தி. ஜானகிராமன் படைப்புலகம் – நீல பத்மநாபன்


Yahoo! Groups : RaayarKaapiKlub:

“தொடராக எழுதப்படுவதாலோ ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வெளியானதாலோ இலக்கியதரத்தை இழந்துவிட வேண்டுமென்பதிலை என்பதற்கு ஜானகிராமனின் நாவல்கள் சான்றுகள். சரளமாக வாசித்துச் செல்லும் அம்சங்கள் நிறைந்தவை ஜானகிராமனின் நாவல்கள். பாலுணர்ச்சி கவர்ச்சி இதற்கோர் காரணமாகச் சொல்கிறவர்கள் இருக்கலாம். ஆனால், இந்தப் பாலுணர்வு சம்பந்தப்பட்டவை ஒரு ஆன்மிக தளத்தில் உணர்வநமைதியுடன் விரிக்கப்படுகிறதே தவிர கிளர்ச்சியூட்டும்படி இருப்பதாக சொல்ல முடியுமா?

தி.ஜா.ரா. நாவல்களில் இலக்கிய அம்சம் குறைந்து போகாமல் நிற்பதின் காரணம் என்ன?

(1) நடைமுறை வாழ்வை ஊன்றிப் பார்த்து சின்னச் சின்னத் தகவல் கூட விடுபட்டுப் போய்விடாமல் எந்த அதிமேதாவித்தனமும் காட்டாமல் கலைநயத்துடன் விச்ராந்தியாக சொல்லிச் செல்லும் பாங்கு. வர்ணனைகளில் கூட செயற்கைத் தன்மையோ அவசரமோ இல்லாத ஓர் நிதானப் போக்கு. இந்த மெது நகர்தலால், நடைமுறை வாழ்க்கைப் பிம்பங்களால், பெரிய புத்திகூர்மையில்லாத – ஆனால் காரிய கௌரவமிக்க சாதாரண வாசகர்களால் கூட அவர் எழுத்தை சுவாரஸ்யமாக வாசிக்கவும் ரஸிக்கவும் முடிகிறது. அந்த நிகழ்வுகள், வர்ணனைகள், சொற்சித்திரங்கள் நெடுநாட்கள் வாசகர் மனதை நெருடிக் கொண்டிருக்கின்றன.

மோகமுள்ளை வாசித்த எல்லோருக்குமே யமுனா பாபுவிடம் கேட்கும் ‘தவிச்சதெல்லாம் இதற்குத்தானே’ என்ற சொற்றொடரை அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியுமா?

(3) முதல் நாவல் ‘அமிர்த’த்திலேயே ஆரம்பத்தில் கோயில் தெற்குப் பிரகாரத்தில் தக்ஷணாமூர்த்திக்குப் பதினேழாவது நமஸ்காரத்தைப் பண்ணிக் கொண்டிருந்த அமிர்தத்தைப் பார்த்து “அந்தக் கல் தெய்வத்திற்கு வாயிருந்தால், ‘இந்தத் தெற்கத்தி அனாதையை இவ்வளவு கௌரவப்படுத்தும் நீ யாரம்மா?” என்று நிச்சயமாகக் கேட்டிருக்கும்” (பக்கம் 1) என்று எழுதத் தொடங்கிய போதிருந்த இந்த நையாண்டித் தோரணை – அங்கதச்சுவை கடைசிவரை – மரப்பசு, நளபாகம் அணையாமல் அவரிடம் செயல்பட்டது என்பது விசேஷம்தானே?

…..

‘வீடு’ கதையில் டாக்டர் சந்தானம் வீட்டில் இல்லாத வேளையில் டாக்டரின் மனைவி அம்பு பக்கத்தில் படுத்திருக்க கம்பவுண்டர் மகாதேவன் டாக்டரின் மெத்தையில் தூங்கிவிட்டு டாக்டர் வந்தது அறிந்து ஓசைப்படாமல் ஓடிப்போய் சீர்காழிப் பாயில் தூங்காமல் தூங்கியதைக் கண்ட டாக்டரின் மனக்குமுறல் – ‘சக்தி வைத்தியம்’ – சிறுகதைத் தொகுப்பு – 1978

“சீ வயிற்றைப் புரட்டுகிறது, அம்மா! அப்பா! நல்ல வேளையாக நீங்கள் இப்போது இல்லை. உங்கள் பிள்ளையை, தெருவோடு போகிற பயல் இப்படி உள்ளே நுழைந்து முதுகில் குத்துகிற கண்ராவியைப் பார்க்காமல் போனீர்களே! மூன்று மணியாகி விட்டது, தூக்கம் வரவில்லை. விளக்கைப் போட்டேன். அம்பு மல்லாந்து, முழங்கால்கள் இரண்டும் தெரியத் தூங்குகிறாள். வாய் லேசாகத் திறந்திருக்கிறது. ஐயோ! பெரிய சுரைக்காய் போல் வழவழவென்று கால், பொட்டு கட்டி ஆடுவாளே தெருவாசலில், அவளைப் பார்ப்பது போல் என் உடம்பு சுட்டது. அம்பு அவளை விட அழகு! அந்தக் கிழவியை விட அழகு! அப்படியே பிழிந்து அவளை வாயில் ஊற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஆனால், மகாதேவன் இந்தக் காலகண்ணாடியைப் பிழிந்து ஊற்றி நெஞ்சில் வைத்துக் கொண்டுவிட்ட மாதிரி இருக்கிறதே – என் நெஞ்சம் சுடுகிறது.”

கடைசியில் மகாதேவன் கூட வாழ கணவனிடம் வீட்டை கேட்ட அம்பு மகாதேவனின் திடீர் மரணத்தில் விசித்து விசித்து அழும்போது கணவன் மனவோட்டம் “அம்பு அழும்போதுகூட எத்தனை அழகாக இருக்கிறாள்! அந்தக் கண்ணும் நீள முகமும் நெற்றியின் சரிவும் எத்தனை அழகு கூடிவிட்டது! ஒரு கண்ணீர்த் துளியால் முகம் கூட அழகாகச் சிவந்திருக்கிறது.”

குடியிருந்த வீட்டை விற்க வேண்டியதில்லை என்ற அவர் தீர்மானம் இந்த மனைவியின் கூட அதே வீட்டில் மீண்டும் இல்லற வாழ்வைத் தொடங்குவதற்காகத்தானே…!

‘அம்மா வந்தாள்’ நாவல் வெளிவருவதற்கு முன்னால் எழுதப்பட்ட கதை இது (1964).

கிழடாகிப் போன அம்மாவைக் கவனிக்க நேரமில்லாமல் கொண்டவள் கூட குலவிக் கொண்டிருந்த ஒரு பிள்ளை (‘அன்பு வைத்த பிள்ளை’ – கதை, யாதும் ஊரே (1967) சிறுகதைத் தொகுதி); கடைசி நேரத்தில் ‘ஜலம் ஜலம்’ என்று தொண்டை நனைக்கக் கூவி கிடைக்காமல் மண்டையைப் போட்டுவிட்ட அம்மாவின் செத்த போஸைப் போட்டோப்படம் எடுக்க முடியாதுன்னு போட்டோ க்கிராபர் கைவிரித்தபோது, ‘இதுக்குக் கூடவா நான் கொடுத்து வைக்கலை?’ என்று தேம்பும்போது வெளிப்படும் சற்று குரூரமான அங்கதச் சுவை ஜானகிராமனுக்கு மட்டுமே கைவந்த கலை.

உணர்ச்சித் தீவிரமான கட்டங்களில் கூட கதாபத்திரங்களை அதிகம் பட்டுக்கொள்ளாமல் நகர்த்துவதில் இந்தக் கதாசிரியனுக்கு இருக்கும் திறமை நன்கு வெளிப்படும் கதை ‘கண்டாமணி’. விஞ்ஞான வாத்தியாரின் உதவியாளர் காலமானதற்கு காரணம் அவர் என்ற சேதி பரவாமல் இருக்க ‘கைநீளத்தில் பஞ்சலோகத்திலே கண்டாமணி வாங்கித் தொங்கவிடு’வதாக யுகேஸ்வரனிடம் வேண்டிக் கொண்டதை நிறைவேற்றிய மார்க்கம் அந்த மணிச்சத்தத்தில் குற்றவாளி உணர்வுடன் துடிப்பது ‘முழுச் செவிடர்கள் எப்படியிருப்பார்கள்’ (யாதும் ஊரே – கதைத் தொகுதி) என்று அவர் கற்பனை செய்து பார்க்கும் கடைசி வாக்கியத்தில் எத்தனைக்கு அனாயசமாக வெளிப்பட்டிருக்கிறது!

(மத்திய சாகித்திய அகாதமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், கருத்துக்களம் இணைந்து சென்னை உலகப் பல்கலைக்கழக மையத்தில் வைத்து 24-25 நவம்பர் 2001-இல் நிகழ்த்திய “தி.ஜானகிராமன் படைப்புலகம்” கருத்தரங்க தொடக்கவிழாவில் ஆற்றிய சிறப்புரையிலிருந்து).

நன்றி: இலக்கியச் செல்நெறிகள் – நீல பத்மநாபன் – ராஜராஜன் பதிப்பகம் – ரூ. 70/-

One response to “தி. ஜானகிராமன் படைப்புலகம் – நீல பத்மநாபன்

  1. தி ஜானகிராமன் அவர்களுக்கு உரிய இடம், மதிப்பு தமிழர்களிடமிருந்து தரப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியதே… கொண்டாடப்பட வேண்டிய, முன் மாதிரியாக நினைக்கப்பட வேண்டிய படைப்பாளி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.