சல்மான் ருஷ்டி
——————————————————
டெண்டுல்கரைத் தொடர்ந்து மற்றுமொரு சுவையான வரலாறு ஸ்டைல் நாவல்.
அயாதுல்லா கொமேனியே புத்தகத்தை படித்திருந்தால், ·பாத்வா கொடுப்பதற்கு பதில், விருந்துக்கு வரவழைக்கும் அளவு சல்மான் ருஷ்டி என்னும் படைப்பாளியை தூக்கி நிறுத்தும் அறிமுகம்.
ருஷ்டி என்றவுடன் என் மனதில் ஓடிய பிம்பம், இஸ்லாமியத்தைப் பழிக்கும் ஒரு முஸ்லீம்; மேற்கத்திய தாக்கத்தினால் இந்தியாவைத் துறந்த ஒரு முசுடு; முட்டை உடைப்பதற்காக உலக்கை உபயோகபடுத்தும் எழுத்தாளர். புகழ் பெறுவதற்காக சலசலப்பு ஏற்படுத்தும், வார்த்தை ஜால வித்தகர்.
இந்த பிம்பங்களையும், அவை ஏன் உண்டாயின, எழுத்தில் எங்கு தெரிகின்றன, எவ்வாறு இவற்றில் சிலது சரி, எங்கு தவறாக எடை போட்டோம் என்பதை நிலா இரவில் கதை சொல்லும் அம்மாவாக உணவைக் கொடுக்கிறது, இந்த புத்தகம்.
என்னைப் போன்ற attentiion deficit syndrome மக்கள் கூட கீழே வைக்க முடியாத வேகம். (வேகத் தடைகளாய் ஆங்காங்கே சில மொழிபெயர்ப்புகள் தென்படுகிறது: ‘நம்முடைய இப்போதைய இந்த வாழ்க்கை எந்த அளவு பாதுகாப்பாய், சவுகர்யமாய் இருக்கிறது என்பதைப்பற்றி சிந்திப்பதிலேயே வாழ்நாள்களைச் செலவிட்டுவிட்டால், நம்மெதிரே இருக்கிற சாலைகளை நாம் எப்போதும் கடக்கப்போவதில்லை’).
ருஷ்டி என்னும் கதாநயாகனுடன் வாசகனை வளர விடுகிறார் நூலாசிரியர். அவரோடு பம்பாயின் தெருக்களில் உலாவுகிறோம். அங்கிருந்து லண்டன் பள்ளியில் நம்மை சேர்த்து, எழுத வைத்து, இருட்டில் தள்ளி, ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, விருது வாங்கி குதூகலித்து என்று frame by frame நெருங்கியும் விலகியும் காட்டும் பாலு மகேந்திராவின் படத்தில், சொக்கனின் மொழி நடை இளையராஜாவின் பிண்ணனி இசையாக இடையூறு செய்யாமல் ஒன்ற வைக்கிறது.
அலுப்பு தட்டாத விவரங்களுடன் ருஷ்டியின் எழுத்து பாணிகள், கிண்டல், satire, மண வாழ்க்கை, இலக்கியத் தடங்களை பதிவு செய்துள்ளார் ஆசிரியர். ருஷ்டியின் எழுத்துக்களை உள்வாங்கியது போல் அவரின் சலனமற்ற முகத்தை கூட சொக்கர் படித்து விடுகிறார். இந்தியாவில் நடந்த காமன்வெல்த் பரிசு கிடைக்காத சோகத்தை மறைத்ததை குறிப்பிடுதல், தாய்நாடு பற்றிய மனோபாவம், வளர்ந்த இடத்தை இழந்த வருத்தம் என அலசி, ஒரு எழுத்தாளனை பல கோணங்களிலும் முன்னிறுத்துகிற நிறைவான அறிமுகம்.
சோகத்தையும், சுய அகப்பாடுகளையும் ருஷ்டியின் எழுத்துக்களில் கண்டுபிடுத்து சொல்லும் அதே வேகத்தில், அவரின் காதல் லீலைகளையும் துள்ளலாக ஒரு பகுதியில் எல்லை மீறாமல் வர்ணிக்கிறார். விரவியிருக்கும் புத்தக சுருக்கங்களும், குறிப்புகளும் ‘ருஷ்டியின் படைப்புகள்’ என ஒரு சேர ஒரே அத்தியாயத்தில் reference ஆக்குவது பயனுள்ளது. மேஜிக்கல் ருஷ்டி-யிசம் பகுதியும் குறிப்பிடப்பட வேண்டிய பதிவு கட்டுரை.
சுண்டி இழுக்கும் பகுதி தலைப்புகளுக்கும், அவற்றின் உள்ளடக்கங்களுக்கும் சில சமயம் சம்பந்தம் இல்லை என்பது எல்லாம் படிக்கும் போது தோன்றாது; கருத்து வழங்கும்போது தோன்றலாம். நிறைய ஆச்சரியகுறிகள், பலர் அறிந்த மும்பையும் பம்பாயும் ஒன்று போன்ற குறிப்பிடல்கள், ஆகியவற்றை தவிர்த்திருக்கலாம்.
‘சாத்தானின் வேர்ஸசை’ விவரித்த அளவுக்கு இல்லாவிட்டாலும், அவரின் சிறுகதை/கட்டுரை ஒன்றையாவது எடுத்து அலசியிருக்கலாம். புத்தகக் குறிப்புகளில் கோடிட்டு காட்டிவிட்டு, வாசகனின் ஆர்வத்துக்கே விட்டு விடுகிறார். சொக்கனின் அறிமுகத்தைப் படித்த பிறகு, புத்தகத்தில் குறிப்பிட்ட சில மேட்டர்களைத் தேடி பிடித்து நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரை பற்றி, தேர்ந்த எழுத்தாளர் எழுதிய, எழுத்துலக ஆர்வம் கொண்டவர்கள் அனவரும் படிக்க வேண்டிய அறிமுகம்.
——————————————————
“சல்மான் ருஷ்டி – என். சொக்கன் – சபரி பதிப்பகம் வெளியீடு –
128 பக்கங்கள் – ரூ 45/-”
——————————————————
காணமல் போன கதைக் கடல் | kirukkal .com