பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே!: ரஜினி ஏக்கம்
“பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே’ என்று “பெரியார்’ திரைப்படத் தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் ரஜினிகாந்துக்காக “பெரியார்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து வியந்த ரஜினிகாந்த், படத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம்:
“பெரியார்’ படம் பார்த்து பிரமிப்பு அடைந்தேன். பெரியாருடைய கொள்கைகளை அறிந்திருக்கிறேன். ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இந்தப் படத்தின் மூலம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்த பிறகு பெரியார் மேல் எனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. சமூக நலனுக்காகப் போராடிய காலங்களில் அவருடன் நாம் இல்லையே என்ற ஏக்கம் படம் பார்க்கும்போது ஏற்பட்டது. இருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகிய முதல்வர் கருணாநிதி, கி.வீரமணி ஆகியோரோடு எனக்கு பழகுகின்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், பெரியாராகவே வாழ்ந்து காட்டிய நடிகர் சத்யராஜுக்கும், அருமையாக இயக்கிய ஞானராஜசேகரனுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.