1. ஒபாமாவா? மெகெயினா? இரண்டும் பேரும் சரியில்லை என்று தப்பிக்கக்கூடாது. இருப்பதற்குள் எவர் ஒகே? ஏன்?
சந்தேகமேயில்லாமல் ஓபாமாதான். பல காரணங்கள் உண்டு, எனக்கு மிக முக்கியமாகப் பட்ட இரண்டு மட்டும் இங்கே (பெருவாரியான அமெரிக்க மக்கள் வாக்களிப்பதற்கு இவை அடிப்படையாக இருக்காது என்றும் கருதுகிறேன்) :
(அ) அமெரிக்காவின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது யார் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதில் அமெரிக்க நலன் மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த உலக நலனும் அடங்கியிருக்கிறது.
சோவியத் யூனியன் இருந்தவரை இரு வல்லரசுகளிடையேயிருந்த போட்டியில் இரண்டு நாடுகளும் ஓரளவுக்காவது தங்கள் ஏகாதிபத்தியச் சண்டித்தனத்தை எச்சரிக்கையுடன் கையாண்டன. அதனால்தான் ரீகன் தலைமையிலான அமெரிக்க முதலாளித்துவ ஆதிக்கவெறியர்கள் சோவியத் யூனியனை எப்படியாவது உடைத்தெறிவதில் முழுமுனைப்பாக இருந்து வெற்றியும் கண்டனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கை மட்டுப்படுத்துவதில் எந்த பெரிய நாடும் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டதில்லை.
பொதுவுடைமைப் போலியான சீனா போன்ற நாடுகள் தங்களுடைய குறுகிய தேச நலனுக்காக எல்லாவிதச் சமரசங்களைச் செய்து கொள்வது மட்டுமல்லாமல், தம்மளவில் புதிய மக்கள் விரோதச் சண்டிநாடுகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே அமெரிக்காவின் தலைவராக வருபவர் உலக ஒற்றுமைக்கும், அமைதிக்கும் முனையாவிட்டாலும் (எ.கா: ஜிம்மி கார்ட்டர் முயற்சி செய்தார்) பரவாயில்லை, சுயநலத்தின் உந்துதலால் உலக அமைதியைச் சிதைப்பவராக இல்லாமல் இருப்பதே பெரிது (எ.கா: புஷ்-சேனி கும்பல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது).
அமெரிக்காவில் உள்நாட்டில் எத்தனையோ பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகளுள்ளன. அவற்றின் மேல் முதலில் அக்கறை செலுத்துபவராகவும் இருந்தால், உலகத்தைச் சீர்குலைப்பதில் குறைவான கவனம் செலுத்தக் கூடும் (எ.கா: பில் கிளிண்டன்).
மேலும் அமெரிக்க அரசிடம் ஏகோபித்த செல்வாக்கு செலுத்தி வரும் இஸ்ரேலிய ஆதாயக் கூட்டத்தின் முழுமையான கைப்பாவையாகச் செயல்படக்கூடியவராக (எ.கா. மெக்கெய்ன் – பேலின்) இல்லாமல் இருக்க வேண்டும்.
உலகெங்கும் இசுலாமிய அடிப்படைப் பயங்கரவாதம் உருவாக முக்கியமானதொரு காரணம் அமெரிக்க அரசை ஆட்டிப்படைக்கும் இஸ்ரேலிய ஆதரவுக் கும்பல்தான். விளைவு பயங்கரவாதத்தை ஒடுக்குகிறேன் என்ற போர்வையில் பல நாடுகளில் தற்பொழுது அரசு பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது.
மெக்கெய்னுக்கும், பேலினுக்கும் இஸ்ரேல் மட்டும்தான் செல்ல நாடுகள் என்பது அவர்களுடைய வாதங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. எனவே அவர்கள் வந்தால் நிலைமை மோசமாகவே வாய்ப்பிருக்கிறது. மெக்கெய்ன்- பேலின் தேர்ந்தெடுக்கப் பட்டால் போரும், இராணுவமும் பூதாகரமான வளர்ந்து எல்லா நாடுகளிலும் மக்களை வறுமை, வேலையிழப்பு, பட்டினி என இட்டுச் செல்லும் வாய்ப்பு அதிகம்.
(ஆ) கடந்த தலைவர் தேர்தலுக்குப் பின் உருவான ஓபாமா என்ற புதிய நட்சத்திரத்தை(அல்லது பிம்பத்தை)ப் பற்றி நண்பர்கள் பேசியபொழுதெல்லாம் நான் ஓபாமாவைப் பற்றிய நல்லதொரு அபிப்ராயத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒபாமவை தமிழரங்கம் சொல்லியதுபோல் ”பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி“யாகத்தான் அல்லது சன்னாசி-சுந்தரமூர்த்தி-செல்வராஜ் போன்ற நண்பர்களின் கருத்துப்படி சரக்கில்லா வெறும் பிம்பமாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். இன்னமும் அவர்கள் எழுப்பிய ஐயங்கள் பொய்யாகத்தோன்றவில்லை. சன்னாசியின் இந்த இடுகையுடன் எனக்கு உடன்பாடில்லை என்றும் சொல்லி வைக்கிறேன். ஆனால், ஓபாமாவின் இனங்களுக்கிடையேயான சிக்கல்களைப் பற்றிய பேச்சில் தெரிந்த யதார்த்தமும், நேர்மையும் அவரைப் பற்றிய நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.
தலைமையும், வழிகாட்டலுமில்லாமல் வெள்ளை மேட்டுக்குடியினரிடம் பல துறைகளில் போட்டியிட இயலாத கருப்பினத்து மக்களிடையே தன்னம்பிக்கையுடன் சில மாற்றங்களைக் கொண்டுவர ஓபாமாவின் தேர்வு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
மிக எளிமைப் படுத்திச் சொல்வதாயிருந்தால், இராஜாஜியையும், சிதம்பரத்தையும் விட கல்வியறிவிலும், மேதாவித்தனத்திலும் பின்தங்கியிருந்தாலும், கருணாநிதியும், மாயாவதியும் ஆட்சிக்கு வந்தபின்னால் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏற்பட்ட தன்னம்பிக்கை மிக முக்கியமானது என்று நான் கருதுகிறேன்.
மூதறிஞர் என்று சொல்லப் பட்ட இராஜாஜி சாதித்ததை விட கல்வியறிவும், அனுபவமுமில்லாத எம்.ஜி.ஆர் சாதித்தது எவ்வளவோ மேல்.
மற்றபடி மருத்துவ நலம், கல்விக்கட்டணங்கள், வேலை வாய்ப்பு என எத்தனையோ உள்நாட்டு விசயங்களில் பெரிய மாற்றங்களையெல்லாம் கொண்டுவரக்கூடிய சூழ்னிலையில் அமெரிக்கப் பொருளாதாரம் இன்றைக்கில்லை. எனவே யார் வந்தாலும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை.
2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?
//தலைமையும், வழிகாட்டலுமில்லாமல் வெள்ளை மேட்டுக்குடியினரிடம் பல துறைகளில் போட்டியிட இயலாத கருப்பினத்து மக்களிடையே தன்னம்பிக்கையுடன் சில மாற்றங்களைக் கொண்டுவர ஓபாமாவின் தேர்வு மிகப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.// இந்த வரிகள் முழுக்க உண்மை, கறுப்பர்களில் பலர் ( அனைவரும் என்றே சொல்லாம்) இந்த வரலாற்று நிகழ்வுக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒபாமா இஸ்ரேலுக்கு எதிரானவர் என்பது பெரிதாக புழக்கத்திலிருக்கும் ஒரு தவறான கருத்து, இஸ்ரேல் (ஆதரவு) இல்லாமல் அமெரிக்கா இல்லையென்பதே உண்மை. ஒபாமாவும் முழுமையான இஸ்ரேல் ஆதரவு நிலையில்தான் இருக்கிறார் என்பது குறித்து மேலே படிக்க இங்கே செல்லவும்,
http://www.cnn.com/ELECTION/2008/issues/issues.israel.html
பிங்குபாக்: மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? - சொ. சங்கரபாண்டி « US President 08
//சன்னாசியின் இந்த இடுகையுடன் எனக்கு உடன்பாடில்லை என்றும் சொல்லி வைக்கிறேன்//
சங்கரபாண்டி – எதில் உடன்பாடில்லை என்று கூறமுடியுமா? ஒரு ஆர்வத்தில்தான் கேட்கிறேன் – ஒபாமாவின் professorial தொனியை, எதிர்த்துப் பேசத் திராணியில்லாமல் சும்மா நின்றதை இடித்து எழுதப்பட்டது அது. அந்த விவாதம் நிகழ்ந்த நேரத்தில் பொருளாதாரம் இவ்வளவு அடிவாங்கவில்லை; பொருளாதாரம் மட்டும் அடிவாங்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு பார்க்கும் 8-10 சதவீத வித்தியாசம் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்தப் பதிவு எழுதியதற்கு முன்பிருந்தே, முதற்கட்ட உட்கட்சித் தேர்தல்கள் காலத்திலிருந்தே, ஒபாமா/மெக்கெய்ன்/க்ளிண்டன் மூவரில் ஒபாமா பக்கம்தான் எனது சாய்வு (inclination, not support) – தற்போது ஜனாதிபதியாக வரவேண்டுமென்று நான் நினைப்பதும் ஒபாமாவைத்தான். அறிவியல் குறித்த பார்வைகள், கருச்சிதைவு குறித்த, உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்த, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான உரிமைகள் குறித்த, வெளியுறவுக் கொள்கை குறித்த என்று எத்தனையோ விஷயங்களில் அமெரிக்க வலதுசாரிகளுடன் ஒத்துக்கொள்வதற்கு என்ன இருக்கிறது? மெக்கெய்ன், மொண்டானா கரடி டி.என்.ஏவை ஆராய்ச்சி செய்வதை pork barrel spending என்கிறார், ப்ளானடேரியத்துக்கு வாங்கும் ப்ரொஜக்டரை வீண்செலவு என்கிறார் – ரீகன் காலத்தில் தொடங்கிய(தாகச் சொல்லப்படும்) இந்த anti-intellectual கோமாளித்தனம், ரீகன் மண்டையைப் போட்ட காலத்தில் அல்சைமர் வந்து அவதிப்பட்ட பின்பு நான்ஸி ரீகனும் வலதுசாரி உயிர்க்காப்பான் மருதுபாண்டிகள் சிலரும் ஞானோதயம் வந்து எம்ப்ரியானிக் ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கு ‘ஆதரவு’ தெரிவித்தது மாதிரி, நாளைக்கு ஜான் மெக்கெய்ன் முகத்திலிருக்கும் புற்றுநோய் பெருகி, அரை முகத்தை அறுத்து எடுத்து பேட்மேன் படத்தின் two-face மாதிரி ஆனால், கரடியில் என்ன கரப்பான்பூச்சியின் ஆசனவாய் குறித்த ஆராய்ச்சிக்குக்கூட நாளைக்கு ஆதரவு தெரிவிப்பார் – கரப்பான்பூச்சியிலிருந்து வரும் மருந்து முகத்தைத் தேற்றுகிறதென்றால் கசக்கவா போகிறது – அதுவரைக்கும் பாப்புலிஸ பிட்டுகள் நாலைப் போட்டு காலத்தை ஓட்ட வேண்டியது தானே. வலதுசாரிகள் என்ன மாதிரியான தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் என்பதற்கு அவர்கள் நிறுத்தியிருக்கும் துணை ஜனாதிபதி லட்சணத்தைப் பார்த்தாலே விளங்கவில்லையா – மெக்கெய்ன் கரடி குறித்து சொன்னால் சாரா பேலின் பழ ஈ குறித்து உளறி வைக்கிறார் – அதுதானே, டைனோசார்களும் மனிதர்களும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தார்கள் எனும்போது இதெல்லாம் எம்மாத்திரம். இந்த பழ ஈ குறித்த உளறல்களைக் கேட்டால் தன் கல்லறைக்குள் தாமஸ் மார்கன் புரண்டு புரண்டு படுத்து சவப்பெட்டியை நெற்றியால் முட்டி மோதி அழுதிருப்பார்!! ஆக, ஏழு நாளில் லோகம் முழுதும் உருவான கதைக்கு எதிரான மரபியலையும் ஒரு குத்து குத்தியாயிற்று, ஃபிரான்ஸையும் ஒரு இடி இடித்தாயிற்று – you betcha!!! நம்ம ஊரில் ‘ஜெயலலிதா அம்மா என்னா நெறம், சுண்டினா நெத்தம் வர்ர மாதிரி’ மாதிரி இங்கேயும் ‘we got a connexion’ என்று சாரா பேலினுக்கும் நா தழுதழுக்கும் ஒரு கும்பல் – எல்லோரும் யோசித்து ஓட்டுப் போட்டால் என்ன ஆகும் உலகம்?
ஒபாமா சொல்வது அனைத்தும் உண்மை என்று நினைக்கிறீர்களா? கடவுள் விவகாரத்தில் அவர் சொல்வது உண்மை இல்லை என்கிறேன் நான் – இந்த faith மாதிரி தூண்டில்களைப் போடாமல் பைபிள் பெல்ட்டில் பருப்பு வேகாது என்று தெரிந்து தெளிவான அரசியல் ஆதாயங்களுக்காக கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்கிறார் என்பது எனது யூகம் – அது தவறு என்பதல்ல எனது கருத்து – இது எனது கருத்து மட்டுமல்ல – பில் மாஹர் போன்றவர்கள் ஒபாமாவின் இறைநம்பிக்கை குறித்து இதைச் சொல்லி வருவதை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். இந்த faith புண்ணாக்கு என்று ஒபாமா தொடர்ந்து சொல்லும்போதெல்லாம், அசலில் ஓட்டுக்காகப் பொய் சொல்வதாயிருக்கவேண்டும் அது என்று நினைத்துக்கொள்வேன். மெக்கெய்னும் ஒபாமாவும் முதலில் ஒரே மேடையில் தோன்றியது ரிக் வாரனின் saddleback சர்ச்சில் என்று இருக்கும்போது நாத்திகம் பேசினாலும் தேர்ந்தெடுக்கப்பட இதென்ன தமிழ்நாடா? ஜனநாயக முறைப்படி ஓட்டுப் போட்டு கம்யூனிஸ்டு கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட இதென்ன கேரளாவா வங்காளமா? ஒபாமா கத்திமேல் நடப்பது போல தனது பிரச்சாரத்தைக் கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார் – இது வரை. கறுப்பர்கள் குறித்து சொல்லப்படும் code words குறித்து சமீபத்தில் நிறையச் சொல்கிறார்கள் – ஏதோவொரு மாநிலத்தில் வறுத்த கோழி (fried chicken), தர்பூசணி (watermelon) மாதிரி ஆஃப்ரிக்க அமெரிக்கர்கள் குறித்தான மறைமுக இழிபதங்களையும் ஒபாமாவையும் இணைத்து, இப்போது சோஷியலிஸத்தையும் ஒபாமாவையும் இணைத்து என்று எத்தனை மறைமுகத் தாக்குதல்கள்? கார் பார்க்கிங்கிலிருந்து பணிபுரியும் இடம் வரை செல்லும் ஷட்டிலை ஓட்டும் டிரைவரின் சாப்பாட்டுப் பையில் ஒருமுறை சாம்ஸ்கியின் Necessary illusions துருத்திக்கொண்டிருந்தது – அவரையும் சோஷியலிஸ்டு, கம்மி திம்மி என்று சொல்லி உள்ளே தூக்கிப் போடவேண்டியதுதான் போல!! இந்த மறைமுகமான தாக்குதல்கள் நமது ஊரில் அமோகமாக நடக்கும். கல்லூரிக் காலகட்டத்தில் ஓங்குதாங்கான ஒரு சக மாணவன் – சைஸை வைத்து அனிமல் என்று பட்டப் பெயர் என்று வைத்துக்கொள்ளுங்களேன் – ஏதோவொரு விளையாட்டான தருணத்தில் என் நண்பனொருவன் அவனை ‘கோட்டாவுல வந்தவந்தானே’ என்றுவிட்டு அவன் சுதாரித்ததும் அவசரமாக ‘அனிமல் கோட்டா மச்சான்’ என்றான் – சொன்னது என் நண்பன் – நண்பனானாலும் நாதாரி நாதாரி தானே? இதே மாதிரி கோஷ்டிகள் உள்ளூரில் கருத்துரீதியான வலதுசாரியாக இருந்து ‘மைனாரிட்டியாவது மசுராவது, உடாதே மிதி அவனை’ சௌகரியப் பெரும்பான்மை (convenient majority) கோஷ்டிகள் இங்கே அமெரிக்கா வந்து அசௌகரியமான சிறுபான்மையானதும் (inconvenient minority) முக்காடு போட்டுக்கொண்டு ‘நான் லிபரல், என் ஓட்டு டெமாக்ரடிக் கட்சிக்கு’ என்று கூசாமல் சொல்வதை கணிசமாகப் (பல்கலைக்கழகச் சூழலிலாவது) பார்த்திருப்பதால், சப்போர்ட் ஒபாமா என்னும் அனைவரையும் சுதி சுத்தமான லிபரல்கள் என்று நான் நம்பத் தயாரில்லை 🙂
//ஒபாமா இஸ்ரேலுக்கு எதிரானவர் என்பது பெரிதாக புழக்கத்திலிருக்கும் ஒரு தவறான கருத்து,//
நம்பி, உங்கள் கருத்துக்கு நன்றி, நான் மறுக்கவில்லை. நான் சொல்ல வந்ததும் அதுவேதான். இஸ்ரேல் லாபியின் கைங்கர்யமே அதுதான், அமெரிக்க அரசியலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இல்லையென்றால் அவ்வளவுதான். உலகின் மற்ற நாடுகள், தம் நாட்டின் ஆதாயத்தின் அடிப்படையில் உலகப் பிரச்னைகளை அணுகும், அமெரிக்காவோ இஸ்ரேலின் ஆதாயத்தின் அடிப்படையில் அணுகும். ஆனால் இஸ்ரேலுக்காக ஈராக் போன்ற போர்களில் தொடர்ந்து அமெரிக்க ஈடுபட வேண்டுமா என்பதில் ஒபாமா-பைடன் அணி வேறுபடுகிறது என்று நினைக்கிறேன்.
நன்றி – சொ.சங்கரபாண்டி
.//சங்கரபாண்டி – எதில் உடன்பாடில்லை என்று கூறமுடியுமா? ஒரு ஆர்வத்தில்தான் கேட்கிறேன் – ஒபாமாவின் professorial தொனியை, எதிர்த்துப் பேசத் திராணியில்லாமல் சும்மா நின்றதை இடித்து எழுதப்பட்டது அது.//
சன்னாசி, நீங்கள் இப்பின்னூட்டத்தில் மேலே குறிப்பிட்ட வரிகளுக்குக் கீழே சொல்லியுள்ள உங்கள் கருத்தை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே ஒத்துப்போகிறேன். குறிப்பாக கடைசி வரிகளில் வழக்கம் போல் என்னைச் சிரிக்கச் செய்தீர்கள். ஒபாமா அமெரிக்க பெரும்பான்மை ஏற்புக்காக நிறைய நடிக்கிறார் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். இன்னும் சொல்லப் போனால் இங்கு நான் சுற்றி வளைத்துச் சொல்லப் போவதும் அதுவே 🙂
நான் உடன்பாடில்லை என்று சொன்னது உங்களது இடுகையில் சொல்லப் பட்ட ஒரு கருத்தை மட்டுமே. “அரசியலின் குறைந்தபட்ச அரிச்சுவடி கூட தெரியாத, அல்லது தெரிய விருப்பமில்லாத” என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதை நீங்கள் இந்தப் பின்னூட்டத்திலும் ”ஒபாமாவின் professorial தொனி, எதிர்த்துப் பேசத் திராணியில்லாமல் சும்மா நின்றது” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அவர் அப்படி நின்றது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கான காரணமாக நீங்கள் சொன்னதில் நான் உடன்படவில்லை.
”ஒபாமாவை சன்னாசி-சுந்தரமூர்த்தி-செல்வராஜ் போன்ற நண்பர்களின் கருத்துப்படி சரக்கில்லா வெறும் பிம்பமாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். இன்னமும் அவர்கள் எழுப்பிய ஐயங்கள் பொய்யாகத் தோன்றவில்லை” என்று உங்களுடன் நான் ஒத்துப்போவதைக் குறிப்பிட்டேன். கூடவே ஒரு டிஸ்கிளைய்மரைச் சேர்த்ததற்கான காரணம், அதிபருக்கான விவாதங்களில், குறிப்பாக முதல் விவாதத்தில், ஒபாமா அப்படி நடந்து கொண்டதற்கான காரணம் ஒபாமாவின் அரசியல் (அறிவி/அனுபவமி)ன்மையென்று நான் நினைக்கவில்லை. அதைத்தான் உடன்பாடில்லை என்று சொன்னேன். இதைப் பற்றியே வேறு சில நண்பர்களுடன் முன்பு மின்னஞ்சலில் விவாதித்தேன். அதைச் சுருக்கமாக இங்கு கீழே தருகிறேன்.
ஒபாமா ஜனநாயகக் கட்சி முன்னோட்டத் தேர்தலில் ஹில்லரி கிளிண்டனுடன் விவாதத்தில் ஈடுபட்டபொழுது பெரும்பாலான பொருள்களில் நன்றாகத்தான் விவாதித்தார் என்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஆனால் அதிபர் தேர்தல் விவாதங்களில் மெக்கெய்ன் எந்தவித அறிவுப்பூர்வமான விவாதத்திலும் ஈடுபடவில்லையென்பது பெரும்பாலோருடைய கணிப்பு. முதல் விவாதத்தில் அவர் ஒபாமா மேல் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சியை எளிதாகக் காண முடிந்தது. தன்னுடைய வியட்நாம் போர் மற்றும் இராணுவ அனுபவம், பல ஆண்டுகள் செனட்டர் அனுபவம் போன்றவற்றின் முன்னால் ஒபாமா ஒரு தூசு, அப்படிப்பட்ட ஒபாமா தன்னை எதிர்த்துப் போட்டியிடுவது தனக்கு இழுக்கு என்ற ஆணவம் மட்டுமே காரணமல்ல என்று நினைக்கிறேன். இங்கு நான் எச்சரிக்கையாக எழுத வேண்டும். மெக்கெய்னுடைய கண்கள் மற்றும் உடல்மொழிகளில் இலேசான இன மேலாதிக்க உணர்வு இருந்ததாகப் பட்டது எனக்கு. இதை இனவெறி என்றோ, நிறவெறி என்றோ உருவகப் படுத்திச் சொல்லவில்லை. மெக்கெய்ன் போன்று நம்முடைய அலுவலகச் சூழல்களில் நிறைய வெள்ளையர்களைக் காணமுடியும். ”கருப்பர்களையோ மற்ற இனத்தையோ சமமாக நடத்துவேன் அவர்கள் எனக்கு நிகராக வரும்வரை. எனக்கு நிகராவோ அல்லது மேலாகவோ வருவதை சகித்துக் கொள்வது கடினம்” என்ற குணம். இப்படியான குணத்தை இங்கு பெரும்பான்மையான நிறுவனங்களில் காண முடியும். இந்தியாவில் சாதிகளிடையே இப்படியொரு குணத்தை மிக அதிகமாகக் காண முடியும். கிளிண்டன் போன்ற லிபரல்கள் அப்படி நினைப்பவர்கள் அல்ல என்று நினைக்கிறேன். ஆனால் மெக்கெய்ன், புஷ், (லீபர்மேன் ?) போன்றவர்கள் அப்படியென்று நினைக்கிறேன்.
அடுத்து எதிர்க்கோணத்திலிருந்து அலசுவோம். ஒபாமா எல்லா வகைகளிலும் வெள்ளையர்கள் விரும்புவது போல தன்னுடைய அறிவையும், திறமைகளையும், பிம்பத்தையும் வளர்த்து வருகிறார். ஆனாலும் அவருக்குள் உள்ளூற ஒரு பயம் இருந்து கொண்டேயிருக்கிறது என்று தெரிகிறது. அதாவது ஏதாவது ஒருகட்டத்தில் தான் வெள்ளையர்களால் ஏற்றுக் கொள்ளப் படாமல் போய்விடுவோமோ என்ற கவலை. மெக்கெய்ன் வலிந்து தன்னைச் சீண்டினாலும், தான் அவரை அவமதிப்பது போல் ஒரு தோற்றத்தைக் கொடுத்து அந்தக் கட்டத்தைத் தொட்டுவிடக்கூடாது என்ற ஒரு தவிப்பு. அத்தவிப்பை அவருடைய முதல் விவாதத்தில் அதிகமாகக் காண முடிந்தது. மீண்டும் நம்மூர் எடுத்துக்காட்டு – இந்தியச் சாதியமைப்பில் கீழேயிருந்து வருபவர்களிடம் இப்படியொரு தவிப்பை எளிதாகக் காண முடியும்.
ஹில்லரி போன்றவர்களிடம் அப்படியொரு உணர்வே ஒபாமாவுக்கு வரவில்லை, ஏனெனில் ஹில்லரி அவரிடம் மிகச் சாதாரணமாக அல்லது சகஜமாக (good comfort level) நடந்து கொண்டார். இப்படியான good comfort level-க்கான இன்னொரு எடுத்துக்காட்டு, பைடன் – பேலின் விவாதத்தில் பைடன் பேலினுடன் நடந்து கொண்ட முறை.
நான் சொல்ல நினைத்ததைச் சரியாகச் சொல்லி யிருக்கிறேன் என்று நினைக்கிறேன். முன்பே சொன்னது போல் ஒபாமா அமெரிக்கப் பெரும்பான்மை ஏற்பிற்காக சர்க்கஸ் கம்பியில் நடப்பது போல் போய்க் கொண்டிருக்கிறார்.
நன்றி – சொ.சங்கரபாண்டி
சமீபத்தில் வாசித்தது: Why the Democrats Keep Losing National Elections | Newsweek Politics: Campaign 2008 | Newsweek.com: “Rovean tactics alone do not win the Republican Party elections. This is a center-right country, and Democrats ignore this at their own peril.”