நியு யார்க் நிறுத்தம்


நியு யார்க்கில் சில காலம் வசித்திருக்கிறேன். பாம்பேவின் ரயில்களே என்னை குழப்பத்தில் ஆழ்த்தும். நியு யார்க்கின் வண்ணமயமான மின்ரதங்கள், சென்னையின் காட்டானை, நியு யார்க்கில் விட்டது போல் கண்ணைக் கட்டும். ஒன்றாம் வாய்ப்பாடு சொல்லிக் கொடுப்பார்கள்; ஏ டு ஜெட் வரும்; நிற்கும்; திறக்கும்; மூடும்; புறப்படும்.

கூட்டமாக மக்கள் சேர்ந்து வித்தை பார்ப்பார்கள். ரத்த அழுத்தத்தை சோதிப்பார்கள். இசைக்கு குத்தாட்டம் போடுவார்கள். பரபரப்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலுடன் நெட்டித் தள்ளி ஓடுவார்கள். ஊன்றுகோலுடன் பராக்கு பார்ப்பர்கள். வேலைக்கு விரையாவிட்டால் மனதுக்குள் மெல்லிய ஈர்ப்பும், ஓரவாயில் மென் நகையும் வழிந்தோடும்.

பட்டிக்காட்டான் லுக்குடன் இரும்புக் கம்பிகளுக்கு பின்னால் இருந்த இந்தியர் போன்ற தோற்றம் அளித்த தாத்தாவிடம் ‘ம்யூஸியம் ஆஃப் நாச்சுரல் ஹிஸ்டரி‘ செல்வது எப்படி என்று விசாரித்தவுடன், முரட்டுப் பார்வையுடன் ‘தமிழா’ என்று விசாரித்து, அட்சர சுத்தமான இலங்கைத் தமிழில், எப்படி ப்ளாட்ஃபாரத்திற்கு செல்ல வேண்டும், எந்த ட்ரெயினைப் பிடிக்கணும், எங்கு இறங்க வேண்டும், எவ்வாறு நடக்க வேண்டும் என்பது வரைந்து கொடுத்தார்.

நியுயார்க் டைம்ஸில் திங்கள்தோறும் வெளிவரும் இனிய மெட்ரோபாலிடன் டைரிக்கு பகுதி தவறவிட்ட சம்பவங்களை தவறவிடக் கூடாத வகையில் சொல்லி வருகிறது.

முதலாளித்துவ நாடுகளில் வசித்ததால் என்பதுதான் காரணமாக இருக்கவேண்டும். வேலை நிறுத்தம் என்றாலே அலர்ஜியாக இருந்தது. அந்த ஒவ்வாமை, மே 2005-இல் பயமாக மாறியது.

NStar ஸ்ட்ரைக்கின் போது சகாக்கள் எழுப்பிய கோஷங்கள், இந்தியாவில் கேட்டது போன்ற ‘ஜிந்தாபாத்’கள்தான். ஆனால், பார்கிங் செய்வதற்கு அலுவலக வளாகத்துக்குள் கார் நுழைவதற்கு முன், ஒவ்வொரு காரும் காவல்துறையினரால் நிறுத்தப்படும். உங்கள் காரை, ‘கேரோ’ போன்று சுற்றி நின்று குரல் எழுப்புவார்கள். கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்காமல் இருப்பது உசிதம்.

கார் கண்ணாடி மீது ஓங்கித் தட்டுகிறார்களே, என்று அகஸ்மாத்தாக் கவிழ்ந்த தலை கலவரத்துடன் தூக்கினால், மிக மோசமாக பிறப்பை குறித்துத் திட்டப்படுவீர்கள். ‘உன்னால் என்னை வசை பாடத்தானே முடியும்!‘ என்று அலட்சிய புன்னகை தவழ்ந்த மேலாளர் ஒருவரின் ஹ்யுண்டாய், ‘7-ஜி ரெயின்போ காலனி‘யில் கிழிப்பாரே… அந்த மாதிரி கூரிய கத்தியால் உரசப்பட்டது. யூனியனின் சக்தியை நம்பும் போலிஸ் காரர்களும், உள்ளே இருக்கும் நபரை கிழிக்காதவரை, ‘உனக்கு வேணும்டா‘ என்று பரபிரும்மமாக இருப்பார்.


கடந்த கால் நூற்றாண்டில் முதல்முறையாக, ஏழு மில்லியன் பயனர்களை தினசரி கரை சேர்க்கும் எம்.டி.ஏ (M.T.A.)-தான் தற்போதைய சூடான வேலை நிறுத்தம். நியு யார்க் நகர ஓட்டுனர்களின் தலையாய கருத்து வேறுபாடுகள்:

1. புதிய ஊழியர்கள்: இனிமேல் வேலைக்கு சேருபவர்களின் சம்பளம் 4% குறைவாக தொடங்கும்

2. சம்பள உயர்வு: வருடத்துக்கு 3.5% உயர்த்தினால் போதாது; வருடா வருடம் எட்டு சதவீதம் உயர்த்த வேண்டும்.

3. ஓய்வு பெற்ற பிறகும் உடல்நல காப்புறுதியை தொடர்ந்து வழங்குதல்

4. ஓய்வு பெறும் வயதை 55-க்கு பதில் 62-ஆக வைத்துக் கொள்ளுதல்

5. சேமநல வைப்புத் தொகைக்கான, ஊழியர் பங்களிப்பை இரண்டு சதவிகிதத்தில் இருந்து ஆறு சதவீதமாக உயர்த்துதல்

கடைசியாக சொன்ன 2-இல் இருந்து 6%-தான் ப்ரேகிங் பாயிண்ட். அதன் மூலம் எம்.டி.ஏ.வினால் அடுத்த மூன்றாண்டுகளில் கிட்டத்தட்ட இருபது மில்லியன் டாலர்கள் சேமிக்கமுடிகிறது.

எடுத்துக்காட்டாக, ஆண்டுக்கு முப்பதாயிரம் டாலர் சம்பாதிக்கும் ஓட்டுநர், மாதத்துக்கு ஐம்பது ரூபாயை பென்ஷனுக்குக் காணிக்கையாக்கினார். அவரின் மாத சேமிப்பு நூற்றைம்பது ரூபாயாக அதிகரித்திருக்கும். கடைநிலை ஊழியரின் சம்பளத்தில் கிட்டத்தட்ட நூறு ரூபாய் குறைவது பட்ஜெட்டை பெருமளவு இடிக்க வைக்கும்.

வேலை நிறுத்தத்தை ஆதரிப்பவர்கள் இவ்வாறு வாதிடுகிறார்கள்:

1. அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு நானூறு மில்லியனில் இருந்து 660 மில்லியன் டால்ர் வரை இழப்பு ஏற்படுகிறது. (தகவல்: WSJ.com – The Numbers Behind the Transit Strike)

2. எம்.டி.ஏ. வேலை நிறுத்தத்தால், காவல் துறைக்குக் கொடுக்கும் ஓவர்டைம் பணத்தோடு ஒப்பிட்டால், பென்சன் சுமை ஒன்றுமே இல்லை.

3. சேமிப்புக் கணக்கில் ஒரு பில்லியனை வைத்திருப்பவர்கள், கொஞ்சம் செல்வழித்தால்தான் குறைந்து போய் விடுவார்களா?

பென்ஷன் காணிக்கைகளை சீரமைக்காவிட்டால், புஷ் நடத்தும் அரசாங்கம் போல் — ஒரு பில்லியன் டாலர் அதிகம் வைத்திருக்கும் சேமநலநிதி சீர்குலைந்து, திவாலாகும் அபாயம் இருக்கிறது. போக்குவரத்துக் கழக உறுப்பினர்களின் 6% பங்களிப்பில்லாமல், 2009-இல் ஒரு பில்லியன் டாலர்களுக்கு ஓட்டை விழுந்து விடும், என்று கணக்கு சொல்கிறது.

பேச்சுவார்த்தைகளில் நேரம் செல்விடாமல் அடுத்த குடியரசு நாயகராகும் ஆசையில் அமெரிக்காவெங்கும் உலாப் போகும் நியு யார்க் கவர்னர் ஜார்ஜ் படாகி-யை (George Pataki), யூனியன் தலைவர்களை விடக் கடுமையாக விமர்சிக்கலாம். தொலைநோக்குப் பார்வை இல்லாமல், மக்களுக்கு தொல்லை வரலாம் என்று யோசிக்காமல், நியு யார்க் வாசிகளை ஹட்ஸன் நட்டாற்றில் நீந்த விட்டிருக்கிறார்.

ஆனால், அபராதத் தொகை எல்லாம் ஊழியர்களை நோக்கியே வீசப்படுகிறது. வேலை நிறுத்தம் செய்யும் நாளொன்றுக்கு மில்லியன் டாலர்கள் அபராதம் கட்டி விடுமாறு யூனியனுக்கு எதிராக தீர்ப்பாகியிருக்கிறது. அதைத் தவிர அமைப்பின் தலைவர்கள் தினமும் ஆயிரம் டாலர் தண்டம் கட்ட வேண்டும்.

வேலை நிறுத்தம் ஒவ்வொருவரையும் பாதித்திருக்கிறது. பள்ளிக் கூடங்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கின்றது. தட்டித் தடுமாறும் அமெரிக்கப் பொருளாதாரம் எழுந்து நிற்பதே நத்தார் தினத்துக்காக நுகர்வாளர்கள் வாங்கும் பொருட்களில்தான். விற்பனையில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. ‘தூறல் நின்னு போச்சு‘ காலங்களில் ரேஷன் க்யூவில் நின்றது போல் டேக்ஸிக்கும், தொலைதூர ரயில் வண்டிகளுக்குமான காத்திருத்தல் எகிறியிருக்கிறது.

ஐம்பத்தைந்து வயதிலேயே முழு சேமநலத்துடன் ரிடையராகும் வசதி, பாக்கெட்டில் இருந்து பைசா எடுக்காமல் தொடரும் உடல்நல காப்புறுதி, ஆண்டுதோறும் பணவீக்கத்திற்கேற்ப உயரும் சம்பளம் என்று முதலாளிகள் பல முரண்களில் சரணடைந்தாலும், தொழிலாளிகள் எதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் பேச்சுவார்த்தைகள் முறியும்.

மைனஸ் டிகிரி குளிர் கொளுத்தும் வேளைகளில், வேலைக்கு பொதுஜனம் நடராஜா சர்வீஸை கையிலெடுத்து, ஜனநாயகத்தை அனுபவிக்கிறார்.


| |

6 responses to “நியு யார்க் நிறுத்தம்

 1. பத்மா அர்விந்த்

  8% ஊதிய உய்ரவு அதிகம் அதுவும் இவர்கள் யாரும் எந்த வகையிலும் வழமையான அலுவல்களை தாண்டி அதிக செய்வதில்லை. இவர்களுக்கு comp time உண்டு. 42% உபரிகள் உண்டு. வேலையிலிருந்து ஓய்வு பெறும் கடைசி ஊதியத்திலிருந்து 75% வரை பென்ஷன் உண்டு. இதனால் சிலர் அதிகப்படியான Overtime செய்து கடைசி ஊதியத்தை அளவுக்கு மீறி எகிரச்செய்வதும் உண்டு. படித்து வேலை பார்க்கும் பொறியியல் வல்லுனர்கள், மருத்துவர்கள் இதுபோன்ற சிறப்பு சலுகைகள் கிடையாது. அளவுக்கு மீறி ஆசைபட்டு ஏற்கெனவே போண்டியான நிலையில் உள்ள நியுயார்க்கால் என்ன செய்ய முடியும்?

 2. நியு யார்க்குக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தாக வாபஸ் பெற்றுக் கொண்டது, எல்லாத்தரப்புக்கும் மகிழ்ச்சியான முடிவு 🙂

 3. பத்மா அர்விந்த்

  இன்னும் ஒப்பந்தம் முடிவாகவில்லை. 6% ஊதிய அதிகரிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது பலதுரைகளில் கிடைக்கும் 3% விட அதிகம். மேலும் ஸ்டைபண்டாக ஒரு 4000$ வரை வழங்கப்படலாம்:)
  வியாபாரிகளுக்கு நஷ்டம் 1பில்லியன் என்கிறார் மேயர். பாவம் அவர்களும் மக்களும்.

 4. மேலதிக விவரங்களுக்கு நன்றி தேன்துளி.

  அடேங்கப்பா… நீங்களும் பாதிக்கப் பட்டீர்களா?

 5. Pingback: 2 நாள் அகில இந்திய வேலைநிறுத்தம்: பாரத் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு | Snap Judgment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.