இவரின் முந்தைய பதிவு: ஒபாமா ஜனாதிபதியானால் என்ன செய்வார்?
இங்கே வாக்களித்து விட்டேன்.
நானும் இன்று வாக்குச் சாவடிக்குப் போனேன். சிறிது மழையில் வீடுகளெல்லாம் நனைந்திருந்தன. நல்ல குளிர். காலை 7.45க்குப் போனால் எப்படி இருக்கும்?
வழக்கமாக வீடுகளெல்லாம் கோடை முடிவதற்குள் வெளிப்பக்கம் அடிக்க வேண்டிய (தேவையாய் இருந்தால்) பெயிண்ட் எல்லாம் அடித்து, கூரைகளை எல்லாம் புதிதாக்கி 90 சதவீதம் வீடுகள் புதுப்பிக்கப் படும் ஒரு பகுதியில் இருக்கிறேன். இந்த வருடம், சென்ற வருடம் போலவே, மக்களின் நிதி நிலை சரியில்லை என்பது தெரிய வர ஆரம்பித்திருக்கிறது. ஒரு தெளிவான வேறுபாடும் புலப்படுகிறது.
காலை இளம் வெயிலில் அந்த ஈரப் பிசுபிசுப்பு உள்ள மெலிய குளிர் காற்றில் நடக்கையில் பல வீடுகள் தம் பொலிவிழந்து காணப்பட்டது புலப்பட்டதில் சிறிது யோசித்ததில் அவை அனேகமாக வயதான மனிதர்கள் வாழும் வீடுகள் என்பது புலப்பட்டது. ஓய்வு ஊதியம், சேமிப்பில் காலம் தள்ளும் மனிதருக்கு வயதானவருக்கு இந்த வருடங்கள் நல்ல வருடங்களே அல்ல.
ஓரளவு பார்க்கப் புதிதாகவும் நல்ல பராமரிப்பிலும் இருந்த வீடுகள் தெருவில் எவை என்றால் புதிதாய்க் குடி வந்தவர்கள், இளம் குழந்தைகள் உள்ளவர்கள், இருவரும் வேலைக்குப் போகும் மனிதர் உள்ள வீடுகள் இப்படி. இன்னும் வேலை பார்க்கும் குடும்பங்களால் இந்தக் கஷ்ட காலத்திலும் அதிகம் பிரச்சினை இல்லாமல் காலம் தள்ள முடிகிறது போலும்.
கூட என் மகள் வந்தாள். கல்லூரியில் இருந்து நேற்று இரவே வந்து விட்டாள்.
ப்ரைமரியில் முதல் தடவையாக வாக்களித்தாள். அவளுடைய மொத்த ஹாஸ்டலும் ஒபாமா என்று தெரிவித்தாள். சிலர் பழமைப் பார்வை உள்ளவர்கள்- மகெய்ன் ஆதரவாளர்கள் உண்டு, ஆனால் ஒபாமாவுக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவால் மௌனம் காக்கிறார்களாம்.
அவளுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிப்பதில் மிக மகிழ்ச்சி, பெருமை. அவளை விட வாக்குப் போட உரிமை பெற பல ஆண்டுகள் இன்னும் இருக்கும் மகனுக்கு ஒரே துடிப்பு, தானும் வருவேன் என்று. அம்மாவோடு போ என்று சொல்லி, பள்ளிக்கு அனுப்பி
வைத்தேன்.
பெயரைக்கேட்டு சிறிது திக்குமுக்காடினார் வாக்காளர் உதவியாளர். வயதானவர். ஒரு பென்சில் டிக் போட்டு விட்டு அடுத்த மேஜையில் வாக்குச் சீட்டு கொடுத்தவரிடம் அனுப்பினார்.
சீட்டு கையில். பெண் ஒரு பூத் போன்ற இடத்தில் எல்லாவற்றிலும் வாக்கு போட்டாள். நான் ஒரு மேஜையில் அமர்ந்து கவனமாகக் குறித்தேன். இருவரும் ஓட்டுப் போட அந்த எந்திரத்துக்கு அருகில் போகையில் ஒரு போலிஸ்காரர், மேஜையில் அமர்ந்து பெயர், முகவரி கேட்டார். சொன்னதற்கு அவரும் ஒரு டிக் போட்டுக் கொண்டார் (நோட்டுப் புத்தகத்தில்).
Optical scanner எந்திரத்தருகே இருந்த பெண்மணி என் மகளிடம் இதுதான் முதல் தடவையா பெண்ணே என்றார். இல்லை, ப்ரைமரியில் வாக்களித்தேன் என்றாள்.
வாக்காளருக்கு உதவி செய்பவர்கள் சார்பின்றி இயங்க வேண்டும் என்று ஒரு விதி உண்டு. என்றாலும் மகளுடைய உற்சாகத்தைப் பார்த்து அவ்ருக்கும் உற்சாகம்.
Exciting isn’t it? என்றார்.
ஏன் அப்படிச் சொல்கிறார் என்று எங்கள் மூவருக்கும் தெரியும். சிரித்து விட்டுத் தலை அசைத்தோம். அந்த எந்திரத்துக்குப் போவதற்குள், ஒரு சர்ச்சுடைய பெரிய சமுகக் கூட்ட அறையான அந்த பெரிய கூடத்தில் நாங்கள் பல கருப்பர்களைக் கடந்தோம். அவர்களில் சிலர் வாக்காளர், சிலர் உதவியாளர். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்
கொண்டோம்.
சொல்லாமல் சொல்வது ஊக்குவிப்பது பாராட்டுவது வாழ்த்துவது எல்லாம் அந்தச் சிறு சிரிப்புகளில் பரிமாறப்பட்டன. அதே பரிமாறல் இந்த நடுவயதைத் தாண்டிய வெள்ளைப் பெண்மணியுடனும் நடந்தது.
வெளியே வந்தோம். சரித்திரம் நிகழ்ந்தது, அதில் நாம் ஒரு சிறு பங்கு வகித்தோம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்த ஒரு அதிசய நேரம் அது.
நல்லா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
பிங்குபாக்: ‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா?’ - வாஷிங்டனில் நல்ல தம்பி « US President 08