அடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்


* ஒபாமாவுக்கு கருத்துக்கணிப்பில் இருக்கும் இதே அளவு செல்வாக்கு வேறு ஒரு வெள்ளை இனத்து ஜனநாயகக்கட்சி அதிபர் வேட்பாளருக்கு இருந்திருந்தால் தேர்தல் முடிந்தது என்று பலகாலம் முன்னரே முடிவுகட்டி இருப்பார்ர்கள். மெக்கெய்ன் ஆதரவாளர்கள் இன்னமும் துள்ளிக் கொண்டு இருப்பதற்கும், நம்பிக்கை இழக்காமல் பேசிக்கொண்டிருப்பதற்கும் ஒபாமவின் இன அடையாளமே காரணம்.

* இந்தத் தேர்தலில் கட்சி சார்புள்ளவர்களை விட கட்சி சார்பற்றவர்களே முடிவை தீர்மானிக்கும் காரணிகளாகிறார்கள். அடுத்ததாக இளைய தலைமுறையினர் மற்றும் – முதன் முறை ஓட்டளிப்பவர்கள்

* 2000 ம் வருடத் தேர்தலில் மெகெயின் குடியரசுக் கட்சி வேட்பாளாராக முன்மொழியப்பட்டிருந்தால் எதிர்த்த எந்த ஜனநாயகக்கட்சி வேட்பாளரையும் கபளீகரம் செய்திருக்கும் அளவிற்கு தனிப்பட்ட செல்வாக்கு உடையவர்.

தவறான நேரத்தில் முன்மொழியப்பட்டிருக்கும் சரியான நபர் அவர். பாவம்.. !!

* ஒபாமா லேசுப்பட்ட ஆள் அல்ல. அட்டகாசமான EQ உள்ள பக்கா அரசியல்வாதி. அவருடைய நிர்வாகத்திறமை என்ன என்பதை காலம்தான் சொல்லும். தெரியாத பிசாசே மேல் என்று எடுக்கப்படும் முடிவே அவர் பெறப்போகும் அதிபர் பதவி.

* காலகாலமாக போரில் அசகாயம் புரிந்தவர்களை அரியணை ஏற்றும் நாடு அமெரிக்கா. பனிப்போருக்கு முந்தைய அமெரிக்க அரசின் ராணுவ நடவடிக்கைகளுடன் எச்சரிக்கை கலந்த செயல்பாடுகளும் இருந்தன. காரணம் சோவியத் அரசு. ஆனால் பனிப்போருக்கு பிந்தைய, ருஷ்யா சிதறுண்ட பிறகான காலகட்டத்திற்கு பிறகு, ராணுவ நடவடிக்கைகள் கேட்பார் இல்லை என்ற காரணத்தால் மிகுந்த அராஜகமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந் நிலையில் அமெரிக்க அதிபர், போரில் முனைப்பில்லாத/ விருப்பமில்லாத பேச்சு வார்த்தையில் அதிக நம்பிக்கை உள்ள ஒரு Diplomat ஆக இருப்பது அவசியமாகிறது.இந்த வட்டத்துக்குள் அட்டகாசமாக பொருந்தும் முகம் ஒபாமாவுக்கு

* எட்டுவருட புஷ் அரசின் தோல்வி அடைந்த பிடிவாத முகத்தை உலக அரங்கில் மாற்ற, மழுப்பலும் பசப்பலும் மிக்க அரசியல் முகம் தேவைப்படுகிறது. இதே முகம் உள்நாட்டு குழப்பங்களையும் சீர்செய்தால் வரலாறு படைக்கும் – கருப்பினத்தின் முதல் அதிபர் என்ற வரலாற்று மாற்றத்தோடு மெற்சொன்னதும் சேரும். ஆனால் ஒபாமாவினால் கருப்பர்களது இனரீதியிலான எண்ணங்களில் ஏற்படும் திருப்தி அளவுக்கு, அவர்களுக்கு ஆதரவான அவரது செயல்பாடுகளினால் வராது. கூடியவரை தன்னைப் பொதுவான அதிபராக காட்டிக் கொள்ள முயல்வதே நல்லது என்கிற இன்றைய அவரது என்ணம் பின்னும் தொடரும்

* சமயங்களில் சர்ச் பிரசங்கம் போல அமைந்துவிடும் ஒபாமாவின் உரை, மெகெயின் உடனான வாதப் பிரதிவாதங்களில் அடக்கமாக, கொஞ்சம் அலுப்பாகக் கூட இருந்தது. தான் ஒன்றும் பேசாமல் இருந்தாலே போதும், சர்ச்சைகளை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுகிற , அங்க சேஷ்டைகளில் முகம் சுளிக்க வைக்கிற பெரியவர் பார்ப்பவர்களின் அதிருப்தியை சம்பாதிக்கும் வேலையை தானே பார்த்துக் கொள்வார் என்று அவர் நினைத்து இருக்கலாம். மொத்தத்தில் மூன்று டிபேட்டிலும் மெகெயின் தொற்றார். ஒபாமா அவரை ஜெயிக்கவில்லை.

* ஒபாமாவின் இனம், மதம், அவர் தொடர்புகள், அவருடைய அனுபவம், சம்பத்தப்பட்ட மெகெயின் கேள்விகள் எல்லாமே நெகடிவ் ஆயுதங்கள் என்று மீடியாவால் நிராகரிக்கப்பட்டதற்கு காலமே காரணம்.

மீடியாவின் செல்லப்பிள்ளைகளை மக்கள் நிராகரித்ததாக சரித்திரமே இல்லை- இத்துடன் அபரிமிதமான தேர்தல் நிதியும் சேர்ந்து விட ஒபாமாவின் தேர்தல் விளம்பர முயற்சிகள் வரலாறு காணாத வெற்றி – சம்யங்களில் திமுகவை ஞாபகப்படுத்துகிற தொண்டர் கட்டுமானம்.

* உள்ளூரில் திமுக/ அதிமுக போன்ற ப்ழுத்த பழங்களின் அமைப்புக்கு எதிராக விஜயகாந்துக்கு சாமரம் வீசும் நண்பர்கள் நியாயமாக சித்தாந்த ரீதியாக அதே எண்ண ஓட்டத்தின்படி புதியமுகமான பாரக்கிற்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். என்னே அதிசயம். அவர்கள் ஆதரவு மெகெயினுக்குத்தான்.

விஜயகாந்துக்கு ஆதரவு அளிப்பது மு.க.வை எதிர்க்கவே என்பதும், . மெகெயினுக்கு ஆதரவு அளிப்பது லிபரலான ஒபாமாவை எதிர்க்கவே என்பதும் இந்த வலதுசாரி சிந்தனையாளர்களின் உலகளாவிய பார்வையாக இருக்கக்கூடும்.

* அதிகாரம் கைக்கு வந்தபிறகுதான் நிஜ ஒபாமா வெளிவருவார். அப்படி வராமல் போவது நம் அதிர்ஷ்டம் அல்லது என்னைப் பொன்றவர்களின் அபரிமிதமான எச்சரிக்கைக்கு தேவை இல்லாத உண்மையான நல்ல மனிதர் ஒபாமா.

* நவம்பர் நாலுக்காக உலகம் காத்திருக்கிறது. அமெரிக்கா ஒபாமாவுக்கு மகுடம் சூடினால் அது “வெள்ளை இனத்தவர்கள் இன அழுக்குகள் இல்லாது காலத்திற்கு தேவைப்பட்ட முடிவை எடுத்தார்கள்” என்பதற்காக உலகமே மனந்திறந்து அமெரிக்கர்களை தலையில் துக்கி வைத்து வைத்துக் கொண்டாடும் நாளாகி விடும்

பார்ப்போம்…!!!

மூக்கு சுந்தர்

4 responses to “அடுத்தாத்து ஆல்பர்ட் – மூக்கு சுந்தர்

  1. இப்போதைய பொருளாதார சூழ்நிலையில், நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பெரும்பான்மையான மத்தியதர, அதற்கும் கீழேயுள்ள அமெரிக்கக் குடும்பங்களுக்கு ஓபாமாவின் பொருளாதாரக் கொள்கை, திட்டங்கள் ஆறுதல் அளிக்கின்றன. குறைந்த வருவாய் உடையவர்களுக்கு வரி விலக்கு அல்லது குறைப்பு, அதிக வருவாய் உள்ள தனி நபர்களுக்கு வரி அதிகரிப்பு, நிறுவனங்களுக்கு மான்யங்கள் ரத்து, வேலைகளை வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனங்களுக்கு சலுகைகள் ரத்து போன்ற ஒபாமாவின் அறிவிப்புகள் காலத்திற்கும் நேரத்திற்கும் இடத்திற்கும் மிகவும் பொருந்தி வருவதால் பெரும்பான்மை மக்களின் அவர் பக்கம் சாய்வதில் வியப்பில்லை. மேலும் ஜான் மெக்கெயினின் வயது, துணை அதிபர் பதவிக்கு நிற்கும் சாரா பாலின், spreading the wealth – Joe the plumber போன்ற எதிர்மறை அணுகுமுறைகளோடு புஷ் என்று கிட்டத்தட்ட எல்லாராலும் வெறுக்கப்படும் தலைவருடைய குடியரசுக்கட்சி சார்பில் நிற்பதுவும் சேர்ந்துகொண்டு ஜான் மெக்கெயினின் தோல்விக்கு வழி வகுக்கலாம். அரசியல் வல்லுநர்களிலிருந்து கிளி ஜோஸ்யக் காரர்கள் வரை ஒபாமா வெல்வார் என்று அறிவித்தேவிட்டார்கள். ஆனால் அவர் பெறப்போகும் வெற்றி இமாலய வெற்றியாக இல்லாது 10 அல்லது அதற்குக் குறைவான சதவீத வித்தியாசத்தில் மட்டுமே இருப்பதுவும், குடியரசுக் கட்சி புஷ் வெறுப்பு உள்ளிட்ட எல்லா எதிர்மறை அம்சங்கைளையும் மிஞ்சி ஜான்மெக்கெயின் குறைந்த வித்தியாசத்தில் தோற்பதுவும் அதிசயம்தான்.

    முந்தைய அமெரிக்கத் தேர்தல்களை (அல்லது தேர்தல் முடிவுகளை) நம்மூரில் ஊடகங்கள் வாயிலாக முன்பு அறிந்துகொண்டதை ஒப்பிடும்போது இப்போது நடக்கும் தேர்தலை இங்கேயே கடந்த ஓராண்டாக நேரடியாக அறிந்துகொள்வது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. ஜனநாய முறைப்படி இங்கு நடைபெறும் தேர்தலுக்கும் “உலகின் பெரிய ஜனநாயக நாடான“ இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதற்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்களையும் கண்டுணர முடிவது இன்னொரு வித்தியாசமான அனுபவம்.

    நன்றி.

  2. —இங்கு நடைபெறும் தேர்தலுக்கும் இந்தியாவில் தேர்தல் நடைபெறுவதற்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்களையும் கண்டுணர முடிவது—

    முடிஞ்சா இதப் பத்தி கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்.

    தனிப்பதிவாக எழுதினாலும் சரி…

  3. Yes – America runs on Negative campaign

    I plan to learn to type in Tamil soon 🙂

    – JGokul

  4. More than “Race” – I think his middle name and Affiliation to Rev. Wright , Ayers, Rizko, etc. is of bigger concern…

    # Well let us see is Rovian politics can be defeated this time!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.