அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமா வெற்றி பெற 75 சதவீத வாய்ப்பு உள்ளதாக, கோவை ஆரிய வைத்திய பார்மசியின் ஜோதிடர் குழு கணித்துள்ளது.
ஒபாமா வெற்றிக்காகவும், அவர் சிறந்த உடல் ஆரோக்கியம் பெறவும், கோவையில் சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கோவை ஆரிய வைத்திய பார்மசியின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார் கூறியதாவது: அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஒபாமா, அங்குள்ள மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 1961ல் பிறந்த அவரது ஜாதகப்படி, அவருக்கு இப்போது ‘வியாச (குரு) திசை‘ நடக்கிறது. அவரது ‘கர்மா’வின்படி, டிசம்பர் 2008க்குப் பின் அனைத்து விஷயங்களும் அவருக்கு சாதகமாக அமையும். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆக 75 சதவீத வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 2008 முதல் ஏப்ரல் 2009 வரையிலான காலகட்டத்தில் அவருக்கு வேலை மாற்றம் அமையும். இந்த காலகட்டத்தில் அவர் உயர்ந்த நிர்வாக பொறுப்பை அடைய வாய்ப்பு உள்ளது. ‘நிபுண யோகக்காரர்’ என்பதால் இவர் சிறந்த வாதத் திறமை உள்ளவர். இறைவனின் சகல அனுகிரகங்களும் இவருக்கு உண்டு.
ஜாதகத்தின்படி ‘நீசபங்க ராஜ யோகம்‘ உள்ள இவர், கடும் போராட்டங்களுக்குப் பின், ‘ராஜ யோக நிலை’யை அடைவார்; நம்பிக்கைக்கு உரியவர்; அடிக்கடி டென்ஷன் ஆவது மட்டுமே இவரது ஒரே பிரச்னை. அதனால், இவரது உடல் நிலை பாதிக்கப்படலாம். இவர் 2010 வரை, வாகனப் பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது. இதற்கு, ‘மிருத்யுஞ்சய ஹோமம்‘ செய்து தீர்வு காணலாம். டென்ஷனால் பணிகள், உடல் ஆரோக்கியம் பாதிக்காமல் தடுக்க, சிவபெருமானுக்கு ‘இளநீர் தாரா‘ வழங்க வேண்டும் இவ்வாறு, கிருஷ்ணகுமார் கூறினார்.
ஒபாமாவின் நலனுக்காக, கோவை, ராமநாதபுரத்திலுள்ள ஆரிய வைத்திய பார்மசியில், அதிகாலை நேரத்தில் ‘மிருத்யுஞ்சய ஹோமம்’ மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. “அதிபராக தேர்வு செய்யப்பட்டால் ஒசாமா பின்லேடனை பிடிக்காமல் ஓயப் போவதில்லை” என பிரசாரம் செய்து வரும் ஒபாமாவுக்கு, நிறைய எதிரிகள் இருக்க வாய்ப்புள்ளது. அவர்களை முறியடிக்க ‘சத்ரு சம்ஹார பூஜை’யும் நடத்தப்படுகிறது.
“ஒபாமா இந்தியாவுக்கு ஆதரவான மனநிலையை கொண்டவர். அமெரிக்கா ஒரு பெரிய நாடு என்பதால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் நன்மை பெற, அந்நாட்டில் ஒரு சிறந்த மனிதர் அதிபர் அமைய வேண்டியது முக்கியம். எனவேதான், அவரது நன்மைக்காகவும், இந்தியாவின் எதிர்கால வளர்ச் சிக்காகவும் இந்த ஹோம பூஜைகள் நடத்தப்படுகின்றன,” என, ஹோமம் நடத்துவதற்கான காரணத்தை விளக்கினார், கிருஷ்ணகுமார்.
குஜராத் முதல்வராக நரேந்திரமோடி வெற்றி பெறவும், இவர் ஹோம பூஜைகள் நடத்தியுள்ளார். “ஜோதிடம் ஒரு அறிவியல் கலை; துல்லியமாகக் கணித்தால் பரிகாரங்கள் மூலமாக பெரும் இழப்புகளை தவிர்க்கலாம். நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தலுக்கு முன், வேட்பாளரின் ஜாதகத்தை கணிப்பது நாட்டு வளர்ச்சிக்கு நல்லது,” என்று முத்தாய்ப்பாக அவர் குறிப்பிட்டார்.
நன்றி: தினமலர்
Boston Bala. why dont you send your daughter’s horoscope to krishna kumar and chek the possibility of her becoming president in 2048 :).