சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி


பத்ரி:

1. தமிழக அரசியல் களத்திற்கும் அமெரிக்க அரசியல் களத்திற்கும் என்ன ஒற்றுமை?

இரண்டு தேர்தல்களிலும் மக்கள் அனைத்து ‘வயதுக்கு வந்தவர்களும்’ வாக்களிக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு பொருத்தமும் இல்லை. அமெரிக்கத் தேர்தலில் இரண்டே இரண்டு ‘அங்கீகரிக்கப்பட்ட’ கட்சிகள்தான். சுயேச்சை வெற்றிபெறுவது கடினம். தேர்தல் கூட்டணி என்பது காணப்படாத ஒன்று.

2. அங்கு நடக்கும் தேர்தலுக்கும், இங்கு நிகழும் தேர்தலுக்கு ஆறு வித்தியாசங்கள் சொல்ல முடியுமா?

1. தமிழகத்தில் கொள்கை குறைவு – அல்லது இல்லவே இல்லை. வெறும் வாக்குறுதிகளும் ஹை-வோல்டேஜ் பிரசாரங்களும் மட்டுமே. அமெரிக்காவில் கொள்கைகளைப் பற்றி அலசுதல் அதிகம். மக்களுக்கு சற்றே அதிகமாக மதிப்பு கொடுக்கப்படுகிறது.

2. தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் பெரும்பாலும் டம்மிகள். தலைவர்களைப் பொருத்தும், கூட்டணி பலத்தைப் பொருத்துமே வெற்றியும், தோல்வியும். அமெரிக்காவில் உள்ளதே இரண்டு கட்சிகள்தான். கூட்டணி கிடையாது. ஒவ்வொரு தொகுதியிலும் யார் நிற்கிறார்கள் என்பதைப் பொருத்தும் அந்த இடத்தில் எந்தக் கட்சிக்கு செல்வாக்கு அதிகம் என்பதைப் பொருத்தும்தான் ஜெயம்.

3. தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பொறுக்கிகள், ரவுடிகள், என்கவுண்டரில் போட்டுத் தள்ளப்பட்ட ரவுடிகளின் மனைவிகள் என்று மணி மணியான வேட்பாளர்கள் களத்தில் நிற்பது சகஜம். அமெரிக்காவில் அந்த அளவுக்கு மோசம் என்று சொல்லமுடியாது.

4. தமிழக தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மக்கள் ஜே ஜே என்று கூடுவார்கள். நிறைய நேரம் காத்திருந்து, அம்மாவோ, அய்யாவோ கையசைத்து நாலு வார்த்தை பேசுவதைக் கேட்பார்கள். அமெரிக்காவில் கன்வென்ஷன் தவிர வேறு எங்கும் கூட்டம் சேரும் என்று சொல்ல வாய்ப்பே இல்லை.

5. அமெரிக்காவில் தேர்தல் செலவுக்கு எப்படிப் பணம் வசூலாகிறது என்று ஓரளவுக்கு டிராக் செய்யமுடியும். தமிழகத்தில் சான்ஸே இல்லை. ஆனால், பெட்டி பெட்டியாக பணம் மட்டும் செலவாகிறது.

6. ஆனால் ஒன்று… மத்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தமிழகத் தேர்தல்களில் தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்பு இல்லை. அமெரிக்கத் தேர்தல்களில் மிகவும் நுண்ணிய வகையில் தேர்தல் தில்லுமுல்லுகள் எப்பொதும் நடக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

3. இலவச கலர் டிவி போல் ஒபாமாவும் ‘வறியவர்களுக்கு வரி விலக்கு’, ‘வீட்டின் விலைமதிப்பு குறைந்ததற்கேற்ப வங்கிக்கடன் தள்ளுபடி’ என்று பற்பல சலுகைகளை வாக்கு வங்கிக்காக அள்ளி வீசி வருகிறார். ‘NAFTAவை மீண்டும் பேரம் பேசுவேன்’ போன்று கட்சிக்குள் நடக்கும் ப்ரைமரியில் ஜெயிக்க ஒரு பேச்சு. பொதுத் தேர்தலில் ஒரு மாகாண வேட்பாளர்களைக் கவர இன்னொரு பேச்சு; அதே நாளில் இன்னொரு மாகாணம் சென்றால் முரணாண மற்றொரு பேச்சு. இன்னும் ஒபாமாவை நம்புகிறீர்களா?

ஒருமித்த கொள்கைகளை முன்வைப்பதில் சில பிரச்னைகள் உள்ளன. ஒருவருக்கு ஏற்புடையது இன்னொருவருக்கு இல்லை. ஆனால் தேர்தலில் ஜெயிக்க அனைவரது – அல்லது பெரும்பான்மையினரது – வாக்குகள் தேவை. எனவே சில இடங்களில் மழுப்பவேண்டியுள்ளது. ஒபாமா இதனைச் செய்கிறார். மற்றவர்கள் அதிகமாகச் செய்கிறார்கள். இதெல்லாம் நியூட்ரல் வாக்காளர்களை எப்படியாவது கவர்வதற்கான வழி.

இது எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஒபாமா, மெக்கெய்னை விட 100 மடங்கு சிறந்தவர் என்பது என் கருத்து.

4. பச்சை பார்ட்டி, ரால்ஃப் நாடர், பாப் பார் என்று இன்னும் சிலர் கூட அமெரிக்க அதிபராக முயற்சிக்கிறாங்களே… அவங்களப் பத்தி உங்க எண்ணங்களை சொல்லுங்களேன். இவர்களை ஏன் நீங்க ஆதரிக்கவில்லை?

இவர்கள் எல்லாம் ஒருவகையில் சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள். அமெரிக்கத் தேர்தல் முறையில் இவர்கள் யாருமே ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை. அந்த முறையை மாற்றுவதற்கான வழிமுறையில் இறங்காமல் கையில் இருக்கும் காசைக் கொட்டி வீணாக்கி, கோமாளியாகத் தோல்வியடைபவர்களை வேறு என்ன சொல்லலாம்? இவர்களை நான் அதற்கு ஆதரிக்கவேண்டும்?

5. திடீரென்று தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினால் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டு நடிகரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்? ஏன்?

வடிவேலு.

ஜார்ஜ் புஷ்ஷைவிட மோசமாக இவரால் நடந்துகொள்ள முடியாது. ஒருவேளை அமெரிக்கா படுவேகமாக சுபிட்சமான நாடாக ஆகவும் வாய்ப்புகள் உள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது நிறம், பல கருப்பர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும். வெள்ளை மாளிகையில் கருப்பு அதிபர்.

பத்ரி

9 responses to “சுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க தேர்தலும்: வாரயிறுதி விஐபி

  1. ஒபாமா மெக்கெயினைவிட 100 மடங்கு சிறந்தவர் என்று சொல்வது அடிப்படையில்லாத கருத்து. இருவருமே சாதாரண வாக்காளரை எந்த வகையிலும் impress செய்யவில்லை என்பதும் இன்னும் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதை தீர்மானிக்காதவர் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.

    புஷ் இராக் போர் விவகாரம், அயல்நாட்டு கொள்கைகளில் மிக மோசமான முடிவெடுத்த போதிலும் முதியோருக்கான பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள் வாங்க, இலவச அராசாங்க மருத்துவமனைகள் அதிகரித்தல்(FQHC), போன்ற சில நல்ல செயல்களையும் செய்திருக்கிறார்.

    பொருளாதார சரிவும், காலின் பாவெல் போன்றோரின் ஆதரவும், சாராவின் கோமாளித்தனமும் ஒபாமாவிற்கு வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும். ஆனால் அவருக்கு வரும் வாக்குகள் முழுக்க அவருக்கான ஆதரவான வாக்குகளாக இருக்காது என்பது என் கருத்து.

  2. பத்ரியின் கடைசி கேள்விக்கான பதிலை நகைச்சுவையாகக் கூட ஏற்க முடியவில்லை. கருப்பு என்ற நிறத்திற்கா அந்த இனம் இவ்வளவு மிதி வாங்கியது? ஜார்ஜ் புஷை கிண்டலடிப்பதாக நினைத்து ஒரு இனத்தையே இழித்த மாதிரி இருக்கிறது.

    இது என் கருத்து மட்டுமே 😦

  3. எனது கணிப்பில் பில் கிளிண்டன் ஒரு நாத்திகவாதியாகத்தான் இருக்க முடியும்…ஆனால் அவரால் நான் கிறிஸ்து என்பவர் கடவுள் அல்ல என்று தனது மனதில் நினைப்பதைக் கூறி தேர்தலில் செயிக்க முடியுமா?

    ஆனால் அதே அளவு மத நம்பிக்கையுள்ள தமிழகத்தில், நாத்திகர்களால் ஆட்சியை பிடிக்க முடிந்ததே

  4. GOOD » Third Party Candidates»: “Bob Barr and Cynthia McKinney won’t be the only also-rans in the pack of presidential contenders. Most people know about the Libertarian and Green parties’ candidates, but there are others–aside from the Dems’ and the GOP’s, of course–and they have their own ideas about how to govern this country.”

  5. //மிகவும் நுண்ணிய வகையில் தேர்தல் தில்லுமுல்லுகள் எப்பொதும் நடக்கின்றன //

    என்று சொல்வதும் ஒருவகை பொதுபுத்திதான் :-). மனிதன் நிலாவுக்கு சென்றதாக சொல்லபடுவது வெறும் கட்டுக்கதை என்று ஆதாரங்களுடம் (?!?!) சொல்லப்படுவது போல் வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக ‘எல்லாம் தெரியாதா! இவன் எப்படி ஜெயிச்சிருப்பான்னு’ எனற மனப்பாண்மை.

    இனப் பாகுபாடு உண்டு. ஐரோப்பியர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், ஸ்பானியர்கள் என்று இனப்பாகுபாடில்லாத உயர்வு மன்ப்பாண்மை உண்டு. எல்லாருக்கும் சுயநலத்திற்கு அப்புறம்தான் மற்ற நலன்கள். இது எல்லாவற்றிலும் மேலாக திறந்த புத்தகமாகத்தான் நடைமுறைகள் இருக்கின்றன. முறைகேடுகள் நடந்திருப்பதாக சம்சயம் கிடைத்தாலே போதும், வாட்டர்கேட் மாதிரி பின்னி பெடலெடுத்து விடுவார்கள்.

    //வடிவேலு.

    ஜார்ஜ் புஷ்ஷைவிட மோசமாக இவரால் நடந்துகொள்ள முடியாது. ஒருவேளை அமெரிக்கா படுவேகமாக சுபிட்சமான நாடாக ஆகவும் வாய்ப்புகள் உள்ளன.//

    காமெடிக்காக எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். 8 ஆண்டுகள் உலக அரங்கில் வளர்ச்சி பெற்ற நாட்டின் பிரதிநிதியாக குப்பை கொட்டுவதெல்லாம் சாமானியமான விசயமல்ல. அதுவும் இவ்வளவு மோசமான விமர்சனங்களையும் எதிர்கொண்டு. வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டத்தில் மூக்குக்கு கீழே ஒருவர் தன்னை கிண்டலாக விமர்சிக்க புஷ் நிகழ்த்திய உரை யுட்யூபில் காணக் கிடைக்கின்றது. ஈராக் போரைத் தவிர்த்து அவருடைய செயல்பாடுகளில் வேறு குறைகள் கிடையாது. ஆனால் அந்த ஒரு விசயமே ஒட்டுமொத்த அமெரிக்காவையும் பிடித்து ஆட்டும் ஹாலோவீன் மூடநம்பிக்கைப் போல தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

    மேலும் வாசிக்க:

    Beyond Diebold: 10 Ways to Steal This Election

    Behind the GOP's voter fraud hysteria | Salon News: “As Republicans warn of catastrophe at the polls, an expert on election fraud explains the real partisan hoax — the suppression of Democratic votes.”

  6. பிரபு,

    —எனது கணிப்பில் பில் கிளிண்டன் ஒரு நாத்திகவாதியாகத்தான் இருக்க முடியும்…

    இது அனுமானம். அவர் கோவிலுக்கு செல்வது, தொழுவது மட்டுமே நிதர்சனம்.

    இறைமறுப்பாளர் வீட்டுக்குள்ளோ பாக்கெட்டுக்குள்ளோ கடவுள் வைத்திருப்பது தெரியாது. அரசியல்வாதிகளுக்கு உள்ளொன்றும் புறமொன்றும் தோற்றமாக்குதல் வழமை.

    —ஆனால் அவரால் நான் கிறிஸ்து என்பவர் கடவுள் அல்ல என்று தனது மனதில் நினைப்பதைக் கூறி தேர்தலில் செயிக்க முடியுமா?

    மனதில் நினைப்பதைக் கூறி எந்தத் தேர்தலில் யார் ஜெயித்து இருக்கிறார்கள்?

    இலவசமாக கொடுத்தால்தான் வாக்கு விழும் என்பதால் உங்களுக்கு ‘சும்மா கொடுக்கிறேன்’ என்பதை வெளிப்படையாக சொல்லமுடியாது.

    —ஆனால் அதே அளவு மத நம்பிக்கையுள்ள தமிழகத்தில், நாத்திகர்களால் ஆட்சியை பிடிக்க முடிந்ததே—

    ஒன்றே குலம்; ஒருவனே தேவன்?

  7. —சொல்வதும் ஒருவகை பொதுபுத்திதான் …. வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக ‘எல்லாம் தெரியாதா! இவன் எப்படி ஜெயிச்சிருப்பான்னு’ எனற மனப்பாண்மை

    அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு நடக்கவில்லையா?

    1. விடுமுறை: வேலைக்கு செல்பவர்கள் வாக்களிக்க இயலாதவாறு நேரம் ஒதுக்காமை.

    2. நீண்ட வரிசை: வேலைக்கு நடுவில் சென்று வாக்களிக்க முயன்றாலும், அதை பலவீனப்படுத்துமாறு நீண்ட வரிசை அமைந்து விடுமாறு மிக மெதுவான செயல்முறை. (அமெரிக்காவில் வேறு எங்கும் நீண்ட க்யூ இல்லாதது இங்கு கவனிக்கத்தக்கது)

    3. மிரட்டல்: சரியான விசா இல்லாத அக்காவோ, ஒன்று விட்ட தம்பியோ நாடுகடத்தப் படுவார்கள் என்னும் மிரட்டல் ஒலி தொனிக்கும் சரிபார்த்தல் (உங்க வாக்கு அளிக்க உங்க ஐடென்ட்டி மட்டும் சரி பார்த்தால் போதுமே?)

    4. விருப்பமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு: வெள்ளை வாக்குகளை (அ) கறுப்பின மக்களின் பெரும்பான்மை வருமாறு அஷ்ட கோணலுடன் கூடிய தொகுதி வடிவங்களை உருவாக்கிக் கொள்வது.

    5. Diebold: வாக்குப்பதிவு முடிந்தவுடன், ஒரு வாக்கு கூட விழவில்லை என்று சொல்லும் கணினி; குடியரசுக்கு குத்தினால் ஜனநாயகமாக மாற்றிப் போட்டுக் கொள்ளும் தொடு எந்திரம்.

    6. கடவுச்சீட்டு: ருசியாவைத் தொட்டுவிடும் தூரத்தில் உள்ள துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின் கூட வெகு சமீபத்தில்தான் கடவுச்சீட்டு எடுக்கிறார். அரிசோனா போன்ற பல மாகாணங்களில் பாஸ்போர்ட் இல்லாவிட்டால் வாக்கு போட முடியாது.

    இது போல் தொல்லைப்படுத்தும் ஐடென்ட்டி தேவைகள் குறித்த பதிவு: அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு – மெகயினை வெல்லவைக்கும் சூட்சுமம் – வாக்காளர் அடையாள அட்டை

    7. குற்றஞ்சாட்டப்பட்டவர்/குற்றவாளி: எஃப்.ஐ.ஆர் போட்டால் இந்தியாவில் பிரச்சினை என்பது போல், ஏதாவது கிரிமினல் வழக்கில் உள்ளே தள்ளப்பட்டிருந்தால் ஜனநாயக உரிமை மறுப்பு. இதில் பெயர் குழப்பங்கள், குளறுபடிகள், தொடர் விசாரிப்புகள், முத்திரை குத்துதல் என்று தொடரும் தகிடுதத்தங்கள்.

    8. கல்லூரி மாணவர்: ‘உங்க குழந்தையை நீங்க வருமான வரியில் சேர்த்துக் கொள்ள முடியாது’ என்று பொய்யாக அச்சுறுத்துவதில் ஆரம்பித்து, நியூ யார்க்கில் படிக்கும் மாணவர், சொந்த ஊரான அரிசோனாவில்தான் வாக்களிக்கலாம் என்று நிராகரிப்பது வரை பொய்யான பயமுறுத்தல் கலந்த வதந்திகள்.

    9. உச்சநீதிமன்றம்: இதெல்லாம் போதாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்சநீதிமன்றம். மக்கள் என்ன நினைத்தால் என்ன? நாங்கள் நினைப்பவர்தான் அதிபர் என்பார்கள். இரண்டாண்டு கழித்து உண்மையான வெற்றியாளரைத் தெரிந்து கொள்ளலாம். நம்ம ஊர் பொம்மை கேஸ் மாதிரிதான் இதுவும்.

    அட போங்க ஐயா…

    ஹாய்யாக காரில் வாக்குசாவடிக்கு போனோமா! கட்சி கொடுத்த சீட்டை வைத்து அடையாள மை வாங்கிக் கொண்டோமா; பிரியாணி சாப்பிட்டோமா என்பது எங்கே?

    இங்கே மாதிரி வேலையை விட்டு விரட்டிருவாங்களோ? யாருக்கு வாக்களிச்சோம்னு தெரியலியே? அதையும் கண்டுபிடிச்சுருவாங்களோ? எதற்காக என்னோட கார் லைசென்ஸை குறிச்சுண்டிருக்காங்க என்று பயந்து பயந்து சாவதற்கு ஈடாகுமா 🙂

  8. //அமெரிக்காவில் தேர்தல் தில்லுமுல்லு நடக்கவில்லையா?//

    நான் எங்கு அப்படிச் சொன்னேன்?

    பீஹாரில் நடப்பது போல வாகன ஷோரூம்களிலிருந்து புதிய வாகனங்களை அலேக்காக தூக்கிக் கொண்டு போய் திருமண விருந்தில் கலந்து கொள்வதோ, தமிழகத்தில் 14 மணி நேர மின்சார வெட்டு அமலாக்கத்தில் இருக்கும் போது கூட ஜெகஜ்ஜோதியாக வீதியெங்கும் விளக்குகள் வைத்துக் கொண்டு பொதுக்கூட்டம் நடத்துவதோ போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருக்கும் அளவிற்காவது மக்கள் தங்கள் வாக்குரிமையை சுரணையுடன் உபயோகப் படுத்தத்தானே செய்கிறார்கள்.

    High handness என்று சொல்லப்படும் அதிகார போதை அமெரிக்காவில் பதவியில் இருப்பவர்களுக்கு அதிகமாகவே உண்டு என்றாலும், அவர்களின் கடமையின் எல்லைகளை தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள்.

  9. கொஞ்சம் dramatize நிறைய செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன் ஸ்ரீதர் 🙂 நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.