‘கூப்பிடு தூரம்’ அது எவ்வளவு தூரம் என்பதைப் பா…


‘கூப்பிடு தூரம்’

அது எவ்வளவு தூரம் என்பதைப் பார்ப்போம்.

வீரசோழிய உரையில், ‘முழ நான்கு கோல்; அக்கோலைஞ்ஞூறு கூப்பீடு’

என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முழநான்கு கொண்ட கோல் = 6 அடி நீளமுள்ள கோல்

இந்தக் கோலால் 500 = 500 X 6 = 3000 அடிகள்.

கிட்டத்தட்ட முக்கால் மைலுக்குச் சற்றுக்குறைவான தூரம்.

இன்னொன்று ‘யோசனை’ எனப்படும். இதன் அளவுகள் ஒன்றுடன்

ஒன்று மிகவும் வித்தியாசப்படும்.

பொதுவாக இது நான்கு காதம் கொண்டது. அப்படியானால்

12000 கஜம் X 4 = 48000 கஜங்கள் கொண்டது. கிட்டத்தட்ட 30 மைல்

என்று கொள்ளலாம்.

ராமாயணத்தில் எல்லாமே யோசனைக் கணக்கில்தான் இருக்கும்.

நூறு யோசனை நீளம், நூறு யோசனை உயரம், நூறு யோசனை அகலம்

என்று இப்படி.

நாட்டுக்கு நாடு பல அளவைகள் இருந்திருக்கின்றன.

பொதுவான வழக்கில் இருந்ததைச் சொல்கிறேன்.

இந்த வாய்ப்பாடுகளையெல்லாம் எங்காவது சேமித்து

வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கொள்ளுப்பேரப்பிள்ளைகளிடம்

நீங்கள் கதை சொல்லும்போது, “இப்படியெல்லாம் அளந்து

விட்டிருக்கிறாங்கப்பா, நம்ப ஆளுங்க”, என்று அளந்துவிடலாம்.

8 நெல் = 1 விரக்கடை (0.75 inches)

12 விரக்கடை = 1 சாண் (9 inches)

2 சாண் = 1 முழம் (18 inches)

2 முழம் = 1 கஜம் (3 feet = 36 inches)

4 முழம் = 1 பாகம் ( 6 feet)

6000 பாகம் = 1 காதம்(12000 கஜம்)

1 காதம் என்பது கிட்டத்தட்ட 7 மைல்.

கீலோமீட்டராக்க 7 X 8 / 5 செய்துகொள்ளுங்கள்.

இதனை ‘ஏழரை நாழிகை வழி’ என்றும் சொல்வார்கள்.

ஏழரை நாழிகை என்பது 3 மணி நேரம்.

ஒரு சராசரி மனிதன் 3 மணி நேரத்தில் பொடிநடையால் கடக்கும்

தூரமாக இதைக் கருதினார்கள்.

சரிதானே? மூன்று மணி நேரத்தில் 7 மைல். ஒரு மணிக்கு ஒன்றே

முக்கால் மைல்.

மனிதனே மூன்று மணி நேரத்தில் காத தூரம் போகிறான்.

ஆனால் ஒரு குறிப்பிட்ட குதிரை அப்படியல்ல.

காளமேகப்புலவர் சொல்கிறார் கேளுங்கள்:

முன்னே கடிவாளம் மூன்றுபேர் தொட்டிழுக்க

பின்னே இருந்திரண்டு பேர்தள்ள – எந்நேரம்

வேதம்போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம்போம் காத வழி!

விகடராமன் என்பவனுடைய குதிரை ஒரு காதம் செல்வதற்கு

ஒரு மாதம் பிடிக்குமாம். அதுவும் முன்னாலிருந்துகொண்டு மூன்று பேர்

கடிவாளத்தைப் பற்றியிழுக்க, பின்னாலிருந்துகொண்டு இரண்டு பேர்

தள்ளினால்தான் அந்த வேகமும்கூட.

சிவகங்கைப் பக்கத்தில் ராசசிங்கமங்கலக் கண்மாய் என்றொரு

பேரேரி இருக்கிறது. ராசசிம்ம பாண்டியன் காலத்தில் கிபி 800 வாக்கில்

வெட்டப்பட்டது. அதற்கு நாற்பத்தெட்டுக் கலிங்குகள் இருந்தனவாம்.

ஒரு காதத்துக்கு ஒரு கலிங்கு வீதம் கட்டியிருக்கிறார்கள்.

அதையட்டி ஒரு பெயர் அந்தக் கண்மாய்க்கு ஏற்பட்டிருக்கிறது.

‘நாரை பறக்காத நாற்பத்தெட்டுக் காதவழி’.

நாரைகள் ஆர்க்டிக் பிரதேசத்திலிருந்து நவம்பர் டிசம்பர் மாதத்தில்

தெற்கு நோக்கி பறந்துவரும். ஆங்கில V எழுத்து அமைப்பில் அவை

கூட்டங்கூட்டமாகப் பறந்துவந்து தமிழக நீர்நிலைகளில் நிலை கொள்ளும்.

நாரை அடாது விடாது நீண்ட தூரம் பறக்கக்கூடியது.

அப்பேர்ப்பட்ட நாரையும்கூட ராசசிங்கமங்கலத்துக் கண்மாயின்

நாற்பத்தெட்டுக் கலிங்குகளையும் ஒரே வீச்சில் பறந்து கடக்கமாட்டாதாம்.

நன்றி அகத்தியம் இணைய குழு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.