5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?
இந்த கேள்வி விலாவரியாக விவாதிக்கத் தகுந்தது. கோர்வையாக என்னால் பதிலளிக்க முடியுமா என்று தெரியவில்லை.
முதலில், தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பொதுவாக இந்திய, அமெரிக்க அரசு, அதிகார முறைகள், தேர்தல்கள், அவற்றையொட்டிய பிரச்சார முறைகள் போன்றவற்றை வேண்டுமானால் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
முதலில் இந்தியாவில் தேர்தல் என்பது ஒரு திருவிழா போன்றது. பொதுமக்களின் ஆர்வமும், பங்கேற்பும் அதிக அளவில் இருக்கும்.
இங்கு அப்படி வெளிப்படையாகத் தெரிவதில்லை. வாக்களிப்பு சதவீதமே மிகக்குறைவு.
இந்தியாவிலும் நடுத்தரவர்க்கத்தினர் அதிகமாக வாக்களிப்பதில்லை என்று கூறப்படுவதுண்டு. இங்கு ஏழைவர்க்கத்தினர் தான் அதிக அளவில் வாக்களிப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.
வாக்கு வங்கி அரசியல் இங்கும் இருப்பதாகவே நினைக்கிறேன். நம் ஊரில் மதம், ஜாதி என்றால், இங்கு இனம், மதம் வாக்கு வங்கி அரசியலுக்கு அடிப்படையாக உள்ளன. ஒரே வித்தியாசம் பலகட்சி ஜனநாயகமான இந்தியாவில்/தமிழ் நாட்டில் இந்த குழுக்கள் ஏதாவது ஒரு சிறுகட்சியையாவது முன்னிறுத்தி செயல்படுவதால் இப்போதெல்லாம் பல கட்சிகளைச் சேர்த்து கூட்டணி அமைத்து இத்தகைய வாக்கு வங்கிகளைக் கவர முயற்சிக்கிறார்கள்.
இந்நாட்டில் இரு கட்சி ஜனநாயகம் செயல்படுவதால் அந்த குழுக்களின் அரசியல் சாரத அமைப்புகளை கவர வேண்டியுள்ளது. அக்குழுக்கள் நடத்தும் கூட்டங்களுக்கு இரு தரப்பு வேட்பாளர்களும் அழைக்கப்படுகிறார்கள். ஆனாலும், நம் ஊரில் மதங்கள், ஜாதிகள் வெளிப்படையாக கட்சிகள் அமைத்து செயல்பட்டாலும், அவை தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக நான் நினைக்கவில்லை.
பெரிய கட்சிகள், அவற்றின் தலைவர்கள் மீதிருக்கும் அபிமானம் பெருமளவும், அப்போதைய பொதுப் பிரச்சினைகள் ஓரளவும் தான் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன என்பது என் கருத்து. ஜாதி, மதக் குழுக்கள் ஒட்டு மொத்தமாக ஒரு பக்கம் சாய்ந்து முடிவுகளை மாற்றுவதில்லை.
ஓரிரு ஜாதிகள் வேண்டுமானால் அரசியல் ரீதியில் வெற்றிகரமாக ஒன்று திரண்டிருக்கலாம். அதற்குக் காரணம் அந்த ஜாதிகளில் தோன்றிய நம்பிக்கைக்குரிய தலைவர்கள் மட்டுமே காரணம். இங்கும் வேட்பாளர்கள் ஒவ்வொரு மக்கள் குழுவுக்கும் தகுந்த மாதிரி பேச வேண்டியுள்ளது.
இனம் என்று எடுத்துக்கொண்டால் யூதர்கள், ஹிஸ்பானிக்குகள், கறுப்பர்கள் போன்ற இனக்குழுக்கள் ஏதாவது ஒரு கட்சியை அல்லது வேட்பாளரை பெரும்பான்மையாக ஆதரிக்கும் நிலை உருவாகிறது.
பொதுவாக கறுப்பர்கள் ஜனநாயகக் கட்சியை அதிகமாக ஆதரிக்கிறார்கள். கடந்த தேர்தல்களில் ஹிஸ்பானிக்குகள் பெரும்பான்மை ஜார்ஜ் புஷ்ஷை ஆதரித்தனர். இந்த தேர்தலில் இன்னும் உறுதியாக தெரியவில்லை என்றாலும், ஒபாமா பக்கம் சாய்வதாகத் தெரிகிறது. உதாரணமாக கொலராடோவில் ஹிஸ்பானிக்குகளின் ஆதரவு தேர்தலை முடிவு செய்யும் என்று கருதப்படுகிறது.
அடுத்து பணம். நம் ஊரில் தேர்தலின்போது கருப்புப்பணம் புகுந்து விளையாடும். சொல்லப்போனால் கருப்புப்பணம் வெளியே வர, செல்வம் மறுவிநியோகம் செய்யப்பட தேர்தல் ஒரு முக்கிய காரணியாக செயல்படுகிறது. தேர்தல் பணம் பலத்தரப்பட்ட மக்களை வெவ்வேறு வகையில் சென்றடைகிறது.
இந்த நாட்டில் தேர்தலில் சொந்த பணத்தை செலவிடுவது மிகமிகக் குறைவு. தனிநபர், தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள், அரசு நிதி ஆகியவையே தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவியாக இருக்கின்றன. ஆனால் இந்த நாட்டிலிருக்கும் தேர்தல் பிரச்சார முறைகள் காரணமாக செலவிடப்படும் பணம் பெரும்பாலும் தொலைகாட்சி, வானொலி போன்ற பெரிய விளம்பர நிறுவனங்களுக்கே போகிறது.
வாக்களிக்கும் முறைகளில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக நினைக்கிறேன். இந்தியாவில் இருப்பது போன்று சீரான வாக்களிக்கும் முறை இங்கு இல்லை.
2000 ஆம் ஆண்டு தேர்தலின்போது தான் இங்குள்ள வாக்களிக்கும் முறையில் உள்ள குழப்பங்கள் தெரிய ஆரம்பித்தன. தேர்தலை நடத்துவது, அது நாட்டின் அதிபர் தேர்தலாக இருந்தாலும், பொறுப்பு மாநில அரசைச் சார்ந்தது. ஆகையால் மாநிலத்துக்கும் மாநிலம் வாக்களிக்கும் முறை வேறுபடுகிறது.
இந்தியாவை ஒப்பிடும்போது இங்கு பெரும்பாலான மாநிலங்கள் இதில் பின்தங்கியிருப்பதாகவே நினைக்கிறேன். தேர்தலை நடத்தத் தேவையான அளவு பணம் ஒதுக்குவதில் பல மாநிலங்கள் அக்கறைக் காட்டுவதில்லை என்று தெரிகிறது.
வாக்களிப்பது, வாக்கு எண்ணிக்கை போன்றவற்றில் மாநில அரசுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளின் குறுக்கீடுகள் இருப்பதாகத் தெரிகிறது. 2000 ஆண்டு தேர்தலின்போது ஃப்ளோரிடாவில் மாநிலத் தலைமைச் செயலாளர் கேதரின் ஹாரிஸ் (இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்; புஷ்ஷின் தேர்தல் பிரச்சார அதிகாரியாகவும் இருந்தவர்) செய்த தில்லுமுல்லுகள் பிரசித்தமானவை.
வாக்காளர்களை மிரட்டுதல், வாக்களிக்கவிடாமல் தடுத்தல் போன்ற பல தில்லுமுல்லுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இந்த தேர்தலிலும் அதுபோன்று பெருமளவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (உ-ம்: http://www.npr.org/templates/story/story.php?storyId=95509946).
இதில் ஆளும்கட்சியின் தலையீடு எந்த அளவுக்குப் செல்கிறது என்பதை முன்னாள் அரசுத் தலைமை வழக்கறிஞர் அல்பர்டோ கன்சாலஸ் அவர்களால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு வழக்கறிஞரின் செவ்வியைக் கேட்டபோது வாயடைத்துப்போனேன்.
அமெரிக்க ஜனநாயகத்தின் லட்சணம் இவ்வளவு தானா என்று.