குத்திக்கல் தெரு – 3

‘கல்லிடைக்குறிச்சி ஸ்டேஷனில் செங்கோட்டை பாஸெஞ்சர் இரன்டு நிமிடங்கள்தான் நிற்கும். அதற்குள் இறங்கவேண்டும்.’ என்று நாராயணன் எச்சரித்திருந்தான். பெரியப்பா பிள்ளைக்கு வருவதைக் குறித்து கடிதம் போட்டிருந்தார்கள்.

ஸ்டேசனில் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தால் யாருமேயில்லை.

“வண்டி சீக்கிரம் வந்துவிட்டதோ?” பாகீரதி கேட்டாள்.”ஒரு வேளை மாமாவுக்கு கடிதம் கிடைச்சிருக்காதோ?”

“தொண தொணங்காதே… சித்த சும்மா இரு!”

பதினைந்து நிமிடங்கள் கழிந்தன.

“ஏம்மா… யாராவது கூட்டிட்டுப் போக வண்டி எடுத்துட்டு வருவாங்கன்னு காத்திட்டு இருக்கீங்களா! எங்க போகணும்?” மாட்டுவண்டிக்காரன் நெருங்கி வந்து கேட்டான்.

“குத்திக்கல் தெரு போகணும்ப்பா… என்ன கேக்கறே?”

“ஒரு ரூபா கொடுங்கம்மா…”

“என்னப்பா அநியாயமாயிருக்கு! நாலணா தருவேன்.”

“போங்கம்மா… அந்தக் காலத்தையே நெனச்சுக்கிட்டு… எட்டணாவாது தாங்கம்மா.”

“உனக்கும் வேண்டாம்; எனக்கும் வேண்டாம். ஆறணா வச்சுக்கிறியா. ரெண்டு பேர்தானே!”

“சரி… வாங்கம்மா.”

பட்டணத்தில் இருந்த பாகீரதி கிராமத்தின் விடியற்காலைப் பொழுதை ரசித்துக் கொண்டே வந்தாள்.

“இந்த வீடுதாம்ப்பா…”

‘ஹேய்… ய்யீ…’ வண்டி நின்றது. வண்டியில் இருந்து பாகீரதி குதித்தாள்.

“அம்மா… வாசல்ல பெரிய பூட்டுத் தொங்கறது!”

தைலாவுக்கு திக்கென்றது.

பக்கத்து வீட்டில் இருந்து ஒரு மாமி வந்து, “யாரத் தேடிண்டு வந்திருக்கேள்? யார் வேணும்?”

“சாம்பசிவம் இல்லியோ?”

“அவா மச்சினிக்குக் கலியாணம்னு திருமங்கலம் போயிருக்கா… போய் ஒரு வாரம் ஆச்சே! நாளைக்குத்தான் திரும்பறா. உங்களுக்கு இங்கவேற யாராவது சொந்தக்காரா இருக்காளா?”

“வைத்திபுரத்தில சொந்தக்காரா வீடு இருக்கு. அங்க போயிக்கறேன்.”

“வைத்திபுரத்துக்கு விடுப்பா…” வண்டியில் ஏறி அமர்ந்தனர்.

“வைத்திபுரம்னா ஒரு ரூபா கொடுத்துடணும்மா…”

“சரி… விடு!”

வீதியிலே விவகாரம் வேண்டாமென்று அடுத்த தெருவிற்கு கேட்டதைக் கொடுத்தாள் தைலா.

oOo

பெரியப்பா நாராயணனுக்கு எழுதி வைத்திருந்த அந்த வீட்டில், ஏற்கனவே ஒரு குடித்தனம் இருந்தது. பொதுவாக ஒரு கூடமும், முன்கட்டில் ஒரு சமையலறையும் இவர்களுக்கு ஒதுக்கித் தந்தார்கள். சாமான் போட பாவுள் (ஜன்னலே இல்லாத இருட்டு அறை) இருந்தது. கூடத்தையும் முன்னறையையும் துடைக்கும் பொறுப்பை பாகீரதியிடம் விட்டிருந்தாள் தைலா.

தன் மன அழுத்தங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாததாலோ, தாயின் சீதனமோ, தைலாவை ஆஸ்துமா நோய் பாடாய் படுத்தியது. மூன்றாவது வீட்டில் இருந்து தூதுவளையும், ஆடாதொடை இலையும் பறித்து வருவாள் பாகீரதி. அதைக் கஷாயம் போட்டு குடிப்பாள் தைலா. தாய் மேலும் கீழும் மூச்சு இருப்பதைப் பார்த்து பாகீரதியின் மனம் தவித்தது.

பக்கத்துவீட்டு லோகநாயகி மாமி கோதுமைத் தவிடு கொடுத்து “இதை வறுத்து, உங்கம்மாவிற்கு நெஞ்சிலேயும் முதுகிலேயும் ஒத்தடம் கொடு. சளி இளகி சுவாசம் விடறது சுலபமாயிருக்கும்.” என்றார்.

அப்படியே செய்தாள் பாகீரதி.

சாம்பசிவமும் சாரதாவும் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டார்கள். அதோடு பாகீரதிக்கு வால்மீகி இராமாயணம், பதினெட்டு புராணங்கள், விக்கிரமாதித்தன் கதை, மதனகாமராஜன் கதை, பொன்னியின் செல்வன், அலையோசை, பொய்மான் கரடு, சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு எல்லாம் படிக்க கொடுத்தார்கள்.

மாதவிலக்காகும் மூணு நாள் தவிர மற்ற நாளெல்லாம் அம்மாவின் புடைவையையும் வாங்கிக் கொண்டு சலசலத்து ஓடும் ஒரு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தாமிரபரணிக்குத்தான் போவாள் பாகீரதி. அதுவும் பாறை பாறையாகத் தாண்டி தனிப்பாறைக்குப் போவாள். கரையை ஒட்டியிருக்கும் பாறையில் ஏகக் கூட்டமிருக்கும். ‘தோய்க்காதே… தண்ணி தெறிக்கிறது… நீச்சல் அடிக்காதே… சோப்பு போடாதே… நீர் குழம்புகிறது!’ என்றெல்லாம் நடுவயதினரின் நச்சரிப்பு இல்லாத இடம் அது.

உடம்பு விறைத்துப் போகுமளவு நீரில் கிடப்பாள். முதலில் கால்கள். கால்களுக்கு நீர் பழகியபிறகு, மெதுவாக இடுப்பு. பிறகு மார்புக்கச்சை தெரியாத அளவு. தோழிகள் ‘நீர் யானையா!’ என்று கிண்டல் செய்வார்கள். ஆனாலும், அவள் அதை பொருட்படுத்துவதில்லை. அப்புறம் மெதுவாக சோப்பு போட்டு, துவைத்து, மீண்டும் நீரோடு உறவாடுவாள். வரும்போது ஆறு நிறைந்த நூற்றுக்கணக்கான மனிதர்கள் இருந்தார்களென்றால், கரையேறும்போது அங்கொன்றும் இங்கொன்றமாக ஆறேழு பேர் இருப்பார்கள்.

ஒன்பதரை பத்து மணிக்கு ஒரு குடம் ஜலத்தோடும், ஈரப்புடைவைக் கட்டோடும், தோளிலே துவைத்த துணிகளோடும் மெதுவாக நடப்பாள். கரைமேட்டின் இடதுபக்கம் ஒரு நந்தவனம். அதில் பூக்கள் சொரிந்திருந்தன. அங்கே தாடிவைத்த துறவி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தார். மெதுவாக அவரிடம் போய் “நான் கொஞ்சம் பூப்பறிச்சுக்கட்டுமா?” என்று கேட்டாள் பாகீரதி.

“இதெல்லாம் தலையில வச்சுக்கற பூவில்லையே! செம்பருத்தி, தங்க அரளி, வாடாமல்லி, நந்தியாவட்டை, ஊமத்தம்பூ… இப்படியான்னா இருக்கு.”

“நான் வச்சுக்கறதுக்கில்ல… மாலை கட்டி லெஷ்மிநாராயணருக்கு போடலாம்னு ஆசை.”

“அப்படியா… எம்புட்டு புண்ணியம் பண்ணியிருக்கணும் இப்படி நினைக்கறதுக்கு… இந்த வயசில! உனக்கு எம்புட்டு வேணுமோ பறிச்சுக்கோமா… மொட்ட மட்டும் பறிக்காதே. என்கிட்ட இனிமே கேக்கவே வேணாம். பறிச்சுக்க தாயீ.” குரல் தழுதழுத்தது.

பாகீரதிக்கு சந்தோஷம் சொல்லிமுடியாது. தன்னுடைய துவைத்த பாவாடையை மேடையில் விரித்து மலர்ந்த மலர்களைப் பறித்து குவித்தாள். மூட்டை கட்டிக்கொண்டு அவள் புறப்படும்போது ஆற்றில் ஒருவரும் இல்லை.

“ஏண்டீ… இவ்ளோ நேரம்? ஏழு மணிக்குப் போனவ இப்ப வரே…”

“உள்ள வா சொல்றேன்”.

பூ மூட்டையைப் பிரித்துக் காண்பித்தாள். “நந்தவனத்தில பறிச்சேம்மா… அங்கேயிருக்கிற சாமியார் ‘பறிச்சுக்கோ’ன்னுட்டார். நார் வேணுமே…”

“பக்கத்தாத்து ருக்கு தெனம் குண்டுமல்லி வாங்கறால்லியா! இந்தப் பக்கத்தாத்து ஆண்டம் ஜாதி வாங்குறதுக்காக பூக்காரி கொடுக்கற நார் மிச்சமாறது. நான் கேட்டு வாங்கித் தரேன்.”

பன்னிரெண்டு மணிக்கெல்லாம் சிவப்பு, பச்சை, வெள்ளை என்று அழகாக கதம்ப மாலை கட்டி ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு போய் தோழி ருக்குமணியுடன் லஷ்மிபதி கோவிலுக்குக் கொண்டு போய் கொடுப்பாள். தினமும் இது வழக்கமாகி விட்டது. மாதத்தில் மூன்று நாள் அவளால் பூப்பறிக்க போக முடியாது. தாமிரபரணிக்கும் போகக் கூடாது. நாலாம் நாள் குடத்திலே பாதித் தண்ணீர்தான் இருக்கும். மீதியெல்லாம் பூவாலேயே நிரம்பி இருக்கும். அன்றைக்கு சின்னது, பெரியது என்று இரண்டு மாலைத் தொடுப்பாள். சின்ன மாலையை தைலா கனடியன் வாய்க்கால் கரையோரத்தில் இருக்கும் சிவன் கோவிலில் கொண்டு கொடுப்பாள்.

oOo

ஊரிலிருந்து நாராயணன் கடிதம் போட்டிருந்தான். அது பெரியப்பாவின் மரணத்தையும் கனகுவின் கல்யாணத்தையும் செய்தியாகக் கொண்டு வந்திருந்தது. கனகுவை கல்லிடைக்குறிச்சி போஸ்ட்மாஸ்டருக்கேக் கொடுத்திருந்தார்கள். தொந்திலான் தெருவில் கனகுவின் புக்ககத்து முகவரியும் அதில் இருந்தது.

“வா… உங்க அத்தையப் போய் பார்த்துட்டு வரலாம்” என்றழைத்தாள் தைலா.

“ஏம்மா… உனக்கு ரோஷமே இல்லியா? உன்னை அத்தைகளும் பாட்டியும் ஏகப்பட்ட பாடு படுத்தியிருக்கா… அப்பத்தான் தீராது. அவாளாலே நம்மளுக்கு காலணாவுக்கு பிரயோசனம் இல்லே. என்ன வந்து பார்க்க கூட இல்ல பாட்டி. எதுக்கும்மா இந்த உறவெல்லாம்!”

“பெரிய மனுஷி மாதிரி பேசாதே! பாட்டிக்கு ரெண்டு கண்ணும் தெரியல. உன்ன ஒரு வயசுக் குழந்தையா அழைச்சுண்டு வந்திருந்தபோது அத்தைகளும் பாட்டியும் சேர்ந்து தொட்டில் போட்டா. ஊரே கேலி பன்னித்து… ‘ஒரு வயசுக் குழந்தைக்குத் தொட்டிலா’ன்னு… உன்னைத் தொட்டில்ல உக்கார வச்சு தொட்டில் பயிறை உன் கையிலேயே கொடுத்து திங்க வச்சவ உன் பாட்டி. நீ அங்க இருக்கற மட்டும் உன்னக் கீழேயே விடாம தூக்கிண்டு திரிவா கனகு. பெரியவா செஞ்சதுக்கு சின்னவ அவ என்ன செய்வா? பேசாம வா.”

பாகீரதி விருப்பமில்லாமல் பின் தொடர்ந்தாள்.

வீட்டையும் கண்டுபிடித்து விட்டார்கள். சுட்டெரிக்கும் வெயில். வாசல் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவைத் தட்டினாள். எதிரே ஒரு ரெட்டை நாடி அம்மாள் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால், இவர்களைப் பார்த்தார்களேயொழிய எந்தச் சலனமும் இல்லை.

“இதுக்கு மேலேயும் இங்க நிக்கணும்மாம்மா… வா போகலாம்.”

“ஒரு வேளை விலாசம் தப்போ? இரு விசாரிச்சுடலாம்… யாரோன்னு நெனச்சுண்டிருப்பா.”

“சேஷி… யாரோ வந்திருக்கா. கதவத் திற.”

ஒரு நடுவயதுப்பெண் வந்து கதவைத் திறந்தாள். “யார் வேணும்?”

“கனகுன்னு ஒரு பொண்ணை வீரவநல்லூரிலேருந்து இங்கே கட்டிக் கொடுத்திருக்காளாமே… கனகு எங்க நாத்தனார்தான்.”

“நாத்தனார்ங்கறேள்… கல்யாணத்துல காணோம்? இது உங்க பொண்ணா?”

“ஆமாம். என் ஒரே பொண்ணு. அவ அப்பா இல்ல. எனக்கு தகவல் வரல. கனகு இருக்காளா?”

அந்தப் பெண் உள்ளே திரும்பி “கனகுவோட மாமின்னு ஒரு அம்மா வந்திருக்கா… பொண்ணையும் கூட்டிண்டு…” என்று அறிவித்தபடியே உள்ளே சென்றாள்.

“தன்னைப் போலவே சம்பந்தம் பார்த்திருக்காள் பாட்டி”, மெல்ல கிசுகிசுத்தாள் பாகீரதி.

“உஸ்ஸ்… சும்மாயிரு. ஊராளாம். காதில விழுந்து த் தொலைக்கப் போறது. சுவாதீனமாய் உள்ளே நுழைந்தாள் தைலா.

“கனகு இல்லியா!”

“கோமுவுக்கு நீங்கதானே அஞ்சு பவுனு போட்டு கல்யாணம் பண்ணி வெச்சேளாம். இவளுக்கு மூணு பவுனுதான் போட்டா. ரெண்டாம் தாரம்னாலும் அது போதுமா! நிறைய வச்சிருந்தா, இவளுக்கு ரெண்டு பவுன் கொடேன். சொந்தம்ன்னு தேடிண்டு வந்திருக்கியே…” என்றூ முகவாய்க்கட்டையை தோளில் இடித்துக் கொண்டாள் அந்த அம்மணி.

“இருந்தா செய்யலாம்தான். எனக்கும் ஒரு பொண்ணு இருக்காளே…”

கனகு உள்ளேயிருந்து ஆவேசமாய் வந்தாள். “தம்பிகளுக்கு எங்க அண்ணாவோட ஓட்டல்ல எழுதி வச்சியே… நாத்தனாருக்குங்கிறபோது கை இழுத்துக்கறதாக்கும்! அவா ஆளுக்கு முப்பது பவுன் போட்டுண்டு மினுக்கறதா அம்மாஞ்சி மன்னி சொன்னா. எல்லாத்தையும் விடறதுக்கு முந்தி எங்கள ஒரு வார்த்த கேக்கணும்னு உனக்குத் தோணித்தா? இந்த நாலு பழத்துக்கும் வெத்தலைக்கும்தான் நான் ஏங்கிண்டிருக்கேனாக்கும்! இனிமே என்னத் தேடிண்டு வராதே… அவாளையெல்லாம் தலைமுழுகினா மாதிரி என்னையும் தலமுழுகிடு. எல்லாத்தையும் மறந்துட்டுத்தானே உன்ன கோமுவோட பிரசவத்துக்கு கூப்டுண்டோம். நீ அம்மாவ ஒரு வார்த்தை கேக்காததினாலதான் உனக்கு கல்யாணத்துக்கு தகவல் சொல்லலை.”

பாகீரதி கோபத்தோடு அம்மாவை முறைத்தாள். தைலா எதையும் லட்சியம் செய்யாமல் “நீரடிச்சா நீர் விலகிடுமா! என்னென்னமோ நடந்துடுத்து. அம்மாவுக்கு இருக்கிற கஷ்டம் போறாதான்னு நெனச்சேன். என்னோட நாலு பட்டு புடைவை இருக்கு. உங்கண்ணாவோட பட்டு வேஷ்டிகள் இருக்கு. அதெல்லாம் எடுத்துக்கறேள்னா கொண்டு வந்து தரேன். நாங்க வரோம்.

மாமீ… கனகு படபடன்னு பேசுவாளேயொழிஞ்சு மனசுல ஒண்ணும் கிடையாது. வெள்ளச்சோளம். நீங்க நன்னாப் பார்த்துப்பேள். இருந்தாலும் சொல்றேன். போயிட்டு வரேன்…”

oOo

இரண்டு நாட்கள் கழித்து கனகுவின் குடும்பம் அவள் வீட்டிற்கு விஜயம் செய்தனர்.

“சொந்தக்காரான்னு ஆயாச்சு… வுட்டுட முடியுமா! நீயும் அவ்வளவு தூரம் சொன்ன… அதான் ஒரு எட்டு பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம். ஒட்டுக் குடித்தனமா? தனி வீடு எடுத்துத் தங்க மாட்டியோ? பெரியப்பா ஆத்துக்குத்தான் ஏகப்பட்ட சொத்து இருக்கே… இந்த வாடகை வந்துதான் மச்சு வீடு கட்டப் போறாளா! இவா காலி பண்ண மாட்டேங்கிறாளோ? ராத்திரிக்கு உப்புமா கிண்டி சட்னி அரைச்சுரு. சேஷி நாளைக்கு ஊருக்குப் போறா. எனக்குப் பாரிச வாயு. கனகு உக்காந்தா உன் பொண்ண ஒத்தாசைக்கு அனுப்பறியா? சமைக்கத் தெரியுமோல்லியோ? நாளைக்கு ஒருத்தர் வீட்டுலப் போய் பொங்கிப் போடணுமே.” நீட்டினாள் பங்கஜம் மாமி.

பாகீரதிக்கு அப்பொழுதே வயிற்றைக் கலக்கியது.

தைலா “நான் வந்து செய்கிறேனே?” என்றாள்.

“நீங்க வேண்டாம் மாமி. உங்களுக்கு இழுப்பு. அதோட அப்பளாம் இடற ஜோலி வேற இருக்கு. நான் உங்க பொண்ணை கண்ணுக்குள்ள பொத்தி பார்த்துக்குவேன். கவலைப்படாதீங்கோ.”

கனகு உட்காரவேயில்லை. கருவுற்றாள். மசக்கையென்று வீரவநல்லூர் போயிருந்தாள். பாகீரதிக்கு அழைப்பு வந்தது.பாகீரதி வேண்டாவெறுப்பாக சென்றாள்.

கொல்லையிலே இரண்டு மாடு. ஒரு மாடு சினை. ஒரு மாடு மகா முரடு. ‘வைக்கோல் போடு என்கிறார்கள். ஆனால், அது கொம்பைக் கொம்பை ஆட்டுகிறது.’ இதெல்லாம் அவளுக்குப் பழக்கமேயில்லை.

“என்ன சமைச்சிருக்கே? ஒரே காரம். கூட்டுக்கு மிளகு அரைச்சு விடலியோ… பச்சக்குழந்த வாய முத்தமிட்டாப் போல சப் சப்புன்னு இருக்கு. ஓசியிலே பழம்புடைவை கொடுத்தா, ஊருக்கு முன்னால முழம்போட்ட கதையா நான் ஒத்தாசைக்கு வந்தவளைக் குத்தம் சொல்லிண்டு இருக்கேன்னு நினைக்காதே…”

‘காது செவிடாகி விடாதா’ என்று வருந்தினாள் பாகீரதி. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிந்தது. ஒவ்வொரு நாளும் சமைத்துவிட்டு பங்கஜம் சாப்பிடும்போது தேர்வு முடிவு பார்ப்பதுபோல் தவித்துக் கொண்டிருப்பாள்.

oOo

காலை எட்டு மணிக்கு ருக்மிணி, கோமளா சகிதம் அப்பளத்து உருண்டை வாங்கப் போவாள். நூறு உருண்டை எண்ணிக் கொடுப்பார்கள். ஒரு ஈர்க்குச்சியும் தொட்டு இட மாவும் தருவார்கள்.

அங்கே கணக்குப்பிள்ளை இருப்பார். “இதோ பாருங்கோம்மா… உருண்டையிலக் கொஞ்சம் கொஞ்சம் பிச்சுத் தின்னுட்டு அப்பளாத்தைக் காகிதமாட்டம் இட்டுண்டு வராதீங்கோ.”

“அதான் எடை போட்டு பார்ப்பீங்களே! எண்ணிக்கை மட்டுமில்லையே… எடை குறைஞ்சா விட்டுடுவீங்களே… கட்டி வச்சுத் தோல உரிச்சுற மாட்டேள்!” என்றாள் ருக்மிணி.

வீட்டுக்கு வந்து சின்னச் சின்ன வட்டமாக இட்டுத் தள்ளுவார்கள். எல்லாவற்றையும் மாவில் முக்கி அடுக்கி மேலே ஒரு சதுரப் பலகையை வைத்து அழுத்துவாள் தைலா. எல்லாம் முக்கால்வாசி பெரிதாய் ஆகும். அதன்பிறகு எல்லோருடையதையும் லாவகமாகப் பிரித்துப் போடுவார்கள். கொஞ்சம் கொஞ்சம் இட்டால் போதும். ஈர்க்கல்லால் அளந்து பார்த்தால் சரியாய் இருக்கும்.

ஒரு மணி நேர வேலை. நாலணா கிடைக்கும். மாலையில் கொண்டு கொடுத்துவிட்டு, தேரடியில் ஓரணாவிற்கு குழம்புத்தானும் மூன்றணாவிற்கு காய்கறியும் வாங்கி வருவார்கள்.

oOo

தைலா தன் முயற்சியை விடாமல் ஜாதகம் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த ஊரில் சடாட்சரம் என்று ஒரு ஜோசியர். அவர் தந்தையுடன் தன் வீட்டிலேயே சண்டிகா ஹோமங்கள், நவக்கிரக ஹோமம், மிருத்யஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம் எல்லாம் பண்ணித் தருவார். சடாட்சரத்திற்கு கல்யாண வயதிலும் பெண்ணிருந்தாள். ஒன்றரை வயதில் கைக்குழந்தையும் இருந்தது.

அவர் தைலாவிடம் “உன் பெண் ஜாதகத்தில் சர்ப்பதோஷம் இருக்கிறது. அதற்குப் பரிகாரமாக வருகிற கிரகணத்தன்று, கிரகணம் விடும் ஆறு மணிக்கு முன்னால், அவளை இங்கே அனுப்பு. புறக்கடை வழியாகத்தான் வரவேண்டும். போகும்போது வாசல் வாழியாகப் போகலாம். ஒரு பூஜை பண்ணவேண்டும். நீ தம்பிடி செலவழிக்கவேண்டாம். கூட யாரும் வரக்கூடாது. கூட யாராவது வந்தால், நான் திருப்பி அனுப்பித்து விடுவேன். யாரிடமும் இதை சொன்னால், பலிக்காது! ஞாபகம் வச்சுக்கோ.” என்று எச்சரித்து அனுப்பினார்.

தைலா பாகீரதியிடம் “நீ வீட்டிலேயே குளித்துவிட்டுப் போ. நான் கிரகண குளியலுக்காக ஆற்றங்கரைக்குப் போகிறேன். இந்த சமாச்சாரத்தை யார்கிட்டயும் உளறிவைக்காதே! கவனமாயிரு.” என்று அதட்டியிருந்தாள்.

சடாட்சரத்தின் வீடும் குத்திக்கல் தெருவில்தான் இருந்தது. கல்லிடைக்குறிச்சியில் பதினெட்டு தெருவிலுள்ள எல்லா வீடுகளும் நீளமாகத்தான் இருக்கும். ஒரு தெருவின் வாசல் மற்றொரு தெருவில் புழைக்கடைப் பக்கம். உதாரணமாக, குத்துக்கல் தெருவில் புழக்கடையில் வைத்திபுரம் தெரு இருந்தது. வைத்திபுரத்தின் கொல்லையில் கன்னடியன் கால்வாய் ஓடியது. கால்வாய் வழியாகவே எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் கடக்கலாம்.

அதனால், விளக்கேற்றினால் திருட்டு பயமும் அதிகம். கள்வர்கள் முதலில் கல்லை விட்டுத்தான் எறிவார்கள். கல்விழும் சப்தம் கேட்டதும், எல்லோரும் அவரவர் வீட்டுக்குள் அடக்கமாகி கதவை அடிதண்டா போட்டுவிடுவார்கள். பிறகு விடிந்தால்தான் வீரமாக வெளியே வருவார்கள். சில நாள் கம்பு கழிகளோடு, இளவட்டங்கள் ‘யாரடா அது…’ என்று சுற்றி வருவதும் உண்டு. கோவில்களையே அதனால், எட்டு எட்டரைக்குள் பூட்டி விடுவது வழக்கம்.

சூரிய கிரகணத்தன்று ஊரே தாமிரபரணிக்குப் போயிருந்த்து. இருட்டுப் பிரிந்தும் பிரியாத நேரம். சடாட்சரம் வீட்டு புழைக்கடைக் கதவை மெதுவாகத் திறந்துகொண்டு, நீளமான நடைபாதையில் நடந்தாள் பாகீரதி.

அவர் வீட்டில் புழக்கடைப் பக்கத் தாழ்வாரத்தை பூஜையறையாக மாற்றி இருந்தார். தெய்வத்திருவுருவப் படங்கள் மாட்டியிருந்தன. கீழே சின்னச் சின்ன விக்கிரகங்கள். ஒரு கிண்ணத்தில் குங்குமமும், ஒரு கிண்ணத்தில் திருநீறும் இருந்தன. மணைப்பலகை இரண்டு போடப்பட்டிருந்தன. தாழ்வார அறையின் ஓரத்தில் சமையலறைக்குப் போகும் வாசல். சமையலறையைக் கடந்ததும் பெரிய பூஜையறை. அதையடுத்து பெரிய கூடம். கூடத்தையடுத்து முன்பக்க ரேழி. ரேழியின் இரண்டு புறத்திலும் இரு திண்ணைகள். அங்கே வாசற்கதவு.

‘பெரிய பூஜையறையில்தானே சடாட்சரத்தின் அப்பா பூஜை பண்ணுவார்! இங்கேயும் ஒரு பூஜையறை இருக்கிறதா…’ யோசித்தபடி நின்றிருந்தாள் பாகீரதி. அவர் வீட்டிலும் எல்லோரும் தாமிரபரணிக்கு சென்றிருந்தார்கள். வீடு மட்டுமல்ல. தெருவே நிசப்தமாக இருந்தது.

“உக்காந்துக்கோ குழந்தே.” சடாட்சரம் மணையைக் காட்டினார். பாகீரதி அதில் அமர்ந்தாள்.

“இன்னிக்குத்தான் ஸ்நானம் பண்ணியா… அம்மா சொன்னா.”

“ஆமாம்.”

“பிள்ளையார் பிரம்மச்சாரி இல்லே… வல்லபிங்கற அசுரப்பெண்ணுக்கு குழந்தை பிறந்து அசுரவம்சம் பெருகிடக் கூடாதுன்னு தும்பிக்கையாலே அவளுடைய பிறப்புறுப்பை அடைச்சுண்ட்டார். அதுக்குத் தோதா அவளத் தொடையிலே உக்காத்திண்டுட்டார். உன்னுடையப் பிறப்புறுப்பிலேயும் தோஷமிருக்கு. அதை நான் போக்கப் போறேன். ஜட்டிப் போட்டுண்டிருந்தியானா அவுத்துரு.”

பாகீரதிக்கு இவர் பேச்சே அருவருப்பாயிருந்தது. ‘என்ன சாமீயெல்லாம் இப்படி அசிங்கம் பண்றார்… அம்மாவுக்கு புத்தியேயில்ல!’

“உக்கிரசேனா ராஜா கிருஷ்ணருடைய பாட்டனார். அவருக்கேன் கம்சன் பிறந்தான்னு நீ யோச்சிச்சிருக்கியோ! நீ மகாபாரதமெல்லாம் படிக்கிறதா உங்கம்மா சொன்னா. உனக்குப் புரிஞ்சிருக்கும். உக்கிரசேனருடைய பொண்டாட்டி ரொம்ப கர்வி. புருஷன மதிக்கிறதேயில்ல… அவரோட சண்டைப் போட்டுண்டு ரொம்பக் காலமா பொறந்த வீட்டுல போய் இருந்துட்டா. ஒரு நாள் அவ நந்தவனத்தில இருக்கும்பொது ஒரு கந்தர்வன் இவ யாருன்னு ஞானதிருஷ்டில பார்த்தான். உக்கிரசேனன் ரூபமெடுத்துண்டு அருமையா வீணை வாசிச்சுப் பாடினான். அவள் அதில மயங்கிட்டா. உங்ககிட்ட இப்படி ஒரு அபூர்வத் திறமை இருக்கிறதே தெரியாதேன்னு சொல்லி வரவேற்றா. ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தா. கந்தர்வன் ஊருக்குப் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு போயிட்டான். அவ கர்ப்பமாயிட்டா. உக்கிரசேனரைப் பார்க்கிணம்னு ஆசைப்பட்டா. அவளோடப் பெற்றோர் அவளைக் கொண்டுபோய் மதுராவில விட்டா.

உக்கிரசேனர்கிட்ட ஒரு நாள், ‘நீங்க வீணை இசைச்சு மறுபடி பாடணம்’னு கேட்டா. ‘எனக்குப் பாடவே தெரியாதே’ன்னார் அவர். ‘பொய் சொல்றேள்… ஊருக்கு வந்தபோது பாடினேளே’ன்னா அவ. ‘நீதான் வெளையாடறே! நான் எப்ப ஊருக்கு வந்தேன்? நீயா மனசு மாறி வந்தேன்னு சொல்லிக்க உனக்கு கூச்சமா இருக்கு. அதுக்கு என்னென்னமோ சொல்றேன்’னு சொல்லிட்டுப் போயிட்டார் அவர்.

அவள் திக்கிச்சுப் போயிட்டா. தீயகுணத்தோட கந்தர்வன் சேர்ந்ததினால, கம்சன் தீயவனா வந்து பிறந்தான். அவ கமுக்கமா அதை மறைச்சுட்டா. அதனாலே என்னால தோஷம் கழிக்கப்பட்ட நீ சத்புத்திரனை பெத்தெடுப்பே. தீட்டு வந்த நாலாம் நாள் ஆணோட சேர்ந்தா கர்ப்பந்தரிக்காது. பயப்படாதே. சரி… அப்படியே சாஞ்சுக்கோ!” இப்படி உளறிக் கொண்டிருந்தார் சடாட்சரம்.

தன்னைச் சுற்றிலும் நெருப்பு எரிவது போல் உணர்ந்தாள் பாகீரதி.

‘பகவானே… நெசமாவே நீ இருக்கிறது சத்தியமாயிருந்தா இதிலேயிருந்து என்னக் காப்பாத்து. நான் வலுவில்லாதவ. காப்பாத்த ஆளில்ல. திரௌபதிக்கு புடைவை கொடுத்தது உண்மையா இருந்தா அனுசூயை மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கினது வாஸ்தவம்னா உனக்கு உன்கிட்ட இதுவரை எதுவுமே கேக்காத என்னை எப்படி ரட்சிக்கப் போறே? இந்த விளக்கு அக்கினி திடீர்னு காற்றடித்து வேஷ்டியில் பரவி இவர் எரிய மாட்டார்?’ இப்படியெல்லாம் பிரார்த்தனையும் வேதனையுமாக அவள் மனம் துடித்தது.

சடாட்சரம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். “அக்கினி சப்தரிஷி பத்தினிகள் மேலேயும் ஆசைப்பட்டான். அக்கினியோட மனைவி ஸ்வாஹா ஒவ்வொருத்தர் ரூபமா எடுத்து அவரைத் திருப்தி பண்ணினா. ஆனா, அவளால கூட அருந்ததி ரூபத்த எடுக்க முடியல. என் பொண்டாட்டி உன் ரூபத்தை எடுக்க முடிஞ்சிருந்தா, நான் ஏன் உன்ன இந்த மாதிரி கெஞ்சிண்டிருக்கப் போறேன்! நீ குதிரை வண்டியிலேயிருந்து குதிச்சே பாரு, அப்பவே என் மனசிலே குதிச்சுட்டே. உன்னால இன்னிக்கு என் கிட்டயிருந்து தப்பிக்கவே முடியாது. எனக்கு சம்மதப்பட்டுத்தான் ஆகணும். தானாப் பழுத்தா உனக்கு நல்லது.

நீ மாலை கட்டிப் போடுறியே… லெஷ்மிபதி! அவர் மோகினி ரூபத்த எடுத்து சிவனோட காமத்தத் தணிச்சிருக்கார். சிவன் மட்டும் என்ன… தாருகாவனத்தில் ரிஷிபத்தினிகளை எல்லாம் மோகங்கொள்ளவச்சு தன் பின்னாலேயே அலைய வச்சிருக்கார். மோகினி பின்னால ரிஷிகளெல்லாம் போயிருக்கா.

ஜலந்திராசுரனைக் கொல்லமுடியாம துளசியோட கற்பு தடையாயிருந்தது. மகாவிஷ்ணு ஜலந்திரன் வடிவில் போய் அவ கற்பைக் கெடுக்கலியா? நமக்கு சாதகமா இருக்கிற எதுவுமே தப்பில்ல.”

அப்போது தடதடவென்று உடைந்துவிடுவது போல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. சடாட்சரம் “இரு வரேன்…” என்று எரிச்சலுடன் ஓடினார்.

இமைக்கும் நேரம். குதிகால் பிடறியில் பட வேகமாக அந்த நீன்ண்ண்ண்ட நடைபாதை தூரத்தைக் கடந்தாள். தெருவிலும் தலைதெறிக்க ஓடினாள். ஆற்றங்கரை மேட்டிலிருந்து மனிதர்களின் தலைகளைப் பார்த்ததும்தான் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். அவள் மனம் இறைவருக்கு நன்றி சொல்லி மாளவில்லை.

மேட்டிலேயே நின்று தாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள் பாகீரதி. அவளைப் பார்த்ததும் தோண்டி ஜலத்தோடு மேடேறி வந்தாள் தைலா. “என்ன காரியம் பண்ணினே நீ… த்த்தூ… அந்த சடாட்சரம் மனுசனா! அம்பாள் வந்து காப்பாத்தலே நான் சீரழிஞ்சு போயிருப்பேன். எனக்கு கல்யாணம் வேணும்னு நான் கேட்டேனா… இனிமே அவர்கிட்ட ஜாதகத்தைக் கொண்டே போனே, நான் கண்காணாம ஓடிப் போயிடுவேன். சொல்றேன்னு நெனச்சுக்காதே! செஞ்சிருவேன்.” அடிக்குரலில் உறுமினாள் பாகீரதி.

“சரி… சரி… வா. தொடப்பக்கட்டையாலே அடிக்கணும் அந்த மனுசன! எட்டுப்புள்ள பெத்தும் வெவஸ்தையில்லாம நடந்துண்டிருக்கானே… அவ அப்பா சர்மா மகா சத்து. இவன் மகா அசத்து. எனக்கு புத்தியிருந்தா, தம்பிகள்கிட்ட ஏமாந்திருப்பேனா? நாசமாப் போறவன் என் நம்பிக் கெடுத்துட்டான். ஒன்னும் நடக்கலியோ இல்லியோ… ஏன்.. இவ்வளவு பதட்டமா இருக்கே! வா…” என்று சமாதானம் சொல்லியபடி நடந்தாள் தைலா.

oOo

ஊரிலிருந்து நாராயணன் கடிதம் போட்டிருந்தான். அது பெரியப்பாவின் மரணத்தையும் கனகுவின் கல்யாணத்தையும் செய்தியாகக் கொண்டு வந்திருந்தது. கனகுவை கல்லிடைக்குறிச்சி போஸ்ட்மாஸ்டருக்கேக் கொடுத்திருந்தார்கள். தொந்திலான் தெருவில் கனகுவின் புக்ககத்து முகவரியும் அதில் இருந்தது.

“வா… உங்க அத்தையப் போய் பார்த்துட்டு வரலாம்” என்றழைத்தாள் தைலா.

“ஏம்மா… உனக்கு ரோஷமே இல்லியா? உன்னை அத்தைகளும் பாட்டியும் ஏகப்பட்ட பாடு படுத்தியிருக்கா… அப்பத்தான் தீராது. அவாளாலே நம்மளுக்கு காலணாவுக்கு பிரயோசனம் இல்லே. என்ன வந்து பார்க்க கூட இல்ல பாட்டி. எதுக்கும்மா இந்த உறவெல்லாம்!”

“பெரிய மனுஷி மாதிரி பேசாதே! பாட்டிக்கு ரெண்டு கண்ணும் தெரியல. உன்ன ஒரு வயசுக் குழந்தையா அழைச்சுண்டு வந்திருந்தபோது அத்தைகளும் பாட்டியும் சேர்ந்து தொட்டில் போட்டா. ஊரே கேலி பன்னித்து… ‘ஒரு வயசுக் குழந்தைக்குத் தொட்டிலா’ன்னு… உன்னைத் தொட்டில்ல உக்கார வச்சு தொட்டில் பயிறை உன் கையிலேயே கொடுத்து திங்க வச்சவ உன் பாட்டி. நீ அங்க இருக்கற மட்டும் உன்னக் கீழேயே விடாம தூக்கிண்டு திரிவா கனகு. பெரியவா செஞ்சதுக்கு சின்னவ அவ என்ன செய்வா? பேசாம வா.”

பாகீரதி விருப்பமில்லாமல் பின் தொடர்ந்தாள்.

வீட்டையும் கண்டுபிடித்து விட்டார்கள். சுட்டெரிக்கும் வெயில். வாசல் உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. கதவைத் தட்டினாள். எதிரே ஒரு ரெட்டை நாடி அம்மாள் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால், இவர்களைப் பார்த்தார்களேயொழிய எந்தச் சலனமும் இல்லை.

“இதுக்கு மேலேயும் இங்க நிக்கணும்மாம்மா… வா போகலாம்.”

“ஒரு வேளை விலாசம் தப்போ? இரு விசாரிச்சுடலாம்… யாரோன்னு நெனச்சுண்டிருப்பா.”

“சேஷி… யாரோ வந்திருக்கா. கதவத் திற.”

ஒரு நடுவயதுப்பெண் வந்து கதவைத் திறந்தாள். “யார் வேணும்?”

“கனகுன்னு ஒரு பொண்ணை வீரவநல்லூரிலேருந்து இங்கே கட்டிக் கொடுத்திருக்காளாமே… கனகு எங்க நாத்தனார்தான்.”

“நாத்தனார்ங்கறேள்… கல்யாணத்துல காணோம்? இது உங்க பொண்ணா?”

“ஆமாம். என் ஒரே பொண்ணு. அவ அப்பா இல்ல. எனக்கு தகவல் வரல. கனகு இருக்காளா?”

அந்தப் பெண் உள்ளே திரும்பி “கனகுவோட மாமின்னு ஒரு அம்மா வந்திருக்கா… பொண்ணையும் கூட்டிண்டு…” என்று அறிவித்தபடியே உள்ளே சென்றாள்.

“தன்னைப் போலவே சம்பந்தம் பார்த்திருக்காள் பாட்டி”, மெல்ல கிசுகிசுத்தாள் பாகீரதி.

“உஸ்ஸ்… சும்மாயிரு. ஊராளாம். காதில விழுந்து த் தொலைக்கப் போறது. சுவாதீனமாய் உள்ளே நுழைந்தாள் தைலா.

“கனகு இல்லியா!”

“கோமுவுக்கு நீங்கதானே அஞ்சு பவுனு போட்டு கல்யாணம் பண்ணி வெச்சேளாம். இவளுக்கு மூணு பவுனுதான் போட்டா. ரெண்டாம் தாரம்னாலும் அது போதுமா! நிறைய வச்சிருந்தா, இவளுக்கு ரெண்டு பவுன் கொடேன். சொந்தம்ன்னு தேடிண்டு வந்திருக்கியே…” என்றூ முகவாய்க்கட்டையை தோளில் இடித்துக் கொண்டாள் அந்த அம்மணி.

“இருந்தா செய்யலாம்தான். எனக்கும் ஒரு பொண்ணு இருக்காளே…”

கனகு உள்ளேயிருந்து ஆவேசமாய் வந்தாள். “தம்பிகளுக்கு எங்க அண்ணாவோட ஓட்டல்ல எழுதி வச்சியே… நாத்தனாருக்குங்கிறபோது கை இழுத்துக்கறதாக்கும்! அவா ஆளுக்கு முப்பது பவுன் போட்டுண்டு மினுக்கறதா அம்மாஞ்சி மன்னி சொன்னா. எல்லாத்தையும் விடறதுக்கு முந்தி எங்கள ஒரு வார்த்த கேக்கணும்னு உனக்குத் தோணித்தா? இந்த நாலு பழத்துக்கும் வெத்தலைக்கும்தான் நான் ஏங்கிண்டிருக்கேனாக்கும்! இனிமே என்னத் தேடிண்டு வராதே… அவாளையெல்லாம் தலைமுழுகினா மாதிரி என்னையும் தலமுழுகிடு. எல்லாத்தையும் மறந்துட்டுத்தானே உன்ன கோமுவோட பிரசவத்துக்கு கூப்டுண்டோம். நீ அம்மாவ ஒரு வார்த்தை கேக்காததினாலதான் உனக்கு கல்யாணத்துக்கு தகவல் சொல்லலை.”

பாகீரதி கோபத்தோடு அம்மாவை முறைத்தாள். தைலா எதையும் லட்சியம் செய்யாமல் “நீரடிச்சா நீர் விலகிடுமா! என்னென்னமோ நடந்துடுத்து. அம்மாவுக்கு இருக்கிற கஷ்டம் போறாதான்னு நெனச்சேன். என்னோட நாலு பட்டு புடைவை இருக்கு. உங்கண்ணாவோட பட்டு வேஷ்டிகள் இருக்கு. அதெல்லாம் எடுத்துக்கறேள்னா கொண்டு வந்து தரேன். நாங்க வரோம்.

மாமீ… கனகு படபடன்னு பேசுவாளேயொழிஞ்சு மனசுல ஒண்ணும் கிடையாது. வெள்ளச்சோளம். நீங்க நன்னாப் பார்த்துப்பேள். இருந்தாலும் சொல்றேன். போயிட்டு வரேன்…”

oOo

இரண்டு நாட்கள் கழித்து கனகுவின் குடும்பம் அவள் வீட்டிற்கு விஜயம் செய்தனர்.

“சொந்தக்காரான்னு ஆயாச்சு… வுட்டுட முடியுமா! நீயும் அவ்வளவு தூரம் சொன்ன… அதான் ஒரு எட்டு பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம். ஒட்டுக் குடித்தனமா? தனி வீடு எடுத்துத் தங்க மாட்டியோ? பெரியப்பா ஆத்துக்குத்தான் ஏகப்பட்ட சொத்து இருக்கே… இந்த வாடகை வந்துதான் மச்சு வீடு கட்டப் போறாளா! இவா காலி பண்ண மாட்டேங்கிறாளோ? ராத்திரிக்கு உப்புமா கிண்டி சட்னி அரைச்சுரு. சேஷி நாளைக்கு ஊருக்குப் போறா. எனக்குப் பாரிச வாயு. கனகு உக்காந்தா உன் பொண்ண ஒத்தாசைக்கு அனுப்பறியா? சமைக்கத் தெரியுமோல்லியோ? நாளைக்கு ஒருத்தர் வீட்டுலப் போய் பொங்கிப் போடணுமே.” நீட்டினாள் பங்கஜம் மாமி.

பாகீரதிக்கு அப்பொழுதே வயிற்றைக் கலக்கியது.

தைலா “நான் வந்து செய்கிறேனே?” என்றாள்.

“நீங்க வேண்டாம் மாமி. உங்களுக்கு இழுப்பு. அதோட அப்பளாம் இடற ஜோலி வேற இருக்கு. நான் உங்க பொண்ணை கண்ணுக்குள்ள பொத்தி பார்த்துக்குவேன். கவலைப்படாதீங்கோ.”

கனகு உட்காரவேயில்லை. கருவுற்றாள். மசக்கையென்று வீரவநல்லூர் போயிருந்தாள். பாகீரதிக்கு அழைப்பு வந்தது.பாகீரதி வேண்டாவெறுப்பாக சென்றாள்.

கொல்லையிலே இரண்டு மாடு. ஒரு மாடு சினை. ஒரு மாடு மகா முரடு. ‘வைக்கோல் போடு என்கிறார்கள். ஆனால், அது கொம்பைக் கொம்பை ஆட்டுகிறது.’ இதெல்லாம் அவளுக்குப் பழக்கமேயில்லை.

“என்ன சமைச்சிருக்கே? ஒரே காரம். கூட்டுக்கு மிளகு அரைச்சு விடலியோ… பச்சக்குழந்த வாய முத்தமிட்டாப் போல சப் சப்புன்னு இருக்கு. ஓசியிலே பழம்புடைவை கொடுத்தா, ஊருக்கு முன்னால முழம்போட்ட கதையா நான் ஒத்தாசைக்கு வந்தவளைக் குத்தம் சொல்லிண்டு இருக்கேன்னு நினைக்காதே…”

‘காது செவிடாகி விடாதா’ என்று வருந்தினாள் பாகீரதி. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிந்தது. ஒவ்வொரு நாளும் சமைத்துவிட்டு பங்கஜம் சாப்பிடும்போது தேர்வு முடிவு பார்ப்பதுபோல் தவித்துக் கொண்டிருப்பாள்.

oOo

3 responses to “குத்திக்கல் தெரு – 3

  1. who is the author of kuthukkal theru?

  2. ஒவ்வொரு பெண்ணும் அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய கதை – குத்திக்கல் தெரு – 3. அந்த காலத்திலிருந்த்து இந்நாள் வரை இந்தப் பெண்கள் பாவம், தப்பிக்க வழியே இல்லையா, கடவுளே !

  3. Arumayaana kathai…1920’30’ kalil nadantha agrahaara kathaigal..nenjai thotta nigalvugal…aasiriyar vaalga…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.