1. யார் ஜெயித்தார்கள்?
குடியரசுக் கட்சியின் ஜான் மகயின்; ஆனால், பராக் ஒபாமாவும் நன்றாகவே சமாளித்தார்.
2. யார் ஜெயித்திருக்க வேண்டும்?
கால் நூற்றாண்டு காலமாக தலைநகரில் சீட்டைத் தேய்க்கும் பழுத்த அரசியல்வாதி ஜான் மகயின் இந்த விவாதத்தில் கலக்கிப் போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
3. யார் சரியாக செய்யாவிட்டால் மிகப்பெரிய ஆப்பாகி இருக்கும்?
கட்டிக்காக்கப்படும் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பேலின்; ‘நாட்டுக்கு முதலிடம்’ என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்திற்கு முதலிடம் கொடுத்த தடாலடி ஸ்டண்ட் — பணால் ஆன மெகயின் எங்காவது பிசகி இருந்தால் ‘பட்ட காலே படும்’ பழமொழியாகி இருக்கும்.
4. யாருக்காவது வாய்தவறி பிசகியதா?
ஒபாமா. ஜான் என்றழைப்பதற்கு பதில் டாம் என்று விளித்தார்.
5. ஏன் பிசகியது?
ஒபாமாவிற்கு எருமைமாட்டுத் தோல் கிடையாது.‘உனக்கு அறிவு போதாது; வயசு பத்தாது; அயல்நாட்டு அனுபவம் கிடையாது!’ என்று வெறுமனே வெறுப்பேற்றிக் கொண்டேயிருந்தால்…
ஜான் மகயினுக்கும் சுருக்கென்று கோபம் வருவதுதான் என்றாலும் அது ஓராண்டுக்கு முந்தைய ஜான் மகயின். தற்போதைய மெகயின் புத்தரின் மறு அவதாரமாக சாந்த சொரூபமாக காட்சியளிக்கிறார். அதாவது தன்னைக் குறித்து ‘நீங்க இரான் மீது போர்; வட கொரியாவுடன் சண்டை’ போன்ற நேர்மையான குற்றச்சாட்டு வைக்கும்போது கவனிக்காமல் புறந்தள்ளுவதில் புத்தமதத்தைத் தழுவிய அசோகராக இருந்தார்.
6. அமெரிக்கப் பொருளாதாரம் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் விவாதத்திற்கு ஏது நேரம்?
பராக் ஒபாமா இதற்கான பதிலைக் கொடுத்தார்: “நம் நாட்டின் வருங்காலத்தை தீர்மானிக்க இப்போது பேசாமல் வேறு எப்போது பேசுவோம்!”
7. குடியரசுக் கட்சியின் ஜான் மெகெயின் நடுநிலையானவர் என்பதை நிலைநிறுத்தினாரா?
சில பல தடவை வெளிப்படையாக தம்பட்டம் அடித்தார். விவாதத்தின் துவக்கத்திலேயே ‘ஜனநாயகக் கட்சியின் டெட் கென்னடிக்கு உடம்பு சரியில்லை என்னும் துயரமான நிலையில்தான் இந்த நிகழ்ச்சியைத் துவக்குகிறோம்’ என்று ‘எல்லாருக்கும் நண்ப’ராக நிலைநாட்டினார்.
8. புல்லட்பாயிண்ட் போட்டு பேசியது யாரு?
பராக் ஒபாமா. நிதிநிலையை முன்னேற்ற நாலு வழி இருக்கு என்றார்; அதே மாதிரி ஆப்கானிஸ்தானில் அடுத்த கட்டத்திற்கு நான்கு புள்ளித்திட்டம் கோடிட்டார்
- மேலும் படை விஸ்தரிப்பு
- ஆப்கானிஸ்தான் அதிபரை கொஞ்சம் நமக்காகவும் உழைக்க சொல்வது
- போதை மருந்து விளைச்சலைக் கட்டுப்படுத்தி நீக்குவது
- பாகிஸ்தான் உறவு
9. வாய்ப்பந்தல் போடாமல் அதே சமயம் நடக்கக் கூடியதை நம்பற மாதிரி வாதாடியவர் யார்?
பராக் ஒபாமா: 9/11 மாதிரி மீண்டும் ஒரு தாக்குதல் நடக்காமல் இருக்க இரு வழிகளை முன்வைத்தார்
- அணு ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல்
- அமெரிக்கா இராக்கை மட்டும் எண்ணெய்க்காக முற்றுகையிட்டிருக்கும் ஆறாண்டுகளில் அறுபது நாடுகளில் விரிந்திருக்கும் அல்-க்வெய்தா மீது கண் வைத்தல்
10. கேள்வியை தனக்கேற்ற மாதிரி திருகுவதில் ஒபாமா வல்லவராயிற்றே! இன்றும் செய்தாரா?
சில இடங்களில் முடிந்தது. ‘700 பில்லியன் அள்ளி விடறாங்களே… ஒத்துக்கறியா/இல்லியா?’ என்பதற்கு அப்படியே திசை மாற்றி அனுப்பினார்.
11. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவுவதில் எவருக்கு முதலிடம்?
ஒபாமா 932 மில்லியன் ‘சிறப்பு செலவு’ (earmarks) செய்ததற்கான ஒப்புதல் வழங்கியதில் நழுவினார் என்றால், மெகயினோ பெருஞ்செல்வந்தர்களுக்கு 300 பில்லியன் (கவனிக்க மில்லியன் அல்ல… ஆயிரம் மில்லியன் = பில்லியன்) வரிச்சலுகை தரும் திட்டத்தில் ஆரம்பித்து இராக்கில் அணுகுண்டு இருக்காம் என்று பறைசாற்றியது வரை வழுக்கி முதலிடத்தைத் தட்டிச் செல்கிறார்.
12. எனக்கு வருசத்திற்கு அமெரிக்க வெள்ளி 700,000 (மாசத்திற்கு ஐம்பத்தியெட்டாயிரத்து டாலர் சில்லறைதான்) கிடைக்கிறது. எவர் அதிக வருமான வரி விலக்கு தருவார்?
நீங்க ஆதரிக்க வேண்டியது ஜான் மகயின்.
13. பார்வையாளருக்கு புரிகிற மாதிரி, சாமானியனின் வாக்கைப் பெறுகிற மாதிரி உதாரணம் சொல்லி, குட்டிக் கதை விவரித்து அசத்தியது யாரு?
ஜான் மெகெயின்: “ஒரு வருஷம் முன்னாடி நான் நியூ ஹாம்ஷைர் போனேனா… அங்கே ஒரு அம்மா இருந்தாங்க. அவங்களோட பையனுக்கு என்னாச்சு தெரியுமா? அவநுக்கு 22 வயசு. அவன் இராக் போனானா… அப்ப நம்ம எதிரிங்க அவனைக் கொன்னுட்டாங்க. அவனுக்கு நீதி கேட்டு அவனோட அம்மா என்னோட கூட்டத்துக்கு வந்தாங்க. அப்ப என்னப் பார்த்து கேட்டாங்க. எனக்கு நா தழுதழுதடுச்சு. இன்னும் அந்த சின்னப்பயல் நெனப்பா கையில முடிச்சுப் பொட்டு வச்சிருக்கேன் தெரியுமா!”
ஒபாமாவும் இதைக் கேட்டு பயந்து போய் தன்னுடைய கையில் இருக்கும் கயிறைத் தூக்கி காட்டாத குறைதான்.
14. அதிரடியாக உத்தரவு போடும் வீரதீரமானவர் என்று நிரூபித்தவர் யார்?
மீண்டும் மகயின்: “இதே மாதிரி அமெரிக்கா சீரழிஞ்சு போய், பொருளாதாரம் நாசமாகப் போனால். எந்த செலவுக்கும் நயாபைசா தரமாட்டேனாக்கும்” என்று 700 பில்லியன் நிதியுதவி எங்கே போய் நிற்கும் என்பதற்கு பதில் போட்டார்.
15. ஹில்லரி க்ளின்டனை யாருக்காவது நினைவிருந்ததா?
சாரா பேலினைத் துணைக்கழைத்து மகளிரணியை உசுப்பி விட்டிருக்கும் மகயின், ‘நான் ஹில்லரியுடன் ஒத்துழைத்து அந்த சட்டத்தை இயற்றினேனாக்கும்’ என்று ஒபாமாவை உசுப்பேற்றினார்.
16. ஏதாவது ப்ராண்டிங் செய்யப்பட்டதா?
தாம்தூம்னு கண்டபடி கண்ணு மண்ணு தெரியாமல் செலவு செய்பவர் என்னும் பிம்பம் ஒபாமாவுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
17. விவாதத்திற்குள்ளாகவே முன்னுக்குப் பின் முரணாக ஏதாவது வாய் விட்டார்களா?
ஜான் மெகயின்: இராணுவச் செலவுகள்தான் அமெரிக்க பொக்கீட்டீன் மிகப்பெரிய செலவு என்பதால் அதைக் குறைப்பேன் என்று சொன்ன கையோடு, இராணுவ வீரர்களின் நலத்திட்டங்களை அதிகரிப்பேன் என்றும் இராக் போரை இன்னும் ஓராயிரம் காலம் தொடர்வேன் என்றும் சொல்லி குழப்பினார்.
18. பன்ச் டயலாக் ப்ளீஸ்!
‘நீ போட்டது தப்புக்கணக்கு’ என்று பராக் பட்டியலிட்டார்.
- 2003இல் இராக்கை நொடியில் தூசாக்கிடலாம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
- இராக்கில் அணுகுண்டு இருக்கு என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
- சதாமின் இரும்புப்பிடியில் இருந்து சுதந்திரதேவியாகக் காட்சியளிப்போம் என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
- ஷியாக்களுக்கும் சன்னிக்களுக்கும் எந்தக் காலத்திலும் சண்டை கிடையாது என்றாய். நீ போட்டது தப்புக்கணக்கு!
19. மாமியார் இடித்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன்குடம். உதாரணம் கொடுங்க:
மகயின்: நான் இரான் மீது போர்முழக்கம் கொட்டினால் அதற்கு பெயர் தீயசக்திகளைக் கட்டுப்படுத்தல்… இஸ்ரேலுக்கு நேசக்கரம் நீட்டல். அதுவே ஒபாமாவிடம் இருந்து தேவைப்பட்டால் பாகிஸ்தானைத் தாக்குவோம் என்று மிரட்ட வேண்டும் என்று அச்சுறுத்த விரும்பினாலும் முணுக்கென்று கோபம் பொத்துக் கொண்டு வருபவர்.
20. மறுமொழி மூடிய வலைப்பதிவர்களை அறிவோம்; மறுமொழிக்கு மறுமொழியாதவர்களையும் அறிவோம்; மறுமொழியை மட்டுறுத்தி மறைப்பவர்களையும் அறிவோம்; பதிவே இட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பவர்களையும் அறிவோம். அந்த மாதிரி அமெரிக்க அதிபர் தேர்தலில் எவராவது?
ஜான் மகயின் இருக்கிறாரே…
21. கஜேந்திராவைத் தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொல்வது நம்ம ஊரு பேஷன். அமெரிக்காவில்?
ஜான் மெகெயின்: ‘நான் ருசிய அதிபர் ப்யூடின் கண்ணைப் பார்த்திருக்கேன். அப்ப அதில் மூணு எழுத்து எனக்குத் தெரிஞ்சுது. அது என்ன தெரியுமா? கே ஜி. பி’
22. நாயடி, பேயடி உண்டா?
அதிசயமாக இல்லை. ஓரளவு கண்ணியமாக, வித்தியாசங்களை வாய்ஜாலங்களாக ஆக்காமல் இருவரும் சொற்சிலம்பம் ஆடினார்கள்.
23. என்னோட பார்வையில் நெஞ்சைக் கவர்ந்தவர் யார்?
நிச்சயமாய் பராக் ஒபாமா.
இன்றைய விவாதம் பழந்தின்று கொட்டை போட்டு அது கூட முளைத்த அனுபவம் நிறைந்தவருக்கும் x குறைந்த தகவல்களை வைத்து நிறைவான நேர்த்தியான முடிவுகளை எடுக்கும் சாமர்த்தியசாலிக்கும் இடையேயானது.
அனுபவசாலி இராக் போனால் கணநேரத்தில் பொடிப்பொடியாக்கலாம் என்பது முதல் பல்வேறு முடிவுகளில் மகயின் சறுக்கியுள்ளார். திறந்த மனதுடன் ‘எதிராளியுடன் ஒத்துப் போகிறேன்’ என்று வெளிப்படையாக வெகுளியாக ஒத்துக் கொள்ளும் பராக் ஒபாமா எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நம்பிக்கை அளிக்கிறார்.
(பிற்சேர்க்கை)
24. நீ சொல்வது இருக்கட்டும். மற்ற தமிழ்ப்பதிவுகளில் என்ன சொல்கிறார்கள்?
பனிமலர்: “அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் மெக்கைன்னு மற்றும் ஒபாமாவின் முதல் விவாத மேடை”
சன்னாசி: கரிசல் » Lockjaw
///1. யார் ஜெயித்தார்கள்?
குடியரசுக் கட்சியின் ஜான் மகயின்;////
இன்னாது இது! உல்டாவா சொல்றீங்களே!
>>>> எனக்கு வருசத்திற்கு அமெரிக்க வெள்ளி 700,000
அவ்வளவுதேவை இல்லை தனிநபருக்கு 42K , குடும்பத்துக்கு 80+K சம்பாதித்தால் கூட அதிக வரி “கட்ட” ஆசைப்படுபவர்கள் யாருக்கு ஓட்டு போடணும்?
>>>>23. என்னோட பார்வையில் நெஞ்சைக் கவர்ந்தவர் யார்?
>>>>நிச்சயமாய் பராக் ஒபாமா.
:))
பாபா..
அமெரிக்கப் பதிவர்களுக்கு மட்டும் புரிவதைப் போல் இப்படி மொட்டையாக ஆரம்பித்தால் எப்படி?
என்ன நிகழ்ச்சி? எப்போது நடந்தது? யார், யார் கலந்து கொண்டார்கள்? இதையெல்லாம் கொஞ்சம் முன்னுரையாகச் சொல்லிவிட்டு பின்பு உங்களது வார்த்தைஜாலத்தைக் காட்டியிருக்கலாமே..
—அமெரிக்கப் பதிவர்களுக்கு மட்டும் புரிவதைப் போல் இப்படி மொட்டையாக ஆரம்பித்தால் எப்படி?—
உண்மைதான் உண்மைத்தமிழன். நல்ல ஆலோசனை.
அடுத்த தடவையில் இருந்து சரி செய்து விடலாம்.
————-
நிகழ்ச்சி: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் நிற்பவர்களுக்கு இடையேயான விவாதம்
கலந்து கொன்டவர்கள்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா & குடியரசுக் கட்சியின் ஜான் மெகயின்
என்று: வெள்ளி இரவு (செப். 26)
டைனோ,
—தனிநபருக்கு 42K , குடும்பத்துக்கு 80+K சம்பாதித்தால் கூட அதிக வரி “கட்ட” ஆசைப்படுபவர்கள் யாருக்கு ஓட்டு போடணும்? —
உங்களின் கவனத்திற்கு: வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடன் விளக்கம் – How Your Taxes Will Fare Under Obama, McCain :: Both Promise Overall Cuts, But Vary Widely on Specifics;
80,000 டாலர் சம்பாதிக்கும் குடும்பத்திற்கு ஒபாமா $1000 வரி விலக்கு அளிக்கும் திட்டத்தை முன்வைப்பதையும்; அதே சமயம் ஜான் $700 மட்டுமே திரும்பித் தருவதையும் சுட்டுகிறது.
மோகன் கந்தசாமி,
—குடியரசுக் கட்சியின் ஜான் மகயின்;////
இன்னாது இது! உல்டாவா சொல்றீங்களே!—
நேரடி ஒளிபரப்பில் பார்த்தபோது (அதன் பின் தொடர்ந்த எந்த அலசலையும் பார்க்காமல்/படிக்காமல்) அவதானித்தபோது அப்படித்தான் பட்டது.
நான் சொல்வதுதான் உண்மை என்னுமளவில் சாந்த முகத்துடன் மெகயின் பேசினார். தெளிவான விளக்கங்கள் கொடுத்தார்.
மக்களுக்குத் தேவை புரிகிற பேச்சு. உண்மை அல்ல.
Babaji,
இரான் அதிபரை சந்திப்பது குறித்து மெக்கெயின் கேள்வி கிடுக்கிபிடி போட அதற்கு ஒபாமா பதிலே சொல்ல முடியாமல் சமாளித்துக்கொண்டிருந்தார்.”ஐ அக்ரீ வித் மெக்கெயின், மெக்கெயின் இஸ் அப்சல்யூட்லி ரைட்” என்று ஏழெட்டு தரம் சொல்லியது அனுபவமின்மையயியே காட்டியது.அதே சமயம் மெக்கெயின் “ஒபாமா புரிந்துகொள்ளாதது என்னவென்றால்..” “ஒபாமா புரிந்துகொள்ள மறுப்பது என்னவென்றால்” என்று ஒபாமாவின் அனுஇபவமின்மையையே கிண்டல் செய்துகொண்டிருந்தார்.ஒபாமா “ஜான், ஜான்” என்று அழைக்க பதிலுக்கு “செனெட்டர் ஒபாமா” என்று அழைத்து,ஒபாமாவின் முகத்தை கூட பார்க்காமல்,பேசும்போது நடுவே கட் செய்து வெறுப்பேற்றினார் மெக்கெயின்.கடைசி கட்டத்தில் ஏதோ சீனியர் மேனேஜரிடம், ஜூனியர் ஆபிசர் திட்டுவாங்குவது போல் தான் விவாதம் போனது.
ஜென்டில்மேன் அரசியல்வாதியை லோக்கல் தாதாவுடன் மோதவிட்டது போல் ஒரு விவாதம்…எனக்கு தெரிந்து இத்தனை வீக்கான கேண்டிடேட்டை பார்த்ததே இல்லை.பொருளாதாரமும் புஷ்ஷும் குறுக்கிடாவிட்டிருந்தால் மெக்கெயின் ஒபாமாவை தேர்தலில் எடுத்து விழுங்கியிருப்பார்.
மாகெயின் பழைய வாதங்கள் தாத்தா மாதீரி நான் அப்போ இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என்று…..
பாவம்தான்.
ஓபாமா திட்டமாகப் பேசினார். பழகினால் சரியாகும்.
என்று தோன்றுகிறது.என் வோட் ஒபாமாவுக்கே:)
பாபா –
>>>>வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடன் விளக்கம்
சுட்டிக்கு நன்றி. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கொடுத்திருப்பது அவர்கள் ஜனாதிபதி ஆகும்பச்சத்தில் கொண்டுவரும் திட்டம் பற்றியது. நான் குறிப்பிட்டது பராக் இதற்கு முன்பு வரி உயர்த்த சம்மதித்த மசோதா பற்றியது. நான் கொஞ்சம் context சுடன் அதை கூறியிருக்க வேண்டும்.
http://www.factcheck.org/elections-2008/factchecking_debate_no_1.html
டைனோ தனிநபர் வரியைப் பற்றி மாத்திரமே கவலைப்படுவது வலதுசாரிகளின் பாங்கு. ஆனால் தலைவலியும் திருகுவலியும் தனக்கென வரும்பொழுது உல்டா அடிப்பது (பெண்ணுக்காக செய்னி, புருஷனைக் காப்பாற்றும் பதிவிரதை ரேகனின் மனைவி, பற்றி என்னுடைய முந்தைய பதில்களில் எழுதியிருந்தேன். இப்பொழுது சராசரி குடிமகனின் அடிமடியில் கைவைத்து சந்தையைக் காப்பாற்ற முயற்சிக்கும் புஷ், மெக்கெய்ன் போன்ற கருதுப் போலிகளின் சாயம் வெளுக்கிறது. இன்னும் இந்த இயங்கியலைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு ‘என் வரி உயர்கிறதே’ என்ற சுயநலம் ஒன்றே காரணமாக இருக்க முடியும்’. இதுதான் வலதுசாரிக்கும் இடதுசாரிக்கும் உள்ள வித்தியாசம்.
வரியைப் பற்றி அமெரிக்கர்கள் அலட்டிக் கொள்வது குறித்த என் பதிவு:
http://domesticatedonion.net/tamil/2008/09/27/americans_and_tax/
பாபா, மொதல்ல ஒபாமா உதை வாங்கறமாதிரி இருந்தாலும். பொதுமக்களை, மத்தியதர வர்க்கத்தை பற்றி பேசினது ஒபாமா தான். ஈராக்,பாக்கிஸ்தான் போன்ற வெளிவுறவு கொள்களைல சொதப்பினாலும் இந்த தேர்தல்ல அதெல்லாம் பத்தி மக்கள் கவலைப்படறமாதிரி தெரியலை. அதனால ஒட்டுமொத்தத்தில் ஒபாமா இன்னும் கொஞ்சம் மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார் என்றே தோன்றுகிறது. கருத்துக்கணிப்புகளும் அதையே பிரதிபலிக்கின்றன.
FactCheck.org: FactChecking Debate No. 1: “Facts muddled in Mississippi McCain-Obama meeting.” (ட்விட்டரில் டைனோ வழியாக)
Round 1 in debates goes to Obama, poll says – CNN.com:
“* Post-debate CNN poll suggests Obama came out on top over McCain
* Most debate watchers agreed McCain, Obama would be able to handle presidency
* Male respondents split evenly among candidates; Women liked Obama over McCain”
முதலில் :-)). முதல் சுற்றில் முகத்தை முறித்து மெக்கெய்னை அடுத்த சுற்றுக்கு வந்து பழஞ் காஞ்சி காய்ச்சுவதிலிருந்து விலகிப் போக விடாமல், சற்றே சீனியர், ஜுனியர் பார்த்து அடக்கி வாசித்தது போல இருந்தது, இந்த முதல் விவாதம். அது முகமா அது, போர்க்கால அதிபராக வேண்டுமானல் ஒரு வாரத்திற்கு இரவல் வாங்கிக் கொள்ளலாம், மெக்கெய்னை :-).
அது என்ன எப்பப் பார்த்தாலும் அங்கே சண்டை, அப்படித்தான் நான் இத்தான வருஷம் இங்கே சண்டை போட்டுட்டுருந்தப்ப…. ஹி ஸ் ஸ்டக் ன் த பாஸ்ட், அய்யகோ இன்னொரு முறை என்னுடைய 8 ஆண்டுகள் இந்த முகத்துடன் ஓடப் போகிறதான்னு நினைக்கும் பொழுது கஷ்டமுட உலகமேன்னு வருது :(.
என்னாதான் சீனியரா இருந்தாலும், இப்படி நல்ல பிள்ளையாட்டம் பழகப் பார்க்கும் ஒபாமை “நீ சின்னப் பையன்” அப்படிங்கிற தொனி கண்டிப்பா மக்களிடத்தே எரிச்சலூட்டும் என்பது என் கருத்து. அடுத்த ரவுண்டுகளில் ஒபாமா சுதாரித்துக் கொள்வார் திரும்ப கடிக்கன்னு எதிர்பார்க்கிறேன்.
ஆமா, இந்த இஸ்ரேல வைச்சிக்கிட்டு இவங்க அடிக்கிற கும்மி இன்னொரு போர் வந்து அடங்குனாத்தான் உண்டுன்னு தோணுது.
உண்மையே பேச முடியாது போலவே… நறுக்கின்னு சொல்ல வேண்டியதெற்கெல்லாம் வாய திறக்க முடியாம ஒபாமா திணர்வதற்குக் காரணம், முத்திரை குத்திப்புடுவாய்ங்களோன்னு பயந்தேதான் போல…
Must read analysis on debate: FiveThirtyEight.com: Electoral Projections Done Right: Why Voters Thought Obama Won
McCain & connectedness vs Obama & readiness; Targeting pundits vs middle class voters.
The First Debate Could Be Decisive – WSJ.com: “Mr. McCain needs to come across as optimistic, loose and likable. He must guard against revealing his lack of respect for Mr. Obama. And he must grab the ‘change’ banner from Mr. Obama by describing a few things he’ll do internationally that are new and different.”
///12. எனக்கு வருசத்திற்கு அமெரிக்க வெள்ளி 700,000 (மாசத்திற்கு ஐம்பத்தியெட்டாயிரத்து டாலர் சில்லறைதான்) கிடைக்கிறது. எவர் அதிக வருமான வரி விலக்கு தருவார்?
நீங்க ஆதரிக்க வேண்டியது ஜான் மகயின்.
////
ஓ, அப்ப என் ஓட்டு மெக்க்யினுக்குதான்.
செல்வன்,
—இரான் அதிபரை சந்திப்பது குறித்து மெக்கெயின் கேள்வி கிடுக்கிபிடி போட அதற்கு ஒபாமா பதிலே சொல்ல முடியாமல் சமாளித்துக்கொண்டிருந்தார்.—
ஜான் மகயினின் ஆலோசகரான கிஸிங்கரே இந்த மாதிரி ‘முன் ஒப்பந்தங்கள்’ இல்லாத பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வரவேண்டுமென்று சொன்னதை மகயின் கண்டுக்காமல் தட்டிக் கழிப்பது ‘கிடுக்கிப்பிடி கேள்வி’ ஆகுமா?
உங்காள் சொன்னதைத்தானே நான் சொன்னேன் என்று ஒபாமா காட்டுக் கூச்சல் போடாமல், மென்மையாக சொன்னாலும் ‘ஹார்ஸ்ஷிட்’ சாரி…. ‘அஃப்கோர்ஸ் நாட்’ சொல்லி மழுப்பல் கலந்த கிண்டல் புன்சிரிப்புக்கு பெயர் சமாளிஃபிகிஷேன்.
—”ஐ அக்ரீ வித் மெக்கெயின், மெக்கெயின் இஸ் அப்சல்யூட்லி ரைட்” என்று ஏழெட்டு தரம் சொல்லியது அனுபவமின்மையயியே காட்டியது.—
இதற்குப் பெயர் விவாத அனுபவமின்மை என்று கொள்ளலாம். ஒருவர் சொல்வது makes sense என்றாலும் அதைத் திரித்து மறுப்பதுதான் எதிர்க்கட்சி வேட்பாளர் வாதாடும் இலக்கணமா?
—அதே சமயம் மெக்கெயின் “ஒபாமா புரிந்துகொள்ளாதது என்னவென்றால்..” “ஒபாமா புரிந்துகொள்ள மறுப்பது என்னவென்றால்” என்று ஒபாமாவின் அனுஇபவமின்மையையே கிண்டல் செய்துகொண்டிருந்தார்.—
கரெக்ட்…
முழுப் பேச்சுமே ஒபாமாவை dismiss செய்யும்விதமான ஆதாரமற்ற rhetoric நிறைந்திருந்தது.
—ஒபாமா “ஜான், ஜான்” என்று அழைக்க பதிலுக்கு “செனெட்டர் ஒபாமா” என்று அழைத்து,ஒபாமாவின் முகத்தை கூட பார்க்காமல்,பேசும்போது நடுவே கட் செய்து வெறுப்பேற்றினார் மெக்கெயின்.—
மிக அருமையான பார்வை. அதன் தொடர்ச்சியாக:
Talking Points Memo | So Angry: “think it’s significant that McCain didn’t make much, if any, eye contact because it suggests one of two things to me; he doesn’t want to make eye contact because he is prone to losing control of his emotions if he deals directly with the other person, or, his anger masks fear and the eye contact may increase or substantiate the fear.”
—ஜென்டில்மேன் அரசியல்வாதியை லோக்கல் தாதாவுடன் மோதவிட்டது போல் ஒரு விவாதம்…—
இதுவும் சரியே…
வயதான காது கேளாத தனக்குத் தானே அரற்றும் தா(த்)தா மகயினுடன் கனிவாக தன் பக்க நியாயங்களை ஆதாரப்பூர்வமாக எடுத்துவைக்கும் ஜென்டில்மேன் ஒபாமாவுக்கு நடக்கும் போட்டி.
The questions from Jim Leherer and responses from the candidates were on expected lines. No new information or insights. Post debate analyses by politcal pundits, including Baba, are also on expected lines. Responses to this post also follow the same trend.
Overall the debate was boring and so also the reactions. Only significance of this debate was the venue. Ole Miss which was the last major state university to admit black students hosting the debate of the first black candidate.
Baba , how did you come to the conclusion that McCain won the debate. CNN poll shows otherwise. If they remove the slight Democratic slant of the responders, it breaks even. Our local newspaper ran headline “Both score points, but no clear victor”. That was pretty much the conclusion I have seen/heard everywhere.
Selvan,
//ஐ அக்ரீ வித் மெக்கெயின், மெக்கெயின் இஸ் அப்சல்யூட்லி ரைட்” என்று ஏழெட்டு தரம் சொல்லியது அனுபவமின்மையயியே காட்டியது//
If you have watched 2000 debate between Al Gore and George Bush, Obama’s handful of “I agree” statements is insignificant. Bush agreed with Al Gore almost on everything and still “won” the elections.
//இரான் அதிபரை சந்திப்பது குறித்து மெக்கெயின் கேள்வி கிடுக்கிபிடி போட அதற்கு ஒபாமா பதிலே சொல்ல முடியாமல் சமாளித்துக்கொண்டிருந்தார்//
McCain tried to score a point on Obama’s statements to talk with the Iran president without preconditions. McCain claimed that Nixon-Kissinger duo initiated talks with China with preconditions, without telling what those preconditions were. It sounds odd to use preconditions and China in the same sentence even today not to mention 30 years ago.
//பொருளாதாரமும் புஷ்ஷும் குறுக்கிடாவிட்டிருந்தால் மெக்கெயின் ஒபாமாவை தேர்தலில் எடுத்து விழுங்கியிருப்பார்.//
But the point is these are the only issues now. You think that these issues just popped up from nowhere pushing some other important issues. What are those? Don’t say Iraq. Bush and Iraq are synonymous.
பாபாஜி
//ஜான் மகயினின் ஆலோசகரான கிஸிங்கரே இந்த மாதிரி ‘முன் ஒப்பந்தங்கள்’ இல்லாத பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வரவேண்டுமென்று சொன்னதை மகயின் கண்டுக்காமல் தட்டிக் கழிப்பது ‘கிடுக்கிப்பிடி கேள்வி’ ஆகுமா?//
கிஸ்ஸிங்கர் ஜனாதிபதி மட்டத்தில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடக்கவேண்டுமென்று கூறவே இல்லை (மெக்கெயின் இதை அந்த விவாதத்தில் சொன்னாரே?)
//இதற்குப் பெயர் விவாத அனுபவமின்மை என்று கொள்ளலாம். ஒருவர் சொல்வது மகெச் சென்செ என்றாலும் அதைத் திரித்து மறுப்பதுதான் எதிர்க்கட்சி வேட்பாளர் வாதாடும் இலக்கணமா?//
“இராக்கில் நூறு வருட யுத்தம்” பற்றி மெக்கெயின் சொன்னதை ஒபாமா தரப்பு திரித்தது.இப்போது மெக்கெயின் தரப்பும் அதே வேலையை செய்கிறது.டிட் ஃபார் டாட்:-)
//வயதான காது கேளாத தனக்குத் தானே அரற்றும் தா(த்)தா மகயினுடன் கனிவாக தன் பக்க நியாயங்களை ஆதாரப்பூர்வமாக எடுத்துவைக்கும் ஜென்டில்மேன் ஒபாமாவுக்கு நடக்கும் போட்டி.//
எம்.எஸ்.என்.பி.சி அதிகம் பார்ப்பீர்களோ?:-)
அலை இல்லாத தேர்தல் என்றால் வெற்றி மெக்கெயினுக்காக தான் இருந்திருக்கும்.புஷ் எதிர்ப்பலை அடிப்பதாலும் வால்ஸ்ட்ரீட் சுனாமியாலும் 2008 டெமக்ராடிக் கட்சியின் வருடமாக போய்விட்டது.ரிபப்ளிக்கன் கட்சிக்கு பெண் ரேகன் கிடைத்தது தான் அவர்களுக்கு இந்த தேர்தலின் லாபம்.
ரேவதி நரசிம்மன்
—ஓபாமா திட்டமாகப் பேசினார். பழகினால் சரியாகும். என்று தோன்றுகிறது.—
அடுத்த இரண்டு டிபேட் அவரின் வலுவான அம்சங்களைக் கொண்டது. திரிசங்கு வேட்பாளர்களிடம் தன் கொள்கைகளை அந்த வாதங்களில் திறம்பட எடுத்துவைக்கும் வாய்ப்புகளும் அதிகம்!
டைனோ
—நான் குறிப்பிட்டது பராக் இதற்கு முன்பு வரி உயர்த்த சம்மதித்த மசோதா பற்றியது. —
மகயின் மாதிரி ‘இராக்கிற்கு போருக்கு செல்வோம்; கண நேரத்தில் தவிடு பொடியாக்குவோம்’ என்று பழையதை மறந்து… நடக்கவேண்டியதை ஆராய்வோம்.
பொருளாதாரம் குறித்து இரண்டு திட்டங்கள் இருக்கின்றன. காப்பீடு பற்றி பெரிய வித்தியாசங்கள் தென்படுகின்றன.
நீண்ட கால நோக்கில் (strategical not tactical – to paraphrase McCain) எது பெரும்பாலான சாதாரண குடிமக்களுக்கு செய்நன்மையை சாத்தியமாக்கும்?
வெங்கட் பதிவில் எழுதியது:
அமெரிக்கர்களும் வரியும்
—அமெரிக்காவில் $155 ஆயிரம் வருமானம் என்பது அற்பம்—
இதற்கு என்ன ஆதாரம்?
ஊக்கத்தொகையாக கொடுக்கும் பங்குகளை வைத்து ஃபோர்ப்ஸ் தலை பத்தில் இடம்பிடிக்கிறார்கள். அனேகர் உடனடியாக இதை விற்பதில்லை.
கார் வாங்கவேண்டும், ஏழோடு எட்டாக இன்னொரு வீட்டை சுற்றுலாத் தலத்தில் வைத்திருக்கலாம் என்னும்போது சில பங்குகளை விற்பதுண்டு.
எத்தனை சதவீதம் பேருக்கு இந்தச் சம்பளம் கையில் கிடைக்கிறது? அதாவது ஐ.ஆர்.எஸ்ஸிற்கு அனுப்பும் காகிதத்தில் எவ்வளவு பேர் இத்தகைய வருமானம் கிடைப்பதாக சொல்ல முடியும்?
—ஸ்காண்டிநேவிய நாடுகள், பிரான்ஸ்சு, பிரிட்டன், ஜெர்மனி, உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய முதலாளி நாடுகள், இன்னும் ஸ்விட்ஸர்லாந்து, கனடா போன்ற நாடுகளிலும் உயர் சதவீத வரி இருக்கிறது—
தாய்வானில் உடனடியாக மருத்துவர் பரிசோதிக்கிறார்; இங்கிலாந்தில் இலவச சேமநலப் பாதுகாப்பு என்று ஒப்பிட முடியாது என்பது போல் அளவில் சிறிய, மக்கள்தொகையில் குறுகிய, வித்தியாசமான மதிப்பீடுகளை உடைய ஐரோப்பா/காமன்வெல்த் நாடுகளையும் அமெரிக்காவையும் ஒப்பிடக் கூடாது.
திருப்தியாக வாழ்வதில் இந்தியர்கள் #1 அக இருக்கலாம்.
ஆனால் எத்தனை மருந்துகள் அங்கு கண்டுபிடிக்கப்படுகிறது?
எத்தனை அறிவியல் முன்னேற்றங்களுக்கு கால்கோள் வைக்கப்படுகிறது?
எவ்வளவு வயசு வரை வாழ்ந்தால் மகிழ்ச்சி என்பன மாறுபடுவது போல் ‘வாழ்க்கைத்தரம்’ என்பது myth.
சத்யா,
—இந்த தேர்தல்ல அதெல்லாம் பத்தி மக்கள் கவலைப்படறமாதிரி தெரியலை. —
நான் பார்த்த நான்கு தேர்தல்களிலும் மக்கள் முன்முடிவுடனேயே விவாதம்/வேட்பாளர்/கட்சிகளை அணுகுவதாகப் படுகிறது.
வீழ்ந்து கிடந்த பங்குச்சந்தையை தலைதூக்க வைத்ததற்காக மீண்டும் பில் க்ளின்டன்…
ஒழுக்ககேடாக நடந்த கிளிண்டனுக்கு மாற்றாக கிறித்துவக் கொள்கைப்படி நடக்கும் புஷ்…
போர்க்காலத்தில் ஜனாதிபதியை மாற்றக்கூடாது என்னும் சித்தாந்தத்திற்கேற்ப இராக் யுத்த புஷ்…
இந்தத் தேர்தலில் பொருளாதாரம் மிக மோசமான நோயாளியாக இருப்பது தேர்தலுக்கு முன்பே வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இது ஒபாமாவிற்கு மிகப் பெரிய ப்ளஸ். இதை வைத்தே இந்தத் தேர்தல் (ஹில்லரியாக) இருந்தால் முடிவாகி இருக்கும்.
ஆனால், கறுப்பர் என்பது பலரின் உள்மனதில் ஆதாரமாக நிராகரிக்கும் விலக்கம்.
தெகா
—ஒபாமை “நீ சின்னப் பையன்” அப்படிங்கிற தொனி கண்டிப்பா மக்களிடத்தே எரிச்சலூட்டும்—
அப்படி சொல்ல முடியாது.
திரும்பத் திரும்ப திரும்ப திரும்ப திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்பது மார்க்கெடிங் மந்திரமாகுமளவிற்கு புஷ் அதை நடைமுறை சாத்தியமாக்கிக் காட்டி கொடி கட்டிப் பறந்திருக்கிறார்.
—நறுக்கின்னு சொல்ல வேண்டியதெற்கெல்லாம் வாய திறக்க முடியாம ஒபாமா திணர்வதற்குக் காரணம், முத்திரை குத்திப்புடுவாய்ங்களோன்னு பயந்தேதான் போல—
இதைப் பாருங்க: YouTube – Keyes-Obama debate 2 (Christianity)
இவ்வளவு இயல்பாக நகைச்சுவை செய்யமுடிகிறது ஒபாமாவால்…
இதையெல்லாம் இந்த அரங்கில் (அமெரிக்க அதிபர் களம்) செய்தால், ‘கடவுள் அபவாதி’ன்னு பட்டம் கட்டி பரிவட்டம் போடுவார்கள்.
மேலும் வாசிப்புக்கு:
The Atlantic Online | September 2008 | Rhetorical Questions | James Fallows: “That previous Obama also sounded very little like a professor. With dismissive ease, he reeled off rebuttal points and identified errors as if he had been working in a courtroom rather than a classroom all his life. Keyes had said that Jesus Christ would not have voted for Obama. Obama was asked for his response: “Well, you know, my first reaction was, I actually wanted to find out who Mr. Keyes’s pollster was, because if I had the opportunity to talk to Jesus Christ, I’d be asking something much more important than this Senate race. I’d want to know whether I was going up, or down.”
All in all, Obama seemed in his element and having fun—two things no one has detected about his debate performances this past year. The ease with instant retorts he had shown against Keyes seemed to desert him against Edwards and Clinton, along with his unflappability under personal attack.
What had changed since 2004? Was it that Keyes, for all his virtuosity, was never a serious contender, so Obama had nothing to lose? Was it the move to the national stage? The greater range of issues outside his direct expertise? That he was now “the” black candidate in the race, with attendant dangers of seeming too aggressive or angry, which didn’t matter before, since Keyes is black too?”
மகயின் கோபமுற்றால்/நக்கலடித்தால் அதற்கு பெயர் தார்மீக அறச்சீற்றம் என்றும்;
ஒபாமா வெகுண்டால், ‘கறுப்பன் முன்கோபி’ என்றும் பிரஸ்தாபிக்கலாம் என்னும் முன்ஜாக்கிரதை உணர்வும் கூட இருக்கும்.
சர்வெசன்
—-ஓ, அப்ப என் ஓட்டு மெக்க்யினுக்குதான்.—
சாராவின் சரெவெடியில் சறுக்கி சார்பு நிலையை மாற்றாத கொள்கை வீரர் ஐயா நீங்க 🙂
மூஸ் ஹன்டர்
—Ole Miss which was the last major state university to admit black students hosting the debate of the first black candidate.—
அட!!! இந்த இடத் தேர்விற்கு இப்படியொரு பின்னணியா?!
—how did you come to the conclusion that McCain won the debate.—
#7, #11, ஆகியவ்ற்றுக்கான பதில்களைப் பார்க்கவும்.
அதை விட முக்கியம் #13. இன்னும் நெஞ்சில் (sic) பசுமரத்தாணியாக ரீங்காரமிடுதே!
#14ம் சூப்பர்ஸ்டார் ரிலீஸ் போல் ஜொலிக்கும்.
—2000 debate between Al Gore and George Bush, Obama’s handful of “I agree” statements is insignificant. Bush agreed with Al Gore almost on everything and still “won” the elections.—
மறந்தே போச்சு. புஷ்ஷுக்கு எப்பொழுதுமே எதிர்பார்ப்பு குறைச்சலாக இருக்கும் அல்லவா?
தற்போது மெகயினுக்கும் அதே மாதிரிதானே? (ஒபாமாதான் தலை சிறந்த பேச்சாளர்; மகயினோ செயல்வீரர் என்று முன்னிறுத்தப்படுகிறது)
செல்வன்
//இரான் அதிபரை சந்திப்பது குறித்து மெக்கெயின் கேள்வி கிடுக்கிபிடி போட அதற்கு ஒபாமா பதிலே சொல்ல முடியாமல் சமாளித்துக்கொண்டிருந்தார்.//
—கிஸ்ஸிங்கர் ஜனாதிபதி மட்டத்தில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடக்கவேண்டுமென்று கூறவே இல்லை —
கேள்வி ரொம்ப எளிதானது: ‘ஒருவருடன் உரையாட “நீ இதுக்கெல்லாம் ஒத்துக்கொண்டால்தான் நான் பிள்ளையார் சுழியே போடுவேன்” என்பது சரியா/தப்பா?’
எந்த இடத்தில் எப்படிப்பட்ட நாட்டுடன் என்பதெல்லாம் too specific.
இந்தக் கேள்விக்கு கிஸிங்கரின் அசல் பதில் ‘ஆமாம்’. இன்றைய பதில் ‘depends’.
ஆனானப்பட்ட அவசரக்குடுக்கை புஷ் நிர்வாகமே ஒப்புக் கொண்ட ஒன்றை ஒபாமா சொன்னால் ‘பயந்துடுவான்’ என்னும் திரித்தல்.
ஷியாவுக்கு சன்னிக்கும் வித்தியாசம் தெரியாத ஜான் மகயின்; ஸ்பெயின் எங்கே இருக்கிறது என்று அறியாத மகயின், நேரடியாக பேச்சுவார்த்தைக்கு செல்வதைக் கண்டு பயப்படலாம். இங்கே கையெழுத்துப் போடு என்று சுட்டும் இடத்தில் கைநாட்டை சாற்றிவிட்டு, விருந்தோபசாரத்திற்காக மீட்டிங் நாடலாம்.
ஒபாமாவிற்கு சுயசிந்தனை இருக்கிறது என்பதை அந்த வாதம் நிலைநாட்டியது.
ரிபப்ளிக்கன் கட்சிக்கு பெண் ரேகன் கிடைத்தது தான் அவர்களுக்கு இந்த தேர்தலின் லாபம்.
ஹில்லரியைத் துணைக்கு வைத்துக் கொள்ளாததை நினைந்து நினைந்து ஒபாமா வருந்தும் நிலை வருமோ?
From BBC Tamil News Coverage:
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் விவாதம்
அமெரிக்க ஜனாதிபதியாக போட்டியிடும் பராக் ஒபாமாவும், ஜான் மெக்கெய்னும் முதன்முதலாக ஒளிபரப்பு செய்யப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டனர்.
பொருளாதாரம் தொடர்பாக இருவருக்கும் இடையில் விவாதம் இடம்பெற்ற போதிலும், வெளியுற விஷயத்திலேயே இருவருக்கும் இடையில் கடுமையான விவாதம் இடம்பெற்றது.
இரான் விஷயத்தில் பராக் ஒபாமா அறியாமையில் இருக்கின்றார் என்று மெக்கெய்ன் குற்றம் சாட்டினார். இராக் போர் சீக்கிரம் முடிந்து விடும் என ஜான் மெக்கெய்ன் தப்பு கணக்கு போட்டு விட்டார் என பராக் ஒபாமா குற்றம் சாட்டினார்.
இந்த விவாதத்தில் யாரும் வெற்றி பெற்றது போல தெரியவில்லை என பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகின்றார்.
From Tamil Blogs:
பனிமலர்: “அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் மெக்கைன்னு மற்றும் ஒபாமாவின் முதல் விவாத மேடை”
சன்னாசி: கரிசல் » Lockjaw
Barack Obama's strongest debate moment spawns new video | Top of the Ticket | Los Angeles Times
McCain's bizarre earmark obsession | FP Passport: Earmarks as a percentage of the federal budget
பிங்குபாக்: தலையைக் குனிதலும் முதுகைத் திருப்பிக் கொள்ளுதலும் « US President 08