அமெரிக்காவின் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவுள்ள தனது குழுவை அறிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க நடைபெற்ற தேர்தலில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட ஹில்லரி கிளிண்டனை அரசுத்துறைச் செயலராக அவர் நியமித்துள்ளார்.
செனட்டர் ஹில்லரி கிளிண்டன் பெரும் ஆளுமை கொண்டவர் என்று ஒபாமா கூறியுள்ளார்.
தற்போது இராணுவ அமைச்சராக உள்ள ராபர்ட் கேட்ஸ் அவர்களை தொடர்ந்து பணியில் இருக்குமாறு ஒபாமா வேண்டியுள்ளார்.
நாட்டில் நிலவிவரும் நிதி நெருக்கடி போலவே, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான சவால்களும் பெருமளவில் இருக்கின்றன என்று ஷிகாகோவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபராக பதவியேற்கவுள்ள ஒபாமா அவர்கள், தற்போது அரிசோனா மாகாணத்தின் ஆளுநராக இருக்கும் ஜேனட் நேபோலிட்டானோ அவர்களை உள்நாட்டு பாதுகாப்புதுறை செயலராகவும், நேட்டோவின் ஓய்வு பெற்ற தலைமை தளபதியான ஜேம்ஸ் ஜோன்ஸ் அவர்களை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமித்துள்ளார்.
அவரது நீண்ட கால ஆலோசகரான சூசன் ரைஸ், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நன்றி: பிபிசி