அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள் – I


அமெரிக்கா ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கையும் பெருமையும் கொண்ட நாடாகத் தன்னைக் கருதிக்கொள்கிறது. கிட்டத்தட்ட இறை நம்பிக்கையை ஒத்த நம்பிக்கையும் பெருமையும் அது. உலகெங்கிலும் ஜனநாயகத்தை நிறுவிவிட வேண்டும் என்பதை ஒரு உன்னத நோக்கமாகக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆயினும் ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள் பிரதிநித்துவத்தின் உயரிய வெளிப்பாடான பொது வாக்கெடுப்பு முறை அமெரிக்காவில் மிகவும் குழப்பம் மிகுந்ததும் குறைபாடுகளுள்ளதுமாகவே காணப்படுகிறது.

1. கல்லூரிச் சாலை
அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பவர்கள் எலக்டோரல் காலெஜ் எனப்படும் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். அமெரிக்காவின் மகாணங்கள் ஒவ்வொன்றிற்கும் அதன் செனட் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபை (House of representatives) உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் சமமான எலக்டோரல் காலேஜ் வாக்குகள் வழக்ங்கப்படுகின்றன. மொத்தம் 538 எலக்டோரல் காலெஜ் வாக்குகளில் 270ஐப் பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினரைப்போல தான் விரும்பும் எவருக்கும் ஆதரவளிக்கும் வாய்ப்பு எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு உண்டு. இருப்பினும் இவர்கள் அவ்வாறு வாக்களிப்பதில்லை. அமெரிக்காவில் 50ல் 48 மகாணங்கள் தங்கள் மகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளருக்கே அத்தனை எலக்டோரல் காலேஜ் வாக்குகளையும் தந்துவிடுகின்றன. ஆக மக்கள் பிரதிநித்துவம் மகாண அளவிலானதாகிவிடுகிறது. இந்தியாவைப்போல ஒவ்வொரு தொகுதியும் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை, கீழ்நிலை பிரதிநித்துவத்தை இந்த முறை மறுதலிக்கிறது. மெய்ன்(Maine) மற்றும் நெபராஸ்கா மகாணங்கள் மட்டுமே மாவட்டவாரியாக வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எலக்டோரல் காலெஜ் வாக்குகளை வழங்குகின்றன.

இந்த முறையின்படி Popular Vote எனப்படும் நாடு முழுவதுமான வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகளைப் பெற்ற அதிபர் வேட்பாளர் போதுமான அளவு எலக்டோரல் காலெஜ் வாக்குகளைப் பெற முடியாமல் தோல்வி அடையும் நிலை உள்ளது. 2000ம் ஆண்டு தேர்தலில் அல் கோர் அவ்வாறே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இதுவரை நான்கு வேட்பாளர்கள் அவ்வாறு தோல்வியடைந்துள்ளனர்.

எலக்டோரல் காலேஜ் முறையை மாற்றியமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக மகாணங்களில் அதிக வாக்குகளைப் பெற்றவரே அந்த மகாணத்தின் அனைத்து பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெறும் முறையை மாற்றி நாடளவில் அதிக வாக்குகளைப் பெற்ற (Most popular votes) வேட்பாளர் பெறும் முறையை உருவாக்கும் முயற்சி நடந்துவருகிறது. இது பிராந்திய மக்களின் பிரதிநித்துவத்தை குறைத்துவிடும் முயற்சியாகும். சரியான மக்கள் பிரதிநித்துவம் மாவட்ட வாரியாக, சிறிய தொகுதிகள் வழியாக நிலைநாட்டப் படுவதே சிறப்பானதாகும். இத்தகைய கீழ்நிலை பிரதிநித்துவம் பிராந்திய அரசியலுக்கு குறிப்பாக சாதி, இன அரசியலுக்கு வழிவகுக்கும் என்பது வேறொரு விவாதத்திற்கான கருத்து.

2. பட்டியல்
அமெரிக்க வாக்காளர் பட்டியல் தற்போது கணினிவழி பதிக்கப்படுகிறது. கணினிமயமாக்கல் வேலையை எளிதாக்கினாலும் முற்றிலும் குறைகளற்ற முறையல்ல. குறிப்பாக தட்டச்சுப் பிழைகளால் தங்கள் வாக்குகளை பலரும் இழக்க நேரிடுகிறது.

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தவரின் பெயர் விபரங்கள் ஏற்கனவே இருக்கும் அரசு கணினி தகவல் தொகுப்புகளான (Databases) ஓட்டுநர் உரிமம் பெற்றோரின் தகவல் போன்ற அரசின் தகவல் தொகுப்புக்களோடு ஒப்பிடப்படுகிறது. ஒரு எழுத்து மாறினாலும் வாக்காளரின் தகவல் சரிபார்க்கப்பட முடியாதத்து அல்லது தவறானது என கணினி கூறிவிடும். விஸ்கான்சின் மகாணத்தில் 22% பதிவுகள் இம்முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளன இதில் தேர்தலை கண்காணிக்கும் ஆறு முன்னாள் நீதியரசர்களில் நான்குபேரின் தகவல்களும் அடக்கம். இறுதியில் விஸ்கான்சின் வாக்காளர் பதிவை ஒப்பிட்டு சரிபார்க்கும் முறையையே கைவிட்டது. ஆனால் ஃப்ளோரிடாவில் 9000 புதிய வாக்காளர்கள் இம்முறையில் வாக்குரிமையை இழந்துள்ளார்கள். இவர்கள் வாக்களிக்கலாம் ஆனால் முறையான ஆவனங்களை சமர்பித்தபின்னரே இவர்களின் வாக்குகள் எண்ணப்படும். ஒகையோவில் 2 லட்சம் பேரின் பதிவுகள் சரிபார்க்க இயலாதவையாக உள்ளன.

வாக்காளர் பதிவுகளை கண்காணிக்கும் அதிகாரிகள் பலரும் மக்களை மிரட்டும் செயல்களும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஹிஸ்பானிக் என அழைக்கப்படும் தென்னமெரிக்க வம்சாவழியினரை அவர்கள் அமெரிக்க குடிமக்களானாலும் தேவையற்ற ஆதாரங்களைக் கேட்டு மிரட்டுவது ஜியார்ஜியா மகாணத்தில் நடந்துள்ளது. மிசிசிப்பியில் தேர்தல் அதிகாரி ஒருவர் தன் வீட்டிலிருந்து வேலை செய்கையில் தவறுதலாக 10,000 வாக்கலர்களை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார். பின்னர் இவை பட்டியலில் சேர்க்கப்பட்டன.
வாக்காளர் பதிவு முற்றிலும் பிரச்சனையற்ற முறையாக இல்லை. லட்சக்கணக்கில் வாக்குப் பதிவுகள் விலக்கப்பட்டிருக்கலாம் எனக் கவலை கொள்கிறது டைம் பத்திரிகை. (Millions have been stripped from voter rolls in key states, but the legitimacy of those eliminations remains unclear.).

வாக்காளர் பதிவில் மேலும் ஒரு கவலைதரும் விஷயம் இந்தத் தேர்தலில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏக்கார்ன் (ACORN) எனும் தன்னார்வக் குழு ஏழ்மை நிலையில் இருப்பவர்களை அவர்களின் பல உரிமைகளுக்காகவும் ஒருங்கிணைக்கிறது. தேர்தல் நேரத்தில் அவர்கள் இத்தகைய கீழ்நிலையில் இருக்கும் மக்களை (குறிப்பாக கறுப்பினத்தவர்கள், பிற சிறுபான்மையினர்) வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யயும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. இம்முறை ஏக்கார்ன் தனது பிரதிநிதிகளிடம் வாக்காளர் பதிவு எண்ணிக்கைக்கேற்ப உங்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனச் சொன்னதன் விளைவாக மிக்கி மவுஸ் முதற்கொண்ட கற்பனை பாத்திரங்களின் பெயர்களையும் வாக்காளர் பதிவில் சேர்த்து ‘சேவை’ செய்துவிட்டனர் ஏக்கார்னில் வேலை செய்த 13000 பகுதி நேர வேலையாட்களில் சிலர்.

வாக்காளர் பதிவில் நடக்கும் இத்தகைய முறைகேடுகள் இருபெரும் கட்சிகளான குடியர, ஜனநாயகக் கட்சிகளின் ஆதரவு குழுக்களால் தொடர்ந்து நடத்தப்படும் ஜனநாயகக் கேலிக் கூத்தானாலும் இது முறைகேடான வாக்குப் பதிவுக்கு இட்டுச் செல்வதில்லை. மிக்கி மவுஸ் டிஸ்னி சேனலில் மட்டுமே வாக்களிக்கச் செல்ல முடியும். ஆனால் தவறான வாக்குப்பதிவுகளின் விளைவாக வாக்களிப்பவர்கள் அதீத கட்டுப்பாட்டுகளுக்குள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களின் வாக்குப்பதிவு தீவிர சரிபார்த்தலுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது. இது பல விளிம்புநிலை வாக்காளர்களையும் வாக்குப்பதிவிலிருந்து மறைமுகமாக தடுக்கிறது.

(தொடரும்…)

4 responses to “அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள் – I

  1. தேர்வர்கள் பேரவை (electoral college) என்ற அமைப்பைத் தகிடுதத்தம் என்று கொள்வது தவறு. இந்தியாவின் குடியரசுத் தலைவரும் ஏறத்தாழ இது போன்ற அமைப்பினால்தான் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இந்தியா, அமெரிக்கா, கனடா போன்ற கூட்டுநாடுகளில் (federal states) இது போன்ற பேரவை அமைப்புகள் இன்றியமையாதவை. “மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற கோரிக்கை இதன் அடிப்படையில்தான் எழுந்தது. கூட்டாட்சி உள்ள நாடுகளில் ஒரு மனிதர், ஒரு வாக்கு என்பது அந்தந்த மாநிலங்களுக்குள் மட்டும்தான். இல்லாவிட்டால், சிறு மாநிலங்களின் உரிமை, பெருமாநிலங்கள் முன் அடிபட்டுப் போய்விடும்.

    இந்தியாவிலும்கூட வட மாநிலங்களின் மக்கள் தொகை கூடிக் கொண்டே போவது குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தி வரும் செல்வச் செழிப்புள்ள தென் மாநிலங்களுக்குக் கவலையளித்து வருகிறது. மக்களவையைப் பொருத்தமட்டில் மக்கள்தொகை கூடுதலான மாநிலங்களின் ஆதிக்கத்தைத் தணிக்க முடியாது. மாநிலங்களவையில் மட்டுமே இது செய்யமுடியும்.

    அமெரிக்காவைப் பொருத்தமட்டில், அமெரிக்கக் கூட்டு நாடுகளை உருவாக்கியவை முதல் பதின்மூன்று குடியேற்ற நாடுகள் (colonies). கூட்டரசு உருவாக்கினால் கனெக்டிகட், டெலவேர், நியூ ஹாம்ப்ஷயர், ரோட் ஐலண்ட், போன்ற சிறு நாடுகளை நியூ யார்க், பென்சில்வேனியா, மேரிலண்ட் போன்ற பெருநாடுகள் ஆதிக்கம் செலுத்துமோ என்ற அச்சம் இருந்தது. சிறு நாடுகளின் அச்சத்தை நீக்கப் பெருநாடுகள் அளித்த உறுதியால்தான் மாநிலங்களவை (senate)யில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் 2 உறுப்பினர்கள் கொடுத்தார்கள். கலிஃபோர்னியாவுக்கும் இரண்டு செனடர்கள்தாம், ரோட் ஐலண்டுக்கும் 2 செனட்டர்கள்தாம். அது மட்டுமல்லாமல், குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்வர்கள் பேரவையையும், ஓரள்வுக்குச் சமன் படுத்த முயற்சித்தார்கள்.

    விளைவு: http://www.nytimes.com/2008/11/02/opinion/02cowan.html

    200 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது நமக்கு விந்தையாக இருந்தாலும், இது தான் அரசியல் கட்டமைப்புச் சட்டத்தின் விதி. இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். 2000-ல் கோர் தோற்றாலும், அவர் தேர்வர்கள் பேரவை விதிகள் பற்றி வருந்தவில்லை. பிளாரிடாவில் இன்னொரு 2000 வாக்குகள் பெற்றிருக்கலாமே என்றுதான் வருந்தினார்.

    அன்புடன்,

    மணி மு. மணிவண்ணன்
    சென்னை, இந்தியா

  2. பிங்குபாக்: அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: III « US President 08

  3. About New York – When Use It or Lose It Means Traveling 9,300 Miles to Vote – NYTimes.com: When their absentee ballots failed to arrive in India, a New York couple flew home — 9,300 miles — to vote in person.

    Heading Off Election Day Mishaps – WSJ.com: It’s time to cast your ballot. What could possibly go wrong? Here is a voter’s guide on common problems and what to do about them.

    # You aren’t on the voter rolls.
    # You don’t have an ID.
    # There are voting-equipment problems.
    # Your eligibility is challenged.
    # The lines are long.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.