் இருந்து தெரிந்தது. இந்தியாவில் இருந்து கூப்பிட்டு பனிப்புயல் என்னை பாதிக்கவில்லையா என்று கேட்டு என்னிடம் திட்டு வாங்கினார்கள். முதலில் அமெரிக்க வரைபடத்தை வைத்துக் கொண்டு கவலைப்படுங்கள் என்றேன்.
கரெண்டு இல்லா அமெரிக்க வாழ்க்கை நரகம். அழகாக புலம்பியிருக்கிறீர்கள். இந்த நிலை யாருக்கும்(முக்கியமாக எனக்கு) வரக்கூடாது.
Related twits:
இலையுதிர்த்த மரத்திற்கு வெள்ளி ஆடை இட்டது குளிர். குழந்தைத் தொழிலாளி என பளுதூக்கும் மரம், பனிச்சுமையினால் சாலையெங்கும் நொய்ந்துறங்கினது.
Camping is forcing ourselves to gel with nature with no power. Current state of no electricity is nature forcing us to relinquish authority.
எங்க பாஸ்டன் பக்கம் மின்சாரம் இருக்கப்பா… 🙂
மின்சாரம் இல்லாவிட்டால் பாபா (கூட) கவிஞராகிறார் :).
நீவீர் ஒரு மாதம் தமிழ்நாட்டிற்கு வந்து,தங்கி,அனுபவித்து
ஆற்காட்டார் உபயத்தில் காவியம்
படைப்பீராக :).
நாகு,
இந்திய ஊடகங்கள் இந்தியாவில் இந்த மாதிரி நடந்தால், விஷயத்தை இன்னும் பரபரப்பாக்கி காட்டி இருக்கும் 😉
அமெரிக்கா என்பதால், கொஞ்சம் மசாலா தூவி கொடுத்திருக்கும்.
மின்சாரம் இல்லாத வாழ்க்கைக்கு பல வீடுகள் தயார் இல்லை 😦
ஜெனெரேட்டரை வீட்டுக்கு வெளியே வைக்க வேண்டும். பெட்ரோல் தட்டுப்பாடு நிலவ ஆரம்பித்துவிடும். வீடு முழுக்க ஜெனரெட்டர் இயங்குமாறு கம்பி பின்னப்பட்டிருக்க வேண்டும்.
சாகிற காலத்தில் சங்கரா என்பதுபோல் கரண்ட் போனபிறகு ஒன்றும் செய்ய இயலாது.
முரளி,
வியாழன் இரவு கிட்டத்தட்ட 350,000 வீடுகள் பாதிக்கப்பட்டதாக செய்தி சொல்லியிருந்தது பாஸ்டன் க்ளோப்.
கனெக்டிகட், வெர்மான்ட், ரோட் ஐலன்ட், மாஸசூஸ்டஸ், மெயின், நியூ ஹாம்ஷைர் என பல மாநிலங்களில் இருந்து இது 5 லட்சம் வீடுகளாக வெள்ளியன்று விரிந்தது.
இன்னும் பல்லாயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் வரவில்லை 😦
குளிரினால் குழாய் வெடித்துவிடும்; வீடே வெள்ளக்காடாகிவிடும்; போன்ற பல பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.
மாகாணத்தில் எமர்ஜென்சி என்பதும் பெயரளவில்தான்.
24×7 எல்லாம் கிடையாது. இருட்டியபிறகு வேலை செய்வதில்லை. கான்ட்ராகடரிடம் விட்டிருக்கும் இடங்கள் தேவலாம்.
கிட்டத்தட்ட அரசு ஊழியர் போல் செயல்படும் பெரிய நிறுவனங்களின் நேரடி வேலையில் இருப்பவர்கள் படு மெத்தனம்.
மரம் வெட்ட ஒரு குழு; மின்கம்பி சரிசெய்ய இன்னொரு குழு; தொலைபேசி ஒழுங்கமைக்க மற்றொரு குழு; எல்லாம் ஒருங்கிணைக்க மேற்பார்வையாளர்; அந்த சித்தாளுக்கு ஒரு நொண்டிக் கழுதை என்று சிதறிய நிர்வாகம்.
இதுபோன்ற பெரிய அளவிலான சீர்கேட்டை இவர்கள் சந்திக்காத அனுபவக் குறைபாடுகளும் பளிச்சிடுகிறது.
‘எப்பொழுது வரும்?’ என்று கணித்து சொல்லமுடியாத நிலையில் இந்த மாதிரி செயல்படும் தனியார் அமைப்பு அமெரிக்காவில் நம்பமுடியாத உண்மை.
ஐ எம் நாட் காட்,
மொட்டை மாடி நிலா
மெழுகுவர்த்தி புத்தகத் துணை
வெக்கை தவிர் ஆடையணிந்த பதுமை
பக்கத்து வீட்டு தேவதையின் நிலா முகம்…
இப்படி எழுதி இளையப்பேரரசு ஆயிரலாம்
யாம் பெற்ற துன்பம் பெறுக இப்பாஸ்டனும் பெறுக என்று யாரோ ஒரு தமிழன் விட்ட சாபமா இருக்கலாம். ஒரே ராத்திரி கரண்ட் இல்லாமல் ஒரே முறை அவஸ்தைப்பட்டது நினைவுக்கு வருகிறது.
புதிய கடவுளான கரண்டின்றி ஓர் அணுவும் அசையாது என்பது இப்புவி மானிடற்கு புரியவைக்க நடந்த திருவிளையாடல் இது.
சத்யா 🙂
செய்திகள் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
மசாலாத் தூவி எழுதினாலும், குறைந்தது பாஸ்டன் அருகில் மின்சாரமில்லை என்று எழுதியிருக்கலாம்.
நலம்.
பாலாஜி
உங்களுடைய தொலைபேசி எண் reverse 911 இல வேலை செய்யவில்லையா? பார்த்துக்கொள்ளவும். இதுபோல காலங்களில் அத்தியாவசிய உணவும் தேவையும் வீட்டிற்கு வரவேண்டியது அவசியம். எப்போது மின்சாரம் வரும், என்ன பாதுகாப்பு தேவை என்பதெல்லாம் தொலைபேசியில் வந்திருக்க வேண்டும். ஆச்சரியமாக இருக்கிறது.
கராஜ் கதவுகள் மிசாரம் மட்டும் அல்லாமல் கையாலும் (manual) திறக்கலாம். முழுதாக மின்சாரத்தால் மட்டும் இயங்க அனுமதி இல்லை எனக்குத் தெரிந்தவரை. எதற்கும் OEM இல் கேட்டுப்பார்க்கிறேன்.
என் வீட்டு கராஜ் கதவுகள் எப்படியும் இயக்கலாம். CDC தளத்தில் செனூற் அவசரகாலத்திற்கு என்ன தேவை என்று பார்த்து (குழந்தைகள் இருப்பவர்கள்) ஒரு தயார் பை(go bag) வைத்துக்கொள்ள வேண்டும். தேவையானால் சொல்லுங்கள், மின்மடலில் அனுப்பி வைக்கிறேன்.
//24×7 எல்லாம் கிடையாது. இருட்டியபிறகு வேலை செய்வதில்லை.// இது தவறான செய்தி. அவசரக்கால 24/7 hot line is a must.
பத்மா,
—-//24×7 எல்லாம் கிடையாது. இருட்டியபிறகு வேலை செய்வதில்லை.// இது தவறான செய்தி. அவசரக்கால 24/7 hot line is a must.—-
911 வேலை செய்திருக்கலாம். செய்திருக்க வேண்டும்.
ஆனால், மின்சாரத்தைத் திரும்பக் கொணரும் பணிகள் இருட்டிய பிறகு தொடரவில்லை. மாபெரும் விளக்குகளைக் கொண்டுவந்து தொடர்ந்து சீரமைப்பு பணி நடக்கும் என்று நினைத்திருந்தேன்.
—-எப்போது மின்சாரம் வரும், என்ன பாதுகாப்பு தேவை என்பதெல்லாம் தொலைபேசியில் வந்திருக்க வேண்டும்.—-
அப்படி எதுவும் அறிவிப்பு வரவில்லை. நல்லவேளையாக ‘கார்ட்லெஸ்’ தவிர பழைய ரக தொலைபேசி இருந்ததால் வழக்கம் போல் எல்லோரையும் அழைக்க முடிந்தது.
ஆனால், இன்றளவிலும் சில பகுதிகளில் தொங்கிய தொலைபேசி கம்பிகளை நிமிர்த்தும் பணி முடிவடையவில்லை.
—-கராஜ் கதவுகள் மிசாரம் மட்டும் அல்லாமல் கையாலும் (manual) திறக்கலாம். —-
ஆமா… எப்படி என்பதற்காக manual தேடி கண்டுபிடித்து திறந்தோம் 🙂
—அவசரகாலத்திற்கு என்ன தேவை—
காலாவதியான பேட்டரி இருந்த டார்ச்; பேட்டரி கசிந்திருந்த டார்ச் என்று இந்தப் பையை அவ்வப்போது சரி பார்த்து வைப்பதுதான் இன்னும் பெரிய விஷயம்?!
முரளி
—குறைந்தது பாஸ்டன் அருகில் மின்சாரமில்லை என்று எழுதியிருக்கலாம்.—
ஊர் பேர் ஒவ்வொன்றாக சொன்னால் செய்தி மாதிரி ஆயிடுமே 😉
கத்ரீனாவுக்குப் பிறகாவது அமெரிக்க அரசு என்றால் எள் விழுந்தால் கூட எடுத்து துடைத்துவிட்டு சொந்த இடத்தை அமர்க்களமாக வைத்துக் கொள்வார்கள் என்று நம்பும் நம்மவர்களுக்கும்; அமெரிக்கர்களுக்கு இன்னல் என்றால் செய்தி ஊடகம் ஊதிப் பெரிதாக்கி தலைப்பு செய்தியாக்கும் என்று எண்ணும் அமெரிக்கர்களுக்கும் அதிர்ச்சி என்பதை பகிர்வதுதான் குறிக்கோள்.
ஆறாவது நாளாக இன்றும் மின்சாரம் வராத பலர் வசிப்பது எந்த நகரம், பாஸ்டனில் இருந்து எவ்வளவு இன்ச் தூரம் என்று விலாவாரியாக சொன்னால் ‘சற்றுமுன்’ செய்தித்தளம்.
I am surprised. Public health should have called all residents to tell them precautions on water, OEM should call with hourly update on repair and when power should be back and some tips to keep warm. if some one has kids less than 5 yeasr of age, and seniors older than 70, they must have got a call on where heating is available etc. We do take measures here in NJ and constantly test our reverse 911.Recenlty when we had a water main break in Piscataway we had four calls on water advisory, when the water pressure be normal etc. We get icy condition advisory, when the roads will get cleaned etc. I am very disappointed and will raise this issue in a interstate meeting. When there is a powercut, we even are prepared with mulitple megaphones, emergency lights, food and pharmaceutical distributions at each municipality.
I am not talking about 911, but reverse 911.