படிக்காத மேதை – புத்தக வாசமில்லாத விமர்சகர்


கரிசலில் சாலைகள், சதியாலோசனைகள் என்று சன்னாசி பதிவெழுதியிருக்கிறார்.

மேற்கோளாகக் கொஞ்சமே கொஞ்சம்:

அசலில் எனது இணையான சாலை எனக்கு சரியாக இருபத்துமூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. அதனுடன் ஒருகாலத்தில் இணைந்திருக்கலாமென்று நினைத்தேன், அதனுடன் எனது ஒரு கரம் இணைந்திருக்கலாம் – எனக்குப் பல கரங்கள். எனது கரத்தைக் கொண்டுதான் நான் பெருகுவது – உதாரணமாய் ஒரு ஊரின் வெளிப்புறத்தை எனது கரம் அணையும், அணையும் என் கரத்தின்மேல் குழந்தைகள் துள்ளிக் குதித்துக் குதியாளமிட்டு என்னைத் தங்களாக்க முயல்வர் தமது குழந்தைமையால். ஆஹா அற்புதம், ஆஹா அற்புதம், குழந்தைகள் குதியாளமிடும்போது எனக்குள்ளிருக்கும் ஜல்லிகள் குதித்து அவற்றுடன் இணைந்து ஆனந்திக்க முயல்வதில்லை, எங்களுக்கு அவை தரும் எரிச்சலில் சூரியக் கதிர்களை உள்வாங்கி செருப்புகளைத் தாண்டிக் குழந்தைகளின் பாதங்களை எரிக்க முயல்கிறோம், அதுதான் எங்கள் நியதி என்பதில்லை, அதுதான் எங்கள் விழைவு – எங்களது இடம் எங்களுக்கு என்பது எங்களால் வகுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. இருந்துகொண்டேயிருப்பதன் தேய்மானத்துக்குப் பங்களிக்கும் பாதங்களுக்கு எங்களால் செய்யக்கூடிய சிறு உபகாரமென்பது அதுவே.

இப்பொழுது இதற்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று உங்களைப் பணித்தால் எப்படி ஆரம்பிப்பீர்கள்?

முதலில் விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.

‘பால்சாக்’கின் Lost Illusions நாவலின் நாயகனிடம் அவன் நண்பன் சொல்வதை வேதமாக வைத்துக் கொள்ளவும்:

ஒரு நாவலைக் கூட தவறவிடாமல் படித்துவிடுவாள் என்னுடைய காதலி. என்னிடம் விமர்சனத்திற்காக வரும் புத்தகத்தை அவளிடம் கொடுப்பேன். ‘நாவல் ரொம்ப போர்’ என்று அவள் சொன்னால்தான், நான் படிப்பேன். முடிந்தவரைக்கும் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதுவேன்.

அடுத்ததாக அடிக்கடி சொல்லப்படும் வாசகம் “the author is dead”. இதை நம்ப வேண்டாம் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதியாக்கியுள்ளன. ஜெயமோகன் என்றால் வாசிக்கமாட்டேன் என்பது போன்ற சமகால நிகழ்வுகளும் இந்தக் கோணத்தை முற்றிலும் நிராகரிக்க வைக்கிறது.

ஐஸ்க்ரீமுக்கு சாக்லேட் சாஸ் ஊற்றுகிறோமா அல்லது ஸ்ட்ராபெர்ரி ரசம் தெளிக்கிறோமா என்பதைப் பொறுத்து சுவை மாறும். ஆசிரியர் பெயர் என்ன வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து விமர்சனம் வேறுபடும் என்பதற்கு டேவிட் லாட்ஜின் ‘Changing Places: A Tale of Two Campuses‘ நூலை துணைக்கழைக்கலாம்.

வகுப்பறையின் முதல் நாளில் ஆசிரியரால் அறிமுகமாக்கப்படும் ஒரு விளையாட்டு:

 • நீங்க இதுவரைக்கும் வாசிக்காத புத்தகத்தை நினைச்சுக்குங்க…
 • நெனச்சாச்சா?
 • இப்ப வகுப்பில் யாரெல்லாம் அந்தப் புத்தகத்தைப் படிச்சிருக்காங்களே, உங்களுக்கு ஒரு மதிப்பெண்

இதுதான் விளையாட்டு. வெட்கப்படவைத்து ‘அது கூட வாசிக்காதவரா!?’ என்று மற்றவரிடம் நெளிந்து குழையவைக்கும் ஆட்டம். இந்திய நடுத்தர வர்க்கம் மாதிரி ‘முதல் ரேங்க் வாங்கணும்!’ என்று துடிப்பவர்களுக்கு தர்மசங்கடப்படவைக்கும் ஆட்டம்.

முதலிடம் பெற வேண்டுமானால், தன்னுடைய அறியாமையை போட்டுடைக்க வேண்டும். ‘காந்தியின் சுயசரிதை‘யை நான் படித்ததில்லை என்று சொன்னால், நிச்சயம் மற்றவர்கள் ‘நான் வாசித்திருக்கிறேன்‘ என்று சொல்லப் போவதால், நிறைய மதிப்பெண் அள்ளலாம். ஆனால், ‘காந்தியக் கூட படிச்சதில்லையா‘ என்னும் ஏளனம் வந்தே தீரும்!

தமிழர்களிடம் மற்றவர்கள் நிச்சயம் பார்த்திருக்கக் கூடிய, ஆனால் தான் பார்த்திராத திரைப்படம் என்று போட்டி வைத்து வாசிப்பு போதாமையை வெளிக்காட்டாமல் அடக்கி வாசிக்கலாம்.

டயலாக் விருமாண்டி நேரம்: படிக்கலன்னு சொல்லிடறவன் வீரன்; படிக்காதவனப் படிக்க வக்கிறவன் மனுசன்!

இதில் எந்த நிலை எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, குறிப்பிடப்பட்ட புத்தகம் அல்லது ஆசிரியர் எவ்வளவு தூரம் புகழடைந்திருக்கிறார் என்பதை புறங்கையால் தள்ளக்கூடியவரா என்பதையும் பொறுத்து — இலக்கியத்தரமாக இருக்கிறதா அல்லது வெகுசனத்தரமாக இருக்கிறதா என்றெல்லாம் விமர்சனம் கிழிக்கலாம்.

கடைசியாக எழுதியதை வாசித்திருக்க வேண்டுமா என்பதற்கு உம்பர்ட்டோ ஈக்கோவின் ‘The Name of the Rose‘ பயன்படும்.

வாடிகனுக்குள் மிக மிகப் பெரிய நூலகம் இருக்கிறது. ஏதாவது தேவை என்றால் மனுப் போட்டு, ஐந்தாண்டுகள் காத்திருந்து, ஐம்பது கிலோமீட்டர் எட்டி நின்று வாங்கிக் கொண்டு போகலாம். அந்த மாதிரி ஓரிடத்தில் கதை நடக்கிறது. வடக்கு இத்தாலி. மர்மமான முறையில் சாவு. பினங்கள் குவிகிறது. யார் கொன்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்.

டேன் பிரௌனின் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் ராஜேஷ்குமார் வகையறா என்றால், இது பின் நவீனத்துவ உம்பர்ட்டோ இகோ வகையறா.

எதற்காக எல்லாம் கொல்லப்படுகிறார்கள்? இரகசியமாகப் பாதுகாக்கப்படும் புத்தகத்தை கண்டடைந்தவர்கள் எல்லாருமே இறந்திருக்கிறார்கள். எப்படி இறந்தார்கள் என்பதும் மர்மம். ஆனால், நூலைத் தொட்டவர்கள் பரமபதம் அடைந்து விட்டார்கள்.

நாவலின் இறுதிக் காட்சியில் ஹீரோவுக்கும் நம்பியார் போன்ற வயசான வில்லனுக்கும் இடையே விவாதம். தாத்தாவாகிப் போன பாதுகாவலருக்கு கண் பார்வை முழுவதுமாக பழுதடைந்து விட்டது. அவ்வளவு கடும் கட்டுப்பாட்டுக்குள் இருந்த புத்தகம் ‘நகைச்சுவை’யின் ரசங்களை விவரிக்கும் அரிஸ்டாட்டிலின் அங்கத இலக்கிய ஆய்வு.

புத்தகத்தை தவமாய் தவமிருந்து தேடல் முடிவில் பெற்றவர்கள் — எப்படி இறந்தார்கள்?

இப்பொழுது பழசாகிப் போன டெக்னிக். தாள்களில் விஷம் தோய்ந்திருக்கிறது. பக்கங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால், நாக்கில் எச்சில் தொட்டுக் கொள்ள, விடமேறி மர்ம மரணம் அடைந்திருக்கிறார்கள்.

பலான படத்தை டவுன்லோடும் அவசரத்தில் வைரசைக் கொண்டு வந்த கதையாக, முந்தைய வாசகர்கள் அனைவரும் முட்டாளாக கையுறை அணியாமல் புத்தகத்தை புரட்டியிருக்கிறார்கள். ஹீரோ அதி புத்திசாலி. கையுறை அணிகிறார். என்றாலும், புத்தக ஓரங்கள் கையுறையையும் சிராய்த்து கிழிக்கின்றன. பக்கங்களைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட அந்தப் புத்தகத்தை, புரட்டக் கூட இயலாமல், அந்த நூலில் என்ன எழுதியிருக்கிறது, யார் எழுதினார்கள் என்பதைப் பார்க்காமலே, படிக்காமலே உணர்ந்து கொள்கிறார் ஹீரோ!

நீண்ட நெடுங்காலமாக காவல் காக்கும் வயதான மூத்த முனிவரும் அந்தப் புத்தகத்தைப் புரட்டியதில்லை. எங்கே புரட்டினால், பகிடியும் நக்கலும் தன்னையும் தொற்றிக் கொண்டு, தானும் இறை நிந்தனையில் இறங்கிவிடுவோமோ என்னும் அச்சம். நையாண்டியில் திளைத்து கேளிக்கை, கொண்டாட்டத்தில் விழுந்து விடுவோமோ என்னும் பயம். அவரும் புத்தகத்தைப் படிக்காமலே புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

வாசிக்க விழைந்தவர்களையும் தீர்த்துக் கட்டி, இமேஜைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

ஹீரோவோ முதற்பக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு, கிட்டத்தட்ட முழு புத்தகத்தையும் அனுமாணித்து விடுகிறான். ஹீரோவும் வில்லனும் இருவேறு நூல்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அத்தியாயம் கூட வாசிக்காமலேயே தங்கள் அனுபவங்களை வைத்து, இட்டுக் கட்டி விவாதம் நடத்துகிறார்கள்.

விமர்சகரின் வேலையும் இதுதான்.

கட்டாங்கடைசியாக, இவ்வளவு ஆராய்ந்து அனுபவித்து புகழ்ந்து விதந்தோந்து விமர்சனம் எதற்காக எழுதுகிறோம் என்பதை ஆஸ்கார் வைல்ட்-டின் ‘படிக்கலாமா? வேண்டாமா’ என்னும் கட்டுரையில் இருந்து உணரலாம்:

சிறந்த நூறு புத்தகங்களை தேர்ந்தெடுக்குமாறு என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வசதிக்காக மூன்று பிரிவாக பிரித்துக் கொள்கிறேன்.

1. சுயசரிதை, சரித்திர நூல்கள்.
2. மீள்வாசிப்பில் புது வாசல்களைத் திறக்கும் மகாகவிகளின் கவிதைகள்; தத்துவபிரக்ஞைகளின் எழுத்துகள்; ஞானிகள் அல்ல!
3. எதை எல்லாம் தொடக் கூடாது என்பதன் பட்டியல்.

படித்தால் பைசா பிரயோஜனமில்லாதது என்பதை விமர்சகர் சொல்லவேண்டும். வாசித்தால் ஊறு விளையலாம் என்பதை உணர்த்துவது முக்கியம். நூறு மோசமான புத்தகங்களின் பட்டியல் வெளியிடுபவருக்கு இந்த உலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

சன்னாசியின் பதிவு உட்பட மேலேக் குறிப்பிட்ட எந்தப் புத்தகத்தையும் நான் படித்ததில்லை. எனினும் விமர்சனம் போல் ஒன்று சமைத்தாக்க முடிகிறது. நீங்களும் இப்பொழுது விமர்சனம் எழுதத் தயாரா?

உதவிய புத்தகம்: புத்தக தினம்

உதவிய பதிவு: Literature, Science, and a New Humanities :: Jonathan Gottschall Measure for Measure – The Boston Globe: “Literary criticism could be one of our best tools for understanding the human condition. But first, it needs a radical change: embracing science”

6 responses to “படிக்காத மேதை – புத்தக வாசமில்லாத விமர்சகர்

 1. //கடைசியாக எழுதியதை வாசித்திருக்க வேண்டுமா என்பதற்கு உம்பர்ட்டோ ஈக்கோவின் ‘The Name of the Rose‘ பயன்படும்.

  தயவு செய்து இந்த புஸ்தகத்தை நாஸ்தி செய்து எடுத்த படத்தை தப்பி தவறி கூட பார்த்து விடாதீர்கள். ஹாலிவுட்டை கொளுத்தினால் என்ற எண்ணம் தோன்ற அந்த படமும் ஒரு பெரிய காரணம்..

 2. பாபா, இத்தாலோ கால்வினோவின் ‘A King listens’ல் வரும் அரசன் எழுதிய பதிவு மாதிரி இருக்கிறது ;-). நாம் எதையும் கேட்க முனைய(க்கூட)த் தேவையில்லை, தானாய் வந்து விழுவதையே கேட்க முனைந்து ஈர்த்துக்கொண்டதாகக் கருதிக்கொள்ளலாம்.

 3. சன்னாசியின் இன்னொரு பெயர்
  கோணங்கியா :).தமிழவன் நாவலுக்கு நாகார்ஜுனன் பின் நவீனத்துவ கோனார் உரை எழுதியிருக்கிறார், படித்து முடியைப் பிய்த்துக்
  கொள்ளவும் 😦

 4. —படத்தை தப்பி தவறி கூட பார்த்து விடாதீர்கள்.—

  பாலா… படத்தைப் பார்த்து, கதையைப் படித்த மகிழ்வைக் கொண்டு வரலாம் என்று நினைத்தேன். The Mysterious Flame of Queen Loana படிக்க ஆரம்பித்து, ஆரம்பித்த நிலையிலேயே இருக்கிறது 😐

  —இத்தாலோ கால்வினோவின் ‘A King listens’—

  வாசித்ததில்லை. எடுத்துப் பார்க்கிறேன்.

  iamnotgod … கோணங்கியின் துவக்க கால சிறுகதை தொகுப்புகள் இன்னும் அச்சில் உள்ளனவா? கிடைக்கின்றதா??

 5. Pingback: டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு « Snap Judgment

 6. Pingback: டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு « Srini’s Weblog

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.