அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை


கல்லூரியில் எனக்கு ஒரு உயிர்த் தோழன் இருந்தான். மிக நன்றாக படிப்பவன். எனது கல்லூரியில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கிறோம் என்பது முக்கியமில்லை. அடுத்தவனை விட அதிகமா என்பதே முக்கியம். ஒரு வகுப்பில் முதல் பத்து சதவீதத்தில் இருந்தாலே நூற்றுக்கு நூறு எடுத்தவாறு மதிப்பீடுவார்கள்.

என் உயிர்த் தோழனோ ஒவ்வொரு பரிட்சை முடிந்தவுடன் சோகமே உருவாகவும், தற்கொலை குழப்பங்களுடனும்தான் காணப்படுவான். முதல் வருடங்களில் மிகுந்த அக்கறையுடன் விசாரித்து ஆறுதல் அளித்து வந்தோம். திருத்திய தாள்கள் வந்தவுடன் அவனின் வருத்தங்களுக்குக் காரணம் தெரிய வரும். ஓரிரண்டு கேள்விகளில் சில இடங்களில் தவறு இழைத்ததற்கு, மன்னித்தோ மதிக்காமலோ, மார்க் போட்டு இருப்பார்கள். அந்தக் கேள்வியையே முயற்சி கூட செய்யாத நாங்கள் அவனை தேற்றி இருப்பதுதான் எங்களின் வெறுப்பு.

‘அலகில்லா விளையாட்டின்’ நாயகனும் என்னுடைய தோழனுக்கு நிகராக சிந்திக்கிறான்; வருத்தப் படுகிறான்; அருகில் உள்ளவர்களின் அனுதாபங்களை கேட்டுப் பெறுகிறான். வாலிபத்தில் வாத்தியார்

பெண்ணை கைப்பிடிக்க முடியாததை எண்ணி வாழ்நாள் முழுக்க வருத்தப் படுகிறான். தனது குடும்பத்தை விட வேத குருவின் வீட்டிலேயே ஐக்கியப்பட்டு அங்கு நிகழும் விஷயங்களுக்கு விசனப்பட்டு விடை தேடி அலைக்கழியும் சுய விசாரணை பதிவுகள்தான் இந்த மின் புத்தகம்.

‘மேஜிகல் ரியலிசமோ’ என பயமுறுத்தும் ஆரம்பம். சாத்தானின் நரகத்தைதான் குளிர் தேசம் என்றும், இந்தியர்களின் அமெரிக்க வாழ்வையும்தான் பூடகமாக சொல்கிறாரோ என்னும் சந்தேகம். சீக்கிரமே அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து கைலாயத்தை இடஞ்சுட்டி விடுகிறார்.

துறவின் இலக்கணம், முதியோர்களுக்கு ஏற்படும் எண்ண அலைகள், ஆன்மாவின் வரையறை, துன்பங்களும் நினைவலையும், தன்முனைப்பும் வினைப்பயனும், பணத்துக்காக படிப்பா, அவலங்கள் மட்டுமே தெரியும் எழுத்துக்கள், வயதும் பக்குவமும், ஆசிரியரின் ஊக்கங்கள் ஆகியவற்றை உளவியல் ரீதியில் கேள்விகள் தொடுத்து, சமூகவியல் பார்வையிலும் விவரித்து, ஆங்காங்கே கதை என்னும் வஸ்து, தொட்டுக் கொள்ள நகர்கிறது.

அவனின் அப்பா இக்கால வழக்கத்தில் நகைக்கடையில் கை வைத்து முன்னேறுவதையும், தன் போதனைகளுக்கு சம்பந்தமில்லாத முற்றுப்புள்ளி வைக்காத குருவின் குழந்தைப்பேறு உடல் இச்சையும், வாழ்வைக் கண்டு பயந்து ஓடும் மனிதர்களையும், நமது புரிதலுக்கே பாரா விட்டு விட்டு, ஒதுங்கியே கதை நகர்த்துகிறார்.

இரண்டு பக்கங்களே வந்து போன அத்தையின் பாத்திர படைப்பு எதற்காக என்று உணரும் அளவு கூட, காந்தியை அலசும் ஐந்தாம் அத்தியாயம் எங்கே பொருந்துகிறது என்று இன்னும் எனக்கு புலப்படவில்லை. ஒரு தெளிவை நோக்கி கொண்டு செல்லப்பட்ட கதையும், தத்துவம் சார்ந்த அலசல்களும் திடீர் என ஒரு குலுங்கு குலுங்கி குருவின் துன்பங்களுக்கு ஒரு முடிவுரை, கைலாயப் பயணம் என சடாரென முடிந்து விட்டதாகத் தோன்றுகிறது. வாழைப்பழத்தை உரித்து, பழச்சாறும் எடுத்து, பாலும் ஸ்வீடெனரும் கலந்து வாயிலும் ஊத்துவார் என்னும் என் நம்பிக்கையில் மண்.

‘சம்போ சிவ சம்போ’, ‘ஓம் ஓம்’ என ஆங்காங்கே கொஞ்சம் உமா பாரதி வாடை. ஆனால், படு பாலைவன கதையின் நடுவிலும், வாய்விட்டு சிரிக்கக்கூடிய நகைச்சுவையும், பூரணியின் இதமான ஹீரோயின் வர்ணணைகளும், நாயரின் கேரளத்துத் தமிழும், திருவையாறின் தல புராணமும் நமக்கு ஒரு வெல்கம் ப்ரேக்.

ஹீரோவைப் பார்க்கும்போது திரைப்பட பித்தான எனக்கு ‘ஹே ராம்’ சாகேத் நிழலாடுகிறார். அது என்னுடைய சொந்த பாதிப்பா அல்லது பாராவின் பாத்திர படைப்பா எனத் தெரியவில்லை. ‘இருவர்’ படத்தில் பயத்தினாலோ, திமுக தலைவரினாலோ, பல முக்கிய வசனங்களுக்கு பதிலாக பிண்ணனி இசையே வந்து செல்லும். பூரணியிடம் பேச வேண்டிய சில இடங்களில் விவரிப்பே வருகிறது. உரையாடல் இடம் பெற்றிருந்தால் சுவைத்திருக்கும்.

பிரமாணம், சுருதி, தைஜஸன், 97 தையல்கள் என்று எல்லாம் நடுவில் வருகிறது. என்னைப் போன்றவர்கள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டே வாசிப்பார்கள். அருஞ்சொற்பொருள் வேண்டாம்; மற்ற புதுவரவுகளுக்குக் கொடுத்தவாறு ஒரு குறைந்த பட்ச அறிமுகம் கொடுத்திருக்கலாம். ஆனால், பௌத்த மடத்தில் 63 தத்துவங்களை விளக்குவது மாதிரி ஒரு அவார்ட் பட பிரசார நெடியை தவிர்க்க நினைத்திருக்கலாம்.

என் அம்மா அமெரிக்காவில் இருந்த பொழுது, ஒரு குண்டு மட்டுமே ஈராக்கில் வெடித்த ஒரு சாதாராண தினத்தில், என்னுடைய நிறுவனம் பொருளாதார நிலையில்லாமையின் பேரில் என்னுடைய வேலையை நீக்கி விட்டார்கள். அதற்குப் பின் வந்த பல்வேறு அமெரிக்க வேலை தேடும் முறையையும், இன்ன பிற லாகிரி வஸ்துக்களையும் விளக்க முருகரின் ‘மூன்று விரல்’ பயன்பட்டது. நான் படித்த சமயம் எனக்கு போரடித்த அந்த நாவல், அம்மாவை இரவு தூங்கவும் விடாமல் முடிக்க செய்தது.

அவ்வாறே ‘அலகில்லா விளையாட்டு’ம் பதினெட்டு உபநிஷதங்களும், நான்கு வேதங்களும், கம்யூனிசம், உலகமயமாக்கம், பௌத்த சமயம், இன்ன பிற சமய, பொருளாதார, வர்த்தகவியல் தத்துவங்களையும் டக்கென்று மூன்றே நாட்களில் அலச விரும்புவர்களுக்கு, கூடவே சத்தமாக சிந்தனையைத் தூண்டி வரும் அறிவு பெட்டகம்.

-பாலாஜி

27/நவ./2003

ரசிக்கும் வரிகள்:

* உயிரே போனாலும் சரி என்று தீர்மானம் செய்து விட்டால் உயிர் போகாது!

* தியானத்துக்கும் உறக்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பிக்கொண்டிருப்பதைவிட புத்தியை இருட்டு மூலைகளில் முட்டிமோதவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதிலேயே பலது அகப்படும்.

* மனத்துக்கு ஏது வயசு? வெட்கம் மானம் இல்லாத மனசு. சொல்லில் இறங்கக் கூச்சப்படுகிற விஷயங்களையெல்லாம் விரித்துப்போட்டுக் குளிர் காய்கிற மனசு.

* அழகு தான் என்றாலும் அலுக்காதா என்ன?

* ஹிந்துதர்மம் ஒப்புக்கொண்டிருக்கிற ஒரே கம்யூனிசச் சிந்தனை அதுதான். ஒரு ஆன்மா தான். னால் உன்னுடையது இல்லை அது. யாருடையதும் இல்லை. எல்லாருடையதும். அல்லது எல்லாருடையதும் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஒரு புறம்போக்குச் சொத்து.

* “நாம இன்பம்னு நினைச்சுண்டு இருக்கறது வேற. நிஜமான இன்பம் வேற.”

* வாழ்க்கை தாற்காலிக நிம்மதிகளால் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது.

* “யோசிக்கத் தொடங்கியாச்சு. கேள்விகள் தோணறதுக்குள்ள படிச்சு முடிச்சுடணும்னு ஒரு கணக்கு இருக்கு. முதல்ல மனசுக்குள்ள ஏத்திண்டுடணும். அப்புறம் வயசுக்கு ஏற்ப கேள்விகள் வரும்.”

* உள்முக நாட்டம் உள்ளவன் தன் மொழியை மனத்துக்குள் அடக்கவேண்டும். மனத்தை, விழித்துக்கொண்டிருக்கிற புத்தியில் அடக்கவேண்டும். புத்தியை ஆனந்தமயமான ன்மாவில்

ஒடுக்கவேண்டும். ஆன்மாவை அமைதிப்பெருங்கடலான இறைவனிடம் ஒடுக்கவேண்டும்.

* விடிந்தால் உத்தியோகம். தேதி ஆனால் சம்பளம். வேளைக்குச் சாப்பாடு. விழுந்து புரள பெண்டாட்டி. அவ்வப்போது சந்தோஷம். அளந்து அளந்து பூரிப்பு. கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விடலாம்.

* அடிக்கடி கஷ்டம் என்றாலும் ஆற்றிக்கொள்ளவும் வழிகள் உண்டு. அம்மாவின் மடி. மனைவியின் தோள். குழந்தையின் சிரிப்பு.

* எத்தனை நாளுக்கு முன்னே நடந்து ஒரு மனிதர் மேய்த்துக்கொண்டே போகமுடியும்? ஆடுகளுக்கு என்றைக்குத்தான் சுயமாகப் பாதை புரியும்?

* தெரிந்தோ தெரியாமலோ பலபேருக்குப் பலவிதமாக நாம் கடன் பட்டுக்கொண்டே இருக்கிறோம். வாழ்நாள் முழுவதும் படுகிற கடன்களை எண்ணிப்பார்க்கத் தீராது என்று தோன்றுகிறது.

* அவரவர் நியாயங்களின் உட்புறச் சுவரைக் குடைந்துபார்க்க எல்லாருக்கும் சாத்தியமில்லை.

* “ஆமா கல்யாணத்தைப் பண்ணிண்டவாள்ளாம்தான் என்ன சாதிச்சுப்பிடறா? தோள்ள ஒண்ணு. கையிலே ஒண்ணு. என்னவோ போர்க்களத்துலே சாதிச்சவாளுக்கு வீரப்பதக்கம் குத்திவிடறாமாதிரி. ”

கிடைக்குமிடம்: தமிழோவியம்

நன்றி: திண்ணை

3 responses to “அலகிலா விளையாட்டு – ஒரு வாசகனின் பார்வை

 1. பிங்குபாக்: Feedback: Closed group vs Wider societies - Bane of Tamil Blogodom « Snap Judgment

 2. பிங்குபாக்: உள்ளடக்கமும் உருவமும்: துணை ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம் « US President 08

 3. ”திடீரென்று கூட்டமாக ஒலிக்கிற பிராத்தனை கீதங்கள் ஏதும் கேட்கவில்லை. வெட்டவெளி. பேரமைதி. அவ்வுளவுதான்.

  அங்கே நான் கூட இல்லை. என் மனம் மட்டும்தான் இருந்தது. ஒரு தும்பி போல அந்தப் பரந்த வெளியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது மனம். உடலை விட்டு அது எப்போது புறப்பட்டுப் போனது என்று நிச்சியமாய்த் தெரியவில்லை. அடடே! உடலை விட்டு மனம் புறப்பட்டது குறித்துச் சிந்திக்கிறேன் என்றால் இத்தனை நாள் சிந்தனை என்கிற காரியத்தைச் செய்துவந்தது மனம் இல்லையா? உடல் தானா? அல்லது எனக்கு என்றுமே வசப்பட்டிராத என் ஆன்மாவா?

  என் ஆன்மா! சட்டென்று எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. ஹிந்து தர்மம் ஒப்புக் கொண்டிருக்கிற ஒரே கம்யுனிசச் சிந்தனை அதுதான். ஓர் ஆன்மாதான். ஆனால் உன்னுடையது இல்லை அது. யாருடையதும் இல்லை. எல்லாருடையதும். அல்ல எல்லாருடையதும் இல்லை. எல்லாருக்கும் பொதுவான ஒரு புறம்போக்குச் சொத்து.”

  ”முட்டாள்! நீ இறந்த பின் இந்த மனம் உன் கூட வருமொன்றா நினைக்கிறாய்? இத்தனை வருஷங்களாகல் கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கெல்லாம் அர்த்தம் சொல்லிக் கொண்டிருக்கவா உன்னை இத்தனை கஷ்டப்பட்டு இயற்க்கை கடைத்தேற்றுகிறது? அந்தப் பக்கம் போன உடனேயே உனக்கு அங்கே புதிய சட்டை போட்டு விடுவார்கள். புதிய பெயர். புதிய உடல். புதிய ஆன்மா. புதிய முகவரி. உன் கேள்விகள் இருதிவரை விடையில்லாதவைகள்.”

  “நான் நாத்திகனாக அறியப்பட்டவனே தவிர நாத்திகன் இல்லை என்பது எனக்கே வெகு தாமதமாகத்தான் புரிந்தது”.

  “நான் நாத்திகன் இல்லை. தெரியுமா உங்களுக்கு? இது ஆத்திகத்தின் மிகக் கனிந்த நிலை. சடங்குகளைத் துறப்பது. நியதிகளைத் துறப்பது. நிஷ்டைகளைத் துறப்பது. இதன் எல்லையில் இன்னொன்று இருக்கிறது. கடவுளைத் துறப்பது. அது மறுப்பது இல்லை. மறப்பது. என்னை மறந்த நிலையில் கடவுளை நினைப்பதற்குச் சமானம், கடவுளை மறந்து என்னை நினைப்பது. என்னை என்றால் என் உடலை அல்ல. மனத்தை அல்ல. ஆன்மாவையா என்றால் நிச்சியமாகச் தெரியவில்லை.”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.