தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்து வருமா?


உலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கருணாநிதி நேற்று பத்திரிகையாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது: ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளே கூட்டணி ஆட்சியை விரும்பவில்லை’ என்று பதில் கூறியுள்ளார்.

இதுதான் கருணாநிதி!

சரி! தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டுமா? வேண்டாமா? இது குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கருணாநிதிக்கோ அல்லது ஜ.மு.கூ. கட்சிகளுக்கோ ஏதாவது தெரியுமா?

மத்தியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை கட்சி ஆட்சிதான் – குறிப்பாக காங்கிர° கட்சியின் ஆட்சிதான் நடைபெற்று வந்தது. ஆனால், இன்றைக்கு நிலைமை என்ன? பா.ஜ.க.வாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும் யாருடைய தயவிலாவதுதான் கூட்டணி ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற நிலைமையல்லவா!

ஏன் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கூடாது? தமிழகத்திற்கு பல நலன்களை செய்த கருணாநிதி ஏன் கூட்டணி ஆட்சி என்ற கூட்டாட்சி தத்துவத்திற்கு மகுடம் சூட்டக்கூடாது! இது அவருக்கு பெரும் புகழைத் தரக்கூடியதுதானே!

ஒரு வேளை தன்னுடைய கட்சியே மெஜாரிட்டி வரும் என்ற நம்பிக்கையா? இது இந்த தேர்தலில் நடக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்!

ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இருக்கிற இடதுசாரிகள் மேற்கு வங்கத்திலும் – கேரளத்திலும் – திரிபுராவிலும் ஆரம்பம் முதல் இன்று வரைக்கும் கூட்டணி ஆட்சிதானே நடத்தி வருகிறார்கள்! மேற்குவங்கத்தில் 27 வருடமாக கூட்டணி ஆட்சி குழப்பம் இல்லாமல் நடைபெறுவதாக கூறுகிறார்களே! ஜனநாயகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் கசப்பான விஷயமா என்ன!

மத்தியில் கூட்டணி ஆட்சியும் – இடதுசாரிகளின் ஆதரவும் இருப்பதால்தான் குறைந்தபட்சம் மத்திய அரசை சில விஷயங்களிலாவது கடிவாளம் போட்டு நிறுத்த முடிகிறது என்பது அனுபவமில்லையா?

இல்லையென்றால் ஜெயலலிதா மாதிரி ஏகபோக சர்வாதிகார ஆட்சியாக அல்லவா இருக்கும். தமிழகத்தில் அம்மாவின் சொல்லுக்கு மறு சொல்லை பேச முடியுமா?

இது திமுகவாக இருந்தாலும் அதிமுகாவாக இருந்தாலும் கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் இருவரின் ஆட்சிதானே நடைபெற்றது. கூட்டணி ஆட்சி என்ற சோதனையை தமிழகத்தில் ஏன் பரிட்சித்து பார்க்க கூடாது! பழுத்த பண்பான அரசியல்வாதியான கருணாநிதி இதை செய்வாரா?

பதில் : வாக்காளர்கள் கையில்தான்… வாழ்க ஜனநாயகம்… வளர்க விழிப்புணர்வு…

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.