செல்வனின் முதல் பதிவின் தொடர்ச்சி:
3. ஒவ்வொரு அதிபரும் அவ்வப்போது பற்றிக்கொள்ளும் தீயை அணைப்பதிலேயே நேரங்கழித்து விடுகிறார்களா? ரேகனுக்கு ருசியா; புஷ்ஷுக்கு 9/11. கல்வி, உள்நாட்டு வன்முறை போன்ற பல முக்கிய பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் கவனம் பெறவில்லை. பொருளாதாரம் மீண்டாலும் கிரிமினல்களை தவிர்ப்பதற்கும் கல்வியை செறிவாக்குவதற்கும் எந்த மாதிரி தொலைநோக்கு திட்டங்கள் தேவை?
கிரிமினல்களை ஒழிப்பது எந்த நாட்டு அரசாலும் முடியாது. குற்றங்களை மட்டுப்படுத்த மட்டுமே முடியும். அதிக எண்ணிக்கையில் போலீசை பணிக்கமர்த்துவது மட்டுமே இதற்கு தீர்வல்ல. சமூக ரீதியிலான மாற்றங்களை நிறைய செய்ய வேண்டும்.
உதாரணம்: கருப்பருக்கெதிராக கருப்பர் நடத்தும் குற்றங்கள்.அந்த சமூகத்தில் கல்வி, வேலைவாய்ப்புக்களை அதிகரித்தால் இது தானாக குறையும்.
பொருளாதார மந்த நிலை காரணமாக அமெரிக்க மாநில அரசுகள் பல்கலைகழகங்களுக்கு அளிக்கும் நிதியுதவியை குறைக்கின்றன. நீண்டகால அடிப்படையில் இது தேசத்துக்கு நல்லதல்ல. இந்த விஷயத்தில் ஒபாமா பல்கலை மாணவர்களுக்கு அளிக்கவிருக்கும் உதவித்தொகை வரவேற்கத்தகுந்த திட்டம் தான்.
அமெரிக்க பல்கலைகழகங்களில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறையை போக்க வேண்டும். வேலைக்கு போகும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பாடத்திட்டங்களையும், வகுப்புகளையும் அதற்கேற்ராற்போல் மாற்ற வேண்டும்.
நிதி மட்டுமே உடனடி பிரச்சனையாக தெரிகிறது.மற்றபடி அமெரிக்க பல்கலைகழகங்கள் உலகின் தலைசிறந்த கல்விக்கூடங்களே ஆகும். ஓரளவு உதவி செய்தால் அவையே தம்மை கைதூக்கி விட்டுக்கொள்ளூம்.
4. உலக வர்த்தகம்: ஒத்துழைக்கும் கொலம்பியாவோடு முரண்டு பிடிக்கும் ஒபாமா ஒத்துக் கொள்ளாத கொள்கை கொண்ட வெனிசுவேலாவோடு சரிசமமாக அமர்வேன் என்கிறார். ஏற்கனவே சட்டைப்பையில் அமர்ந்திருக்கும் கொலம்பியா போன்ற நாடுகளின் சொந்தப் பிரச்சினைகளை கண்டும் காணாமல் போவது அமெரிக்காவுக்கு ஷேமமா? புவிவெம்மையைக் கட்டுபடுத்தும் விதமாக நாப்ஃதாவை மீண்டும் பேரம் பேசுவது, அமெரிக்கத் தொழிலாளர் நலனுக்காக தென் கொரிய கார் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவது என்று ஒபாமா முன்வைக்கும் கொள்கைகள், அமெரிக்காவை தனிமைப்படுத்துமா?
நாப்தாவில் தொழிலாளர் உரிமை, மற்றும் சுற்றுப்புர சூழல் காப்பு ஆகியவற்றை சேர்ப்பேன் என்கிரார் ஒபாமா. கொலம்பியாவில் தொழிலாளர் உரிமை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் தான் அதனுடன் சுதந்திரவணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகிறேன் என்கிறார்.
இதெல்லாம் டெமக்ராடிக் கட்சியினரின் பெட் புராஜெக்ட்கள். அடுத்த நாடுகளை முதலில் இதுபோல் அமெரிக்கா வலியுறுத்துவது அவற்றின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல்தான். சுற்றுப்புற சூழலுக்கு செலவு செய்யும் அளவுக்கு கொலம்பியா, மெக்சிகோவிடம் நிதி இருக்கிறதா என்பதே கேள்விக்குறி. இது போன்ற பர்சனல் அஜெண்டாக்கள் அமெரிக்காவின் நலனுக்கு எள்ளளவும் உகந்ததல்ல.
5. நிதி கட்டுப்பாடு: மெகயின் என்னதான் சொல்கிறார்? கடந்த ஆண்டுகளில் ‘கட்டவிழ்த்துவிடு’ என்று தீவிரமாக இயங்கியதும், சடாரென்று பத்து நாளைக்கு முன் சடன் ப்ரேக் அடித்து, தன் நிலையை மொத்தமாக மாற்றியதும் என்பதாக இருப்பதில் எந்தப் பாதை இன்றைய நிலையில் வால் ஸ்ட்ரீட்டை வழிக்குக் கொண்டுவரும்?
ஆலன் கிரீன்ஸ்பான் காலத்து பப்பிள் எக்கானமியின் விளைவுகள் இன்று உணரப்படுகிறது. மெக்கெயின் மட்டுமல்ல, வேறு யாருமே அன்று நடந்த தவறுகளின் விளைவுகளை சரியாக யூகித்திருக்க முடியாது.
பான்னி மே, பிரட்டி மாக்கை கிரடிட் ஸ்கோர் சரியாக இல்லாதவர்கள், மற்றும் மைனாரிட்டி இனத்தவரை குறிவைத்து வீட்டுகடனுதவி அளிக்க செய்து டெமக்ராடிக் கட்சியினரின் ஓட்டுவங்கியை ஸ்திரப்படுத்திக்கொண்ட பில்க்ளின்டனை தான் வீட்டுகடனுதவி சந்தை சரிந்ததற்கு முதலில் குற்றம் சுமத்தவேண்டும்.
மெக்கெயின் பெயிலவுட் பாக்கேஜ் விவகாரத்தில் ஆடியது டிராமா. அது சரியாக வேலை செய்யவில்லை. மற்றபடி மெக்கெயினிடம் ஸ்திரமான பொருளாதார கொள்கை இல்லை. அலாஸ்காவில் கினறு தோண்டினால் எண்னை பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.
மொத்தத்தில் இந்த இருவர் மேலும் எனக்கு நம்பிக்கை இல்லை. 2012க்காக காத்திருக்கிறேன்.
நன்றி: செல்வன்.