குத்திக்கல் தெரு- 2

“அக்கா… நானும் உன் கூட வரட்டுமா? எனக்கு பட்டணம் பார்க்க ஆசையா இருக்கு.” என்றான் தைலாவின் தம்பி வேதாந்தம்.

“அத்திம்பேர்கிட்ட சொல்லாம அக்கா ஒரு துரும்பக் கூட கூட்டிண்டு போக மாட்டாடா… நீ அத்திம்பேருக்கே லெட்டர் எழுதிப் போட்டுக் கேளு. நான் விழுப்புரத்திலதானே இருக்கேன். ஒரு வாட்டி கூட மெட்ராஸ் போனதில்ல.” என்றான் பெரிய தம்பி பத்ம்நாபன்.

“அதுக்கென்னடா… நான் போனதும் ஒரு கடுதாசி போடு. நானும் சொல்றேன். வந்துட்டுப் போகலாம். பட்டினத்தார் சமாதி, திருவொற்றியூர், திருவட்டீஸ்வரன் பேட்டைக் கோவில், பீச்சு, எல்லாம் பார்க்கலாம்.”

oOo

“உங்க ஊருக்குப் போனா குழந்தைக்கு ஏதாவது ஆயிடறது. அதனால் நீ மட்டும் உங்கம்மா சாவுக்கு போயிட்டு வா. பத்து முடிஞ்சதும் திரும்பிடு. கிரேக்கியம் வரைக்கும் இருக்க வேணாம்.”

“அஞ்சு வயசுக் குழந்தை என்னப் பிரிஞ்சு இருக்குமா?”

“அவளாண்டயே கேளேன்.”

“அப்பா கூடயே நான் இருக்கேம்மா… நீ போயிட்டு வா”

oOo

“பத்து… நீ பண்ணின காரியம் அம்மாவுக்கு எமனாக முடிஞ்சுடுத்து. பார்த்தியா!”

“ஏன்… என்னையே குத்தம் சொல்லிண்டிருக்கே! உன்னக் கலியாணம் பண்ணிக் கொடுத்ததில் இருந்து அம்மாவுக்கு நிம்மதிங்கறதேப் போயிடுத்து. உன் மாமியார் வீட்டில செஞ்ச கொடுமை ஒண்ணா? ரெண்டா? நைஞ்சு போண துணி… கடைசியில நான் மாட்டிண்டேன். வேணா… வேதாந்தம் இருக்கான். கவர்ன்மென்ட்டு வேலை. வக்கணையா பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணு! நான் வேணாங்கல… ஓட்டல்ல சர்வரா இருக்கேன்னு ஒரு பய பொண்ணக் கொடுக்க மாட்டேங்கிறான். இப்ப பாரு… மாமானார் ஆத்தோட இருக்கேன். சாப்பாட்டு பிரச்சினை இல்ல. மாசம் பதினஞ்சு ரூபா கொடுத்துட்டு நிம்மதியா இருக்கேன்.”

“கோச்சுக்காதேடா… என்னமோ ஆதங்கம்! ரெண்டு வார்த்த சொல்லிட்டேன். வேதாந்தத்துக்கு சவரணை போறாது. அப்பா தனியாளாயிட்டா… எப்படி கவனிச்சுக்கவனோன்னு மனசு அடிச்சுக்கறது. நீ ஒரு தடவ அங்க வாயேன்… உன் ஆத்துக்காரியும் அழைச்சுண்டு வா. அத்திம்பேர் பலாப்பழம் மாதிரி. மேலதான் கரடுமுரடா இருப்பார். உள்ளுக்குள்ள ரொம்ப இரக்கம்டா. கீரைக்காரிக் குழந்தைக்குக் கூட முகத்தத் துடச்சி, மூக்க சிந்தி, பழைய சட்டையெடுத்துக் கொடுப்பார். சீமாச்சு வந்து இன்டர்மீடியட் பாஸ் பண்ணினேன்னான்… உடனே வாட்ச்சைக் கழற்றி க்ட்டி வுட்டுட்டார். உன்னப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவார்.”

oOo

“அத்திம்பேர்… சேலத்து மாம்பழம் சொல்லி வச்சு வாங்கிண்டு வந்தேன். அத்தனையும் கல்கண்டு.” இரு கைகளாலும் தூக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு பழமும் இருந்தது. அப்படி கூடை நிறைய மாம்பழங்களோடு வந்திருந்தனர் பத்மநாபன் தம்பதியினர்.

மாலை சீட்டுக் கச்சேரியில் கோதண்டம் மாம்பழங்களைத் துண்டு போட்டு நண்பர்களோடு சாப்பிட்டான்.

“ஒரு வாரம் வச்சிருந்தாலும் கெடாதுக்கா. இப்படி ஊராருக்குப் பங்கு போட்டுக் கொடுத்துட்டாரே!”

“அத்திம்பேர் சுபாவமே அதுதாண்டா… நாளைக்கின்னு அவர் எதையுமே வச்சிண்டதில்ல. நாலு பேருக்குக் கொடுத்து, அவா முகத்தில சந்தோஷத்தைப் பார்க்கிறவர். விடு… இன்னும் எத்தன மாம்பழம் சாப்பிடப் போறோமோ… எத்தன சாப்பிட்டிருக்கோமோ… உன் பொண்டாட்டி சங்கரியும் ஒட்டினாப் போல இருக்கா. அடிக்கடி வந்துட்டுப் போ. இப்படி கால்ல வென்னீர் வுட்டுண்ட மாதிரி போகாம ஒரு வாரம் இருக்கிற மாதிரி வா…”

oOo

“பெரியப்பா ஆத்துக்கு கோமதி வந்திருக்கா. அவளுக்கு அங்க வச்சுத்தான் பொண்ணு பார்க்க ஏற்பாடாயிருக்கு. தங்கமும் கூட வந்திருக்கறதுனால, நீ வரவேண்டாம். குழந்தையப் பார்க்கணும்னு அக்கா ஆசைப்படறா. நான் பாகீயைக் கூட்டிண்டு போறேன்.”

“பையன் என்ன பண்றான்?”

“தாலுகா ஆபீசில குமாஸ்தாவ இருக்கான்.”

“கல்யாணத்துக்காவது நான் வரலாமா?”

“இதென்ன அல்ப ஆசை! வேண்டான்னா ஒதுங்கிட வேண்டியதுதானே? நீ வராட்டா தாலி கட்டமாட்டாளா… கலியாணத்த அவாளே சுருக்கமா பண்ணிக்கறேன்னுட்டா. ஆயிரம் ரூபா கொடுத்துரணும். அஞ்சு பவுன் போடணும்னுருக்கா. அதெல்லாம் நான் கொடுத்துட்டேன். பெரியப்பாதானே அவனுக்கு வேலையே பண்ணி வச்சார்… அப்புறம் என்ன! பெரியப்பா ஆத்தில நாராயணன் கல்யாணம் நடக்கப் போறதே… அதுக்கு நீ வரலாம்.”

oOo

“என்ன கோந்தே பார்க்கிறே! வெள்ளி பாரே வாங்கி வச்சிருக்கேன். சமைக்கிற மாதிரியே வெள்ளிப் பாத்திரம் வாங்கித் தந்துடலாம். இதெல்லாம் என்ன அதிசயம்டீ…” என்று சீர் பாத்திரத்தை கண்ணை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருந்த பாகீரதியைப் பார்த்துச் சொன்னார் கோதண்டம்.

“அம்மா ஏம்ப்பா அழுதுண்டே இருக்கா?”

“அவா அப்பா செத்துப் போயிட்டா. அவளுக்கு வருத்தமா இருக்காதா? நீ சின்னக் குழந்தை. உனக்கெதுக்கு இதெல்லாம்! நான் சீட்டு விளையாடப் போறேன். என் கூட வா. மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பிச்சதும் அம்மா சரியாயிடுவா.”

oOo

“அத்திம்பேருக்கு என்னக்கா செஞ்சது! காரக்கிடா மாதிரி இருந்தார். சாகற உடம்பா இது?”

“அண்ணா… என்னப் பத்தி நீ நெனச்சே பார்க்கலியே! எனக்கு யாருன்னா கதி?”

“எப்படியோ அவா சந்தோஷமா இருந்தாப் போதும்னுதானே விட்டிருந்தோம்… அவ துக்கிரி. புருஷன முழுங்கிட்டா.” தங்கம் மூக்கை சிந்தினாள்.

“சித்தி இருந்தாலும் இப்படி அடம்பிடிக்க கூடாது. இனிமே பார்க்கமுடியுமா? வரமாட்டேனுட்டாளே…” நாராயணன் புலம்பினான்.

‘அம்மாவுக்கு இத்தனை வயசானதும் அவ அப்பா செத்துப் போனா. எனக்கு ஏன் இந்தச் சின்ன வயசிலேயே அப்பா செத்துப் போனா? இது என்ன நியாயம்! இதுக்கெல்லாம் ஒரு நியதியே கிடையாதா? கோவில்ல போனா சாமி ரொம்ப நல்லவர். நமக்கு எல்லாம் தருவாரும்பாளே. சாமீ ஏன் இப்படி செஞ்சார்? அவருக்கு என் மேலே என்ன கோபம்? இனிமேல் அம்மா என்னைக் கோவிச்சுண்டா, யார் என்னைக் குளிப்பாட்டுவா? யார் சாதம் ஊட்டுவா? யார் பீச்சுக்குக் கூட்டிண்டு போவா?’ இப்படியெல்லாம் விடை தெரியாத கேள்விகளோடு குப்புறப் படுத்திருந்தாள் பாகீரதி.

“ஏதாவது வியாதி வந்து செத்துப் போனா, அதில ஒரு தர்மம் இருக்கு. ஆண்டு, அனுபவிச்சு, வயசாகி செத்துப் போனா அதில ஒரு நீதியிருக்கு. இது என்ன? பாதியிலேக் கொட்டிக் கவுத்தின மாதிரி பயணத்த முடிச்சுண்டுட்டான்! எல்லாம் அம்மா செஞ்ச பாவம். புள்ள கையால கொள்ளி வாங்க அவளுக்குக் கொடுத்து வைக்கல.” என்று பிலாக்கணம் வைத்தாள் பெரியக்கா.

oOo

இருப்பவர்களுக்குத்தான் நாள் ஓடாது. இறந்தவனுக்கு அது பதின்மூன்றாம் நாள்.

“பத்மநாபா… நீயும் ஒரு ஹோட்டல்லதான் வேலை செய்யறே. மெட்ராசில ஒரு தொழில் தொடங்குதுங்கறது ரொம்பக் கஷ்டம். எவாகுவேஷன் சமயமா இருந்ததினால் இந்த இடம் லாபமா கிடைச்சது. நானும் கொஞ்சம் உதவி பண்ணினேன். திருப்பிக் கொடுத்துட்டான்னு வச்சுக்கோ. கோதண்டம் சாமர்த்தியசாலி. பாத்திரம் பண்டமெல்லாம் வாடகைக்கு வாங்கிண்டான். கொஞ்ச கொஞ்சமா விலைக்கும் வாங்கிண்டுட்டான். நன்னா நடந்துண்டிருக்கிற வியாபாரம். பேசாம இதை ஏத்து நடத்து. தைலாவும் ஒரு பொண் குழந்தைய வச்சிண்டிருக்கா. ஆளுக்குப் பாதிந்னு லாபத்தை பங்கு போட்டுக்கோங்கோ. அவளுக்கு நீ ஆதரவு. உனக்கு இந்த தொழில் வருமானம். என்னால் முடிஞ்ச உதவியெல்லாம் செய்யறேன். என்ன சொல்றே?” பெரியப்பா கேட்டார்.

பத்மநாபன் சந்தோஷமாக ஒத்துக் கொண்டான்.

oOo

“வேதாந்தத்திற்கு நாலு குழந்தை பொறந்தாச்சு. இவளுக்கு நாலு மாசம், மூணு மாசம்னு இப்படியே போயிண்டிருக்கு. என்ன குத்தமோ தெரியல. ஒரு நடை குலதெய்வம் கோவிலுக்கு வேணாப் போயிட்டு வரியாடா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாக்கா. தொழில விட்டுட்டுப் போனா அடுத்தவன் வந்து பிடிச்சுண்டுடுவான். ராப்தா போயிடும்.”

“நாலு நாள்தானே… நாராயணன் பார்த்துக்குவான். நீ போயிட்டு வந்துடு.”

“முதல்ல நீ நாராயணன்கிட்ட கேட்டுப் பாரு.”

“சரி… அதெல்லாம் முடிஞ்சா மாதிரிதான். நீ வேதாந்தத்துக்கு ஒரு லெட்டர் போடு. இத்தனாம் தேதி வரான்ன அவன் ஏற்பாடு பண்ணியிருப்பான். அபிஷேக சாமானெல்லாம் திருநெல்வேலியில இறங்கி வாங்கிண்டு போயிடு. வேஷ்டி இங்கேயிருந்தே எடுத்துக்கோ. சொரிமுத்தைய்யன் கோயில், பாபநாசம், சங்கரன்கோயில், திருச்செந்தூர் எல்லாம் போயிட்டு வந்துடு. வந்து முடியவே முடியாது. இல்லே…  போற போதே போயிட்டுப் போ.”

“பாகீயையும் அழைச்சுண்டு போறோமே… உனக்கு வெறுக்குன்னு இருக்காதா?”

“நாளைக்கு கல்யாணம் பண்ணி அனுப்பினாலும் வெறுக்குன்னுதானே இருக்கும். அதெல்லாம் பார்த்தா முடியுமா! பாகீ… மாமா, மாமி சொல்லுறதக் கேட்டு சமத்தா நடந்துக்கோ.”

oOo

அபிஷேகம் அலங்காரம் எல்லாம் முடிந்தது. தீபாராதனைக் காட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், தளதளவென்றிருக்கும் வேதாந்தத்தின் இளம் மனைவி, இருபத்திநாலு வயசு பாமாவின் கண்களும் பத்மநாபன் கண்களும் அபிஷேக அலங்காரத்தில் இல்லை. வசதியாக இருவரும் எதிரெதிராக பின்வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

“வேதாந்தம்… நீயும் பாமாவும் கூட வாங்கோ. உனக்கும்தான் மூணு குழந்தை செத்துப் போச்சு. எனக்குப் பொறக்கவே இல்ல. உனக்குப் பொறந்து பொறந்து செத்துப் போச்சு. என்ன பித்ரு சாபமோ! பாபநாசம் போயிட்டு வந்துரலாம்.”

பாபநாசத்தில் பெரிய பெரிய மீன்கள் கடிக்க பத்மநாபன் என்ற மீனும் நீருக்குள் மூழ்கி பாமாவின் காலைக் கடித்தான்.

“வேதாந்தம்… எனக்கு ஜுரம் வர மாதிரி இருக்கு. நீ என்ன பண்றே… சங்கரன்கோவிலுக்கு மன்னியக் கூட்டிண்டு போயிட்டு வா. அவ அப்புறம் ஊருக்கு வந்து சங்கரன்கோவில் காட்டலேன்னு குதிப்பா! மாத்திரையப் போட்டுண்டு தூங்கினாத்தான் சரியாப் போகும் போலிருக்கு. அங்க போயி மறுபடி ஓடணுமே. என்ன சொல்றே?”

வேதாந்தத்திற்கு மலர்களில் பேதமே கிடையாது. வாடின பூ, உதிரும் பூ, மொட்டு என்றெல்லாம் அவன் பார்ப்பதே கிடையாது. எதுவாயிருந்தாலும் தடாலடிதான். ஒரே கள்ளை பலவிதமானப் பாத்திரங்களில் விட்டு ருசிப்பவன். மரத்துக்கு மரம் கள் இறக்குபவன். பத்மநாபன் திருடன் என்றால் வேதாந்தம் பலே திருடன்.

oOo

“நோக்கு ஜுரம்னு சொன்னாளே சங்கரி… அதான் கஷாயம் எடுத்துண்டு வந்தேன். தேவலையா? அட… சாப்பிட ஒக்காந்துட்டேளா!” கஷாயத்தை வைத்துவிட்டுப் போனாள் குருக்கள் மனைவி.

“வாசக்கதவ தாழ்ப்பா போட மாட்டியோ!” செல்லமாகக் கேட்டான் பத்மநாபன்.

“இங்கே நாம இரண்டு பேர் இருக்கும்போது கதவைத் தாழ்ப்பாள் போட்டா, அக்கம்பக்கத்திலே இருக்கிறவா தப்பா நினைக்க மாட்டாளா?”

“வேதாந்தம் வந்துருவானோன்னு பயப்படுறியா! அதெல்லாம் வர ரெண்டு மணி நேரமாவது ஆகும்.”

“அதெல்லாம் எனக்குத் தெரியும். அவருக்கென்ன பயம்! அவரே வேலி தாண்டிய வேங்கைதான்… அவருக்கு மட்டும் தெரியாதா என்ன! நீ இங்கே ருசிச்சா, அவர் அங்கே ருசிப்பார். இதெல்லாம் கேட்டு செய்யறதில்ல. எல்லாம் ஒரு பண்டமாற்றம்தான். ஒள்ளெலி மாதிரி இருக்கிற சங்கரி உங்களுக்கு அலுத்துப் போச்சு. நாலு புள்ள பெத்த நான் அவருக்கு சலிச்சுப் போயிட்டேன்.

என் தங்கை மேலேயே அவர் கைய வச்சு, அவ கர்ப்பமாய், இவரே கலியாணத்துக்கு ஒரு அப்புண்டுவை ஏற்பாடு பண்ணி மாப்பிள்ளை அழைப்பு வரை வந்தாச்சு. மாப்பிள்ளை அழைப்பு அன்னிக்கு சமச்சாரம் கசிஞ்சு புள்ளையோட அம்மா தாம்தூம்னு குதிச்சா. கல்யாணத்த நிறுத்திப்புடுவேன்னா… குருக்கள், சத்திரத்துக்காரர் எல்லாருமா சேர்ந்து, உங்க தம்பிய தனியா அழைச்சுண்டு போயி “பேசாமத் தாலியக் கட்டு… இல்ல உங்க மாமியார் ஊரக் கூட்டிடுவா”ன்னா. உங்க தம்பி கலங்கவேயில்லியே… “ஒண்ணுக்கு ரெண்டு இருக்கட்டும். சரீ”ன்னுட்டார். எனக்கு வாழ்க்கைப் போயிடுமே… இரட்டைவடம் சங்கிலியக் கழற்றி மாப்பிள்ளையோட அம்மாகிட்ட கொடுத்தேன். கமுக்கமா வாங்கிண்டு “ஏதோ தெரியாம சொல்லிட்டேன்”னு தாலியக் கட்டி, என் தங்கையக் கூட்டிண்டு போனா. இந்த ஊரில எண்ணினா, பாதி இவர் குழந்தையாத்தான் இருக்கும். நான் கண்டும் காணாம குடித்தனம் நடத்தறேன்.

அது சரீ… ஒங்களத் திருப்தி பண்ணிறதால எனக்கு என்ன லாபம்? நான் கல்யாணம் ஆனவ. ஓர் அலப்பலும் எனக்கில்ல.”

“என்னடீ வேணும் ராசாத்தீ! என்ன வேணுமோ கேளு…”

“இப்ப நீங்க மெட்ராஸில ஹோட்டல் நடத்தறேள். அதில எவ்வளவு லாபம் வரும்? அதில எனக்கு நகை செஞ்சு போடுவேளா? மூணுல ஒரு பங்கு லாபம் எங்களுக்குக் கிடைக்குமா… எல்லாத்தையும் யோசியுங்கோ. நான் இவர விட்டுட்டு வர முடியுமா! ஊர் என்ன சொல்லும்… அதையும் பார்க்கணுமில்லையா. எனக்கும் ஒரு பொண்ணு குழந்தை இருக்கு. அவளுக்கு நாளைக்கு நல்லது, கெட்டது செய்யணும். நல்லாப் படிக்க வைச்சு, என்ன மாதிரி தபால்காரனுக்கு வாக்கப்படாம, உசத்தியான இடத்திலே வாழவைக்கணும். இல்ல… தினவைத் தீர்த்துக்கற உறவா உங்களுது? நான் மலடியில்ல… நாலு குழந்தைப் பெத்து நிரூபிச்சிருக்கேன். நான் சுத்தமா இருந்து உங்களுக்குப் பிள்ளைப் பெத்து தரேன். இது சத்தியம். அது மாதிரி நீங்களும் எனக்கு வாக்கு கொடுக்கணும். வாக்கு நிறைவேறின பிறகுதான் உங்களுக்குக் குழந்தை. என்ன யோசிக்கிறாப்ல இருக்கு…”

“ஒண்ணும் யோசிக்கல… சீக்கிரமே நான் உங்கள அங்கக் கூட்டிக்கிறேன்.”

அதன் பிறகு அங்கே பேச்சுக்கே இடமில்லை.

oOo

“அக்கா… எனக்கு அடிக்கடி தலைய வலிக்குது. வியாபாரமும் அதிகமாயிடுத்து. கூட ஒத்தாசைக்கு கைமாத்தா யாராவது இருந்தா தேவலைன்னு படறதுக்கா.”

“யாரடா நம்பறது? கல்லாவில கைய வச்சிடுவானேன். நாராயணன் நாலு நாள், ஒரு வாரம்னா பார்ப்பான். நிரந்தரமா முடியாதே. ஆபீஸ் வேலை இருக்கே.”

“ஏங்க்கா… வேதாந்தம் அங்கே கஷ்டப்படுறான். இங்கே சீரழியறது காணாது. அவனும் நம்ப தம்பிதானே! அவன கூப்டுண்டா என்ன?”

“பருத்திப் புடைவையாக் காய்ச்சா எடுத்தி உடுத்திக்க வருத்தமா… ஒரு கூட்டு பறவை. ஒரே இடத்தில இருக்கோம்னா கொடுத்து வச்சிருக்கணுமே. போனியே… பேச்சுக் கொடுத்துப் பார்த்தியா!”

“சரீன்னு ஒத்துப்பான்னுதான் தோண்றது. எதுக்கும் கடுதாசி எழுதிப் பார்க்கிறேன்.”

தபாலாபீசிற்கு இவர்களால் வருமானம் கூடியது. ஒரு சுபமுகூர்த்த நாளில், வேதாந்தம் குடும்ப சகிதம் சென்னை வந்து சேர்ந்தான்.

oOo

“அக்கா… வேதாந்தத்துக்கும் சேர்த்து இந்த மாசத்திலிருந்து மூணு பங்கா லாபத்தப் பிரிக்கிறேன். சரியா?”

“இதெல்லாம் என்கிட்ட என்ன கேள்வி!”

oOo

“பாகீரதி என் குழந்தைங்கிறேள். அப்புறம் நான் எப்படி உங்கள நம்பி குழந்தைப் பெத்து தரறது? அபார்ஷன் பண்ணின்டுறட்டுமா? இது உங்க குழந்தைங்கிறது ஞாபகம் இருக்கா?”

“பாமா.. நீ ரொம்ப அவசரப்படுறே. ஒவ்வொரு சிடுக்காத்தானே பிரிக்கணும். இது தைலா அக்கா ஆத்துக்காரர் ஏற்படுத்தின ஸ்தாபனம். அவா மனுஷா வேற நிறைய உதவி பண்ணியிருக்கா. அவாளெல்லாம் வக்காலத்துக்கு வருவா.”

“தோ பாருங்கோ… நாள் தள்ளினா அபார்ஷன் பண்ண முடியாது. சும்மா சும்மா அபார்ஷன் பண்ணினா என் உடம்பு கெட்டுப் போகும். உங்களுக்கு எல்லாம் விளையாட்டாப் போச்சா! பொட்டச்சிதானே… காலடியில விழுந்து கிடப்பான்னு நெனச்சேளா!” அழுது ஆகாத்தியம் செய்தாள் பாமா.

oOo

மறுநாள் காலை. பாகீரதி யூகலிப்டஸ் குப்பியை முகர்ந்து கொண்டிருந்தாள். அந்த வாசனை அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால், என்ன செய்ய… கை நழுவி பாட்டில் சுக்கு நூறாய் நாலாபக்கமும் தெறித்தது.

“வர வர உனக்குக் கொழுப்பு ஜாஸ்தியாப் போச்சு. எதுக்கு அதப் போயி எடுத்தே. இப்ப யாரு எல்லாத்தையும் சுத்தம் பண்ணுறது?”

ப்பளாஆர்… செவிட்டில் ஒரு அறை விழுந்தது. தைலா மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள்.

“என்னப் பெத்த வயிறு பத்தி எரியறதா! அடிக்கிறேனேன்னு பார்க்கிறியா. நேத்திக்கு அவாளெல்லாம் போறாளேன்னு, இவளும் பீச்சுக்குப் போனாளே, நம்ம அம்மாவுக்கு உடம்பு சரியில்லையேன்னு யோசிச்சாளா… நீ இல்லேன்னா இவ என்ன ஆவா! வயசுதான் உதிய மரம் மாதிரி வளர்ந்திருக்காளே தவிர கொஞ்சங்கூட பொறுப்பேயில்ல…”

‘எதுக்கு எத முடிச்சுப் போடறான். வர வர இவனுக்கு ரொம்பக் கோபம் வரது. ஒரு வேளை… குழந்தையில்லாத ஏக்கமோ! பெரியப்பா நாட்டுப்பொண் என்னென்னமோ உளரறா… “மன்னி! ஜாக்கிரதையா இருந்துக்கோங்கோ… இவா நடவடிக்கை எதுவும் சரியில்ல. உங்க தம்பிய சொல்றேன்னேன்னு வருத்தப்படாதீங்கோ. அதென்ன… புருசனும் பொண்டாட்டியும் ஒரு ரூமில படுத்துண்டு கதவ சாத்திக்காம, மாத்திப் படுத்துண்டு கதவ சாத்திக்கறது? நாம்பளும் குடும்பஸ்தாதானே… இதையெல்லாம் நீங்க நெனச்சேப் பார்க்கறதில்லையா!” இப்படி ஆளாளுக்குப் பேசிட்டுப் போன்னா, நாதியத்த நாய் என்னத்தக் கேக்குறது? ஓணானத் தூக்கி மடியிலக் கட்டியாச்சு. ஒருத்தர் புடைவைய ஒருத்தர் கட்டிக்கிறா. அது கூட சகஜம்னு விட்டுட்டேன். ஒருத்தர் கலத்தில ஒருத்தர் சாப்பிடறா… கேட்டா “மறந்துட்டோம். அதனால் என்ன… ஒரு தாய் வயித்துப் புள்ளைங்கதானே”ன்னு ஒரு வியாக்கியானம். தயிர்சாதத்துக்குள்ளே பெருச்சாளிய வச்ச மாதிரி ஆயிடுத்து. எந்தக் கோபமோ, யார் மேலேயோ இறங்குது. நாலணா பாட்டில். அதுவும், அவ அப்பா காசில வாங்கினது. பரிஞ்சுண்டு வந்தா, போக்கிடமெங்கே?’

oOo

ஆனி மாதம். திங்கள்கிழமை காலை ஆறு மணி.

“என்னடீ இது…” சோப்புப் போட்டுக் கொண்டிருந்த பாகீயிடம் கேட்டாள் பாமா.

“நேத்திக்கு வாழைப்பூ ஆஞ்சேனில்லையா… அதோடக் கறையா இருக்கும். அம்மா அப்பவே சொன்னா… பாவாடைய மடக்கிண்டு உக்காருன்னு. பார்த்தா திட்டுவா.”

“இங்க வா நீ!”

“அக்கா… நீங்க திரளுறதுக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு பாக்கிறேள். இவ திரண்டு நிக்கிறா.”

“அத்திம்பேர் செத்துப் போனதுக்கப்புறம் இது முதல் விசேஷம். நாலாம் நாள் வச்சிப் பாடணும். பத்து சுமங்கலிகளக் கூப்பிட்டு வெத்தல பாக்கு கொடுக்கணும்.”

புதன்கிழமை.

பாமா, பத்மநாபன், வேதாந்தம் மூவரும் கோவிலுக்குப் போயிருந்தார்கள். தைலா பெரியப்பா வீட்டிற்குப் போயிருந்தாள். சங்கரி வீட்டு விலக்காகி இருந்தாள்.

“நீயும் பெரியவளாயிட்டே… என் மனசுல இருக்கறத யார்கிட்டயாவது சொல்லணும் போலிருக்கு. ஒட்டக்த்து வீட்டுல ஓநாய் ஓய்வெடுக்க வந்த மாதிரி, பாமா என் வாழ்க்கையையே முழுங்கிட்டாடீ! பாபநாசத்துல நடந்ததுதான் உனக்குத் தெரியுமே! எனக்கு ரெட்டை வடம் சங்கிலி வாங்கினா, எனக்கும் வேணும்னு காப்பிக்கொட்டை சங்கிலி வாங்கிப் போட்டுண்டிருக்காளே! வயித்துப் பிள்ளைக்காரின்னு வேலை செய்யறதில்லே… கைக்குழந்தைகாரின்னு காரியம் பண்ணுறதில்லே… மலடி… நான் தானே மாட்டிண்டேன். பெத்துப் போடறதோட அவ வேலை முடிஞ்சது. மத்தபடி குழந்தை காரியமெல்லாம் எனக்குத்தான். திரௌபதி மாதிரி இன்னும் மூணு புருஷா கிடைச்சாக் கூட ஏத்துக்குவா…”

பாகீரதிக்கு பாத்ரூம் போகும் அவசியம் வந்தது. வெளியே வந்தால், அங்கே பாமா நின்று கொண்டிருந்தாள். ஆனால், எதுவும் கேட்கவில்லை.

மறுநாள்.

“உனக்கு அஞ்சுகால் பின்னல் பின்னி விடறேன்… வா!” என்று அன்போடு அழைத்தாள் பாமா.

அப்பாவி பாகீக்கு கொள்ளை சந்தோஷம். தரையில் புரளும் தன் கூந்தலைக் காட்டிக் கொண்டு ஆடாது அசையாது இருந்தாள்.

“நேத்திக்கு உங்க பெரிய மாமி என்ன சொன்னா? என்னப் பத்திதானே பேசிண்டு இருந்தேள். நீதான் பொய்யே சொல்லமாட்டியே. ‘செருப்பெடுத்தா விட்டுடுவேன்’னு உங்க டீச்சர் சொன்னதுக்காக ‘எடுத்தேன்’னு சொல்லிட்டே… உங்கப்பா உன்னை எல்லார் முன்னாடியும் செமயா அடிச்சுட்டேன்னு எங்கிட்ட சொல்லியிருக்கியே…”

“அது மட்டுமில்ல… கோயில்ல வச்சு ‘இனிமே பொய் சொல்ல மாட்டேன்’னு சொல்லிண்டே நூத்தியெட்டு தோப்புக்கரணம் போட வச்சார். காரணம் கேட்டவாளுக்கு விளக்கம் வேற சொல்லிண்டு இருந்தார். அப்பல்லாம் அவர் எண்ணிக்கைய விட்டுடுவார். இப்ப நெனச்சாக் கூட கால் வலிக்கறது. அதிலேருந்து நான் பொய்யே சொல்லறதில்ல.”

“ஆங்… அதுதான் சமர்த்துக்குட்டி. என்ன பொல்லாதவ, துஷ்டை, திருடீன்னு சொன்னாளா?”

“அச்சச்சோ… அப்படியெல்லாம் சொல்லல. நீங்க திரௌபதி மாதிரி இன்னும் மூணு புருஷா கிடைச்சாக் கூட ஏத்துக்குவேளாம். மாமியோட வாழ்க்கையையே முழுங்கிட்டேளாம். நான் பொண்டாட்டீ ரெட்ட வடம் சங்கிலி வாங்கிப் போடறார். எனக்குப் போட்டியா இவளும் காப்பிக்கொட்டை சங்கிலி வாங்கிப் போட்டுண்டு இருக்காளே. பெத்துப் போடறதோட உங்க வேல முடிஞ்சதாம். சங்கரி மாமிதானே எல்லா வேலையுஞ்செய்யறாளாம்.”

“அவ்வளவுதானா… இன்னும் இருக்கா?”

“அம்புட்டுதான் சொன்னா!”

“சரி… நீ போ!”

oOo

“சங்கரி குளிக்கட்டும். வெள்ளிக்கிழமை வச்சிப் பாடறதை வச்சுக்கலாம்.” தைலா தீர்மானமாக சொன்னாள்.

வெள்ளிக்கிழமை காலை. சாப்பாட்டு நேரம்.

“பாமா… சாப்பிட வா! அக்கா புட்டு சமைச்சாச்சு. எல்லாரையும் போய் கூப்பிடணும். அவளுக்கு ரெடிமேடில பாவாடை சட்டை எடுக்கணும். என்ன… மசமசன்னு உக்காந்திண்டிருக்கே!”

“அதான் நிறைய சாப்பாடு போட்டுடேளே… இனிமேயும் சாப்பிட்டு உடம்பை வளர்க்கணுமா மானம் கெட்டுப் போயி!”

“என்ன… என்ன… சண்டை! கலகம் ஆரம்பிச்சாச்சா?”

“சொல்றான்னா… இன்னும் மூணு நாலு ஆம்படையான் வச்சுக்குவேனாம். வாய் கூசாமா… முந்தா நேத்து பெஞ்ச மழையில நேத்திக்கு முளைச்ச முளை.. அதுகிட்ட சொல்லியிருக்கா… மொதல்ல அது என்னன்னு கேளுங்கோ!”

“ஏன் இப்படியெல்லாம் பேசிக்கறேள்! மல்லாந்து உமிழ்ந்தால் மார் மேல எச்சில். மாண்ட கதைய தோண்டி எடுக்கறதே உங்க தொழிலாப் போச்சு. ஏந்திருடீ…”

“நொரடி… இந்த வயசில இந்த அழும்பா! அவ சொன்னத ஏன்டீ இங்க வந்து சொன்னே! தின்னுட்டு சும்மா இருக்க முடியலியா? புருசன் வீட்டில் போய் இப்படி பண்ணினே… கொண்டு வந்து விட்டுட்டுத் திரும்பிப் பார்க்காம போயிடுவான். நாலு நாத்தனார். நாலு ஓர்ப்படி… இருக்கற வீடா இருக்கணும். உன் பொழப்பு சந்தி சிரிச்சுப் போகும்.” என்று பத்மனாபன் வாயில் சொல்ல முடியாத அளவுக்கு பாகீரதியைத் திட்டித் தீர்த்தான்.

பாகீரதி மனம் நடுங்க, உடல் கூச நின்றிருந்தாள்.

“சங்கரி… உனக்கு வயசாகலியா! இவள் உனக்கு இணையா? இவகிட்டப் போய் இதெல்லாம் சொல்லலாமா? தெரண்டு குளிச்ச பொண்ணு. இப்படித் திட்டித் தீர்க்கறேளே… இதான் மணையில் வச்சிப் பாடறதா! ஏதோ குழந்தை சொல்லிட்டான்னு அவளும் விடாம, மாமாலம் பண்ணுறா…”

“நான் மாமாலக்காரின்னா உங்க பொண்ணு கோளிச்சொல்லி குண்டுணி. தீசை…என்னவாகப் போறதோ… இனிமே என் குழந்தைய யாரும் குளிப்பாட்ட வேண்டாம். பெத்தவளுக்கு அத சம்ரஷிக்கத் தெரியும்.”

“நீ ராசாத்தி… நீ ஏண்டி அழறே! உன் கண்ணில தண்ணி வரலாமா? குழந்தையப் பார்த்துக்கு நான் ஆள் போடறேன். ஒரு சிறுக்கியும் செய்ய வேணாம்.”

இந்த ரீதியில் யுத்தம் இரவு வரை நீடித்தது.

தன் பெண்ணை மணையில் வைத்துப் பாடிய லட்சணத்தை தைலா நினைத்து பார்த்தாள்.

oOo

கனகு கடிதம் போட்டிருந்தாள். கார்டில் நாலு வரிதான் என்றாலும், தைலாவின் மனது திருப்பித் திருப்பி அவற்றை அசை போட்டுக் கொண்டிருந்தது. கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.

‘மாமியார் சொல்லித்தான் போட்டிருக்க வேண்டும். தங்கம் கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டிருந்தாள். டாக்டரிடம் மாவுக்கட்டு போட்டுக் கொண்டிருக்கிறாளாம். கோமதிக்கு ‘இதுதான் மாசம். நீங்க வந்தா சௌகரியமாயிருக்கும்னு அம்மா நெனைக்கிறா. வர முடியுமா? பழசையெல்லாம் நெனச்சுண்டு வராம இருந்துறப் போறா. நீ கேக்கிற மாதிரி கேளுன்னு அம்மா சொன்னா.’

தைலா பத்மனாபனிடம் “போயிட்டு வரட்டுமா” என்று கேட்டாள்.

“போயிட்டு வாங்கோக்கா… இப்பவாவது உங்க அருமையப் புரிஞ்சுண்டிருக்காளே”. முந்திக் கொண்டு சொன்னாள் அருகில் இருந்த பாமா.

“பாகீக்கு பள்ளிக்கூடம் போகுமே.”

“என்ன பெரிய காலேஜ் படிப்பு வீணாப் போறது! நாங்க பாத்துக்க மாட்டோமா! நீங்க நிம்மதியாப் போயிட்டு வாங்கோ.”

நாத்தனார் பிரசவத்திற்குப் புறப்பட்டாள் தைலா.

oOo

“இது என்ன படம்… பார்த்தியா!” ஆனந்த விகடனில் ஒரு படத்தைக் காட்டி கேட்டார் பத்மநாபன்.

அதில் பாகீரதிக்கு ஒரு சுவாரசியமும் இல்லை. அது சாம்ஸன் & லைலாவின் திரைப்படத்தின் புகைப்படம். ஆனால், அவள் மனதில் ஒரு கர்வம் தோன்றியது. ‘அன்றைக்கு அடித்தாயே… இன்றைக்கு எதை வேண்டியோ இப்படிக் குழைகிறாயே…’ என்று மனதிற்குள் மாமன் என்னும் மரியாதை தேய்ந்தது.

நன்றாகத் உறங்கிக் கொண்டிருந்தாள் பாகீரதி. யானை ஏறினால் கூடத் தெரியாது என்று வேதாந்தம் கேலி செய்யுமளவுக்கு தன்னை மறந்து தூங்கும் ரகம். யாருடைய மூச்சுக்காற்றோ கன்னத்தை உசுப்பியது.

“ஐயோ… என்ன பண்றேள்! இதுக்குத்தானா என்னை அவாளோட சினிமாவுக்குப் போகக்கூடாதுன்னேள்?”

“ஏண்டீ… கத்தறே! எனக்கு சங்கரியும் பாமாவும் இருக்கா. ரொம்பத்தான் பிகு பண்ணிக்கறியே… என்ன பகைச்சுண்டா சோத்துக்கு லாட்டரி அடிக்க வச்சுடுவேன். வந்து காலைப் பிடி.”

“இனிமே உங்க காலை நான் பிடிக்க மாட்டேன். வலிக்கறது… மாமாவுக்குப் பிடிச்சு வுடுன்னு அம்மா சொன்னாளேன்னுதான் செய்தேன். என்கிட்ட வந்தேள், நாளைக்கு பாமா மாமிகிட்ட சொல்லிடுவேன்.”

“இரு… உனக்கு புண்டம் பெருங்காயம்னு பண்ணுறேன்.” பத்மநாபன் தன் இடத்தில் போய் படுத்துக் கொண்டான்.

அன்றிலிருந்து பாகீரதி சிறு அசைவுக்கும் எழத்தொடங்கினாள்.

oOo

சில இடைவெளிகள் நெருக்கத்தை அதிகப்படுத்தும். சில இடைவெளிகள் பிளவை நிரந்தரமாக்கி விடும். தைலாவினுடையது இரண்டாவது ரகம். கோமதிக்குப் பிள்ளை பிறந்து ஒரு மாதத்தில் சென்னை திரும்பினாள்.

“ரயில் விழுப்பு. குளித்துவிட்டுத்தான் சாப்பிட முடியும்” என்று புடைவையை நனைக்க வாளியை எடுத்தாள் தைலா. இதற்குள் ஏங்கிய முகத்தோடு பாகீரதி ஏதோ சொல்ல வந்ததும் “உன் கதையெல்லாம் அப்புறம் கேக்கிறேன். போ அந்தாண்ட” என்று எரிந்து விழுந்தாள் தைலா.

நாம் இல்லாத நேரம் குழந்தையை கவனித்துக் கொண்டார்களே. அவர்கள் மீது இவள் ஏதாவது புகார் சொல்லப் போய் தப்பாகிவிடுமோ என்ற கரிசனம்.

“குளி, சாப்பாடெல்லாம் அப்புறம். முதலெ எல்லாத்தையும் பேசித் தீர்த்துக்கலாம்.” என்று கடுப்போடு சொன்னான் பத்மனாபன்.

தைலாவிற்கு திக்கென்றது. “பேசித் தீர்க்கும்படியாக என்னவாச்சு?”

“இந்த ஹோட்டல் லைசென்ஸ், ஹோட்டல் இருக்கிற இடத்து பத்திரம் எல்லாம் உன் பேரில் இருக்கிறது. அவனவன் வந்து ஆயிரம் கேள்வி கேக்கிறான். இதையெல்லாம் நீயே கட்டிண்டு அழு. யாரை வெச்சு வேணா ஹோட்டல நடத்திக்கோ… என்னாலே மாரடிக்க முடியாது.”

தைலா சுற்றுமுள்ளவர்களைப் பார்த்தாள். வேதாந்தம் தனக்கு சம்பந்தமே இல்லாதது போல் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருந்தான். பாமா அவள் குழந்தைக்கு சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள். சங்கரி துணிக்கு சோப்புப் போட்டுக் கொண்டிருந்தாள்.

“எனக்கு யாரைத் தெரியும்! யாரைக் கொண்டு நடத்துவேன்… என்ன செய்யணும்னு சொல்லு. பாகீரதியைக் கரைசேர்க்கும்வரை எனக்கொரு புகலிடம் வேண்டாமா? லைசென்ஸையெல்லாம் உன் பெயரிலே மாற்ற என்ன பண்ணனுமோ அதை விட்டுட்டு மூனாவது மனுஷன் மாதிரி தத்துப்பித்துனு பேசிண்டிருக்கியே!” செல்லமாகக் கடிந்து கொண்டாள் தைலா.

oOo

திரையிட்ட ரிக்ஷாவில் பாகீரதியுடன் அலுவலகம் சென்றாள் தைலா.

“இதோ பாருங்கம்மா… உங்க முழு மனசோடதான் இப்படி மாற்றித் தரீங்களா? இந்த இடத்தில நீங்களும் உங்க குழந்தையும் கையெழுத்துப் போடணும். யாரும் உங்கள இந்த மாதிரி செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தலியே… நல்லா யோசிச்சுப் போடுங்கம்மா!” நல்ல மனம் கொண்ட அதிகாரி அவளிடம் சொன்னது இவ்வளவுதான்.

ஒரு கையெழுத்து.

எல்லாம் பத்மனாபனுக்கு சொந்தமாகிவிட்டது.

oOo

“பம்ப்பை இப்படி அடித்தால், பம்பு நாலு நாளைக்குக் கூட இருக்காது. மெதுவாக அடிக்கவே தெரியாதா!”

“தரையை நன்னா அழுத்தித் தேய். வெளக்குமாத்துக்கு வலிக்காது!”

தைலா பாகீக்கு பரிந்து வரக் கூடாதென்று வாய்க்குப் பூட்டு போட்டுக் கொண்டாள். ஆனாலும், வயிறு கலங்கியது.

“வேதாந்தம்… பத்து ஏன் இப்படி மாறிட்டான்! எதுக்கெடுத்தாலும் சிடுசிடுங்கிறான்.” தைலா ஆதங்கமாய் கேட்டாள்.

“மலடன்தானே… ஈரமில்லே… நீ பேசாம வீரவநல்லூரோட போயிடு. மாமியார்தான் இப்ப இதமாயிருக்காங்கிறியே. கனகுக்கும் கல்யாணம் பண்ணனும். அடிக்கடி உன்னக் கூப்பிடுவா. தங்கத்துக்கு வேற உடம்பு சரியில்ல. உனக்கென்ன இவன்கிட்ட லோல்படணும்னு தலையெழுத்தா!” பாம்பு புற்றுக்குள் கொக்கு முட்டையிட்ட கதையாக வேதாந்தத்திடம் அவ்வப்பொழுது தைலா புலம்பிக் கொண்டிருந்தாள்.

oOo

“பத்து… பேசாம பாகீக்கு கல்யாணம் பண்ணிடலாமா?”

“அதெல்லாம் உன் இஷ்டம். பன்னிரண்டு வயசில இவளுக்கென்ன தெரியும்? நான் எதுவும் உதவி பண்ணுவேன்னு எதிர்பார்க்காதே. விலைவாசி ஜாஸ்தியாயிண்டேப் போறது. உனக்கு ஒரு பங்கு தரறதுங்கிறது ரொம்பக் கஷ்டம். லாபமே கிடையாது. குடும்ப செலவுக்கே சரியாப் போயிடறது. வீரவநல்லூர் போய் இரு. நல்ல மாப்பிள்ளையா கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு வா.” பட்டுக்காமல் பதில் சொன்னான் பத்மநாபன்.

பெரியப்பா குடும்பத்தினரிடம் போய் யோசனை கேட்டாள் தைலா.

“நாங்கதான் அப்பவே சொன்னோமே. நீங்கதான் காதில போட்டுக்கலே. அவா உங்களக் கழிச்சுக் கட்டப் பார்க்கிறா. போனேள்… திரும்பி வரவே முடியாது. லைசென்சு மாற்றிட்டா என்ன? இவாளாலே என்ன பண்ண முடியும்? ‘நான் நடத்திக்கறேன்… விட்டுட்டுப் போங்கடா’ன்னு சொல்லு. அதுக்கெல்லாம் ஆள் தயார் பண்ணித் தரேன். இம்சிச்சு லைசென்ச மாத்தினான்னு கேஸ் போட்டுறலாம். அதுவரையிலும் பாகீய அழச்சுண்டு இங்கே வந்துடுங்கோ.” என்றான் நாராயணன்.

oOo

“எங்க போயிட்டு வர? மதியூகி மந்திரி பெரியப்பாவாத்தில் யோசனை கேட்டுட்டு வரியோ?”

“பார்த்து நாளாச்சேன்னு போனேன். எப்பவும் போறதுதானே.”

“சண்டை நடந்த மறுநாள் போயிருக்கியே! அதான் பானகத்துரும்பா தொண்டைய உறுத்தறது… உடைச்சிப் பேசு! என் முழுங்கற?”

“நான் இப்ப வீரவநல்லூர் போறதா இல்ல. கிட்டப் போனா முட்டப் பகை. ஆபீசர் வந்தா லைசென்சு நான் மாற்றித் தரேன்னு அவா ஆத்தில சொல்றா. உங்களால முடியலன்னா விட்டுட்டுப் போங்கோ.”

“வேது… அக்கா பாவம்னியே! பார்த்தியா? ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமாணி மாதிரி பேசுறா பாரு. ஒருத்தன் உக்காந்து உண்டாக்கி வைப்பான். நீ போன்னதும் விட்டுட்டுப் போயிடுவான்! என்ன நெனச்சுட்டிருக்க மனசில… எனக்கு சமதையாப் பேசறியா! எப்பவும் பொட்டச்சி… பொட்டச்சிதான்! கோதண்டராமைய்யர் ஏத்தி வச்ச விளக்கு எப்பவோ அணைஞ்சு போச்சு. இது பத்மநாபன் ஏற்றி வச்ச விளக்கு. நான் பத்து பொம்மனாட்டியோட நடுவீதியில படுத்துக் கெடப்பேன். நீ பத்து ஆம்பளையோட படுக்க முடியுமா? கம்மனாட்டி காரிலே போகலாம்னு ஏத்தி விட்டிருக்கானா? எவனாவது வரிஞ்சு கட்டிண்டு வரட்டும். வெறகு கட்டையாலேயே தலையில போடுவேன். வக்காள ஓழி… கொழுத்துப் போய் திரியறானுங்களா! எவன் வூட்டுப் பிரச்சினையில மூக்க நுழைப்போம்னு.”

“சரி… ஹோட்டல் லைசென்ச மட்டும் மாற்றிக் கொடுத்துடு. நான் வேற எடம் பார்த்துக்கறேன்.”

‘ஹோட்டல் லைசென்ஸ் கிடைக்கிறதுதான் கஷ்டமாயிருக்கு. “ரெண்டையும் மாற்றித் தரமாட்டேன்னா ஹோட்டல் லைசென்சை மட்டும் மாத்தி வாங்கிடுங்கோ. இடம் நான் பிடிச்சுத் தரேன்.” என்று நாராயணன் அழுத்தமாக சொல்லியிருந்தான்.’

“வேது… வா… ஹோட்டல் லைசென்ஸை மாத்தி, அவ மொகறையில விட்டெறிஞ்சுரலாம். வியாபாரம் நடக்கிற இடம் நம்ம கைய விட்டுப் போகலியே… நாம புது லைசென்ஸ் வாங்கிக்கலாம். என்ன கொஞ்சம்… பணம் செல்வகும். லஞ்சம் கொடுக்கணும்” என்று செருப்பை மாற்றிக் கொண்டான் பத்மநாபன்.

வேதாந்தம் சிந்தனையோடு பின் தொடர்ந்தான்.

தலைவிரிகோலமாய் அவர்கள் முன் மார்பில் அடித்துக் கொண்டு அழுதாள் பாமா. “எனக்கொரு வழி சொல்லிட்டுப் போங்கோ… அவ்வளவு படிச்சவாளே ஹோட்டல் லைசென்ஸ் கிடைக்கிறது கஷ்டம்னு சொல்லி அனுப்பிச்சிருக்கா. எட்டு மாசச் சூலி. என் வயிற்றெரிச்சல் சும்மாப் போகாதுடீ. உன் குழந்தை வெளங்குவான்னா நெனக்கிறே! குஞ்சும் குளுவானுங்களாம, எங்களையெல்லாம் விரட்டிட்டு, நீ ஷேமமா இருந்துட முடியுமா? பாவீ… புருசன் செத்துப் போய் ஓட்டல் நடத்தறளாமே! மன்னீ … வாங்கோ! தெரிவில நாலு பேர்கிட்ட நியாயம் கேக்கலாம். த்தூ… நீங்கள்லாம் ஒரு புருஷா… ஒங்களுக்கெல்லாம் ஒரு கல்யாணம்… ஒரு பொண்டாட்டீ…” பத்ரகாளியாய் கத்தினாள்.

பத்மநாபன் திருப்பிவிட்டான். வேதாந்தமும் பின் தொடர்ந்தான்.

“எதையும் மாத்திக் கொடுக்க முடியாதுடீ… உன்னால என்ன பண்ண முடியுமோ… எவன வச்சு என்ன பண்ணுவியோ! பண்ணிக்கோ! உன்னோட புடைவை துணிமணியைத் தவிர இங்கேயிருந்து ஒரு துரும்பக் கூட தொட விட மாட்டேன். எதுவும் உன்னுதில்ல. உனக்கு வேணுங்கிறவாளோட போய் சேர்ந்துக்கோ…” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போய் கதவை சார்த்திக் கொண்டான் பத்மநாபன்.

தைலா பாகீரதியுடன் பெரியப்பா வீடு சென்றாள்.

“மன்னீ… எதுக்கும் உங்களுக்கு துணிச்சல் இல்ல! சட்டப்படின்னா நாங்க உதவலாம். அடிதடின்னா மானத்துக்கு பயப்பட வேண்டியிருக்கே. பாமா மலையாளத்துக்காரி. எதுக்கும் அஞ்சமாட்டா. பில்லி சூனியம் வச்சுடுவாங்கறே… பாகீரதி வாழ்க்கை நாசமாயிடுங்கிறே… சென்டிமென்ட்டா பேசும்போது ஒண்ணும் செய்யறதுக்கில்ல. என்ன இருந்தாலும் உங்க தம்பிகள் என்னும் பாசமும் உங்களுக்கிருக்கு. எங்க இருந்தாலும் லெட்டர் போடுங்கோ. கண்டிப்பா எங்களால முடிஞ்ச உதவியைச் செய்யறோம். உங்கூட கல்யாணம் ஆச்சே… அந்தப் பெரியப்பா பையன் கல்லிடைக்குறிச்சியில இருக்கிறதா சொன்னியே… எங்களுக்கு கல்லிடைக்குறிச்சியில ஒரு வீடிருக்கு. தெரியுமில்லையா! சாவியத் தரோம். அங்க போய் இரு. உன்னோட பணத்த வட்டிக்கு விட்டிருக்கேன். வட்டியை அனுப்பறேன். அந்தப் பெரியப்பா பையன் ரொம்ப உபகாரின்னு சொல்லியிருக்கியே… வரறதா கடிதாசு எழுது.

எல்லாம் கோதண்டம் அண்ணா வாங்கினப் பாத்திரம் சாமான்கள்தானே! எல்லாத்தையும் இப்பவே எடுத்துண்டு போறேன்னு சொல்லுங்கோ. ஓட்டல் நடத்த முடியாமத் திணறுவா…”

தைலாவின் மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. “அவன்தான் புத்தியில்லாம நடந்துண்டான்னா, நாமளும் அதையே செய்யறது அமேத்தியத்தில கல்ல விட்டு எறிகிற மாதிரி. அவனே வாழ்ந்துட்டுப் போகட்டும்.” தைலா கல்லிடைக்குறிச்சிக்குப் புறப்பட்டு விட்டாள்.

oOo

4 responses to “குத்திக்கல் தெரு- 2

  1. பிங்குபாக்: குத்திக்கல் தெரு – அறிமுகம் « Snap Judgment

  2. திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி, தாழையூற்று, காருகுறிச்சி, வீரவநல்லூர் — வாவ். நான் சிறு வயது முதல் திரிந்து வளர்ந்த இடங்கள்.
    அந்தக் காலத்து மனிதர்களின் கதையைச் சொல்லி அந்தக் கால கட்டத்திற்கே போன மாதிரி இருக்கிறது.

    கல்லிடைக் குறிச்சியிலும் ஒரு குத்திக்கல் தெரு இருக்கிறது. 🙂

    • விஜய், நன்றி! __/\__

      மூன்றாவது பகுதி படித்து விட்டீர்களா… அதில் தலைப்பு வந்துவிடுகிறது!! 😀

  3. நம் பெண்களுக்கு எந்தக்காலத்திலும் பாசத்தை விட்டுக்கொடுப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. பட்டும் திருந்தாத மக்கள்.!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.