சம்சாரிகளின் வட்டார வழக்கு மொழி


கழனி யூரன் ::

மரபாக சம்சாரிகள், நெல் மகசூல் செய்யும்போது தன் வட்டார வழக்கு மொழியை எவ்வாறெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

முதன்முதலாகச் சம்சாரிகள், கதிர் அறுத்து அடிக்கும் தானியத்தைத் ‘தலையடித்தானியம்‘ என்று கூறுவார்கள். அதில் முதல் மரக்கால் நெல்லை கடவுளுக்கு அல்லது கோயிலுக்கு என்று அளந்துவிட்டு அடுத்த மரக்கால் நெல்லை, விதைக்கு என்று அளப்பார்கள். இது விதை நெல்லாகும். தலையடித் தானியம் சாமிக்கு அடுத்தது விதைக்கு என்ற களத்தில் வைத்துச் சம்சாரி கூறுகிறான். இந்த விதை நெல்லை ‘விதை முதல்’ என்று கூறுகிறார்கள்.

நெல் நாற்றுப் பாவ வேண்டிய நிலை வந்ததும், நெல் விதையைச் சாக்கில் போட்டுக் கட்டித் தண்ணீரில் வைக்கிறார்கள். முதல் நாள் முழுவதும் விதை சாக்கோடு நீரில் மூழ்கி இருக்கும். மறுநாள் தண்ணீரைவிட்டு எடுத்து, மேடான இடத்தில் வைத்து விடுவார்கள். மூன்றாம் நாள் விதை முளைக்கூறி வெள்ளையாக விதையாகத்தளிர் வேர் வெளியே தெரியும். அதைச் சம்சாரிகள் ‘மூன்றாங் கொம்பு’ என்று கூறுகிறார்கள்.

நாற்றுப் பாவ நாற்றாங்காலை உழுது பக்குவப்படுத்துகிறார்கள். முறைக்கட்டிய விதையை, நாற்றாங்காலில் பாவுகிறார்கள். அளவான நீரில் நாற்றங்காலின் தொழிலில் உள்ள சகதியின் மேல் விழுந்த விதையின் வேர் மண்ணில் பற்றிக் கொள்வதைச் சம்சாரிகள் ‘விதைத் தருவுதல்’ என்று கூறுகின்றார்கள்.

நாற்றாங்கால் விதை பாவிய பிறகு சற்றே நீர் நிற்கவேண்டும். இதை நாற்றங்காலில் விதை முளைக்கும் வரை ‘சில்லுதண்ணியா’ நிக்கனும் என்று கூறுகிறார்கள். இல்லை என்றால், “திடீரென மழை பெய்து நாற்றங்காலில் உள்ள விதைகளைக் கட்டிக் குமித்து குவித்துவிடும்” என்று கூறுகிறார்கள்.

மறுநாள், ”விதைகால் பாவிட்டு” என்று கூறுகிறார்கள். நாலு நாள் கழித்ததும், ”நாத்து கூடிட்டு” என்று சொல்கிறார்கள். நாற்று நன்றாக வளர்ந்துவிட்டால், ”நாற்றுச் செல்லப்பிள்ளை கணக்கா வளர்ந்திருக்கு” என்று கூறுகிறார்கள். பூரணமாக வளராத நாற்றை ‘கைக்கு எட்டாத நாற்று’ என்றும் சொல்கிறார்கள்.

நாற்றைப் பிடுங்கி முடியாகக் கட்டுகிறார்கள். இதை, ஒரு முடி நாற்று என்று கூறுகிறார்கள். நாற்றுப் பிடுங்கும் பெண்களின் இரண்டு கைகளுக்கும் இடையே உள்ள ஒருவித உத்தேச அளவைக் கொண்டு இந்த நாற்று முடி அமைகிறது.

நாற்று நடும்போது, ‘முதலைக் குறைத்து வைத்து நெருக்க நடு’ என்று கூறுகிறார்கள். இங்கு முதல் என்பது நெல் நாற்றைக் குறிக்கிறது.

‘நாள் நடுகை’ என்றொரு சொல்லாட்சியை சம்சாரிகள் இரண்டு இடங்களில் பயன்படுத்துகிறார்கள். முதன்முதலில் ஒரு சம்சாரிக்கான கழனியில் நடுகிற நடுகையை, ‘நாள் நடுகை’ என்று கூறுகின்றார்கள். அதேபோல, அந்தச் சம்சாரிக்குச் சொந்தமான கழனிகளில் கடைசியாக நடுகிற நடுகையையும் ‘நாள் நடுகை’ என்றே குறிப்பிடுகின்றார்கள்.

நாற்று நட்டு நான்கு நாட்கள் ஆன நெல்பயிரைப் பார்த்து ‘கூன்’ நிமிர்ந்து விட்டது என்று கூறுகின்றார்கள். அதன்பிறகு நான்கு நாட்கள் கழித்த பயிரைத்தான் ‘நடுகை தழுத்துட்டு’ என்று கூறுகிறார்கள். அதன்பிறகு ஒரு வாரம் கழித்ததும், ‘பயிர் பச்சை வீசிட்டு’ என்று கூறுகின்றார்கள். அதன்பின் ஒரு வாரம் கழித்து ‘கருநடுகை’ யாயிட்டு என்று கூறுகிறார்கள். அதன்பிறகு 1 வாரம் கழித்து பயிர் மூடு கட்டிட்டு என்றும், அதன்பின் 1 வாரம் கழித்து பயிர் நிலம் அடைத்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

அதன்பிறகு நன்கு வளர்ந்து வயிற்றில் பொதி உள்ள பயிரை ‘பொதிப்பயிர்’ என்றும், பொதி வயிற்றில் உள்ள பயிரை, ‘ஒத்த இலக்குப் பயிர்’ என்றும் கூறுகிறார்கள். பொதி வெளிவந்தும் வராமலும் இருப்பதை ‘பயிர் விக்சலும் சச்சலுமா இருக்கு’ என்று கூறுகின்றார்கள்.

பொதி எல்லாம் வெளிவந்த பயிரைப் பார்த்து, ‘கதிர் நிரந்துட்டு’ என்று கூறுகின்றார்கள். அதன்பிறகு ‘கதிர் அன்னம் கோதுகிறது’ என்று கூறுகின்றார்கள். பிறகு, நாலுநாள் கழித்து, ‘பால் கோதிட்டு’ என்று கூறுகின்றார்கள்.

விளையும் பயிரைப் பார்த்து பயிர் தலை கவிழ்ந்துவிட்டது என்று கூறுகின்றார்கள். நெல் விளைந்ததும் ‘கதிர் மணி பிடிச்சிட்டு’ என்று கூறுகின்றார்கள். ஆரோக்கியமாக விளைந்த நெல் கதிரை, ‘கொலைத் தாக்கு உள்ள கதிர்’ என்று கூறுகின்றார்கள்.

இது நெற்பயிர் குறித்த விவசாயத்தில் பயிர் குறித்த சொற்கள் மட்டுமே, இதுபோல நெல் பயிரிடுவது குறித்து, சம்சாரிகள் பயன்படுத்தும் சொற்களை எல்லாம் தனியாகத் தொகுக்கலாம். இதேபோல் மற்றப் பயிர்களைப் பயிரிடும்போது சம்சாரிகள் கூறும் வட்டார வழக்குச் சொற்களைத் தனியே சேகரிக்கலாம். தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக, அல்லது வட்டாரம் வாரியாக உள்ள சம்சாரிகள் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்களை எல்லாம் சேகரித்தால், தமிழுக்குப் புதிய புதிய அழகிய சொற்கள் கிடைக்கும்.

ஒரு குழந்தை பிறந்தது முதல் அக்குழந்தையை, பச்சப்பிள்ளை, ஏந்துபிள்ளை, கைக்குழந்தை, பால் குடி மாறாத பாலகன், தவழும் குழந்தை, நடைபயிலும் பிள்ளை, சிறுவன், பாலகன் என்று பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பல்வேறு பெயர்களைச் சொல்லி தாய் அக்குழந்தையை அழைப்பது போல் சம்சாரியும், தான் நட்டு வளர்க்கும் நெல் பயிரை அதன் வளர்ச்சி நிலைக்கு ஏற்பப் பல பெயர்களைச் சொல்லி அழைக்கிறான்.

பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் பெருமக்கள், குழந்தையின் வளர்ச்சி நிலைகளைத் தாலாட்டு, அம்புலி, செங்கீரை என்று பல பருவங்களாகப் பார்த்து ரசித்தது போல், சம்சாரிகளும், தான் பயிரிடும் நெற்பயிரை வளர்ச்சி நிலைக்கு ஏற்ப பல்வேறு சொற்களால் அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

| | |

13 responses to “சம்சாரிகளின் வட்டார வழக்கு மொழி

 1. Nice post. Thanks!

 2. துளசி கோபால்

  அருமையான பதிவு. பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. நன்றி.

  என்றும் அன்புடன்,
  துளசி.

 3. இவரு, எந்த ஊரு சம்சாரிங்கோ? நாம பன்னென்டு வயசு வரைக்கும் விவசாயிதான். இருந்தாலும், பல வார்த்தைகள் context புரியவில்லை.

 4. மிக நல்ல பதிவு….எங்கள் வீட்டிலும் விவசாயம்தான். ஆனால் நான் இது போன்ற சொல்லாடல்களை அதிகம் கவணித்தது கிடையாது.
  அது சரி…
  “சம்சாரிகள்” என்பது இவ்விடத்தில் யாரை குறிக்கும் சொல்(எமது அறியாமையை மண்ணிக்கவும்)…

 5. பால சுப்ரா,

  சுட்டிக்கு நன்றி!

  < Comment unrelated to this post >
  கம்பூட்டர் வேர்ல்ட் கார்டூன் லிங்கை மாற்றியதற்கு தேங்ஸ்!

  .:டைனோ:.

 6. பாலாஜி அவர்களே,

  நானும் ஒரு விவசாயி. சோழநாடாம் தஞ்சையின் மைந்தன். தாங்கள் எழுதியுள்ள வார்த்தைகளை நாங்களே பேசியதில்லை. ஒருவேளை உங்கள் ஊர்ப் பக்கம் பேச்சு வழக்கில் இருக்கும் சொற்களாக இருக்கும் என நினைக்கிறேன்.

  பெரிய விவசாயி ராசா வந்தால் உண்மை தெரியும்.

  (டைனோவுக்கு:- நன்றாக பல இடங்களில் பின்னூட்டுகிறீர்கள். உங்களுக்கு வலைப்பதிவு ஏதும் உள்ளதா?)

  ***விசித்திரன்

 7. தங்கமணி, துளசி, டைனோ… நன்றி

  –எந்த ஊரு சம்சாரிங்கோ–

  யாழ்மணத்தில் வெளிவந்திருக்கிறது. (யாழ்மணத்தில் வெளிவருவதெல்லாம் ஈழத்தவர்களின் படைப்புகள் என்று சொல்ல முடியாது! 🙂

  —“சம்சாரிகள்” என்பது இவ்விடத்தில் யாரை குறிக்கும் சொல்—

  கடவுளென்னும் முதலாளி
  கண்டெடுத்த தொழிலாளி
  விவசாயி

 8. Tirunelveli vazakku pola ullathu ….

 9. நன்றி விசித்திரன். எனக்கு வலைப்பதிவேதுமில்லை!

  .:டைனோ:.

 10. இது தஞ்சை மொழிஎன நினைத்தேன் ஆயிட்டு போயிட்டு என்பதை வைத்து
  எங்கள் பக்கம் கொஞ்சம் மாற்றம்
  தலையடித்தானியம் தலையடி நெல்
  முதல் மூன்று மரக்காலை அளந்து அதை நெல்பட்டரையை சுற்றி பொழி பொழி எனகூறி திருநீருபோட்டு சுற்றி கொட்டுவந்து அளந்து முதல் மரக்கால் சாமிக்கு என எடுத்து வைப்பர் கோவிலிருந்து ஆள் வந்து வாங்கிச்செல்வார் களத்து மேட்டிலே
  பிறகு நல்ல நெல்லைஎடுத்து விதைமுதல் என வரட்டி துண்டு அல்லது காய்ந்த சாணத்தை அதில் போட்டு வைப்பர் தனியாக வைப்பர்
  நாற்றங்காலை நான்ககைந்து உழவு ஓட்டி தெளியடித்து பரம்படித்து சமமாக ஒற்றை எண்வரும்படி பிரித்து
  இரண்டாம் கொம்பு அல்லது மூன்றாம் கொம்பு விதையை நன்றா முளைவிட்ட நெல்விதையை பாவுவர் இதற்கு விதை பாவுதல் என்று பெயர் அல்லது விதையிடல் என்று கூறுவர்.
  சில்லு தண்ணியாக நிற்கவேண்டும் மழைகாலமாக இருப்பின்
  இந்த விதையிடும்பொழுது கூலிக் குடும்பங்கள் அவல் இடிப்பதற்கு விதை நெல் வாங்கவருவார்கள் விவசாயியும் அவர்களுக்கு கொஞ்சம் கொடுத்து தனது விட்டுக்கும் கொண்டு போய் நிழலி்ல் காயவைத்து அவல் இடிப்பதும் உண்டு
  மற்ற சொற்களை இங்கு பயன்படுத் துவதில்லை அல்லது மறந்திருக்கலாம்
  சுமார் 35 நாட்கள் ஆனதும் நாற்றை இரண்டு கைகளாலும் கைநிறைய(இது ஊருக்கூர் மாறுபடும்) பிடுங்கி 100 முடி கொண்டது ஒரு கட்டு என எண்ணிப்போடுவர்
  தாங்கள் கூறியது எந்த பக்கத்து மொழி
  நான் திருச்சிராப்பள்ளிக்காரன்

 11. —தாங்கள் கூறியது எந்த பக்கத்து மொழி—

  நன்றி என்னார். திருநெல்வேலி பக்கத்து வழக்கு மாதிரி எனக்குப் பட்டது; தவறாக இருக்கலாம்!

 12. கயல்விழி

  எங்களுக்கும் விவசாயம் தான். ஊரில் இருக்கும் வேளை அப்பப்பா இந்த வார்த்தைகளில் ஒருசிலவை பாவித்த நினைவு இருக்கிறது. முற்றுமுழுதாக இல்லை. ஒருவேளை எனக்கு நினைவில்லாமல் இருக்கலாம். நன்றி நல்ல பதிவு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.