இவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்
தொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்
நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு வித அழகுடன் மின்னும். மழைக்காலத்து சிக்னல்கள் என் மனதுக்குப் பிடித்த ஒரு காட்சி.
மழையில் நனைந்த சிக்னலனின் ஈரமான சிவப்பை ரசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தீடீரென நாளைக்கு எலக்ஷன் நாள் என்பது உறைத்து இடது புறம் இருந்த ஓட்டுச் சாவடியாகிய தீயணைப்பு நிலையத்தை நோக்கினேன். சாதாரண நாட்களில் கூட ஒரு சில தீயணைப்பு வண்டிகள் பள பளவென வெளியில் நிற்க ஆளரவம் தெரியும் அந்த நிலையமோ. மழையிலும் இருட்டிலும் அநேகமாக காணாமலேயேப் போயிருந்தது. இந்த இடத்திலா நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று. எந்தவித பரபரப்பும் இன்றி இருட்டில் கிடந்தது அந்த தீயணைப்பு நிலையம்.
மழையில் ஊறிய பச்சை மிளிர, கார் முன்னே செல்ல என் நினைவுகள் மெல்ல பின்னே சென்றன. தேர்தல் என்பது இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான பண்டிகைகளில் தேர்தலும் ஒரு திருவிழாவக மாறிப் போன கால கடத்தில் பல தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன்.
நம் மக்களுக்கு பரபரபுத் தீனி போடவும், கொண்டாடவும் வம்பு பேசவும் வாய்ப்பளிக்கும் மற்றொரு திருவிழாவாக மட்டுமே நம் தேர்தல்கள் இயங்கி வருகின்றன. உபரியாக தேர்தல் தினங்கள் கிரிமினல்களை உற்பத்தி செய்யும் தினமாகவே மாறி வருகின்றன. தேர்தல் கமிஷன்களின் கெடுபிடியால் திருவிழாவின் உற்சாகம் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.
இருந்தாலும் சிறு வயதில் தீபாவளியைப் போலவே தேர்தல் தினங்களும் உற்சாகமளிக்கும் தினங்களாகவே இருந்தன.
நிச்சயம் இந்த அமெரிக்க ஓட்டுச் சாவடி போல களையிழந்த ஒரு ஓட்டுச் சாவடியை இந்தியாவின் மனித நடமாட்டமில்லாத காட்டுப்புற ஓட்டுச் சாவடிகளில் கூடக் காண இயலாதுதான். வாக்குச் சாவடிகள் என்றுமே பரபரப்பான ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் இடங்களாகவே உள்ளன. ட்யூப் லைட்டுக்கள், துப்பாக்கிகளுடன் போலீஸ்காரர்கள். கலவரப் பகுதிகளில் சட்டித் தொப்பி போலீஸ்கள், பூத்தைச் சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும் கட்சிக் காரர்கள், மறுநாள் தேர்தலை நடத்த முந்திய நாளே வந்திருந்து
பள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அவர்களுக்கு உபசாரம் செய்ய டீக் கடைகள், வரிசை, வரிசையாக வந்து ஏற்பாடுகளைச் சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகளின் ஜபர்தஸ்துகள், போலீஸ்காரர்களின் விரட்டல்கள் என்று பூத்கள் மறுநாள் மர்மத்தைத் தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் ப்ரபரப்பான இடங்களாக்வே இருக்கும்.
தேர்தல் தினத்தன்று ஓட்டுச் சாவடிக்கு 200 அடிக்கு முன்னாலேயே கீற்றினால் வேயப் பட்ட கட்சி அலுவலகங்கள் பரபரப்பாக இயங்கும். கரை வேட்டித் தொண்டர்கள் கைகள் கூப்பி வரவேற்றுக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஓட்டருக்கும் கட்சி சின்னம் பொறிக்கப் பட்ட சின்ன ஸ்லிப் தயார் செய்வது சரிபார்ப்பது அவற்றை வீடுகளில் கொண்டு கொடுப்பது, என்று தேர்தலுக்கு முந்திய நாளும் தேர்தல் நாளும் பரபரப்பாக இயங்கும் தினங்களாகவே இருக்கும்.
வேட்பாளர்கள் கடைசி கடைசியாக வீடு வீடாகப் போய் ஓட்டுச் சேகரிப்பதும் மும்முரமாய் அந்த இரு தினங்களே நடக்கும். வயதான பாட்டி தாத்தக்களை காரில் அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பது தனி காமெடியாக இருக்கும். முக்கியமாக தேர்தல் தினங்களில் விடுமுறை இருக்கும். யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கணவன்மார்களால் மனைவிகளுக்கு நினைவுறுத்தப் பட்ட படியே இருக்கும்.
கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு என்ற சிறுகதையில் மாமியாருக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன மருமகள் நினவுக்கு வருகிறது. ஓட்டுப் போடும் தினத்தன்று ஃபார்முலா தமிழ் படங்கள் போலவே வெட்டு குத்து கொலை போன்ற வயலன்ஸ் காட்சிகளுக்கும் நம் தேர்தல்கள் குறை வைப்பதேயில்லை. சமீப காலங்களாக தெலுங்குப் படங்களை நிறுவுத்தும் காட்சிகளை தமிழினத் தலைவரும் அவரதம் புத்திரபாக்கியங்களும் குறையில்லாமல் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரபரப்பு மிகுந்த ஒரு மசாலா படத்திற்கு இணையானதாகவே இருந்து வருகிறது.
அமெரிக்காவில் ஓட்டுப் போடும் இடம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் தெருவில் தீயணைப்பு நிலையம். பள்ளிக் கூடம், அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாது யார் வீட்டு கார் நிறுத்தும் காரேஜ் கூட ஓட்டுச் சாவடியாக உருமாறி விடுகிறது. தேர்தல் நாளன்று காலையில் வந்து ஓட்டுப் பெட்டிகளையும் இன்ன பிற சாதனங்களையும் சாவகசாமாகக் கொண்டு வைத்து விடுகிறார்கள்.
இங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் தவிர வேறு யார் யார் நிற்கிறார்கள் என்பதை நாம் தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில போட்டியாளர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி வீட்டுக்குப் ஃபோன் போட்டு ஓட்டுக் கேட்க்கிறார்கள். மற்றவர்கள் சின்னதாக ஒரு சில இடங்களில் போர்டுகள் வைப்பதுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள்.
தாரை தப்பட்டை, ரெக்கார்ட் டான்ஸ், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை முன்னே வர வேட்டிகளும் துண்டுகளும் தரையைத் துடைக்க வரும் வேட்ப்பாளர்களை இங்கு காண முடிவதில்லை. இங்கு தேர்தல்கள் டி வி யில் தொடங்கி டி வி யிலேயே முடிந்து விடுகின்றன. உற்சாகத் திருவிழாக்கள் காணக் கிடைப்பதில்லை. தலைவர்களின் திருமுகங்கள் டி வி யில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.
இந்தியாவில் தேர்தல் திருவிழாவின் பொழுதுதான் தலைவர்கள் வெளியே வருவார்கள். ஐந்தாண்டுகள் ஓய்வில்லாமேலேயே ஹைதராபாத் தோட்டத்திலும் கொடநாட்டுப் பங்களாவிலும் ஒயாது ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா கூட தேர்தல் திருவிழாக்களின் பொழுது மக்களுக்குத் தரிசனம் தரத் தவறுவதேயில்லை. தலைவர்கள் மட்டும் என்ன சிவாஜி, எம் ஜி ஆர் தொடங்கி தவக்களை குமரி முத்து வரை நடிகர்களையும் அருகில் இருந்து பார்க்கக் கிடைக்கும் தருணங்களும் இந்தத் திருவிழாக்கள்தானே?
சிவாஜி என்றால் சிவப்பு, பச்சை, மெரூன், அல்லது ஊதா நிறத்தில் பட்டில் செய்த இறுக்கமான ஜிப்பா அணிந்து வருவார். எம் ஜி ஆரோ பள பளக்கும் வெள்ளை வேட்டி சட்டையில் புசு ப்சு தொப்பியும் ஒரு இஞ்சு ரோஸ் பவுடருமாக தரிசனம் தருவார். இன்னும் பல தலைவர்கள் ஜீப்புகளில் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று வரும் பிம்பங்களாகவே மனதில் பதிந்து போய் விட்டனர்.
காமராஜர், அண்ணாத்துரை, ராஜாஜி, ஜூப்பில் இருந்து ஊன்று கோலோடு இறங்கிய பி.ராமமூர்த்தி துணையாக ஏ பாலசுப்ரமணியன் போன்ற தலைவர்கள் அவர்கள் நின்று வரும் ஜீப்புடன் சேர்ந்தே என் மனதில் பதிந்து உறைந்து போயினர். இந்திரா என்றால் தலையில் கட்டிய ஸ்கார்ஃப் பட படக்க கூலிங் கிளாசுடன் கன்வெர்டிபிள் காரில் பறந்து செல்லும் படிவம், ராஜீவ் என்றால் ஜிப்சி ஜூப்பில் தொங்கிக் கொண்டு போகும் உருவம், ஜெயலலிதா என்றால் டாட்டா சுமோவில் கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு கையசைக்கும் தோற்றம் என்று வாகனங்களை விலக்கித் தலைவர்களின் உருவங்களை மனக்கண் முன் கொண்டு வர முடிவதேயில்லை. அது போல வாகனங்களில் விரைந்து செல்லும் தரிசனங்களைக் கூட இங்குள்ள தலைவர்கள் தருவதில்லை.
பல்லாயிரம் வாட்ஸ் ஃபோகஸ் லைட்டுக்களின் வெளிச்சத்தையும் மீறி பளீரென்று தோன்றிய அழகி ஜெயலலிதாவின் முகத்தை முதன் முறை கண்ட நினைவை இன்றும் என்னால் மறக்க முடிவதேயில்லை. தமிழ் நாட்டில் எந்தவொரு நடிகைக்கும் இல்லாதிருந்த தோரணை அது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப் போட்டேன் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை 🙂
அதே அழகும் கவர்ச்சியும் இன்று சாராப் பெல்லனிடம் இங்கு காண்கிறேன். ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிவு மட்டுமே இவரிடம் மிஸ்ஸிங். மற்றபடி இவர ஒரு ஜெயலலிதாவின் க்ளோனாகவே தோன்றுகிறார்.
ஒரு முறை தாசில்தார் ஒருவர் ஓட்டுச் சாவடி அமைப்பதற்காக மேற்உத் தொடர்ச்சி மலைக்குச் செல்ல நேர்ந்ததையும் யானை துரத்தியதால் வெகு நேரமாக பதுங்கிக் கிடந்ததையும் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டி விட்டார். யானைகள், சிறுத்தைகள் அதிகம் உள்ள தொலை தூர மலைக் கிராமம் அது. இந்தியத் தேர்தலகள் இது போன்ற சாகசங்களையும் உள்ளடக்கியது.
என் பக்கத்து வீட்டுக்காரர் எலெக்ஷன் டூட்டிக்காக ஒரு ஊருக்குப் போய் விட்டு ரெண்டு கட்சிக்காரர்களுக்குள் சண்டை வந்து விட ஓட்டுப் பெட்டிகளுடன் தூக்கிப் போட்டு இவரையும் கொளுத்த இருந்திருக்கிறார்கள்,. பத்து மைல் தூரம் ஓடி வந்து உயிர் பிழைத்த கதையை இன்றும் சொல்வார். தேர்தல் வேலைக்குப் போவது அப்படி ஒன்றும் சுவாரசியமான காரியமோ, பாதுகாப்பான காரியமோ கிடையாது. உயிருக்கு உத்தரவாதமில்லாத ஓட்டுச் சாவடிகள் இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளன. உயிர் பலி விழாமல் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட இந்தியாவில் நடத்தி விட முடியாது.
பழைய நினைவுகளுடன் வீடு வந்து உறங்கி காலையில் சற்றுச் சந்தேகத்துடனேதான் ஓட்டுச் சாவடிக்குச் சென்றேன். ராத்திரி ஒருவரைக் கூட காணுமே இன்றைக்கு நிஜமாகவே இந்த இடத்தில் எலக்ஷன் நடக்குமா என்றொரு சம்சய்த்தோடுதான் சென்றேன்.
வீட்டிலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலேயேதான் ஓட்டுச்சாவடி (ஓட்டுப் போட்டால் சாவடிப்பார்கள் என்று எவ்வளவு முன்யோசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்) இருந்தது, காலையில் ஒரு எட்டரை வாக்கில் நடந்தே சென்றோம். வழி மறித்து யாரும் ஓட்டுக் கேட்க்கவில்லை. தோரணங்கள் இல்லை. கொடிகள் இல்லை. ஆரவாரங்கள் இல்லை. ஸ்லிப் கொடுக்க ஆளில்லை.
வயதானவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வரவில்லை. கரை வேட்டிகள் இல்லை. பட்டா பட்டி டவுசர்கள் இல்லை, அம்மா இரட்டை இலைக்குப் போடுங்க, ஐயா உதய சூரியனுக்குப் போடுங்கள் என்ற கெஞ்சல்கள் இல்லை. அப்படி ஒரு பேரமைதி,.
தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு நூறடி தூரத்தில் ஒரு பெண் ப்ரோபிஷன் 8 க்கு நோ என்று ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுத்தார்.
ஃபையர் ஸ்டேஷன் முன்னால் சோம்பலாக ஒரு இருபது பேர்கள் வரிசையில் நின்றார்கள்.
அங்கிருந்த ஒரு வாலண்டியரிடம் ஏனுங்க நிஜமாகவே எலக்ஷன் நடக்குதுங்களா என்றேன். ஏன் சந்தேகம் என்றவரிடம் ஒரு போலீசைக் கூடக் காணோமே என்றேன். போலீசா? அவர்கள் எதற்கு என்று சற்றே மிரண்டு போய் என்ன ஏற இறங்கப் பார்த்தார்.
வரிசையில் நகர்ந்து உள்ளே போனோம். முதல் முறையாக ஒரு தீயணைப்பு நிலையத்திற்குள் நுழைந்தேன். உள்ளே எஞ்சினீயரிங் காலேஜ் ஹைட்ராலிக்ஸ் லாப் போல இருந்தது. சுற்றி உயர உயர ஏணிகளை சாத்தியும் நிறுத்தியும் வைத்திருந்தார்கள். மேலே ராட்சச மஞ்சள் வண்ன தண்ணீர் ஹோஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஃபயர் ஸ்டேஷனில். இருந்த ரெண்டும் எஞ்சினையும் வெளியே டிரைவ் வேயில் கொண்டு போய் நிறுத்தி உள்ளே ஓட்டுப் போட இடம் தயார் செய்து வைத்திருந்தார்கள்.
எலக்ஷனை நடத்தியதும் தொண்டர்களே. அரசாங்க அதிகாரிகள், ஜீப்புகள். ஜபர் தஸ்துகள், கலெக்டர், எஸ் பி விசிட்கள் ஏதும் கிடையாது. நிறைய பேர் குழந்தைகளையும் வேடிக்கை காண்பிக்க அழைத்து வந்திருந்தனர். எனக்கு முன்னால் நின்ற கருப்புப் பெண்மணி தன் பையனையும் பள்ளிக் கூடத்துக்குப் பெர்மிஷன் சொல்லி விட்டு அழைத்து வந்திருந்தார். அவர்கள் இனத்தில் ஒருவர் பிரசிடெண்டாகப் போகும் வரலாற்றுத் தருணத்தைத் தன் பையனும் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பரபரப்பு அவரிடம் தெரிந்தது.
எல்லோரிடமும் ஒரு வித தோழமையும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்தது, மாற்றம் வரப் போகிறது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டன அந்தப் புன்னகைகள். அனேகமாக 90 சதம் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடும் கூட்டம் அது. நாங்கள் ஓட்டுப் போடுவதை வேடிக்கைப் பார்க்க சில வயதான இந்தியர்கள் கூடியிருந்தார்கள். யாரையும் யாரும் விரட்டவிலலை. எந்த விதமான கெடுபிடிகளோ பரபரப்புக்களோ இல்லை.
ஒரு பாட்டி என் பெயரைச் சரிபார்த்து இவ்வளவு நீள பெயரை என் வாழ்நாளில் உச்சரிக்க முடியாது டியர் வெரி சாரி என்று சொல்லி, பட்டியலில் இருந்த என் பெயருக்கு மேலாக ஒரு அடிஸ்ஸ்கலை வைத்து பென்சிலால் பெயரை அடித்து விட்டு என்னிடம் வாக்குச் சீட்டைக் கொடுத்தார்.
கையில் மை வைப்பது எல்லாம், இல்லை. ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் அவ்வளவுதான். அதை ஓட்டுச் சீட்டு என்று சொல்வது அபத்தம்,. ரெண்டு பக்கங்களும் 26 தேர்தல்களும் அடங்கிய பெரிய லிஸ்ட் அது. ஜனாதிபதி தேர்வில் ஆரம்பித்து உள்ளூர் முனிசிபாலிட்டி ஸ்கூல் போர்டு வரைக்கும் மொத்தம் 16 பதவிகளுக்கான வாக்கெடுப்புக்களும், ஒரு 10 பிரசின்னைகளுக்கான வாக்கெடுப்புக்களும் நிரம்பியிருந்தன,.
ஜனாதிபதி வேட்பாளர் தவிர பிற பதவிகளுக்குக் குத்து மதிப்பாக ஒரு பெயருக்கு நேர் கோடு போட்டோம். ஆம் பேனாவால் நாம் விரும்பும் பெயருக்கு நேராக ஒரு கோடு கிழிக்க வேண்டும். நம்ம ஊர் மாதிரி முத்திரை குத்துவது எல்லாம் கிடையாது. பல பிரச்சினைகளுக்கான கேள்விகள் குழப்பமான வாக்கிய அமைப்புகளாக இருந்தன.
படித்துப் பார்த்து ஓட்டு போட்டால் சரியாகத் தப்பாகப் போட்டு விடும் விதத்தில் கேள்விகளை மிகப் புத்திசாலித்தனமாக அமைத்திருந்தனர் முட்டாள்கள்.
உதாரணமாக ப்ரோபிஷன் 8: ஓரினபாலர் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கு யெஸ் என்று கோடு கிழித்தால் ஆம் தடை செய்ய வேண்டும் நோ என்பதற்கு நேர் கோடு கிழித்தால் ஓரின திருமணத்தைத் தடை செய்யும் முயற்சியைத் தடை செய்ய வேண்டும் என்று விசு பட வசனம் போலக் கேள்விகள் அமைந்திருந்தன.
இப்படி ஒரு குப்பாச்சு குழப்பாச்சாக ஓட்டுச் சீட்டை வடிவமைத்தால் எப்படி ஜனநாயகம் வெளங்கும்? ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா?, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா? மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா? விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா? உள்ளூர் பார்க்குகளை மேற்பார்வை செய்ய வரி விதிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு பத்து வேண்டுமா வேண்டாமா ஓட்டுக்களுக்கும் வாக்கிழித்தோம்.
இவர்கள் எலக்ஷன் நடத்தும் விதம் அப்படி ஒன்றும் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது டி என் சேஷனிடம் இந்த வேலையை அவுட் சோர்ஸ் செய்து விட வேண்டும். 200 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு எலக்ஷனை ஒழுங்காக நடத்தத் துப்பில்லாத ஒரு தேசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.
நானும் என் மனைவியும் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஆலோசனையெல்லாம் செய்து கோடு கிழித்து, கோடு கிழித்து ஓட்டுப் போட்டுக் கிழித்தோம். எல்லா தேர்வுகளுக்கும் சரியாகத் தப்பாகக் கோடு கிழித்த பின்னால் பூர்த்தி செய்த பாலட்டை ஒரு குப்பைத் தொட்டி போன்றிருந்த மெஷினில் உள்ளே கொடுத்தோம். அது உள்ளே வாங்கிக்க் கொண்டு 111 என்று எனது எண்ணைக் காட்டியது.
காலை 6 மணி முதல் 9 வரை மொத்தம் 111 பேர்கள் போட்டிருந்தனர். பலர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு போஸ்டலில் அனுப்பி விட்டார்கள். நேரில் வந்து போடுபவர்கள் மிகக் குறைவாக இருந்தது. ஓட்டுச் சீட்டை அந்தக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட்வுடன் ஒருவர் ஐ வோட்டட் என்றொரு ஸ்டிக்கரைக் கொடுத்தார்.
அமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியமான தேர்தல் முதல் முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் முக்கிய பதவிக்கு வரப் போகும் எலக்ஷன். வரலாற்றில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்